இலக்கியத்தின் விலை – கடிதங்கள்

இலக்கியத்தை விலைபேசுதல்…

இலக்கியமென்னும் இலட்சியவாதம்

அன்புள்ள ஜெ.,

எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கான தங்களின் எதிர்வினையை வாசித்தேன். இதைத் தங்களைவிடச் சிறப்பாக யாரும் பதிவு செய்திருக்க முடியாது.

சில வருடங்களுக்கு முன்பு உங்களுடைய மொழிபெயர்ப்புக் கவிதைத்தொகுப்பொன்றை (இப்போதும் அச்சில் இல்லையென்று நினைக்கிறேன்) வாசிக்கும்போது அதிலுள்ள ஒவ்வொரு கவிதையும் பிடிக்கப்போய் தனிப்பட்ட சேகரிப்பிற்காக ஸ்ரீனி அதைப்பதிவு செய்ய, அது அப்போதே இணைய வாசகர்கள் மத்தியில் பிரபலமடைந்து ஏறத்தாழ அவரது வட்டத்திற்குள் தீவிர வாசகர்கள் அனைவரையும் சென்றடைந்தது. இதற்குப் பிறகு அவர், இது சரிதானா? இப்படிச்செய்யலாமா? என உங்களுக்கு கடிதமும் எழுதியிருப்பார். அதற்கு நீங்கள் சொன்ன பதிலை இப்போது நினைவுகூர்கிறேன்.

அது ஒரு படைப்பு வாசகரைச் சென்றடைவேண்டும், என்ற ஒரு எழுத்தாளனின் தூய்மையான மனநிலையின் பதில். நீங்களும் சில அறிவுரைகளையும் கூறியிருப்பீர்கள்.

இப்போது பெருமாள் முருகன் செய்திருப்பதைப் பார்க்கையில் அவரை நினைத்துப் பரிதாபப்படத்தான் முடிகிறது. ‘இவ்வளவுதானா இவர்கள்’ என. இதில் ஒரு சில இணையவாசிகள் “இன்றைய இளைஞர்கள்…” எனக் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

பெ.மு இவரை அழைத்தாவது பேசியிருக்கலாம். Facebookஇல் அன்பிரண்ட் செய்துவிட்டாராம். சிரிப்புதான் வருகிறது. ஸ்ரீனி கேட்கும் கேள்விகளுக்கு இவரால் பதில் கூற இயலாது என்பது வேறு விசயம்.

ஸ்ரீனி, தனது பண வேட்கைக்கோ, புகழுக்காகவோ இதைச் செய்யவில்லை. ஒரு படைப்பு அனைவரையும் சென்று சேரவேண்டும் என்பதில் அவருக்குள்ள ஆர்வத்தினால் மட்டுமே தனக்கிருந்த முழுநேர வேலையை விடுத்து இப்போது பழைய புத்தகங்களை மின்னூலாக்குவதில் செலவிட்டு வருகிறார். இதுபோக வடிவமைப்பு, மெய்ப்புநோக்குதல் என freelancing செய்கிறார்.

இவரை யாரென்றே தெரியாதென பெ.மு கூறியதுதான் விந்தை. அதுசரி நம்மாள் என்ன இலட்சங்களில் புரளும் பதிப்பக மடாதிபதியா? அடிப்படை விலைக்கும் இலவசமாகவும் அரசுடைமை / அரிய நூல்களை கடந்த சில வருடங்களாக இலாபநோக்கின்றி மின்னூலாக்கி வருபவர் தானே? இவரைத்தெரிந்து என்ன பயன்? But ignorance is not always bliss.

அவரை நன்கு உணர்ந்தவன் என்கிற முறையில் பெ.முவின், “திருட்டு” என்ற வார்த்தை மிகவும் புண்படுத்தியது. ஸ்ரீனி ஒரு அரிய மனிதர். அவரை நாம்தான் இவர்களிடமிருந்து பாதுகாக்கவேண்டும்.

எனக்கு அக்கட்டுரையைப் படித்ததும் மிகுந்த கோபமும் ஒருவித ஆற்றாமையுமே எழுந்தது.

ஸ்ரீனியிடம் பலவற்றைக் கற்றுள்ளேன். அதிலொன்று இதுபோன்றவற்றை கண்டுகொள்ளாமல் உடனே மீண்டு இயங்குவது. இவர்களால் அவரது மாபெரும் பணியைச் சிறுமை செய்ய இயலாது. அவரது எதிர்காலத் திட்டங்கள் பலிக்கட்டும்.

