அன்புள்ள ஆசிரியருக்கு,
கவிஞர் விக்ரமாதித்யனின் அறிமுகம் சந்திப்புகளில் நீங்கள் அவரைப் பற்றி கூறிய செய்திகளிலிருந்து, குறிப்பாக ‘நான் கடவுள்’ படப்பிடிப்பு சமயத்தில் அவருடனான உங்கள் அனுபவ பகிர்தல்களிலிருந்து ஏற்பட்டது. பெரும்பாலும் நகைச்சுவைகள். அப்போது அவரது கவிதைகள் எதுவும் வாசித்திருக்கவில்லை. இவ்வருட விஷ்ணுபுர விருது விக்ரமாதித்தனுக்கு அறிவிக்கப்பட்டவுடன் தான் அவரது புகைப்படங்களை தொடர்ந்து பார்க்கவும் நண்பர்கள் பகிர்ந்த அவரது சில கவிதைகளை வாசிக்கவும் வாய்த்தது.
நீங்கள் அவரைப் பற்றி எழுதிய குறிப்பு, அவர் 2021-ன் விஷ்ணுபுரம் விருது பெறுவதைப் பற்றி The wanderer poet என்று குறிப்பிட்டு ஆங்கில நாளிதழில் அவரைப் பற்றி வந்திருந்த செய்திகள் எல்லாம் அவரை உற்று நோக்க வைத்தன. அவரது நீண்ட அடங்காத தலைமுடிக்கற்றைகள் கூர்ந்து கவனிக்கும் கண்களில் எல்லாம் ஒருவித நாடோடித்தனமும் அமானுஷ்யமும் இருப்பதாகத் தோன்றின. என் கிறுக்கல் வரைகளுக்கு ஏற்ற அவருடைய தோற்றம் வரையத் தூண்டிக் கொண்டே இருந்தது. அதனால் வரைந்து விட்டேன்.
வரைவதற்காக அவரது புகைப்படங்களை துழாவிக் கொண்டிருந்த போது வேறு வேறு விதமாகத் தெரிந்து கொண்டிருந்தார். ஒன்றில் வாழ்க்கையை அனுபவித்து அறிந்த தாத்தாவாக உணர வைக்கும் தோற்றத்தில், மற்றொன்றில் அலைந்து நலிந்த நாடோடித் தோற்றத்தில், இன்னொன்றில் தவத்துறவி போல, வேறு சிலதில் கூர்விழிகளுடன் நோக்கிக் கொண்டு ஒருவித நிமிர்வுடன். அவர் உட்கார்ந்து கொண்டே நிமிர்வுடன் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த ஒரு புகைப்படம் கவர்ந்தது. கலைஞன் கவிஞன் சாதுவாக தெரிவதை விட கொஞ்சம் கம்பீரமாகத் தெரிவது நல்லது என்று தோன்றியதால் அதையே என் வரைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டேன். வரையும் போது எனக்கு அவர் ஒரு ஊழ்கத்தில் அமர்ந்த சாமியாராகவும் சித்தராகவும் அவரது பாய்ந்து கொண்டிருக்கும் பறட்டை முடித்தலை மற்றும் தாடியால் எங்கேயும் கட்டுக்குள் நிற்காமல் அலைந்து திரிபவராகவும் தெரிந்தார். அதே நேரத்தில் எனக்கு அணுக்கமாக இருந்த மறைந்த கலையியக்குநர் கிருஷ்ணமூர்த்தி மட்டுமல்லாமல் பெரியார் ஈ. வே.ரா போன்றவர்களையும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தார். தாடியுடன் கூடிய அவரது தோற்றம் தான் காரணம். அதாவது மரபின் வழி வந்தவராகவும் எங்கேயோ மரபை மீறிச்செல்பவராகவும் ஒரே நேரத்தில் தெரியலானார்.
