அன்பு ஜெ சார்.
செப்டம்பர் 22, 1747 ல். ‘ஸ்விப்ட்’ எனும் தனியார் கண்காணிப்பு கப்பல் ஒன்று ராணியால் பணியில் அமர்த்தப்படுகிறது, கடல்கொள்ளையில் ஈடுபடுபவர்கள் தான் இதன் இலக்கு.. ‘ஸ்விப்ட்’ ரோந்து சுற்றும்போது சந்தேகத்திற்கிடமான ”த்ரீ பிரதர்ஸ்” எனும் கப்பல் மாட்டுகிறது. உடனே துப்பாக்கி சூடு, சுற்றிவளைப்பு, தப்பித்தல், இறுதியில் சரணடைதல். என ”கரீபியன் பைரைட்ஸ்” படத்திற்கு இணையான ஒரு கடற்கொள்ளை நாடகம்.
கொள்ளை கப்பலின் மாலுமியும் 7 பேரும் கைது செய்யப்பட, கடத்தல் செய்யப்பட்ட பொருள் சுங்க அலுவலகத்தில் வைத்து பூட்டப்படுகிறது. அடுத்த இரண்டு வாரத்தில் அறுபது கடத்தல்காரர்கள் ஆயுதங்களுடன் வந்து, சுங்க அலுவலகம் இருந்த நகரையே சூறையாடி, அலுவலகத்தை உடைத்து, கொள்ளை பொருளை மீட்டு அவரவர் பங்கு பிரித்து எடுத்துக்கொண்டு பிரிக்கின்றனர். அந்த பொருள் – தேயிலை.
ஒரு ஆங்கில படத்திற்கு இணையான இந்த காட்சி ஒரு ஆவணப்புத்தகத்தின் தொடக்க வரிகள் என்றால் அது எத்தனை சுவாரஸ்யமான நாவலாக இருக்கும் என்பதற்கு ”தே ” ஒரு சாட்சி. யுவால் ஹராரியின் சேம்பியன், வரைபட நாவலாக வந்தபோது, அதற்கு ஒரு அறிமுக வீடியோ தயாரித்து வெளியிட்டனர், அதில் ஒரு கோதுமை பேசும், எப்படி 12ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், நாடோடியாக திரிந்த மனித இனத்தை தன் வயப்படுத்தியது, அதன் பின்னான மனிதகுலம், எப்படியெல்லாம் கோதுமை எனும் பயிருக்கு அடிமையானது என்று சொல்லி சிரிக்கும். அதற்கு இணையான இன்னொரு ‘உயிரி’ தான் ‘தேயிலை’. ராய் மாக்ஸம் எழுதி தமிழில் சிறில் அலெஸ் மொழிபெயர்த்த, உலக அளவில் கவனிக்கப்பட வேண்டிய ஆவணப்படைப்பு தான்.
இந்நூல் ஒரு உலக-குடிமகனின் கண்கள் வழியாக பார்த்து அனுபவித்து, வாழ்ந்து எழுதப்பட்ட மூன்று மையச்ச்சரடுகள் வழியாக நமக்கு பெரும் வியப்பை தருகிறது. ஆகவே எந்தவிதமான விதந்தோதல்களோ, வெறுப்பின் சாயலோ அன்றி. ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஒரு சுவாரஷ்யமான நாவலுக்கு சற்றும் குறைந்ததல்ல.
முதல் சரடு:- 16ஆம் நூற்றாண்டில் தொடங்கி 2010 வரையிலான அரசியல் மற்றும் வரலாற்று பின்னணியில் பயணிக்கும் தேயிலையின் கதை.
இரண்டாவது சரடு :- சீனாவில், கி முவில் தொடங்கி இன்றுவரை நமக்கு வந்து சேர்ந்த தேயிலை எனும் உயிரியின் வேளாண் நுட்பங்கள் நிறைந்த கதை
மூன்றாவதாக தேயிலை மனிதனையும் மனிதன் தேயிலையையும் சார்ந்திருக்கும் கதை
முதல் சரடு :- சீனாவிலும், இந்தியாவின் ஒரு சில பகுதிகளிலும் மட்டுமே, பயன்பாட்டில் இருந்த தேயிலை எனும் பானம் 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் பிரித்தானிய அரசுக்கு அறிமுகமாகிறது. தேநீர் எனும் பானத்தின் மீது ஆங்கிலேயர்கள் கொண்டிருந்த வேட்கை. ஒரு அசுரக்குழந்தை என வளர வளர, சூழ்ச்சிகள், லாபவெறி, சுரண்டல்கள், இன்றுவரை எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் பிணங்கள், என இந்த அத்தியாயங்கள் முழுவதும், சரியான தரவுகளுடனும், தேதிவாரியான ஆவணங்களுடனும் வரலாற்றினூடாக பயணிக்க வைத்து, அதிகார போட்டி கொண்ட மனித மனங்களின் மீது மாபெரும் அவநம்பிககையையும், சலிப்பையும் உண்டாக்குபவை.
