இணைய மொண்ணைகள் -மேலும் கடிதங்கள்

இணைய மொண்ணைகள் – கடிதங்கள்

நூல்கள் வாங்க

https://www.vishnupurampublications.com/

அன்புள்ள ஜெ,

நீங்கள் இணைய மொண்ணைகள் பற்றி எழுதிய குறிப்பை இணைய மொண்ணைகள் – கடிதங்கள் வாசித்தேன். நானே அந்த வேடிக்கையை இரண்டு நாட்கள் முன் வாசித்தேன். அதைப்போய் ஏன் உங்களுக்கு எழுதவேண்டும் என நினைத்தேன். அந்த பகடிக் குறிப்பை எழுதியவர் போப்பு. அவர் ஒரு கைமருத்துவர். அதாவது குவாக். முற்போக்கு குவாக். முகநூல் வாழ்க்கை.

ஒருவரை பகடி செய்யவேண்டுமென்றால் அவரை ஆழ்ந்து படித்திருக்கவேண்டும். அவருடைய க்ளீஷேக்களை பகடிசெய்வது வழக்கம். ஆனால் அதுகூட ஒரு படி கீழ்தான். அவருடைய சிறந்த மொழிப்பிரயோகங்களை புத்திசாலித்தனமாக பகடி செய்யவேண்டும். அதுதான் கிளாஸ். இவர்களுக்கு அந்த சூட்டிகை எல்லாம் பத்தாது. இவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ அதை எழுதுகிறார்கள். உங்களை போல எழுத முயல்கிறார்கள். ஆனால் எழுதவேண்டுமென்றால் வாசிக்கவேண்டும், மொழி வேண்டும். இணைய மொண்ணைகளுக்கு அதற்கு எங்கே வக்கு?

ஆனால் அந்த மொக்கைப் பகடியை பகடி என்றுகூட தெரிந்துகொள்ளாமல் நீங்கள் எழுதியதாக நம்பி அப்படியே பகிர்ந்து அதன்மேல் கோபாக்கினிகளை கக்குவது, ஹிஹி விடுவது  என்று ஒரு கும்பலே இரண்டுநாட்களாக கோலாட்டம் போட்டது. அதை தொடங்கிய அதிபுத்திசாலி மதி கந்தசாமி என்ற அம்மையார். விஷயம் தெரிந்தவர்போல அசட்டுத்தனங்களை எழுதுபவர். அவ்வப்போது உங்களை வசைபாடி கவனம் பெறுபவர். அதன் பின் லட்சுமி சரவணக்குமார் என்பவர். அங்கிருந்து ஆரம்பித்து ஒரே வசை, இளிப்பு.

வினாயக முருகன் கடுமையாக ஒரு கண்டனம் எழுதினார். அதாவது, கை தானாக எழுதுமென்றால் புத்தகம் தானாக அச்சிட்டுக்கொள்ளாதா என்று. என்ன அறிவுக்கூர்மை. என்ன ஒரு சூட்டிகை. அந்த பதிவில் நறுமுகைதேவி, ராஜ் சிவா , சென் பாலன், ராஜராஜேந்திரன், உமாமகேஸ்வரன் பன்னீர்செல்வம், சுதீர் செந்தில் என ஒருவர் பாக்கியில்லாமல் இணையக்கும்மியில் உயிர் வாழும் அத்தனை மொண்ணைகளும் போய் கொதித்தனர், வசை எழுதினர்.

இவர்கள் எவருக்குமே உங்களுடைய மொழிநடையோ நீங்கள் எழுதும் பாணியோ அறிமுகம் இல்லை. அதற்கு தொடர்ச்சியாக ஒருசில பக்கங்களாவது படிக்கும் வழக்கம் இருந்தால்தானே வாய்ப்பு. இவர்களில் எவரையாவது பார்த்தால் “ஏண்டா, இரவுபகலாக ஒருவரை திட்டிக்கொண்டே இருக்கிறீர்களே, அவர் எழுதிய பத்து பக்கத்தையாவது படித்துப்பார்த்தால்தான் என்ன கேடு உங்களுக்கு?” என்று கேட்டிருப்பேன்.

என்னென்ன கொதிப்புகள். ‘இப்படியெல்லாம் ஜெயமோகன் வாசகர்களை மடையர்களாக ஆக்குகிறார், ஜெயமோகன் வாசகர்கள் எல்லாம் ஏன் எங்களைப்போல அதிபுத்திசாலிகளாக இருக்கக்கூடாது’ என்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அசட்டுத்தனம் அம்பலமானதும் அப்படியே அழித்துவிட்டனர் என நினைக்கிறேன். எதுவரை போகுமென்று பார்க்கலாம் என்று நானும் காத்திருந்தேன். உங்கள் இணையதளத்தில் குறிப்பு வெளியானதும் முகநூல்பதிவை நீக்கிவிட்டார்காள். முந்தையநாள் இரவு வரை சுட்டி வேலை செய்தது. காலையில் நீக்கியிருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் ஒரு மாதம் கழித்து இதையே இன்னொருவர் ஆரம்பிப்பார்.

இவர்கள் என்ன சொன்னால் நமக்கென்ன என்று இருக்கலாம். ஆனால் நாம் பார்க்கத் தவறுவது ஒன்று உண்டு. இந்த அசட்டுக்கும்பல் உண்மையிலே மிகப்பெரிய சுமை. இணைய வெளி என்பது நம்மைப்பற்றி நாம் சுதந்திரமாகப் பேசி விவாதிப்பதற்காக இன்றைய தொழில்நுட்பத்தால் அளிக்கப்படுவது. மிகப்பெரிய வாய்ப்பு. இவர்கள் இரவுபகலாக அங்கேயே கிடந்து, எல்லா இடத்திலும் போய் இதைப்போல அசட்டுப்பகடிகள், வெற்றுக்கோபங்கள், காழ்ப்புகளாக கக்கி எதையும் எவரும் பேசமுடியாமல் ஆக்குகிறார்கள்.

