இரவு- மஞ்சுநாத்

இரவு வாங்க

ண்களுக்கு பெண்கள் மீதான புரிதலைப்போல் இரவுகளைப் பற்றிய புரிதலும் மனிதர்களுக்கு முழுமையாக கிடைத்ததாக கூற முடியாது. பெண்கள் மீதான திகைப்பு கலந்த ஈர்ப்பு போலவே ஆழ்ந்த இருளின் கவர்ச்சியை அபகரிக்கும் அகல் விளக்கொளியின் செம்மஞ்சள்  விரல் போல் இரவு மீதும் ஆர்வம் பரவுகிறது.

இரவு இருளை தன் மீது தழுவிக் கொண்டு தனது  வதனத்தின் விஸ்வரூபத்தை வளர்த்துக் கொள்கிறது. மிதமிஞ்சிய அதன் பேரழகு சிலருக்கு தெய்வீகமாகவும் சிலருக்கு  நெருங்கவியலாத பயத்தையும் உருவாக்குகிறது. இரவு பல ஆயிரம் கண்கள கொண்டது.  விழி அசையாமால் காத்திருக்கிறது.

உண்மையில் தேட வேண்டியது வெளிச்சத்தை அல்ல… இருளை. ஒருவகையில் தேட வேண்டியது இருளையும் அல்ல… அது இங்கே இப்போது நிலைத்திருக்கிறது. தற்காலிகமானது வெளிச்சம் மட்டுமே. வருவதும் செல்வதும் அதன் வேலை.

“எந்தப் பகலிலும்

இரவு இருந்து கொண்டிருக்கிறது

ஒவ்வொன்றுக்கும் கீழே அழுந்தி,

ஒவ்வொன்றுக்கும் பின்னால்

பதுங்கி

மெளனமாக காத்திருக்கிறது.”

 திரிபடைந்த தனது கதிர்களின் பிரகாசத்தைக் கொண்டு  நெடுங்காலமாக நம் பார்வை புலன் திறனை அது படிப்படியாக குறைத்து கொண்டிருக்கிறது. இதன் பொருட்டே ஆழ்ந்த அகத்தேடலில் மூழ்குபவர்கள் கண்களை இறுக மூடிக்கொள்கிறார்கள். ஒளிகளை தவிர்ப்போம் இருளை ஆராதிப்போம். அதாவது பகலை நிராகரித்து இரவைக் கொண்டாடுவோம்.

மாறுபட்ட வாழ்வியலை சோதிப்பதில் பிறப்பெடுத்த காலம் தொட்டே மனிதனுக்கு அலாதி இன்பம். அப்படியான மனிதனுக்கு இரவில் உறங்காமல் வாழும் மனித சமூகத்தை ஜெமோ அறிமுகப்படுத்துகிறார். நமக்கும்… இரவு என்பதால் இதனை வாசிக்க உகந்த பொழுதும் பகலில் விழித்திருந்தோர் விழி மூடும் இரவு நேரம்.

பிரபஞ்சன் தனது

‘கண்ணீரால் காப்போம்’ நாவலில் எழுதுகிறார்…

“இரவு எத்தனை அழகாக இருக்கிறது. இதைத் தூங்கிக் கழிக்கறார்களே ஜனங்கள். ரா என்றால் தூங்குகிறது என்று அர்த்தம் கொண்டிருக்கிறார்கள். ராவில் உறங்கத்தான் வேண்டும் என்று எந்தச் சும்பன் சொன்னான்?”

ஒரு சமூகத்தின் மறுபக்கத்தை  இரவின் வெளிச்சத்தில் கண்டுகொள்ளலாம். மனிதனின் மறுபக்கத்தையும் தான். இருள் ஒருவனை புத்தனாக்கும். முறையான புரிதல், போதிய பயிற்சி, இரவின் மீதான தீவிரக் காதல், காலத்தை நினைவறுத்தல் இவைகள் இல்லாமல் போகும் போது பேரண்டத்தின் சித்தனாய் மலர்வதற்கு  பதில் வெற்றுவெளியில் காற்றை துழாவித் திரியும் அகம் சிதைந்த பித்தனாக மாறும் அபாயமும் உண்டு.

“ஒலியாக இரவை மாற்றலாம்

சுவர்க்கோழி அதை அறியும்

நிறமாக இரவை மாற்றலாம்

வெளவால்கள் அதை அறியும்

ஒரு சொல்லாக அதை மாற்றலாம்.