உதாரணமாக கி.மு 206 முதலே தேயிலையை விளைவிப்பதும் உபயோகித்தும், என வாழ்ந்து வந்த சீனர்களை தான் தனது தேயிலை தேவைக்காக நம்பியிருந்தது ஆங்கிலேய அரசு. இறக்குமதிக்கு இணையாக வெள்ளிக்கட்டிகளை கொடுக்க வேண்டியிருந்ததால், ஆங்கிலேய பொருளாதாரம் பலவீனம் அடைந்தது, உலகெங்கும் போர்களையும், கைபற்றலையும் செய்துகொண்டிருந்த பிரித்தானிய அரசுக்கு இது ஒரு பின்னடைவு. அதை சரி செய்ய ஒரு சூழ்ச்சியை கையாண்டது. தனது கட்டுப்பாட்டில் உள்ள காலனி நாடுகளில் ‘ஓப்பியத்தை’ பயிரிட்டு உலகை/ சீனர்களை ஓப்பியத்துக்கு அடிமையாக்கி, வெள்ளிக்கு ஈடாக ஓப்பியத்தை விற்று சமாளித்தது. வெள்ளிக்கட்டிகள், ஓப்பியம், தேயிலை என்கிற ஒரு முக்கோண இணைப்பை உருவாக்குதல். இப்படி எண்ணிலடங்கா சாதிகளின் மூலம் ஒரு உலக அதிகார மையமாக தன்னை நிறுவிக்கொண்டது.
இப்படி குறைந்தது ஆறு, ஏழு வரலாற்று சூழ்ச்சிகளாவது இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் நிகழ்ந்த ஆட்சி, அதிகார மாற்றங்கள், மனித இன முன்னேற்றம் என மூன்று நூற்றாண்டுகளுக்கு பின்னர் இன்றும் நமக்கு வந்து சேரும் இன்றைய தேநீருக்கு பின்னால் இருக்கும் அதிகார மையம் எவ்விதத்திலும் மாறவில்லை.
அந்த நூற்றாண்டில் இன- பேத- பொருளாதார அடிப்படையில் இருந்த மாபெரும் இடைவெளி குறைந்து, இன்று ‘நுகர்வோர்-உற்பத்தியாளர்- தரம்’ என்கிற இடைவெளியாக குறைந்து இருக்கிறது, எனினும் அடியில் எதுவும் மாறவில்லை, என்பதையும் சமீபத்திய அரசியல் நிலைகளை சமரசமின்றி முன்வைத்து செல்கிறார். கிட்டத்தட்ட ஒரு உலக மகா ‘அருங்காட்சியகம்’ சென்று காண்பது போல ஒவ்வொரு காட்சியையும் விவரிக்கிறார்.
இரண்டாவது சரடு – தேயிலை எனும் உயிரியின் வேளாண் வரலாறு, ஒரு கட்டத்தில் நாம் வேளாண் கல்வி சார்ந்த ஒரு நூலை படித்துக்கொண்டு இருக்கிறோம் என்கிற எண்ணத்தை அடைந்து, அதன் சுவாரஸ்யமான நடையால், மிகசரியான தகவல்களால் உள்ளிழுக்கப்படுவோம்.
வழக்கமாக இடுப்பளவு உயரமுள்ள தேயிலை தோட்டங்களில் நின்று ”செல்ஃபி” எடுத்துக்கொள்ளும் நமக்கு, தேயிலை என்பது நாம் காணும் செடியல்ல, 40 அடிகள் வரை உயரமாக வளரக்கூடிய மரம், என்றும் அதன் ஆணிவேர் 20 அடிகள் வரை மண்ணில் துளைத்து செல்லக்கூடியவை என்கிற வேளாண் தகவல்களில் இருந்து தொடங்குகிறார்.