எனக்கு கவிதை வாசிப்பில் நேரடியான தொடர்ந்த பழக்கம் இல்லாததால் விக்ரமாதித்யனின் கவிதைகளில் ஆரம்பித்து அப்பழக்கத்தை கொஞ்சம் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். நண்பர்களும் அவரது கவிதைகளை வாசிக்க ஆர்வமாக இருந்ததால் நாங்கள் வார இறுதி நாட்களில் நடத்தும் சிறுகதை விவாதத்துடன் ஒன்றிரண்டு விக்ரமாதித்யன் கவிதைகளும் சேர்த்து வாசிக்க ஆரம்பித்தோம். பிறகு தொகுப்பாகவும் வாசித்து விவாதித்தோம். விக்ரமாதித்யன் பற்றிய குறிப்புகளிலூடாகவும் வரையும் போது என்னிடம் உருவான அவரைப் பற்றிய சித்திரங்களையும் எந்தளவிற்கு அவரது கவிதைகள் நிலைநிறுத்துகின்றன மாற்றியமைக்கின்றன என்று பார்க்க ஆர்வமானேன். ஓரளவிற்கு அவரது கவிதைகளை வாசித்தவுடன் அதிலிருந்து கிடைக்கும் சித்திரத்துடன் மறுபடியும் அவரது ஓவியத்தை வரைந்து பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு கவிஞனை அவரது கவிதையை இப்படி அணுகுவது சரியா என்பது தெரியவில்லை. ஆனால் மனதில் தோன்றிய யோசனையை செயல்படுத்தி அதை ஒரு அகப்பயிற்சியாகவும் மேற்கொள்ளலாம் என்ற தீர்மானத்துடன் கவிதைகளை வாசித்தேன். இது ஒரு தவறான வழிமுறை என்று புரிய வந்தால் அத்துடன் கைவிட்டுவிடலாம் அல்லவா?
தொகுப்பாக வாசிக்கலாம் என்று முடிவான போது நண்பர் பாலா, அண்ணாச்சியின் 1980-கள் முதல் இன்று வரை வெளிவந்த மூன்று தொகுப்புகளையாவது வாசித்தால் அவரது கவிதைகளின் போக்குகளைப் புரிந்து வாசிக்கலாம் என்று பரிந்துரைத்தார். அனைவருக்கும் அது ஏற்பாக இருந்தது. அதன்படி ஏற்கனவே வாசித்து முடித்திருந்த ‘ஆகாசம் நீலநிறம்’ தொகுப்புடன் ‘ஊரும் காலம்’, ‘கிரகயுத்தம்’ மற்றும் ‘மாடசாமி வரை’ ஆகிய தொகுப்புக்களை தேர்ந்தெடுத்து வாசித்து விவாதித்தோம். எனக்கு அவரைப்பற்றிய சித்திரத்தை உருவாக்கிக் கொள்வதற்கு இது மேலும் வாய்ப்பாக அமைந்தது. ஆனால் சில கவிதைகளை வாசித்தவுடன் புரிந்து விட்டது விக்ரமாதித்யனுக்கு நாம் எந்த பிம்பத்தை, வரையறையை அளித்தாலும் அதற்கேற்ற ஒரு கவிதை அவரது தொகுப்பிலிருந்து நமக்குக் கிடைத்துவிடும் என்று. இருந்தும் தொடர்ந்து வாசித்தேன்…..
விக்ரமாதித்யனின் கவிதைகளில ‘சாதாரண’ என்று அடைமொழி வரக்கூடிய பலவற்றை பிரதிநிதித்துவம் செய்யும் நிறைய கவிதைப் புலம்பல்களை வாசிக்க முடிந்தது. ‘சாதாரண’ மக்களின் அன்றாட அங்கலாய்ப்புகள், ஒரு ‘சாதாரண’ ஆணின் குடும்பஸ்தனின் உணர்வுகள், ‘சாதாரண’ நிலையில் இருக்க நேர்ந்த ஒரு கவிஞனின் விருப்பு-வெறுப்புகள்…..
ஒரு சாதாரண பாமரன் டீக்கடையில் பேசிக் கொள்ளும் தொனியில் இருந்தது “எல்லாமே” என்ற கவிதை…
“எல்லாமே
விதி போல அமைந்துவிட்டது
சர்வாதிகாரிகளுக்கு
அடிமைகளும் ராஜ்யமும்
சந்நியாசிகளுக்கு
பாமர ஜனங்களும் கோவணத்துணியும்
ஓர்மையில்லாத ஜனங்களுக்கு மட்டும்
உருப்படாத தலைவர்களும் தரித்திரமும்.”
