கணக்கு உள்ளிட்ட கதைகள், ஐந்து நெருப்பு
அன்புள்ள ஜெயமோகன்,
புனைவு களியாட்டின் கணக்கு சிறுகதையை வாசித்தேன். வாசித்தபின் தோன்றிய எண்ணங்கள்:
நல்லவருக்கு மட்டும் அருள்பவர் கடவுளல்ல.கெட்டவருக்கும் அருள்பவரே கடவுள்.யாருக்கு தெய்வத்தோடு பிணைப்பு வலுவாகவுள்ளதோ அவரே பெரும் அருளைப்பெறுகிறார். காளி தெய்வத்தை நம்பி இறங்கிய பந்தயத்தில் வென்றார்.தெய்வத்தை மறந்து தன்னை நம்பிய பந்தயத்தில் தோற்றார். அச்சுதன் தன் தெய்வத்தை இறுகப்பற்றிக் கொண்டதால் கடைசியில் வென்றார். அச்சுதன் கொண்டது விழிப்புமன தெய்வம், காளியன் கொண்டது ஆழ்மன தெய்வம்.
சக்திவேல் எழுதிய கடிதத்தை படித்தபின் விரிந்த எண்ணங்கள்:
அவர் கடிதம் மூலம் கிடைத்த சொல் உள்ளுணர்வு. அதன்பின் கதையை தர்க்கத்துக்கும், உள்ளுணர்வுக்குமிடையே நடக்கும் பந்தயமாய் சிந்திக்க தொடங்கினேன்.எந்த தெய்வம் எப்படி வெல்லும்? எப்போது வெல்லும்? காளியின் நிமிர்வும், பணிவும் ஒருங்கே வெளிப்பட்ட தருணத்தில் வென்றார். கடைசி பந்தயத்தில் நிமிர்வு மட்டுமே இருந்தது. பந்தயத்தை எளிதென கணக்கு போட்டதால் பணிவை மறந்துவிட்டார்.ஆழ்மன தெய்வத்தை அழைக்கவில்லை. இருந்தும் தெய்வம் அவரை கைவிடவில்லை.அவர் சொன்ன கணக்கு சரி ஆனால் கணக்கை சரிபார்க்கும் கணக்கு தவறு. அந்த சூச்சமம் அவர் தெய்வத்துக்கும், அவருக்கும் தெரியவில்லை.தெய்வம் கைவிட்டதாய் நிம்மதியிழக்கிறார்.அந்த போட்டியிலும் பணிவை கொண்டிருந்தால் இது தெய்வத்தின் விளையாட்டென ஆறுதல் கொண்டிருப்பார்.இதன்மூலம் நாம் உள்ளுணர்வின் எல்லையை உணரலாம். உள்ளுணர்வை தர்க்கத்தை கொண்டு மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.தெய்வம் கைவிட்டதாய் காளியன் உணர்ந்தது அவரின் தர்க்கமனத்தின் தோல்வியை.
அச்சுதன் தர்க்க மனதின் வடிவம்.புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு உள்ளுணர்வை மீறிச்செல்லும் செயல்.இதுவும் ஒரு தெய்வம்.இந்த தெய்வத்துக்கு தன்முனைப்புதான் படையல்.அவர் தன் தன்முனைப்பை படையலாக வைத்து கடைசி பந்தயத்தில் வென்றார். இந்த தெய்வத்துக்கு நல்லது, கேட்டது கிடையாது. வெற்றி, தோல்வி மட்டுமே உண்டு.தன் திறன் வெளிப்பட்டு வென்றதா இல்லை தோற்றதா என்று மட்டுமே பார்க்கும்.உள்ளணர்வு தெய்வம், தர்க்க தெய்வத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் அது மெதுவாய்த்தான் கற்றுக்கொள்கிறது. வெளிப்பாட்டை மட்டும் விரைவாய் காட்டும்.
காளியானையும், அச்சுதனையும் கொண்ட நமக்கு அவ்விரண்டு தெய்வங்களும் சரியாய் வெளிப்படும் நல்லூழை அத்தெய்வங்கள் அருளட்டும்.
அன்புடன்,
மோகன் நடராஜ்
***
அன்புள்ள ஜெ
புனைவுக்களியாட்டு ஒரு மழைபோல வந்து சென்றுவிட்டிருக்கிறது. சென்னையில் பெருமழை வரும்போது இப்படித்தான். நமக்கு மழை போதும் போதுமென்று ஆகும். மழை நின்றபின் வெயில் வரும். பிறகு நினைத்துப்பார்க்கும்போது அய்யோ எவ்ளவு மழை என்று இருக்கும். இப்போது ஒவ்வொரு நாளும் கண்விழிக்கிறேன். ஏதாவது படிக்கிறேன். ஆனால் அந்தக்கதைகள் வந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம். ஒவ்வொரு நாளும் மனசு காலையிலேயே குதிக்க ஆரம்பித்துவிடும். அந்த கொண்டாட்டத்துக்காக ஏங்குகிறேன்.
இப்போது மீண்டும் அக்கதைகளை வாசிக்கிறேன். இன்றைக்கு வாசிக்கையில் அப்போது பல கதைகளை சரியாக வாசிக்கவில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது. உதாரணமாக கணக்கு. அது என்ன கணக்கு? ஏய்ப்பவனின் கணக்கு எளிமையானது. ஏய்க்கப்படுபவனின் கணக்குதான் மேதைத்தனமானது. அதுதானே அந்தக்கதை. அதை புரிந்துகொள்ள இவ்வளவு நாள் ஆகிவிட்டது.
எஸ்.பிரபாவதி
***