சிறுகதைகளில் எதிர்பார்ப்பது…

அன்புள்ள ஜெயமோகன்,

நான் ஆறுமாதகாலமாக சிறுகதை எழுத முயல்கிறேன்.ஆனால் அதன் சூட்சமம் பிடிபடவில்லை என்றே நினைக்கிறேன்.நான் ஒரு மாத காலமாக உங்கள் தளத்தை தொடர்ந்து படித்தும், தேடி தேடிச் சிறுகதைகள் பற்றி நீங்கள் எழுதியிருக்கும் குறிப்புகளையும் படித்து வருகிறேன்.நான் ஒரு ஏழு வருடமாகதான் இலக்கியம் வாசிக்கிறேன் அதுவும் அப்பப்போ ஊறுகாயைப்போல.

அதிலும் சிறுகதைகளை தான் மனம் விரும்புகிறது. அதன் சாத்தியங்களை ரசிக்க முடிகிறது. உங்கள் தளத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள சில இளம் எழுத்தாளர்களையும் படித்தேன். முன்னோடிகளையும் படித்துக் கொண்டே வருகிறேன்…நீங்கள் பல பெயர்களில் பல கதைகளை உங்கள் கல்லூரி காலத்திலே எழுதியதால் வந்த பயிற்சி மிக முக்கியமாக கருதுகிறேன் என்று சொன்னீர்கள். நானும் அதை ஏற்கிறேன்..

இப்பொழுது எழுதுபவர்களின் கதைகள் பிரசுரம் ஆனதும் தாங்கள் எழுத்தாளர் ஆகிவிட்டதாக புளகாங்கிதம் அடைந்து அதே போன்றே கதைகளை எழுதி தள்ளுகிறார்கள். மின்னிதழ்களில் அல்லது காலச்சுவடு, கணையாழி மற்றும் உயிர்மை போன்ற இதழ்கள் பிரசுரிக்கும் கதைகளில் ஏதும் பெரிய ஈர்ப்பை கொடுக்கவில்லை.

நீங்கள் உங்கள் தளத்தில் வெளியிடும் அல்லது விவாதிக்கும் கதைகளை எழுதுபவர்களை புதிய நம்பிக்கைகள் என்று கொள்ளலாம். எனக்கு இரண்டாயிரத்துக்கு பிறகான எழுத்துகளில் குறைந்தது பத்து நல்ல சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர் அல்லது சிறந்த கதைகளை கொண்ட தொகுப்பு என்று எதனை பரிந்துரைப்பீர்கள்? மற்றும் கடந்த மாதங்களில் இதழ்களில் வெளியாகி தங்களை கவர்ந்த கதைகளை குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்…

ப்ரியமுடன்

ராம் பிரியன்

அன்புள்ள ராம்.

சிறுகதைகளின் சூட்சுமம் என ஏதுமில்லை. அது புனைவின் ஒரு சிறுவடிவம். அந்தச் சிறுவடிவுக்குள் எந்த அளவுக்குச் செறிவை ஏற்ற முடியும் என்பதே சவால். அதை வெவ்வேறு வகைகளில் வெவ்வேறு தலைமுறை எழுத்தாளர்கள் முயன்றிருக்கிறார்கள். விளைவாக வெவ்வேறு வடிவங்கள் உருவாயின. மேலும் உருவாகிக்கொண்டிருக்கின்றன.

மிகச்சிறிய பகுதிக்குள் மிக அதிகமாகச் சொல்ல மிகச்சிறந்த வழி என்பது வாசகனையே ஊகிக்க விடுவது. ஆகவே ஆரம்ப கட்டச் சிறுகதைகள் எல்லாம் சுருக்கமாக ஒரு வாழ்க்கைப் பகுதியைச் சொல்லி எஞ்சிய விரிந்த வாழ்க்கையை வாசிப்பவனே ஊகிக்கும்படிச் செய்தன. உதாரணம் ஆண்டன் செகாவ் சிறுகதைகள்.