சில இடங்களில் மேலே சென்று அப்பாமர்களுக்காக பேசுகிறார் விக்ரமாதித்யன். ‘ஊரும் காலம்’ என்ற கவிதையின் முடிவில்..
“நமது
ஜனங்களுக்கு மட்டும்
மேயக் கனவுகளும்
கழிக்கப் பொழுதுகளும்
மிச்சமிருக்கட்டும் குறையாமல்“
என்கிறார்.
சாதாரணமாக விடலைப் பையன்கள் பலரும் தன் இழந்த காதலைப் பற்றி தான் பின்தொடரும் பெண்ணைப் பற்றி நீள்மூச்சுவிடும் போது சொல்லும் வரிகள் அடுத்த கவிதை…
“துஷ்யந்தன்தான்…
துஷ்யந்தன்தான்
சகுந்தலையை மறந்தானா
நிச்சயமாகச் சொல்வதற்கில்லை
எனக்குத் தெரிந்தவரை
இப்பொழுதெல்லாம்
சகுந்தலைகள்தாம்
துஷ்யந்தன்களை மறந்துபோகிறார்கள்
மோதிரங்களைத் தேடுங்கள்
மோதிரங்களைத் தேடுங்கள்“
ஒரு கவிஞனின் பிரச்சினைகளைப் பல கவிதைகளின் வரிகள் சொல்லிச் சொல்கிறது…
“பிராந்திக்கடை உரிமத்தைப்
பாவப்பட்ட தமிழ்க்கவிஞர்களுக்கே தருவோம்” என்கிறது ஒரு கவிதை வரி.
மற்றொரு கவிதை வரி…
“பூமியில்
பூக்கட்டி
பீடிசுற்றிச்
சுண்டல்–வடை விற்று
சுக்குகாபி விற்று
எப்படியும் பிழைக்கலாம்
மண் மாதிரி இருந்தால் போதும்
தமிழில்
எழுதி
இலக்கியம் படைத்துப்
பிழைக்க முடியுமா“
என்று கேள்வி எழுப்புகிறது.
“ஆத்ம ஸமர்ப்பணம்” என்ற மற்றொரு கவிதை ஒரு கலைஞனின் அடிவயிற்றுக்குரல்…
“இந்தக் கவிதை
இப்படிச் சொல்வதில்
மறுப்பொன்றும் இல்லை என்றால்
பொதுச் சொத்து
பொதுச் சொத்து எல்லாம்
பொதுஜன
உபயோகத்துக்குத்தான்
பொது ஜனம்
எல்லாக் காலமும்
பாமர ஜனம் தான்
பொது ஜனத்துக்கு
எந்த வகையில் பிரயோஜனம்
இந்தக் கவிதை
பாலம் என்றால்
கடந்துபோக உதவும்
பஸ் என்றால்
பிரயாணம் செய்யலாம்
பூங்கா
கதைபேச இடம் தரும்
கடற்கரை
காற்றுவாங்க, காதலிக்க வாகாகும்
இவன் கவிதை
எதுக்கு ஆகும்
பாமர ஜனத்துக்கு
சினிமாப்பாட்டுக்கூட
முணுமுணுக்க வாகாகும்
இவன் கவிதை
என்னத்துக்கு உதவும்
பொது ஜனத்துக்கு
விளங்கவும் செய்யாது
விருத்திக்கும் உதவாது
என்ன செய்வார் பொது ஜனம்
மன்னிக்க வேணும்
துரதிர்ஷ்டவசமாக
கொடுப்பதற்கு
வேறொன்றுமில்லை இவனுக்கு
குற்றமில்லை
அடுப்பெரிக்க
பல்பொடி மடக்க
எப்படியும் உபயோகிக்கலாம்
தப்பில்லை பாவமில்லை
சமூகத்துக்கு
எப்படித்தான் உதவுவான்
அப்பாவிக் கவிஞன்“
இந்த ‘சாதாரண’ அடையாளங்களில் இருக்கும் இக்கட்டுகளுக்கும் மேல் அற்புதங்களை எதிர்நோக்குகிறார் கவிஞர்….