சீனர்களே முதலில் தேநீரை அருந்துகிறார்கள். ஹான் அரச வம்சத்தினரின் கல்லறைகளில் தேயிலை கண்டுபிடிக்கப்படுகிறது. அதன் தேயிலை பாண்டத்தில் “ச்சா” எனும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. நமக்கு ”வாய்க்கரிசி” எனும் சம்பிரதாயம் போல, இறந்த சீனர்களின் உதடுகளுக்கடியில் தேயிலையை பந்து போல சுருட்டி வைத்துள்ளனர்.
சீனத்திலிருந்து ஜப்பானுக்கு சென்ற தேயிலை இன்று தேநீர் விருந்து எனும் கலாச்சாரம் வரை வளர்ந்து வந்துள்ளது. ‘தி க்ளாஸிக் ஆஃப் டீ’ எனும் புத்தகத்தில் லூ.யூ
”தேயிலை தெற்கிலுள்ள ஒரு சிறப்புமிக்க மரத்திலிருந்து வருகிறது. பன்னிரண்டு அடி வரை இந்த மரம் வளரலாம், இம்மரங்கள் மிகவும் தடிமனானவை. அவற்றை கட்டிப்பிடிக்க இருவர் தேவை ” என்று குறிப்பிடுகிறார்.
சீனாவின் யுனான் மாகாணத்திற்கும், மியன்மாருக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்றும் ஒரு மரம் உள்ளது 1700வருட பழமையான இம்மரம் 108 அடி உயரமும், மூன்றடி சுற்றளவும் உள்ளது. கமெல்லியா உயிரினத்தை சார்ந்த தேயிலை, பிற செடிகளை விட குளிரை தாங்கும் சக்தி கொண்டவை, சிறிதளவு உறைபனியை கூட தாங்கிக்கொள்ளும்.
அஸ்ஸாம், சிலோன், கேரளா மலைகளை ஆங்கிலேய அரசு மிகச்சரியாக கண்டடைந்தது. அதன் சீதோஷ்ண நிலைக்கேற்ப தேயிலையை பயிரிட்டது, விதைகளை இறக்குமதி செய்தல், வளர்த்தல், உரமிடுதல் போன்ற அனைத்து வேளாண் சார் தகவல்களையும் துல்லியமாக ஆவணப்படுத்தியுள்ளார். உரங்கள் ஆங்கிலேயர் காலத்தில் தான் பயன்பாட்டிற்கு வருகிறது. சீனர்கள் மனித கழிவுகளை உரங்களாக பல நூற்றாண்டுகள் பயன்படுத்தியுள்ளனர். அவை நோய்த்தொற்றை கொண்டுவந்ததால், 19ஆம் நூற்றாண்டில் தான் கால்நடை கழிவுகள் உரங்களாக பயன்படுத்தப்படுகிறது.
ராய் மாக்ஸம்’க்கு தேயிலை தோட்டத்தில் வேலைபார்த்த அனுபவம் இருந்ததால், தேயிலையின் ஒட்டுமொத்த சித்திரத்தையும் தெளிவாகவும் அனுபவ பூர்வமாகமும் முன் வைக்க முடிகிறது.
தேயிலை கிள்ளுவதில் உள்ள நுணுக்கங்களை, அங்கே நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டுகிறார், உதாரணமாக ’செடியின் நுனியில் உள்ள இரண்டு தளிர்கள் மற்றும் ஒரு மொட்டு என்பது தான் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் இலக்கு. கிள்ளும் தேயிலையின் எடைக்கு ஏற்ப கூலி என்பதால் மேலும் நான்கு இலைகளை ‘கிள்ளி போடுதல்’. போன்ற மனித தவறுகளை சுட்டிக்காட்டுகிறார்.
தேயிலை செடிகளுக்கான இடைவெளி, பார்வையிட செல்லவேண்டிய உகந்த நேரம் காலம், தோட்டத்திற்குள் பாதுகாப்பு முறைகள், என நம்மை ஒரு மலைத்தோட்டத்தின் நடுவே நிற்கவைத்து ஒவ்வொரு இலையையும் தொட்டுக்காட்டி ஒரு சிற்ப சாஸ்திரம் கற்றுக்கொடுக்கும் மனோபாவத்துடன் நம்முடன் பேசுகிறார்.
