இணைய மொண்ணைகள் – கடிதங்கள்

 அன்புள்ள ஜெ,

இணைய உலகில் மொண்ணைகள் உங்களைப் பற்றி எழுதுவதை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். இந்த இணைய மொண்ணை என்னும் சொல்தான் எவ்வளவு அற்புதமானது என்று நினைத்து சிரிக்கவைக்கும் தருணங்கள் வந்துகொண்டே இருக்கும். இந்த இணைப்பைப் பாருங்கள்.

http://ramaniecuvellore.blogspot.com/2021/12/blog-post_52.html

எவனோ உங்களைப் பற்றி பகடியாக எழுதியதை அப்படியே நம்பி இந்த தோழர் கொதித்திருக்கிறார். படித்தால் எந்த அசடுக்கும் இது பகடி என தெரியும். இவர்களுக்கு புரிவதில்லை.

இவ்வளவுதான் அறிவுத்திறன். எல்லா விஷயத்திலும் இப்படித்தான் புரிந்துகொள்கிறார்கள். கொந்தளிக்கிறார்கள். எதையுமே வாசிப்பதில்லை. கொஞ்சம்கூட புரிந்துகொள்வதில்லை. இதுகூட வாட்ஸப்பில் எனக்கு இன்னொரு தோழரால் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

ஆர்.ரவிக்குமார்

அன்புள்ள ஜெ,

இணையத்தில் போப்பு என்பவர் அரைவேக்காட்டுத்தனமாக உங்களைப் பற்றிய ஸ்பூஃப் ஒன்றை எழுதியிருந்தார். அதை அப்படியே நீங்கள் உண்மையாகவே எழுதியதாக எடுத்துக்கொண்டு பகிர்ந்து பலர் கொந்தளிக்கிறார்கள். அந்த பதிவுகளுக்கு பலர் கடுமையான எதிர்வினைகளைப் போடுகிறார்கள். அதில் பலபேர் எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள். புத்தகங்கள் வெளியிட்டவர்களும் உண்டு. [வினாயக முருகன் : https://www.facebook.com/photo/?fbid=4530217287013862&set=a.146914078677560

அந்த வரிகளைப் படித்தாலே அது வேண்டுமென்றே அபத்தமாக தோன்றும்படி  எவராலோ எழுதப்பட்டது என்று தெரியும். இவர்களுக்கு அதுகூட புரியவில்லை இவர்களின் அறிவுத்தரம்தான் என்ன? இவர்கள்தான் இங்கே கருத்துக்களத்தில் நிறைந்திருப்பவர்கள் என்றால் இங்கே அடிப்படை அறிவுள்ளவர்களுக்கு என்னதான் இடம்?

அர்விந்த்

அன்புள்ள ரவி ,அர்விந்த்,

இது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஓர் எழுத்தாளரை கொஞ்சம் வாசிப்பவர்களுக்கே அவர் என்ன எழுதுவார், எப்படி எழுதுவார் என தெரிந்திருக்கும். இவர்கள் ஒற்றைவரிகளை மட்டுமே வாசிப்பவர்கள். ஆகவே எதுவுமே தெரியாது. விளைவாக தங்களைப் போன்ற மொண்ணைகள்தான் பிறரும் என ஆத்மார்த்தமாக நம்புகிறார்கள். என் வரி என இதைப்போல எதையாவது எவராவது எடுத்துப்போட, எழுத்தாளர்கள் என்னும் பாவலா கொண்டவர்கள்கூட பாய்ந்து குமுறுவதை முன்னரும் கண்டிருக்கிறேன். பரிதாபம்தான்.

ஜெ

அன்புள்ள ஜெ

இணையத்தில் உங்களைப்பற்றிய வம்புகளை எழுதுபவர்களைப் பார்க்கிறேன். பெரும்பாலானவர்களுக்கு எதையும் மிகமிக எளிமையாகக்கூட புரிந்துகொள்ளும் திறன் இல்லை. நான் ஆரம்பத்தில் விஷமத்தனமாகப் பேசுகிறார்கள் என நினைத்தேன். ஆனால் சமீபத்தில் ஒருவர் யானை டாக்டர் கதையில் அந்த காட்டிலாகா அதிகாரி நீங்கள்தான் என எடுத்துக்கொண்டு பேசித்தள்ளினார். காட்டிலாகா ஊழல்களை பற்றி நீங்கள் ஏன் எழுதவில்லை என்பது கேள்வி. அப்போதுதான் புரிந்தது, அவ்வளவுதான் மண்டை என்று.

இவர்கள் ஒரு முற்போக்குப் பாவனையை கொள்கிறார்கள். சாதி ஒழிப்பு, மத எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற சிலவற்றை பேசுகிறார்கள். எல்லாவற்றையும் அந்த ஒன்றாம்பாடத்திற்குள் கொண்டுவந்து பேசுகிறார்கள். அவர்கள் வரை உங்கள் உதிரிவரிகள் சென்று சேரநேர்ந்ததுதான் இணையம் நமக்கு உருவாக்கிய மிகப்பெரிய தீங்கு

பரிதி

அன்புள்ள பரிதி,

இன்றைய சூழல் இதற்கு முன் இல்லாத ஒன்று. ஒரு கருத்தை புரிந்துகொள்ளும் திறனோ ஆர்வமோ இல்லாதவர்களிடம் அக்கருத்து சென்று சேர்கிறது. அது திரிபடைகிறது. அந்த திரிபைக் கண்டு அரைவேக்காடுகள் கொந்தளிக்கின்றன. ஆனால் அசல் கருத்தைச் சொன்னவன் அந்த திரிபுக்கான பொறுப்பை ஏற்கவேண்டும் என்கின்றன. இச்சூழல் ஒரு தலைமுறைக்காலம் நீடிக்கும். அதன்பின் இயல்பாக மானுடம் வழி கண்டுகொள்ளும்.

ஜெ

வசைபாடிகள் நடுவே – ஒரு கடிதம்

முந்தைய கட்டுரைஇருளர்களுக்காக…
அடுத்த கட்டுரைகுதுப் -கடிதங்கள்