“……
வெட்கத்தை விட்டுவிடு
விவஸ்தையை விட்டுவிடு
நாணத்தைக் கூச்சத்தை
விட்டுவிடு விட்டுவிடு
இவை போதும்
அற்புதங்கள்
சுயமாக சுதந்திரமாக
சுந்தரமாக
ஒரு பூவைப் போல்
உதயகாலத்தில் பூக்குதா பார்க்கலாம்“
கடைசியில் ஒரு முடிவுக்கு வருகிறார் இக்கவிதை வரிகளில்…
“……………………………
செயல் திறமற்ற நாம்
செய்வதற்கும் ஒரு காரியம் உண்டு
புலன்களைத் துருப்பிடிக்க விடாமல்
முடிந்தவரை எழுதி வைக்கலாம்
சரித்திரப் பதிவுகளாவது மிஞ்சும்
சந்ததிகளுக்கேனும் உதவும்“
தன் கவிதையைப் பற்றி கர்வமும் கொள்கிறார்…
“கடைசிப் பார்வைக்குக் கணக்கெல்லாம் ஒன்றுதான்
கவிஞனின் வார்த்தைகள் மட்டும் எஞ்சிநிற்கும்“
குடியை தன் துக்கங்களை மறக்கப் பயன்படுத்தும் அதேவேளையில் கொண்டாடவும் செய்கிறார் கவிஞர். ரசனைமிக்கவர்…
“நாடார் சமூகத்து
நண்பன் உபசரிக்கும்
பனங்கள்ளு
சோதனைப் படமெடுத்த
சினிமா டைரக்டர் தரும்
ஐஸ் பீர்
பட்டாளத்துத் தம்பி
கொண்டுவரும் பயங்கரமான
ரம்
எல்லாம் ஒன்று தானா
இல்லவே இல்லை நண்பா
Quality-ல் வித்யாசம்
So
Quantity-யில் வித்யாசம்
என்றாலும்
எல்லாமே
உணர்வலைகளை மீட்டுவது
ஒன்றுதான் உன்னதம் தான்
சந்தேகம் இருந்தால்
பௌர்ணமி நிலவில்
பனங்கள்ளையும்
நிசப்த ராத்திரியில்
ஐஸ் பீரையும்
மொட்டைமாடிச் செவ்வகத்தில்
மிலிட்டரி ரம்மையும்
குடித்துப் பாரு
பிறகு
நட்சத்திரங்கள் ரத்தினமாகும்
நிலவு வைடூரியமாகும்
வானம் அற்புதப்படும்
இந்தநேரம் மட்டிலுமே
உன் சிநேகமும் என் சிநேகமும்
உண்மைபோல் படும்“
வாழ்க்கைக்காகச் செய்யப்படும் சமரசங்களை சொல்லும் கவிதை…
“ரத்தத்தில்
கைநனைத்ததில்லை நான்
எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு
சோரம்
தொழிலாகக் கொண்டதில்லை நான்
எனினும்
சோரம் போகிறவர்களிடம்
சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு
திருடிப்
பிழைத்ததில்லை நான்
எனினும்
திருடிப் பிழைப்பவர்களிடம்
யாசகம் வாங்கி வாழ நேர்கிறது எனக்கு
கூட்டிக்
கொடுத்ததில்லை நான்
எனினும்
கூட்டிக் கொடுப்பவர்களின்
கூடத் திரிய நேர்கிறது எனக்கு
காட்டிக்
கொடுத்ததில்லை நான்
எனினும்
காட்டிக் கொடுப்பவர்களின்
கருணையில் காலங்கழிக்க நேர்கிறது எனக்கு
பாவத்தில் வந்த பலனைக் கையாடினால்
பாவம் படியாதோ சாபம் கவியாதோ
முதலில்
என்னை
காப்பாற்றிக்கொள்ள வேண்டும்
என்னை
நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்
இல்லெங்கில்
எச்சில் பிழைப்புத்தான்
இரண்டும் கெட்டான் வாழ்க்கை தான்“
‘குற்றாலக்குடியிருப்பில்‘ என்ற கவிதையில் வரும் வரி என்னை மிகவும் கவர்ந்தது…
“எப்பவும்
பசிக்கிற வயிற்றுக்கு
வஞ்சகம் தெரியாது“
கொடும் பசியில் இருக்கும் வயிற்றை சாபமிடும் பாடல்களுக்கு மாற்றாக பசி வயிற்றின் இயல்பு என்ற புரிதலுடன் வாஞ்சையுடன் அதை தடவி விடுகிறார். இந்த வரியால் இவ்வுலகத்திலும் மனிதர்களிடமும் நம்மிடமும் இயல்பாகவே வெளிப்படும் அத்தனை நல்ல-தீய தருணங்களையும் ஒரேபோல எந்த உறுத்தலும் இல்லாமல் கனிவுடன் புரிந்து கொள்ள முடியும்…
தடையைத் தாண்டிப் புன்னகைக்கும் இடங்கள் கொண்ட கவிதை வரிகள் மேலும்…
“…..
