தன்னைக் கடத்தல்

நூல்கள் வாங்க

https://www.vishnupurampublications.com/

“காதில் தீராத ஒலி கேட்டுக்கொண்டிருக்கும் டின்னிடஸ் என்னும் நோய்கொண்ட ஒருவர், தூக்கத்திற்கான நேரம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் நோய் கொண்ட ஒருவர் என இருவர். அவர்களின் வெற்றியின் கதையை அவர்கள் சொல்கிறார்கள். தங்கள் சிக்கலை தீர்த்துக்கொண்டதுடன் மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவும் அவர்கள் ஆகிறார்கள்.

தங்கள் தனிவாழ்க்கைச் சிக்கல்களால் தங்களை முற்றாகவே சமூகத்தில் இருந்து ஒளித்துக்கொள்ள விரும்பும் மூவரின் குறிப்புகள் இதிலுள்ளன. அவர்களைப் போன்ற பல்லாயிரவர் நம் சமூகத்தில் உண்டு. அவர்களின் உளவியலும் சிக்கல்களும் அவர்களின் சொற்கள் வழியாகவே இதில் பதிவாகியிருக்கின்றன.

இந்நூல் வெவ்வேறு வகையில் வெளியே தயங்கி நின்றிருப்பவர்களுக்கு தன்னம்பிக்கையை, ஊக்கத்தை அளிப்பதாக அமையும். ஏனென்றால் இது, தன் எல்லைகளைக் கடந்தவர்கள் மற்றும் கடக்க முற்படுபவர்களின் கதை.”

~ எழுத்தாளர் ஜெயமோகன்

‘விழிப்புணர்தலே குணமாகுதலின் முதற்படி’ என்ற கூற்று வாழ்வின் அனைத்து அகக்கேள்விகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு பொதுப்பதில். மீளவே முடியாது என நாம் நம்பிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தடைகளையும், எங்கோ யாரோ ஒருவர் மீண்டெழுந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். அதேபோல, நமக்கு மட்டுமே உண்டான தனிச்சிக்கல் என யூகித்திருந்த ஒரு விசயத்திற்கு, இன்னொரு மனிதன் தன் வாழ்விலிருந்து தீர்வுரைக்கும் போது நம் மனம் மறுபரிசீலனைக்கு உள்ளாகிறது.

அவ்வகையில் இன்றைய நவீன சமூகத்தின் உளநிலையில் மெல்லமெல்ல ஆதிக்கம் செலுத்திவரும் டின்னிடஸ் எனும் காதிரைச்சல், உறக்கமின்மை, உளச்சோர்வு ஆகிய பிறழ்வுகளால் பாதிப்படைந்தவர்கள், அதிலிருந்து தங்களை எவ்வாறு மீட்டுக் கொண்டார்கள் என்பதை அவர்களின் கடித மொழியிலேயே பதிவுசெய்த நூலாக ‘தன்னைக் கடத்தல்’ புத்தகமடைந்துள்ளது. நிச்சயம் இந்தச் சிக்கல்கள் பொதுச்சமூத்தில் உரையாடப்படுவதைக் காட்டிலும், சிக்கலுக்குள்ளானோரின் அகத்தில் ஓர் தீர்வுரையாடலாகத் துவங்கப்பட வேண்டுமென ஜெயமோகன் விழைகிறார்.

தன்னைக் கடத்தல் புத்தகம், வருகிற டிசம்பர் 25, 26 தேதிகளில் கோவையில் நிகழவுள்ள விஷ்ணுபுரம் இலக்கியவட்ட விருதளிப்பு நிகழ்வில்  வெளியீடு கொள்கிறது. தேர்ந்த அச்சுத்தரத்தில் இதை ஒரு நற்புத்தகமாக வாசகமனங்களின் கைகளில் சேர்ப்பிக்கும் கனவோடு காத்திருக்கிறோம். தன்னறம் வாயிலாக இதற்கு முன்பு வெளியாகிப் பரவலடைந்து ‘தன்மீட்சி’ நூலின் இன்னொரு நீட்சிப்பரிமாணம் என்றும் இந்நூலைக் கருதலாம்.

நன்றியுடன்,
தன்னறம் நூல்வெளி
www.thannaram.in


 

முந்தைய கட்டுரைகிசுகிசுப்பின் இனிமை- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைவிக்ரமாதித்யனின் ஆன்மிகம் – போகன்