கவிப்பெரும்பழம்- கா.சிவா

கவிஞர் விக்ரமாதித்யன் கவிதைகளிலிருந்து ஷங்கர் ராமசுப்ரமணியன் அவர்களால் தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்ட “சிறு கோட்டுப் பெரும்பழம்”  என்ற நூலின் பெயரைக் கண்டவுடன் கவிஞரின் நிறைந்திருக்கும் கவிதைகளில் சிலவற்றை மட்டும் தாங்கியுள்ள நூல் என்பதை குறிப்பதற்காகவே இந்தப் பெயர் என்றே எண்ணினேன்.

அந்நூலை வாசிக்க தொடங்கிய பிறகு தோன்றியது, தன் மனதில் பெருத்து கனிந்திருக்கும் பிரமாண்ட கவிதைவெளியை மெல்லிய தேகத்தில் சுமந்திருக்கும் கவிஞர் விக்ரமாதித்யன்தான் அந்த சிறு கோடு என்று.

வாழ்க்கை

பறத்தல்

சந்தோசமானது

ஆனால்

பட்டுப் பூச்சிகள்

மல்பரி இலைகளில் தூங்கும்

வாழ்க்கை எத்தனையெத்தனை விதமானது. ஒருவருக்கான வரையறை மற்றொருவருக்கு எப்போதும் பொருந்தாது என்பதை எத்தனை எளிதாக கூறுகிறார். நீந்துவது ஒருவனுக்கு மகிழ்ச்சியளிக்கும் மற்றவனுக்கோ நீர் என்றாலே அனல் போலவும் தோன்றக் கூடும். பட்டுப் பூச்சிகள் பறத்தல் என்பதையே அறியாது தூங்குவதிலேயே மகிழ்ந்து மரிக்கிறது. அதற்கு வாய்த்தது அதுதான்.

சோட்டாணிக்கரை

தேவிபகவதி திருமுன்

ஆடுகின்றன அநேகம் பேய்கள்

அடக்கியொடுக்கும் சமயம் வரும்வரை

ஆடவிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்

அமைதியாய் கீழ்க் காலில்

 

அதே தாய்தான்

மேலக் காவில்

உக்ரமாயிருந்து

ஓட்டிப் பத்துகிறாள்

உரிய பொழுதில்

காலம் நேரம் வருமென்று

காத்திருக்கிறேன் நாளும்

தெய்வ அன்னையரின் சித்திரம் இவரது கவிதைகளில் தொடர்ந்து வருகின்றன. அவற்றை தெய்வங்களாகவும் அன்னையாகவும் மனைவியாகவும் கவிதையாகவும் கூட எடுத்துக் கொள்ள வாய்ப்பளிக்கும் விதத்தில் அமைந்திருக்கும். மேற்காணும் கவிதையும் அப்படித்தான். எல்லாவித பெண் படிமங்களுக்கும் பொருத்தி வாசிக்கலாம். கவிஞன் தன் மனக் கொந்தளிப்பினால் ஆற்றுவனவற்றைக் கண்டு அமைதியாக இருக்கும் அதே மனைவிதான் சில நேரங்களில் ஆவேசமும் அடைந்து வெளியேற்றுகிறாள். அவளை சாந்தப் படுத்துவதற்கான சூழல் வருமென காத்திருப்பதைத் தவிர கவிஞருக்கு வேறென்ன வழி.

எனக்கு மட்டுமேன்

ஏன் இப்படியாக வேண்டும்

இந்த வாழ்க்கை

 

அடுத்த வேளை

எப்படிச் சாப்பிடுவோமென்று நிச்சயமில்லை

…..

இரவு

எங்கே தங்குவதெனத் தெரியவில்லை

……

வேட்டைக்காரன் போல

காசு பணத்துக்கு அலைவதே விதிக்கப்பட்டுவிட்டது

 

மனசில் கூத்தாடுகிறது

சதா ஒரு கலவரம்

….