அதைவிட யார் எதைச் சொன்னாலும் உடனடியாக சம்பந்தமே இல்லாமல் திரித்து, போலி உணர்ச்சிகளைக் கிளறிவிட்டு சிக்கலாக்கிவிடுகிறார்கள். இடைநிலைச் சாதிவெறி, கட்சிவெறி இரண்டும்தான் இவர்களை ஆட்டிப்படைக்கும் சக்திகள். இந்தக் கும்பலால் நாம் நவீன தொழில்நுட்பம் நமக்களித்த மிகப்பெரிய வாய்ப்புகளை இழந்து நின்றிருக்கிறோம். இணையவெளியை மனநோய்ப்பரப்பாக ஆக்கியிருக்கிறார்கள்

ராஜ்

 

அன்புள்ள ஜெ

இணையமொண்ணைகள் பற்றிய குறிப்பை வாசித்தேன். திரும்பத் திரும்ப இந்தக் கும்பல் உண்டுபண்ணும் கடும் சலிப்பு பெரிய சிக்கலாக இருக்கிறது. இன்றைக்கு எழுதுபவர்கள் வாசிப்பவர்களுக்கு அவர்களின் சூழலில் பேச ஆளில்லை. ஆகவே பொதுவான இணையவெளிக்கு வருகிறோம். அங்கே வந்து இவர்கள் அறிவே இல்லாமல் சலம்பிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையான பிரச்சினை காழ்ப்போ, வெறுப்போ அல்ல. அறிவில்லாமைதான். இவர்களால் படிக்க முடியாது, படித்தால் புரியாது, அவ்வளவுதான்.

முன்பு ஒரு மொண்ணை ஏதோ டிவிட்டர் வரிகளை வாசித்துவிட்டு ‘கண்மணி குணசேகரனின் சாதிசார் அழகியலை ஜெமோ ஆதரிக்கிறார். அவர் கண்மணி குணசேகரனின் வன்னியர்சங்க அரசியலை ஆதரிக்கிறார்’ என்று சவுண்ட் விட்டுக்கொண்டிருந்தது. நான் ‘கண்மணி குணசேகரன் சாதிச்சங்க மேடையில் தோன்றியதை கண்டித்து எழுதப்பட்ட முதல் கட்டுரை, அனேகமாக ஒரே ஒரு கட்டுரை ஜெமோ எழுதியதுதான். தெரியுமா?”என்றேன். விழித்தது. நிழல்நாடுவதில்லை நெடுமரம் கட்டுரையை அளித்தேன்.

ஆனால் நாலைந்து பத்திக்குமேல் அந்த மொண்ணையால் படிக்க முடியவில்லை. “என்ன சொல்ல வரார்னு தெரியலை. குழப்புறார்” என்றது. “அதாவது ஒற்றை வரி வேணும் இல்ல? அப்ப கடைசி வரிய படி” என்றேன். ”அப்ப ஏன் இப்ப இப்டி சொல்றார்? அரசியல் பண்றார்” என்றது. “இப்பவும் அதையே சொல்லி லிங்கும் குடுத்திருக்கார்” என்றேன். அதன்பிறகும் கட்டுரையை படிக்க முடியவில்லை. அதன்பின் “இதில ஒரு அரசியல் இருக்கு” என்றது. அவ்வளவுதான்.

உண்மையில் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒன்றின் இரண்டு பக்கங்கள் என்பதெல்லாம் அந்தச் சின்ன மூளைக்கு ஏறவில்லை. ஆனால் இரண்டு நாளைக்கு பிறகு “ஜெமோ கட்டுரையை நுட்பாகப் பார்க்கவேண்டும். அதன் அரசியல்…” என்று பெனாத்தி ஏதோ எழுதியிருந்தது. உண்மையில் சூழலில் உலவும் இந்த மடையர்கள் மிகப்பெரிய சுற்றுச்சூழல் மாசுபாடாக மாறியிருக்கிறார்கள்.

பாஸ்கர் எம்

அன்புள்ள ஜெ

இணைய மொண்ணைகள் கட்டுரையை வாசித்துவிட்டு சம்பந்தப்பட்டவர்களின் முகநூல்களை எட்டிப்பார்த்தேன். எவராவது கொஞ்சமாவது கூச்சப்படுகிறார்களா என்று. இணையமொண்ணைகளின் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என்னும் பாவனைதான். வினாயக முருகன் உங்கள் தளத்தில் பெயர் வந்ததில் மகிழ்ச்சி கொண்டாடிக்கொண்டிருக்கிறார். இப்படியே போனால் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் “இணைய மொண்ணையா இருக்கோம்” என்று இவர்களே அறிமுகம் செய்துகொள்வார்கள் போல

அர்விந்த்

அன்புள்ள அர்விந்த்

ஆமாம், இவர்கள் முயல்வது இந்தச் சின்ன கவனிப்புக்காகத்தான். மொண்ணை என்னும் கவனிப்பு கிடைத்தாலும் மகிழ்ச்சிதான் அடைவார்கள்.

ஜெ

சாத்தானைச் சந்திக்க வந்தவர்

ஒரு விமர்சனம்

வசைபாடிகளின் உலகம்- எதிர்வினையும் பதிலும்

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா, வருக!
அடுத்த கட்டுரைகதைகள் மொழியாக்கம்- கடிதங்கள்