[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]
தெலுங்கில் சற்று இசைத்தன்மை கொண்ட கவிதைகள் இவை. அவற்றின் ஆங்கில வடிவில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டவை.
கவிஞர் அஜந்தா என் கவிதையை வாசித்தபோது…
எரிமலையொன்றின் கைகளில்
என் கவிதையை அளித்துவிட்டு
ஒருகணம்
தயங்கி நின்றேன்
புல்லின் இதழொன்று
இளவேனில் தன்னை
சிலிர்க்கச் செய்ததெப்படி என்பதை
பகிர்ந்துகொள்வது போன்றது அது
கிழக்கு மலைத்தொடரின்
காடுகளன்றி
யாரால் அதை புரிந்துகொள்ள முடியும்
உனது கவிதையை வாசித்துக்காட்ட
விரிமனம் கொண்டவரை கண்டடை
இல்லையெனில்
அதை தீயிலிடு
உனைச் சூழ்ந்த உலகு
கனியாத வரை
அனலெழும் உயிரொலிகளே
உனக்கு ஆறுதல்
என் வாழ்நாளில்
நான் கண்டடைந்த ஒன்றுண்டு
எழில்கொண்ட சிறு பொருளையும்
எதிரொளிப்பதற்கு
எதிரே
ஒளிகடத்தும் இதயமொன்று அவசியம்
வாசித்துவிட்டு
தலையசைத்தார்
அப்படியே சாய்ந்தேன்
அவர்முன்
மூன்றாம் உலகக் கவிகள்
குண்டுகளாலும், போர்களாலும்,
நாடுகடத்தல்களாலும்
அடக்குமுறையாலும்
உள்நாட்டுக் கலகங்களாலும்
பூசல்களாலும்
கொடுங்கோன்மையாலும்
எரிக்கப்பட்ட உலகை
இவ்வாறாகத்தான் மீட்டெடுத்தார்கள்
மூன்றாம் உலகக் கவிகள்
நைந்துபோன தேய்வழக்குகளையும்
வெற்று அணிச்சொற்களையும்
பொய்யான வாக்குறுதிகளையும்
பொருளில்லாப் பேச்சுகளையும்
கொண்டல்ல
தெருவில்
மயங்கிவிழுந்தவர்மீது
நீர் தெளிப்பதுபோல
உயிரிழந்துகொண்டிருந்த உலகிற்குள்
உயிர்மூச்சை செலுத்தினார்கள்
வீட்டில் நோயாளியைப் பேணுவதுபோல
தங்கள் நாடுகளை
தங்கள் உடன்பிறப்புகளை
பாதுகாத்தார்கள்
தோட்டத்திலிருந்து பழங்களும் பூக்களும்
கீரையும் கொணர்ந்தார்கள்
கோப்பையில் பழச்சாறை நிறைத்தார்கள்
ஒவ்வொரு காலையிலும் வாழ்த்தினார்கள்
இரவில் செருகும் கண்களில் முத்தமிட்டு
இனிய கனவுகள் காண்க என்றார்கள்
அவர்கள் அருகிருந்து பொறுமையுடன்
கவனித்துக் கொண்டார்கள்
டெட்டால் வாசமும்,
மருந்துகளின் நோய்மணமும்
சூழ்ந்த அறையில்
சாய்வு நாற்காலியிலோ
இரும்புக் கட்டிலிலோ
கண்ணயர்ந்தார்கள்
நடுவில் திடீரென விழித்தெழுந்து
சிறைச்சாலைகளை நினைவுறுத்தும்
மருத்துவமனை அறைகள் வழியே
நேரத்தையும் தெர்மாமீட்டரையும்
பார்த்தார்கள்
விடியும் என்ற மெல்லிய நம்பிக்கையோடு
அடர் இரவுகளை கழித்தார்கள்
பழைய ஏற்பாட்டின் ஒரு டேனியலைப் போல
ஜெரிமியாவைப் போல
ஜோஷுவாவைப் போல
ஜாபைப் போல
அசையா நம்பிக்கை கொண்டிருந்தார்கள்
அவர்கள் செய்ததை தியாகம் என்று சொல்ல மாட்டேன்
மிக எளிய சொல் அது
அவர்கள் வாழ்வை முழுமையாக வாழ்ந்தவர்கள்
அவர்களது இருப்பு காலந்தவறாத பிரார்த்தனை போல
எப்போதும் இருந்தது
வண்ணத்துப்பூச்சியின் சிறகுடன்
வீழ்ந்த உலகை சுமந்தார்கள்
ஐந்து ரொட்டித்துண்டுகளையும்
இரண்டு மீன்களையும் பகிர்ந்தளித்து
பசியைப் போக்கி
வாழ்வை சிறக்கச் செய்தார்கள்
சூரியன் உதித்து வெயில் பரவத்தொடங்குகையில்
திரைகளை விலக்கி, ஜன்னல்களைத் திறந்து
ஆறுதல் தரும் புன்னகையுடன்
தம் மக்களிடம் சொல்கிறார்கள்:
‘பாருங்கள், எல்லாம் சரியாகும் என்று சொன்னோமல்லவா?’