கண்ணாடிச் சில்லுகள் பதித்த
கல் மதில்கள் தாண்டி
காற்றும் நிழலுமாக
விரிந்து படர்ந்து நிற்கிறது
ஒரு வேப்ப மரம்“
வாழ்க்கையில் வெறுமையை உணரும் நாட்களைப் பற்றி பேசும் ‘இன்று’ கவிதை…
“இன்று
எப்படிக் கழிந்ததென்று
எனக்குத் தெரியாது
உனக்கென்ன தெரியும்
யோசித்துப் பார்த்தால்
யாருக்கும் தெரியாது.
விடிந்ததும் அடைந்ததும்
வித்தியாசமின்றிப் போயிற்று.
வாழ்வு இதுவெனச் சொன்னால்
வதைப்படுத்தும் அபத்தம்
சாராம்சம் இதுதானென்றால்
செத்துப் போகலாம்.
சொல்லிக் கொள்ளலாம்
பேய்களல்ல மனிதர்கள்
பூத பைசாசங்களும் அல்ல
தேவர்களும் அல்ல அல்ல
எதையோ தேடி
எதையோ அடைந்து
தேடியும் அடைந்ததும்
வேறு வேறு என்றுணர்ந்து
விளங்கிக் குழம்பும்
அல்ப உயிர்கள்“
கீதையின் சாராம்சமான தத்துவ-மெய்யியல் உபதேசம் போல இருக்கிறது ‘தன்னை அறிந்தால்‘ அறிந்தால்’ கவிதை…
“தன்னை அறிந்தால்
தலைவனும் ஆகலாம்
ஞானியும் ஆகலாம்
யோகியும் ஆகலாம்
முண்டியடித்து
முன்னுக்கு வருவது தலைமை
ஒதுங்கியிருந்து
உயர்வடையப் பார்ப்பது ஞானம்
சுயம் கடந்து
சும்மா இருப்பது யோகம்
தன்மை பெறவே
தம்மை அறிவீர்“
அதே நேரத்தில் இது போன்ற இடங்களில் காணப்படும் இரட்டை-நிலையை விமர்சிக்கவும் செய்கிறார்…
“அவர்கள்
பேசுவது பகவத்கீதை
பின்னால் இருக்கிறது
பாதுகாப்பான வாழ்க்கை“
கற்றலின் தருணங்களில் நம்மிடம் கடுமையாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களை ஞாபகப்படுத்தியது இந்த வரிகள்…
“சூரியன்
காய்வதாக முணுமுணுக்கிறார்கள் சில பலர்
உண்மை
இல்லாமல் இல்லை
சூரியன்
இல்லாமல் வாழமுடியுமென்றும் தோன்றவில்லை“
சந்தர்பங்களில் நாம் கொள்ளும் இரு வேறு அணுகுமுறைகளைச் சொல்லும் ‘கூடவே வரும் நிழல்கள்’ கவிதை:
“விஷயங்களை
லகுவாக எடுத்துக்கொள்கிறீர்கள்
அல்லது குழப்பிக்கொள்கிறீர்கள்
வாழ்க்கையை
இயல்பாக நடத்துகிறீர்கள்
அல்லது சிக்கலாக்கிக்கொள்கிறீர்கள்
உறவுகளை
அப்படியே ஏற்றுக்கொள்கிறீர்கள்
அல்லது மோதிக் கொண்டிருக்கிறீர்கள்
உலகத்தை
உள்ளது உள்ளபடி பார்க்கிறீர்கள்
அல்லது புரிந்துகொள்ளமுடியாமல் தவிக்கிறீர்கள்
தெய்வத்தை
சொல்லிக்கொடுத்தது போலவே நம்புகிறீர்கள்
அல்லது கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்
வழிகள்
பிரிகின்றன
வழிகள்
பிரிகின்றன
காட்சிகள்
மாறுகின்றன
நிழல்கள்(மட்டும்)
கூடவே வருகின்றன “
நேரடிப்பார்வைக்கு சுவாரஸ்யமளிக்கும் பயன்பாடு சார்ந்த ஒன்றிற்கு நம்மால் நேரில் உணர முடியாத சுவாரிஸ்யமற்ற ஒன்று அடிப்படையாக இருக்கிறது…..
