கிசுகிசுப்பின் இனிமை- கடலூர் சீனு

இனிய ஜெயம்

மின்சாரம் அற்ற இரவில் ,மொட்டை மாடியில் நின்று , கீழே எதையோ செய்து கொண்டிருக்கும் ,எளிய மானுடரை குனிந்து நோக்கும் தேவ தேவனின் கவிதை ஒன்றுண்டு .  அங்கிருந்து குனித்து பார்க்கப்படும் இந்த  எளிய மானுடன் யார் ? அவனால் ஏன் மொட்டை மாடிக்கு வரவே இயல வில்லை ? அப்படியே வந்தாலும் அவன் என்ன செய்வான் ?  மொட்டை மாடி எளியவனுக்கு அளிப்பது என்ன ?.

நண்பர் ஒருவர் இரண்டு முறை கூடுகைக்கு வந்தவர் ,மூன்றாம் முறை தனது மனைவியையும் அழைத்து வந்தார் . மிக்க மகிழ்ச்சியாக இருந்தது . அவரது மனைவி கூடலின் ஒவ்வொரு நண்பர்களையும் தனித்தனியாக அறிமுகம் செய்து கொண்டார் .கூடல் நிறைகையில் அனைவரையும் வாய்ப்பு கிடைக்கும் போது தமது இல்லம் வருமாறு உபசார சொல்லும் சொல்லிவிட்டு போனார் . அடுத்த கூடலில் நண்பரை பிடித்து வைத்து, குடும்ப சகிதமாக இலக்கிய கூடலுக்கு வர எண்ணும் அவரது மனநிலையை மெச்சினேன் .அவர் உச்சு கொட்டி விட்டு  . ” சீனு நீ கல்யாணம் ஆகாத ஆளு உனக்கு இதெல்லாம் புரியாது . மாசா மாசம் ரெண்டு நாள் பய நாலு மணி நேரம் கண்ல படாம எங்கயோ காணாம போறானே ,அப்டி பய எங்கதான் போறான் அப்டின்னு அவளுக்கு உள்ளுக்குள்ள உதைப்பு .இப்போ கூட்டிட்டு வந்து எல்லோரையும் காட்டிட்டேனா , கொஞ்ச மாசம் பதட்டடம் இல்லாம ,எப்போ கிளம்ப ,அப்படிங்கற பயம் இல்லாம இங்க வரலாம் ”என்றார் . ஒரு கணம் உள்ளே உச் கொட்டினாலும் ,வெளியே வெடித்து சிரித்து விட்டேன் .

மற்றொரு நண்பர் கவிதை ஓவியம் இவற்றின் மீது ஈடுபாடு கொண்டவர் .மணம் புரிந்தார் . பணி நிமித்தம் வெளிநாடு போனார் .வந்து பார்த்தால் அவரது நூலக சேகரம் மொத்தத்தையும் மாமியார் எடுத்து பழைய பேப்பர் கடைக்கு போட்டு விட்டிருந்தார் . சிரித்து கொண்டே  சொன்னார்  நண்பர் ”பிடில வெச்சுருக்க வேணாமா புருஷன …”. அவர் சிரித்துக்கொண்டே இதை சொன்னதால் ,நானும் இதை சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டேன் .

அறிவச்சம் 

மனையாட்டி ஊருக்குப் போயிருந்த நாளில் 

தன்னிச்சையாக மொட்டைமாடிக்குப் போனான் 

கருநீல வானத்தில்  கரைந்து நின்றான் 

குறைமதிக்கும் நெஞ்சழிந்தான் 

நட்சத்தரங்களில் மினுமினுத்தான் 

அவள் வீட்டில் இருக்கையில் 

இவ்வளவு பெரிய வானம் 

இத்தனை  கோடி விண்மீன்கள் 

இப்படி ஜொலிக்கும் நிலவு 

இவையெல்லாம் எங்கே ஒளிந்து கொள்கின்றன ?

என்று ஒரே ஒரு கணம் யோசித்தான் 

மறுகணம் 

அஞ்சிநடுங்கி 

missyou என்றொரு குறுஞ்செய்தி அனுப்பினான் .

வாசித்த முதல் கணம் சட்டென சிரித்து விட்டாலும் ,இசையின் இந்த கவிதையில் உறைவது எத்தகையதொரு மன்றாட்டு . எதை இழந்து இதை சுமந்து கொண்டிருக்கிறோமோ , சுமந்துகொண்டிருக்கும்  அதன் முன் சிறிது கருணை கேட்டு  வைக்கப்படும் மன்றாட்டு .

எளியவன் .அந்த எளியவன் ,அவனுக்கும் மொட்டை மாடி பிடிக்கும் ,அவனால் அங்கே செல்ல முடியாது ,ஆகவே அந்த மொட்டை மாடியில் நிற்பவனை இந்த எளியவனுக்கு நிரம்ப பிடிக்கும் .

ஒரு செய்தியும் இல்லாதவன் 

செயற்கரிய செய்யாதவன் 

வெற்றிகளின் கழுத்து ரத்தம் காணாதவன் 

பொந்தில் கிடக்க வேண்டும் 

ஆனால் 

அவன் ஒரு செயல்வீரனை அழைத்துவிட்டான் 

என்ன விசேஷம் ….?”  என்ற கம்பீரத்துக்கு 

என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை .

சும்மா ..ஒரு பிரியம்..”என்று சொல்லலாம் 

ஆனால் 

பிரியம் விசேஷத்தில் சேருமா என்பது 

சந்தேகம்தான் .

பிரியம் கொண்ட எளியவர்களை , அதுவன்றி வேறெதுமற்ற எளியவர்களை ,அதை விடுத்து  வெறும் எளிய மனிதர்களாக நோக்கும் இரும்பு விழி முன் ,அந்த பிரியம்  மௌனமாக அமர்ந்து இருக்கிறது . நான் இருக்கிறேன் ,நான் இருக்கிறேன் என்ற அதன் அந்தரங்க கிசுகிசுப்பின் குரல் ,இசையின் இந்த இரண்டு கவிதைகளும் .

 

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- வருக!
அடுத்த கட்டுரைதன்னைக் கடத்தல்