குழந்தைகளுக்கு உணவில்லா கிராமங்களில்
குழந்தைகளுக்கு உணவில்லா கிராமங்களில்
பூக்கள் இருள்கின்றன
குழந்தைகள் பசித்திருக்கும் கிராமங்களில்
மரங்கள் கல்லாகின்றன
குழந்தைகளுக்கு உணவில்லா நாடுகளில்
பால் கருமைகொள்கிறது
குழந்தைகள் பசித்திருக்கும் நாடுகளில்
ரொட்டி கல்லாகிறது
குழந்தைகளுக்கு உணவில்லா உலகில்
பாடல்கள் இருண்டு ஒலிக்கின்றன
குழந்தைகள் பசித்திருக்கும் உலகில்
கவிதைகள் கல்லாகின்றன.
இஸ்மாயில் எனும் கவிஞன் (மனிதன்)
கரும்பச்சையும் எலுமிச்சை மஞ்சளும்
தீட்டப்பட்ட
பழைய சீன மூங்கில் சுவடி போலிருக்கிறான் அவன்
பிப்ரவரிக் குதிரைகள் மிதித்துச் செல்லும்
உதிர்ந்து சிதறிய மாம்பூக்கள்
சாயும் அந்தியொளியில்
கொக்குகளின் மாலையொன்று
நீர் நிறைந்த ஜாடியின் புனித மௌனம்
விடாது எழுந்தமைகின்றன அலைகள்
வரவேற்பறையில் ஓய்வாக அமர்ந்து
மாலைத் தேநீர் அருந்துகிறான்.
சாத்தியமில்லை என்றாலும்
வலிமையை ஒன்று திரட்டி
தலை நிமிர்த்தி
அவன் நோக்கிக்கொண்டிருக்கும் திசையில் பார்க்கிறோம்:
அங்கே நாம் காண்பதென்ன?
ஒரு குருவி
ஒரு மலர்
ஒரு ஹைக்கூ
என்றென்றைக்குமாக நறுமணம் நம்மை காயப்படுத்தியபோது
பிரபஞ்சத்திலிருந்து பாலைத் திருடிப் பிழைத்தோம்
தோமஸ் டிரான்ஸ்டிரோமர்
வெள்ளம் விட்டுச்சென்ற நீர்த்தடம் போல்
வேம்பின் மணம் இன்னும் தெருவில் மிதக்கிறது
அத்தகைய பருவமொன்றில்
முதன்முதலாக உன் கைபற்றினேன்
அந்நினைவு நம் எலும்புகளுக்குள் இறங்கியது
மணமோ
என்றென்றைக்குமென நம்மை காயப்படுத்தியது
இப்போது
இன்னொரு இளவேனில் கழிந்துவிட்டது.
இடையே
உன் உடலின் ஒவ்வொரு வளைவையும்
நீந்திக் கடந்தேன்
ஒருவரிடமிருந்தொருவர்
பெறக்கூடியதையெல்லாம் ஈர்த்துக்கொண்டு
எஞ்சியவற்றை
மொய்க்கும் வண்டுகளுக்கும்
தென்றலுக்கும்
தேவதூதனுக்கும் விட்டுச்சென்றோம்
மறைவிடத்திற்குள் இழுத்துச்சென்று
உன் முலைகளை ரகசியமாக
நீ எனக்குத் தரும்போது
தரையிறங்கும் விமானத்தின் சக்கரம்
பூமியை பற்றிக்கொள்ளும் தீவிரத்தோடு
என் ஆற்றலனைத்தையும்
என் உதடுகளுக்குக் கொணர்வேன்
[ஆங்கிலம் வழி தமிழில் ஆனந்த் ஸ்ரீனிவாசன் ]
தெலுங்குக் கவிதையின் அறுபதாண்டுகள்-இஸ்மாயில்