“பூ விட்டு
காய் காய்த்து
கனிந்து உதிர
வேர்கள்
வெகு ஆழமாக
மண்ணுக்குள்
…………”
காமத்தை பூசி மெழுகாமல் விவரிக்கும் வரிகள் பல…
“அதில்
பெரிதாக ஒன்றுமில்லை
அது
இல்லாமலும் முடிவதில்லை“
“சிவப்புப்பட்டுக்கு
மஞ்சள்கரை ஜோர்
மஞ்சள்பட்டுக்கு
கறுப்புக்கரை பிரமாதம்
பட்டோடு படுத்து
புரளுவார்களா யாரும்“
இந்த அளவிற்கு நேரடியாக ‘எதிர்கவிதை’ எழுதுவதற்கான காரணத்தையும் சொல்லிச் செல்கிறார்…
“……………..
நெருப்பை
நெருப்பென்று
கூறமாட்டாதவன் நவநீதம்
இயற்கையின் எரிகொழுந்து
என்று தான் எடுத்துரைப்பான் சுதாவின்
காற்றை
காற்றென்று
சொல்லியறியாதவன் கைலாசம்
அலைவுறும்
ஆதி உயிர்மூச்சு என்பான் சகஜமாக
புணர்ச்சி
போகமென்று
பேசவேமாட்டான் சேது
இந்திரனின் சிந்தை
என்றே பேசுவான் இயல்பாக
சொக்கன்
நொந்து போய்த்தான்
எழுத ஆரம்பித்தது
எதிர்கவிதை“
விக்ரமாதித்யன் கவிதைகளில் பல இடங்களில் பெருதெய்வங்கள் நாட்டார் தெய்வங்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அதனாலேயே அவ்வரிகளை வாசிக்கும் போது நமக்கு நன்கு தெரிந்த தாத்தாவின் கதை கூறலை அணுக்கமாகக் கேட்கும் உணர்வு ஏற்படுகிறது…
“கருப்பசாமிபற்றி
கவிதையெழுதி இருக்கிறாயா
ஐயனார் குறித்து எழுதாதவன்
ஐயோன்னு போகட்டும்
மாடசாமியைத் தெரியாதவன்
மடையனாகவே இருப்பான்
இசக்கியை அறியாதவன்
என்ன இலக்கியம் செய்வான்
மாடத்தியைக் கண்டுணராதவன்
மக்களுக்குச் சொல்ல என்ன வைத்திருப்பான்
எல்லாக் காலத்திலும்
இருப்பான் கண்ணதாசன்“
மற்றொரு கவிதை:
“செண்பகக்காட்டில்
செம்பாதேவி
குற்றால அருவிப்பக்கம்
குழலி
உலகம்மை
ஒய்யாரமாக ஆற்றங்கரையில்
வேணுவனத்தில்
விநயமாக காந்திமதித்தாய்
அம்மா இருக்கும் தைரியத்தில்
அழும்பனாக நான்“
இன்னொரு உயிரை அணுக்கமாக உணரும் ஒரு உயிருக்கு தனக்கு நெருக்கமான அந்த உயிரின் பிரச்சினையும் தன் பிரச்சினை ஆகத் தெரிகிறது. தாய்-சேய் உறவு, நட்பு, காதல் எல்லாம் அப்படித்தான். தேசத்தின் எல்லா தரப்பு மக்களையும் தன் மக்களாகக் கருதிய காந்திக்கு பிரச்சினைகள் பிரம்மாண்டமானதாக இருந்திருக்கும். அவர் பேருயிர்.