அற்புதங்களென்று

எதுவும் நிகழவேயில்லை வாழ்க்கையில்

 

மரம் போல

வாழும்படியான துரதிர்ஷ்டம்

 

மண்போல

இருக்கும்படியான துர்பாக்யம்

 

இந்த வாழ்க்கை எனக்கு மட்டுமேன்

இப்படியாக வேண்டும்

அனைத்துக் கவிஞர்களுமே இப்படியொரு கவிதையை எழுதிவிடுவார்கள்.  தன்னை மட்டும் துயரத்தில் ஆழ்த்திவிட்டு  இந்த பிரபஞ்சமே மகிழ்வாக இருக்கிறதே எனும் ஆற்றாமையுடன் எழுதப்பட்ட கவிதை. ஆனால், மரம்போல மண்போல இதே துர்பாக்கியங்களுடன் எப்போதும் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பேன் என்னும் இறுமாப்பும் உள்ளதென தோன்றவைப்பதில் தனித்துவம் கொண்டுள்ளது இக்கவிதை. கவிஞரின் தனித்துவத்தையும்.

21 ஆம் நூற்றாண்டுக் கவிதை

அமர்ந்து

படிக்க ஒரு நாற்காலியில்லை

 

இருந்து

எழுத ஒரு மேஜையில்லை

 

ஒரு நல்ல புஸ்தகம் வாங்க

ஒரு நாளும் வக்கு இருந்ததில்லை

…..

பின்னிரவில் மின்விளக்கெரியவிட்டால்

தூக்கம்பிடிக்காது இவளுக்கு

 

பிள்ளைகள் படிப்புக்காய்

பணம் சேகரிக்க அலைந்து திரிவது வேறு

 

21ஆம் நூற்றாண்டு கவிதையை

எப்படி எழுத நண்பா

கவிதை எழுதுவதற்கான குறைத்தபட்ச வசதிகள் கூட இல்லை. ஆனாலும் 21-ம் நூற்றாண்டுக்கான கவிதையை தன்னால்தான் எழுத முடியும். எத்தனை இடர் இருந்தபோதும் அதை எழுதியே தீர்வேன் எனக் கவிஞர் கூறுவதாகவே எனக்குத் தோன்றுகிறது.

புரிதல்

 

ஒரு பாம்பை

எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்

 

ஒரு பெண்ணை

எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்

 

ஒரு கவிதையை

எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்

 

என்னை

எப்படி

 

ஆனந்த தாண்டவமும்

காளியின் ஆங்காரமும்

புரிந்துகொள்ளக் கூடியவையா

ஈசனனின் ஆனந்த தாண்டவமும் காளியின் ஆங்காரமும் எண்ணிலா பரிமானங்களும் பொருள்கோளும் சாத்தியங்களும் கொண்டவை. அதைப் போலவேதான் பெண்ணும் பாம்பும் கவிதையும். ஒற்றை அர்த்தத்திற்குள் அடக்கிவிட முடியாதவை. இவற்றிற்கு சற்றும் குறைவானதில்லை தன் பாத்திரமும். யாராலும் புரிந்துகொள்ள இயலாதது, தன்னாலும்தான் என்று கவிஞர் தனக்குள்ளும் கூறிக் கொள்வார் என்றே உணர்த்துகிறது இக்கவிதை.

ஸர்ப்பக்காவு

குன்றுகள் மீது

அலைவுறுகிறது கருநாகம்

 

புற்றில்

மறைந்திருக்கிறது செந்நாகம்

 

கண்ணில்

படாது வாழும் ராஜநாகம்

 

கழுத்தில்

சுற்றிக்கிடக்கும் நல்லபாம்பு

 

பார்க்கவேண்டும்

பாம்புகள்

படமெடுத்து ஆடும்பொழுது

 

மண்டலமிட்டுக்

கிடக்கும் சமயம்

காணக்கிடைக்கவில்லை

கவிதைகள்,  சில நேரங்களில் விதிர்க்க வைக்கும். சில சமயங்களில் தவிக்க வைக்கும். எப்போதாவது துடிக்கவும் வைக்கும். அரிதான பொழுதில் கொல்லவுங்கூடும். நாகங்களின் பல வகைமை போலவேதான் கவிதைகளும் என்று நான் புரிந்து கொள்கிறேன். நாகங்களை ஆளும் நாகராஜனாக கவிஞர் தோன்றுகிறார்.