இந்நூல் முழுவதும் ஒவ்வொரு பத்து பக்கத்துக்கு ஒருமுறை இறந்தவர்களின் எண்ணிக்கை என ஒரு புள்ளிவிவரம் வருகிறது, அதில் 27000 என்பது மட்டுமே மிகக்குறைத்த எண்ணிக்கை. ஆம் தேயிலையின் பொருட்டு கடந்த முந்நூறு ஆண்டுகளில் மட்டும், கொத்தடிமைகள் என, புரட்சியாளர்கள், அரசியல் எதிரிகள் போதை அடிமைகள் அதீத உடலுழைப்பு என பல்வேறு காரணங்களில் கோடிகளில் கொன்று குவித்திருக்கிறார்கள்.
உதாரணமாக தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய சூழலில் அஸ்ஸாமை விட இலங்கை தேயிலை தோட்டங்கள் சாதகமானவை என்கிற நம்பிக்கையில் சென்ற 2,72,000 மக்களில் ஆங்கிலேய கணக்கெடுப்பின் படி 1849ல் 1,33,000 பேர் மட்டுமே உயிருடன் உள்ளனர், கிட்டத்தட்ட 55,000பேர் என்னவானார்கள் என்பதே தெரியவில்லை.
இது போல உலகம் முழுவதுமுள்ள தேயிலை தோட்டங்களை கணக்கில் கொண்டால். பஞ்சமும் போர்களும் கொன்று குவித்த மனிதர்களுக்கு சமமாகவே, தேயிலை தோட்டங்களும் கொன்று புதைத்து, தனக்கு உரமாக்கிக்கொண்டு செழித்து வளர்ந்து நிற்கிறது.
இந்த அத்தியாயத்தில் அடிமைகளை நடத்தும் விதம், கண்காணிகளின் வரம்புகள் மற்றும் மீறல்கள், தண்டனைகள், தோட்டங்களில் இருந்து தப்பித்தல் ஒரு சாரார் தோட்டங்களை நோக்கி வருதல், என அனைத்தையும் பதிவு செய்கிறார். மிகத்துயரமான முடிவு என்பது யானைகளுக்கு ஏற்பட்ட கொடுமைகள் தான். தோட்டங்கள் பெருகும் தோறும் யானைகளும் அடிமைகளாக பெருகின. வேட்டையாடப்பட்டன மனித உயிர்பலிக்கு இணையாகவே, யானைகளும் மூன்றில் ஒருபங்கு தங்களது இனத்தை இழந்தன. அனைத்திற்கும் பின்னிருந்தது. தேயிலை எனும் ‘யட்சி’.
காந்தியை பற்றிய சித்திரத்தை உருவாக்க ராய் முயல்கிறார் துரதிஷ்டாவசமாக தோட்டங்களும், தொழிலாளர்களும் காந்திக்கு எதிராகவே இருந்திருக்கின்றனர்.
மனிதஇனம் தோன்றியது முதல் போர்களும், புரட்சிகளும் முடிந்து அடுத்த காலகட்டம் என்பது ஒவ்வொரு முறையும் ஒரு யுகசந்தி. யுவால் சொல்வது போல் கோதுமை மனிதனை உண்டதும், மனிதன் கோதுமையை உண்டதும் ஒரு யுகசந்தி என்றால், அந்நிகழ்வை தேயிலையையும் – மனிதர்களையும் கருவியாக வைத்து மீண்டும் ஒரு யுகசந்தியை ஆகியிருக்கிறது இயற்கை.
முன்னுரையில் சிறில் அலெக்ஸ் ‘வரலாறு எனும் க்ரைம் நாவல்’ என்று தான் இந்த நூலை குறிப்பிடுகிறார். ஆம். ஒரு துப்பறியும் நாவலுக்கு இணையான கச்சிதமான மொழிபெயர்ப்பு தான், இந்த நூலின் முக்கியமான சுவாரஸ்யமே. ஒரு ஆவணப்புத்தகம் அல்லது வரலாற்று நூல் தரும் ஒரு சிறு சலிப்பு கூட வந்துவிடாமல், மொழியாக்கம் செய்திருக்கிறார். ராயுடனான, சிறிலின் நட்பும், தொடர் உரையாடலும், இந்த படைப்பை ஆகச்சிறந்த ஒன்றாக மாற்றியிருக்கிறது.
அன்புடன்
சௌந்தர்
***
ஓர் இலை, ஒரு வரலாறு- லோகமாதேவி
உப்பு வேலி வெளியீட்டு விழா – சிறில் அலெக்ஸ் அறிமுக உரை
உலகின் உப்பு- சிறில் அலெக்ஸ் முன்னுரை