மதக்காழ்ப்பு- கடிதங்கள்

சூஃபிகள், மதக்காழ்ப்புகள்

மதக்காழ்ப்புகள், கடிதங்கள்

மதமும் அறமும்.

மதம், அறம் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

மதக்காழ்ப்புகள பற்றிய உங்களது கட்டுரையும் அதற்கு வந்திருக்கும் கடிதங்களும் மிக அழகாக அடிப்படை வெறுப்புக்களை கேள்வி கேட்கின்றன.

”அனைத்து மதங்களையும் இணைத்து நோக்கும் பார்வையே இன்று அவசியமானது”  உங்கள் மூலமானமிக முக்கியமான செய்தி இது

நான் பழகும் மனிதர்களில் பலருக்கு ஆன்மீகத்திற்கும் (Spirituality) சமய வழிபாட்டிற்கும் (religion) வித்தியாசம் தெரிவதில்லை.எப்போதுமே இதையிரண்டையும் குழப்பிக்கொண்டு கொந்தளிப்பதைப் பார்க்கிறேன்.  ஆன்மீகத்தில் சமயத்திற்கு இடமிருக்கிறதா? மற்றும், எல்லா சமய வழிபாடுகளையும் போற்றும் மரபு இந்து சமயத்திற்கு வெளியே வேறு எந்த மதத்திலாவது உள்ளதா ?

அன்புடன்

தாரமங்கலம் மணி

 

அன்புள்ள தாரமங்கலம் மணி.

ஒரே வரியில் ஒரே வேறுபாடுதான். ’அடையாளம் சார்ந்த பற்று இருந்தால் அது மதநம்பிக்கை, ஆன்மிகம் அல்ல. அடையாளம் சூடாமல் சாராம்சம் மட்டுமே ஒருவரிடம் இருந்தால் அது ஆன்மிகம்’.

மதநம்பிக்கை என இங்கே சொல்லப்படுவது ‘நான் இந்த மதத்தவன்’ என ஆரம்பிக்கிறது. ‘இவர்களெல்லாம் என்னவர்கள்’ என நீள்கிறது. ‘இவர்கள் எல்லாம் பிறர்’ என ஆகி  ‘அவர்கள் எதிரிகள்’ என முற்றுகிறது.

மதநம்பிக்கையாளர்கள் ஒரு கட்டத்தில் ஆன்மிகமற்றவர்களாக ஆவது அந்தக் காழ்ப்பு மேலோங்குவதனால்தான். இப்படி இறுதியாக வரையறை செய்கிறேன்.

’ஒருவர் தன் மதத்தை காக்கவேண்டும் அல்லது பரப்பவேண்டும் என முனைந்தார் என்றால் அவர் வெறும் மதவாதி மட்டுமே. மதம் அளிக்கும் ஆன்மிகம் வழியாக தன்னை மேம்படுத்திக்கொண்டு நிறைவும் விடுதலையும் அடையவேண்டுமென முயல்பவர் மட்டுமே ஆன்மிகவாதி’

ஜெ

அன்புள்ள ஜெ,

இணையவெளியில் உங்கள் மேல் காழ்ப்பைக் கக்குவதையே முழுநேர வேலையாகச் செய்துகொண்டிருப்பவர்களின் பட்டியல் ஒன்றை தயாரித்தால் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். இஸ்லாமியர்கூட இரண்டாமிடம்தான். கிறிஸ்தவர்களின் அந்த காழ்ப்புக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

ஆனந்த்ராஜ்

அன்புள்ள ஆனந்த்,

அதேயளவுக்கு இந்துத்துவக் காழ்ப்பும், இந்து ஆசாரவாதிகளின் காழ்ப்பும் வெளிப்படுகிறது. பார்த்திருக்க மாட்டீர்கள். எனக்கு மிகமிக அணுக்கமானவர்களில் கிறிஸ்தவத்தின் ஆன்மிகசாரத்தை வாழ்க்கையெனக் கொண்டவர்கள் பலர் உண்டு. மறைந்த அலெக்ஸ் போல. போதகர் காட்சன் போல. அந்தச் சாரத்தை உணராத வெற்று மதவெறியர்கள் எவராயினும் என்னை அவர்கள் வெறுப்பார்கள். ஒன்றும் செய்வதற்கில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைதர்ப்பை – லோகமாதேவி
அடுத்த கட்டுரைசொற்கள்- கடிதம்