சமூகம் என்பது

நான்

கனவு காணும்போது மட்டுமே

சுதந்திரமாக இருக்கிறேன்

 

நீ

கவிதையெழுதும்போது மட்டுமே

சுதந்திரமாக இருக்கிறாய்

 

அவன்

காய்கறி வாங்கும்போது மட்டுமே

சுதந்திரமாக இருக்கிறான்

 

அவள்

கடுகு தாளிக்கும்போது மட்டுமே

சுதந்திரமாக இருக்கிறாள்

 

அவர்கள் காற்றுவாங்கும்போது மட்டுமே

சுதந்திரமாக இருக்கிறார்கள்

 

சமூகம் என்பது

தனிமனிதக் கூட்டம்

மனிதர்கள் எத்தனை நெருக்கமாக இருந்தாலும் அவர்களின் மனவெளிக்கிடையேயான தூரம் அளவிடமுடியாத அரூபமானதாகும். இவரின் கவிதைகளை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அனுபவங்களை தருகின்றதே. நண்பர்களின் கட்டுரைகளை வாசிக்கும் போது பெரும் திகைப்பு தோன்றுகிறது. சமூகம் என்பது தனிமனிதக் கூட்டம்தான். எந்த மனிதரும் பிறரைப்போல எப்போதும் இருக்க முடியாது.

நீலகண்டம்

அவனுக்குத் தெரியாதா

ஆலகால விஷம்

 

அவளேன் அலறிப்புடைத்து ஓடிவந்து

அவன் சங்கைப் பிடித்தாள்

 

கறுத்த கழுத்து

காமத் தழும்பு

 

*****

 

அவளும்தான்

ஆடிப்பார்த்தாள்

 

அகம்பாவமாய்

எதிர்த்துநின்றாள்

 

ஊர்த்தாண்டவமும் சின்முத்திரையும்

ஒன்றெனத்தேர்ந்தவன் அவன்

இதுபோன்ற ஈசனைப் பற்றிய கவிதைகளை அதிகமாகவே இவர் எழுதியுள்ளார். இவ்வகைமையிலான கவிதைகளை, நண்பர்கள் சங்கரரின் தத்துவங்களைக் கொண்டுள்ளதாக சிலாகிக்கிறார்கள். ஆனால், என்னைப் போன்ற, பெரிதாக தத்துவப் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு வேறு எளிய பொருள் கண்ணில் பட்டு ரசிக்க வைக்கிறது. காதல் கவிதைகளாகவோ, வாழ்வின் நிலையில்லாமையையோ கூறுவதாக வாசிக்கும் அதே கவிதையை தத்துவம் மிளிர்வதாகவும் வாசிக்கும் சாத்தியத்தையும் கொண்டுள்ளது இவரது கவிதைகளின் சிறப்பாக நான் கருதுகிறேன்.

மேலோட்டமான வாசிப்பில்  வாழ்வின் நிலையாமையை கூறுவதாக எண்ண வைக்கும் சித்தர் பாடல்களுக்கு உரையளிப்பவர்கள், அவை மருத்துவத்தைப் பற்றி கூறுவதாகவோ தத்துவத்தைப் பற்றி உரைப்பதாகவோ பொருள் தருகிறார்கள். தமிழ் நவீன கவிதையில் இதைப்போலவே பல பொருள் கொள்வதற்கான சாத்தியங்கள் கொண்ட கவிதைகளைப் படைத்துள்ள விக்கிரமாதித்யனை “நவீனச் சித்தர்” என்றே அழைக்கலாம். அவரது தோற்றமும் அதற்கு மிகப் பொருத்தமாகவே  உள்ளது.

செவ்விலக்கியம் என்பதின் முக்கிய கூறுகளில் முதன்மையானதாக, பல வகையாக பொருள் கொள்ளும் சாத்தியங்களுடன் அமைந்திருப்பது என்று கொள்ளலாம். இதன்படி பார்த்தால் கவிஞர் விக்ரமாதித்தியனின் கவிதைகளும் செவ்விலக்கியம்தான் என்று உறுதியாகக் கூறலாம்.

இந்நூலை வாசித்து உள்ளே மூழ்கியபின் கவிதைகள் காட்டும் பலவித உணர்வுகளுக்குள் சிக்கிக் கொண்டு வெளிவர முடியாத நிலைமையில் தோன்றுகிறது, நூலின் பெயராகவுள்ள அந்த சிறு கோடு வாசகன்தான் என. அந்தக் கவிதைகளின் பெரும் பொருண்மையை தாங்குமளவிற்கு மனதிடம் அமையப் பெறாது அல்லாடும் சிறு காம்பு போன்றவன் அவனென்று.

2021-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் விக்ரமாதித்யனுக்கு என்  வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கா.சிவா

 

முந்தைய கட்டுரைநுண்வினை ஆபரணம் – ரா.செந்தில்குமார்
அடுத்த கட்டுரைநமது விமர்சன மரபு