தமிழில் ஒரு சிறுகதை சொல்கிறேன். கந்தர்வன் சிறுகதை. அதில் ஒரு நள்ளிரவு பேருந்தில் ஒருவன் தன் அக்காவை அவள் கணவன் வீட்டில் இருந்து கூட்டிச் செல்கிறான். அவள் மனம்பிறழ்ந்திருக்கிறாள். அவ்வப்போது எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி “டேய் நான் பத்தினிடா! நான் பத்தினிடா!” என்று கூச்சலிடுகிறாள். முதலில் சீற்றமடையும் பயணிகள் பிறகு அவள் நிலையை உணர்ந்து அமைதியாகிறார்கள். அவர்கள் இறங்கிச் சென்றபின்னரும் அக்குரல் ஒலிப்பதுபோல் இருக்கிறது. இவ்வளவுதான் கதை. இந்தக்கதை ஒரு சிறுதுளி வாழ்க்கை. ஆனால் இதில் இருந்து நாம் எவ்வளவோ கற்பனைசெய்யலாம் இல்லையா?

சிறுகதையின் கிளாஸிக்கல் வடிவம் இதுதான். கதை முடியும்போது புதியதாக தொடங்கி மேலும் செல்வதுபோல் இருக்கும். அதற்காக கடைசித் திருப்பம், இறுதி உச்சம், கவித்துவமான குறிப்புத்தன்மை போன்ற பல வடிவங்களை கண்டடைந்திருக்கின்றன. அசோகமித்திரனின் பிரயாணத்தில் கடைசிவரியில் திருப்பம் உள்ளது. மொத்தக் கதையும் இன்னொரு வகையில் மாறி விடுகிறது. வண்ணதாசனின் நிலை கதையில் கடைசியில் ஒரு கவித்துவ அழுத்தம் உள்ளது. ஊர் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் தேர் ஒருத்திக்கு மட்டும் அசைவில்லாமல் காட்சி அளிக்கிறது. இந்த உத்திகள் எல்லாமே கதை மீண்டும் பெருகவேண்டும் என்பதற்காக.

அடுத்த தலைமுறையில் நான் எழுதவந்தபோது ஒரு கதைக்குள் மிகப்பெரிய வாழ்க்கையை அல்லது வரலாற்றைச் செறிவாகச் சொல்ல தொன்மங்களையும், கதைக்குள் கதைக்குள் கதை என விரியும் வடிவையும், படிமங்களையும் பயன்படுத்தினேன். உதாரணம் படுகை. ஒரு வரலாறு அதில் பேய்ச்சி என்னும் தெய்வமாகவும், வண்ணத்துப்பூச்சி என்னும் படிமமாகவும் சொல்லப்பட்டுள்ளது. கதையை ஒருவர் சொல்கிறார், அவர் நினைவில் இன்னொருவர் கதை சொல்கிறார், அவர் இன்னொருவர் சொல்லி தான் கேட்ட கதையை சொல்கிறார். இது மெட்டஃபிக்‌ஷன் என்னும் வடிவம். இப்படி இன்னும் புதிய வடிவங்கள் வரலாம்,

நான் இன்று எழுதுபவர்களில் அவ்வாறு புதிய சாத்தியங்களை தேடுகிறேன். அவர்கள் அதற்கு முயற்சிசெய்தால் இவரை கவனியுங்கள் என்று சுட்டிக்காட்டுகிறேன். வாசகர்கள்தான் மதிப்பிடவேண்டும்

ஜெ

சிறுகதை வாசிக்க பயிற்சி அவசியமா?

சிறுகதை எழுதுவது- கடிதம்

சிறுகதையின் திருப்பம்

சிறுகதையின் வழிகள்

சிறுகதை ஒரு சமையல்குறிப்பு

முந்தைய கட்டுரைகுழந்தைகள் தேவையா?- கடிதம்
அடுத்த கட்டுரைசிறார் இலக்கியம்- கடலூர் சீனு