“ஓருயிர்
ஆருயிரென உணர்வது
பேருயிர்
பேருயிரின்
பிரச்சனைகள் பெரியவை“
அவருக்கு அவரது நெல்லை மண் மேல் இருக்கும் பற்று வெளிப்படும் கவிதை:
“மாதவிடாயை
தீண்டலென்பது வழக்கு
காய்விழுதலென்றால்
கருச்சிதைவு
மனநோய்க்கு
கோட்டி
சொல்லே கவிதைதான்
சொல்லித்தந்தது தாம்ரவருணிக்கரை“
நாம் ஒன்றை மற்றவர்களுக்கு அளிப்பதற்கு அவ்வொரு கணமேனும் தாய்மையின் உள்ளத்தை கைகொள்ளாமல் முடியாது. அத்தாய்மையின் கணத்தைக் கூறும் வரிகள் இவை…
“பொழிவதற்குமுன்
சூல்கொள்ள வேண்டியிருக்கிறது
மேகங்கள்“
கவிதை உருவாகும் தருணத்தை பற்றிய வியப்பை வெளிப்படுத்தும் ‘மலை வளரும் என்கிறார்கள்’ என்ற கவிதையில் வரும் வரிகள்…
“…….
பூமி தருகிறது
தெரியும்
வானம் பொழிகிறது
தெரியும்
தெரியவேயில்லை
தெரியவேயில்லை
எளிய தமிழ்
எப்படிக் கைகூடிவருகிறது
கவிதை
எப்படித் தோன்றுகிறது
……. “
இவர் சரியான நாடோடிக் கலகக்காரன் என்று நினைக்க வைக்கும் கவிதை…
“எங்கு போவாய்
என்ன செய்வாய்
இதை யோசிக்கவில்லையா
கால்போகும் போக்கில்
நான் போவேன்
கலகமும் செய்வேன்
சும்மாவும் இருப்பேன்
யோசனையில்
இல்லை தீர்வு
வருகிறது
நேர்கிறது
நடக்கிறது
இருப்பு
சரிதானே
இதற்குமேல்
என்ன கேள்வி
இன்னும் கேட்டால்
தொலைத்தது தேடி அடிப்பேன்“
விக்கி அண்ணாச்சியின் நக்கலும் எள்ளலும் அப்பட்டமாகத் தெரியும் கவிதைகள் பல…
“உங்கள் கவிதையில்
படிமங்கள் இல்லையே.”
“இரா(து) வலிந்துகட்டவேண்டாம்
என்றுதான் விட்டுவிட்டது.”
“உருவகங்கள்கூட
காணோமே.”
“அவசியமில்லை
காலத்துக்குப் பொருந்தா(து).”
“அலங்காரம்
உத்திவிசேஷம்?”
“எதற்கு?
உதிர்த்தாயிற்று(ஓர்மையாக).”
“பிறகு என்ன
கவிதை இது.”
“இன்றைய கவிதை
எதிர்கவிதை.”
மற்றொரு கவிதை:
“நன்னிலம்
நடராஜன் பேச்சு
ராஜேஷ்
குமார் எழுத்து
தினத்
தந்தி பேப்பர்
ரஜினி
படம்
கங்கை
அமரன் பாட்டு
குமுதம் குஷ்பு
தமிழ் திராவிட வாழ்வு“
நம்மால் ஊகித்திருக்க முடியாத வண்ணங்களால் நிரம்பி வழிகிறது விக்ரமாதித்யன் கவிதைகள். இன்னும் இன்னும் அற்புதமான கவிதை வரிகள் நிறைய இருக்கிறது. வண்ணத்துப்பூச்சியைப் பிடித்தால் அதன் இறக்கைகளின் வண்ணங்கள் நம் கைகளில் படிந்து கொள்வது போல விக்கி அண்ணாச்சியின் கவிதைகளில் வண்ணங்களைத் தேடிச்சென்ற என் மனதில் பல வரிகள் ஆழமாகப் பதிந்து விட்டன. தீ அழகுதான் தூரத்தில் இருந்தால், தண்ணீர்ருசி அறிந்து தாகம் வளர்ந்தது, சிவனுக்கென்ன சொல்லிவிட்டான் சிரமம் நந்திக்கல்லவோ, ‘பொழிவதற்குமுன்
சூல்கொள்ள வேண்டியிருக்கிறது
மேகங்கள்‘, ‘ஓடையில் உருண்டோடி ஓடி கல்லே பூவாகிவிட்டது‘, “எல்லோருக்குமாக
பெய்கிறது மழை
எல்லோருக்குமாக விளையவில்லை
ஏழிலைக் கிழங்கு“, போன்றவை. இவ்வரிகள் வேறு வேறு வண்ணங்களில் மின்னிக் கொண்டு வேறு வேறு அர்த்தங்களை கொடுத்துக் கொண்டேயிருக்கிறது!
