https://www.vishnupurampublications.com/
அன்புள்ள ஜெ
சிறுவயதில் சீட்டு கட்டுக்களை அடுக்கி வைத்து குலைத்து அழிப்பது மகிழ்ச்சி தான். அதை போல தான் மானுட வாழ்க்கையை நினைக்கின்றன போலும் தெய்வங்கள். இறப்பை போல வாழ்வை பொருளும் பொருளின்மையும் கொள்ள செய்யும் வேறு ஒன்று உண்டா ?
கார்கடலின் துரோணர் வீழ்ந்தாயிற்று. சென்று கொண்டிருக்கிறான் அஸ்வத்தாமன் நாரயணத்தை ஏவ. ஒவ்வொருவரும் தங்கள் உருமாறி சிதைந்து சிறகு விரித்து பிறிதொன்றாகி உதிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இறப்பின் உச்சியில் ஆழத்தில் எதுவோ அதுவாக வெளிப்படுகிறோம். இந்த போர் எனக்கு என்னில் விதையென அமைந்த வஞ்சத்தை, காமத்தை காட்டியுள்ளது. முற்றாக அறிந்து கொள்ள மீண்டும் ஒருமுறை இக்களத்திற்கு நான் வந்தாக வேண்டியுள்ளது என உணர்கிறேன். அது வாழ்க்கை நேரடியாக எனக்கு இன்னொரு கொடு சூழலை உருவாக்கி கையளிக்கையில் நிகழும்.
ஆம் இவை ஆணவத்தின் அறிவின்மையின் சொற்களாக இருக்கலாம். இளையோர் எப்போதும் அபிமன்யுக்கள் தான். சிக்கல்களை விரும்பி சென்று அழியும் விட்டில்கள். கோடிகளில் ஒன்று ஒளி கொண்டு விண்புகுகிறது. எனினும் மெய்மைக்கென வலி கொள்வது மகத்தானதே. வென்றாலும் வீழ்ந்தாலும் நன்றே.
காலையில் குண்டாசிக்கு எரிக்கடன் அளிக்கும் துரியோதனாக இருந்தேன். மெல்ல மெல்ல உணர்வுகளில் ஏறி சென்று இப்போது உள்ளத்தின் ஒருமுனை சேற்றில் நனைந்து படிந்த துணியென உள்ளது. இன்னொரு ஆழம் விழி மயங்கினால் போரில் எங்கோ உலவி கொண்டிருக்கிறது. மூன்றாவது புறங்களில் திகழ்கிறது.
கடலின் துளி நீர் உப்பை சுவைத்து அறிபவன் உய்த்து கொள்ள இயலும் மொத்தத்தை பெருக்கி கொள்ள இயலும். இந்த துளி வெறுமையை கொண்டு நேர் களத்தில் நீங்கள் அடைந்த வெறுமையை எண்ணி கொள்கிறேன். இந்த களத்தை தாண்டி செல்லும் எவரும் வெறுமையை கொண்டு செல்லாமல் ஆகாது. அதை நீங்கள் இனிமையாக்கி உள்ளீர்கள் என பிற கடந்தோர் கூற்று. ஆனால் ஒன்றுண்டு பெருவிசை கொண்டு எழாதோர் மகத்தான ஒன்றை இழக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். ஏதென்று சொல்ல தெரியவில்லை.
நீங்கள் நூறுகதைகள் எழுதியது இங்கிருந்து நோக்குகையில் வேறு ஒரு ஆழம்கொள்கிறது.
அன்புடன்
சக்திவேல்
அன்புள்ள ஜெ
கார்கடல் வாசித்து முடித்தேன். மிக மெல்ல வெண்முரசின் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறேன்.2010ல் நியூயார்க்கில் ஒரு சிம்பனி நிகழ்வு. வாக்னரின் ஒரு டிராஜடி. எனக்கு சிம்பனி பழக்கமில்லை. அங்கே ஒரு வெள்ளைக்கார நண்பருடன் சென்றிருந்தேன். இரண்டு மணிநேரம் சும்மா அமர்ந்திருக்கலாம் என்பதே என் எண்ணம். ஆனால் என்னவென்றே தெரியவில்லை. கடைசியில் என் மனம் அப்படியே இருண்டுவிட்டது. உள்ளும் புறமும் இருட்டு. கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.
கார்கடல் அப்படிப்பட்ட ஓர் அனுபவம். ஒரு துளி வெளிச்சம்கூட இல்லாமல் இருட்டிவிட்ட கடலை கண்முன் பார்க்கிறேன்
ஜெ