மிக எளிமையான

மிக இருண்ட ஒரு சொல்லாக

‘நான்’

பல கோடி பால்வெளித்திரள்களுக்கு மடியாகும் இரவு  கவிதைக்கு, இசைக்கு,  இறைத்தேடலுக்கு,  எழுத்தாளனுக்கு, உடல் தேடும் மனிதர்களுக்கு, உணவு தேடும் மிருகங்களுக்கு, உடலற்ற உயிர்களுக்கு, களவாடும் திருடர்களுக்கு, உறக்கத்தை தொலைத்து விட்ட கடனாளிகளுக்கு, வலியோடு யுத்தம் புரியும் நோயாளிகளுக்கு என பலருக்கும் சொந்தமாக அமைந்தாலும் விழித்திருக்கும் இரவுக்கும் விழிப்புணர்வோடு கூடிய இரவுக்கும் வித்தியாசங்கள் பல உண்டு.

அறிமுகம் இல்லாத இந்த இரவு கர்பத்திற்குள் மாய மோகினி மீதான காதல் மோகத்தில் ஈர்க்கப்படும் ஒருவன் அதன் சுவையறியும் நாவின் மொட்டுகளை ஆராய்ந்து கொண்டே மீட்சிமையும் வேண்டுகிறான் அதே சமயம் மீளாமல் ஒவ்வொரு  இரவும் நீட்சியில் வளரவும் விரும்புகிறான்.

கேரளத்தின் மண், நீர், நெருப்பு,காற்று , ஆகாசம், நிறம் , சடங்கு, சமையல் என பல தளங்களில் ஜெமோ தனது இரவு பயணத்தின் வழியே அழகாக காட்சிப்படுத்தும் அதே வேளையில் தமிழ் மொழி  மீதான தனது கருத்துகளையும் பதிவிடுகிறார்.

இப்பொழுது நாம் பேசும் தமிழ் மொழியின் உச்சரிப்பில் தெலுங்கு மொழியின் கலப்பு என்பது அதன் பூர்வத்தன்மை அல்ல என்கிறார்.  தெலுங்கு மன்னர்கள் ஆட்சிக்குப்பின் இந்த மாற்றம் நிகழ்ந்த்ததாகவும் உண்மையில் மாற்றமில்லாத தமிழ் மொழியின் ஓசை மலையாள சுருதி கொண்டதும் என்கிறார். இதற்கு கன்னியாகுமரி மக்களின் தமிழையும், மேற்கு தொடர்ச்சி மலைவாழ் பழங்குடிகள் பேசும் வழக்கு தமிழையும் , இலங்கை தமிழர்களின் பேச்சு முறைகளின்  தொன்மையையும் காரணமாக காட்டுகிறார்.

ஒவ்வொரு அத்தியாயமும் இரவின் அடர்த்தியை, அழகை,மெளனத்தை, சுயத்திற்கு மட்டுமேயான ரகசியத்தை பிரதிபலிக்கும் கவிதையோடு துவங்குகிறது.

பிடிபட்ட கரடி

மெல்ல எழுந்து

சிலிர்த்துக்கொள்வதுபோல

தன்னைக் காட்டியது

இந்த இரவு

இறுதியில் நாவலை முடித்த விதம்  துவக்கம் மற்றும் விவரிப்பின் நுணுக்கத்தை முழுமை செய்வதாக அமையவில்லை. கனவிலிருந்து எழும் தமிழ் திரையுலகத்தின் கதை நாயகனுக்கு அமையும் திரைக்காட்சி போல் பிசுபிசுத்து போகிறது.

ஜெமோவின் இந்திய பாரம்பரிய ஆன்மீக செயல் முறைகளின் மீதான அறிவுத்தேடலும் பார்வையும் அலாதியானது. தாந்ரீக மரபு முறைகள் இரவை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறது…? புரிதலற்ற வெற்று சடங்காக அதை பயன்படுத்துபவர்கள் அவ்விதம் பயன்படுத்தும் ஒலியற்ற  குழல்களை  மட்டுமே செவிசாய்க்கும் நிழல் மேதமைகளுக்கு எதார்த்தமான பதிலாக ஜெமோவின்  பூடகமான இந்த இரவு கவிதையை  உருவகமாக தரலாம்.

 குருதி

உறைந்து

கனத்து

பூச்சிகளால் ரீங்கரித்து

உலர்ந்து

கருப்பதுபோல்

வருகிறது

இரவு

 

அன்பும் நன்றியும்

மஞ்சுநாத்

புதுச்சேரி

இரவு- ஒரு வாசிப்பு

இரவு- கடிதம்

இரவு – திறனாய்வு

இரவு பற்றி…

இரவு ஒரு கடிதம்

இரவும் கவிதையும்]

இரவு -கடிதம்

இரவு ஒரு கடிதம்

இரவு நாவல் -கடிதம்

முந்தைய கட்டுரைகாதுகள், அந்தியூர்மணி – கடிதம்
அடுத்த கட்டுரைவிண்மீன்கள் நிறைந்த இரவு-நித்யா