அண்ணாச்சியின் ‘நிறமற்றவன்’ என்ற கவிதை:
“நிலத்தை
சூடிக்கொண்டது வானம்
பச்சையை
ஏந்திக்கொண்டது வயல்
கறுப்பை
வாங்கிக்கொண்டது கொண்டல்
வெண்மையைப்
பூசிக்கொண்டது பருத்தி
மஞ்சளை
அப்பிக்கொண்டது சந்தனம்
பழுப்பை
அணிந்துகொண்டது மரம்
சிவப்பை
வரித்துக்கொண்டது ரத்தம்
ஏழுவண்ணங்களிலும் கொஞ்சம் திருடி
எடுத்துக்கொண்டது இந்திர தனுசு
இவனுக்கென்று இல்லாமல்போயிற்று
தனி ஒரு நிறம்“
ஏழ நிறங்களுக்கும் மேல் பல நுண்ணிய வேறுபாடுகளுடன் பல நூறு நிறங்களும் இந்த இந்திர தனுசில் இருக்கிறது. விக்கி அண்ணாச்சியின் கவிதைகளை வாசிக்கும் முன் அவரை வரைந்த போது ஏற்பட்ட பிம்பங்கள் அவரது கவிதைத் தொகுப்புகளை வாசித்த பிறகு மேலும் பலமடங்கானது. ஏற்கனவே இருந்த அவரது பிம்மங்களுடன் அவர் ஒரு கோபக்காரனாக, சாதுவாக, தோல்வியுற்றவனாக, பல இடங்களில் ஜெயித்தவனாக, நீதிமானாக, சுயநலமுள்ள சாதாரண மனிதனாக, ஞானியாக, யோகியாக, போகியாக, சன்னியாசியாக, ரசனையுள்ளவனாக, கையாலாகாதவனாக, துடிப்பானவனாக, சோம்பேறியாக அவரது சிடுக்குகளும், நெகிழ்ச்சிகளும், இயலாமையும், அன்பும், வெறுப்பும், கொண்டாட்டமும், அப்பாவித்தனம் அடாவடித்தனம் என்று எல்லாம் புலப்படுகிறது. ஒரு கவிஞனாக அவரின் உணர்வுகளின் ஏற்றவும் இறக்கவும் உணரமுடிகிறது.
இதற்கெல்லாம் மேலாக இப்போது என் மனதிற்கும் பல வண்ணங்களின் தீற்றல்கள் நிரம்பி இருக்கும் என் ஓவிய வடிவிற்கும் மேலும் அணுக்கமானவராகத் தெரிந்தார். அதனால் அவரது ஓவியத்தை உருவாக்கிக் கொள்வதற்கான வண்ணங்களை வாசிக்கும் கணங்களில் அவரது வரிகளிலிருந்தே தொட்டெடுத்து எனக்கான ஒரு விக்ரமாதித்யனை மறுபடியும் உருவாக்கிக் கொண்டேன். அக்கண நொடிகளில் உருவாகிவந்த பல வண்ணக்கலவைகளால் நிறைந்த விக்ரமாதித்யன்….
வேதமந்திரம் போல் ஒலிக்கும் விக்ரமாதித்யன் கவிதை வரி ஒன்று உள்ளது…
“ஓம்
அது நிறைந்திருக்கிறது
இது நிறைந்திருக்கிறது
நிறைவு நிறைவினின்றும் எழுகிறது
நிறைவினின்றும் நிறைவு எடுத்து
நிறைவே எஞ்சுகிறது
ஓம் சாந்தி சாந்தி சாந்தி…”
அன்புடன்,
ஜெயராம்