அவர்மென்மேலும் தொடர்ந்து இயங்க தேவையான ஆன்மபலம் அமைய வேண்டுகிறேன்.

வேறு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

யமுனைச் செல்வன்

நெல்லை

அன்புள்ள ஜெ

பெருமாள் முருகன் பற்றிய கட்டுரையை வாசித்தேன். அதை வாசிக்கும் வரை நான் உண்மையில் பெருமாள் முருகனின் தரப்பு சரி என்றே நினைத்திருந்தேன். உழைப்புத்திருட்டு என்று சொல்லும்போதே நமக்கு ஒரு கொதிப்பு வந்துவிடுகிறது. ஆனால் அறிவுத்தளத்தில் வெவ்வேறு மனிதர்களின் உழைப்புகள் ஒன்றாக திரண்டுகொண்டே இருக்கின்றன. அது அடுத்த தலைமுறைக்குச் சென்று சேர்கிறது. தன் அறிவுச்சேகரிப்போ உழைப்போ இன்னொருவருக்குச் செல்லக்கூடாது, தனக்கு பணம் தரும் வியாபாரமாக மட்டுமே இருக்கவேண்டும் என்று சொல்லும் ஒருவர் அறிவுத்தகுதி அற்றவர்

நான் அறிவியலில் ஆய்வு செய்பவன். ஒருவர் ஒரு ஆய்வேடு வெளியிடுகிறார் என்றால் அது உடனே ஆய்வுக்களத்தில் பொதுச்சொத்தாகிவிடுகிறது. அதை உள்வாங்கிக்கொண்டுதான் அடுத்த ஆய்வேடு வெளிவரும். ஓர் ஆய்வேட்டை அடுத்த ஆய்வேடு தாண்டிச்சென்றுகொண்டே இருக்கும். கடைசியாக ஒருவர் நோபல் வாங்கிவிடுவார். உடனே என் ஆய்வை திருடித்தான் அவர் நோபல் வாங்கினார் என சொல்லிவிடமுடியாது. அந்த ஆய்வுக்கான அடையாளத்தை அதைச் செய்தவருக்கு கொடுக்காமலிருந்தால்தான் அது ஆய்வுத்திருட்டு

குபரா கதைகளை தனக்கு முந்தையவர்கள் தொகுத்ததில் இருந்து மேம்படுத்தி பெருமாள் முருகன் வெளியிட்டார். அவரிடமிருந்து மேம்படுத்தி அழிசி சீனிவாசன் வெளியிட்டார். இனி வெளியிடுபவர்கள் சீனிவாசனிடமிருந்து இன்னும் மேம்படுத்துவார்கள். பதிப்புவரலாற்றில் ஒருவர் பெயரை விட்டுவிட்டால் அதுதான் தப்பே ஒழிய ஆய்வை உரிய கிரெடிட் கொடுத்து எடுத்தாள்வது ஆய்வுமுறைமைதான்.

 

ஆர்.ஸ்ரீனிவாஸ்

 

அன்புள்ள ஜெ

நான் ஆய்வுசெய்பவன். பெருமாள் முருகனின் கட்டுரைக்குறிப்பை பேத்தல் என்றுதான் சொல்வேன். அதிலும் பத்துவருடம் உழைப்பு என்றெல்லாம் பேசுவது ஆய்வுலகில் அத்தனை பேராசிரியர்களும் செய்வது. அதென்ன அறிவியல்தியரியா? இன்றைக்கு பழைய நூல்கள் எல்லாம்  டிஜிட்டல் செய்யப்ப்பட்டு தரமணியில் ரோஜா முத்தையா நூலகத்தில் கிடைக்கின்றன. அங்கேபோய் அவற்றை புரட்டி காலவரிசை ஒன்றை போட்டிருக்கிறார். குபரா எழுதிய கதைகள் கொஞ்சம் தான். ஒரே ஒரு பெரிய தொகுப்பு. அதிலும் முன்னரே ஆய்வுப்பதிப்பு வந்துவிட்டது. அதை ஒட்டி மேலும் கொஞ்சம் ஆய்வு செய்திருக்கிறார். ஒரு  கதை கண்டுபிடித்திருக்கிறார். விட்டுவிட்டுச் செய்தால்கூட ஆறுமாதம் தேவைப்படும் வேலை.

இருபதாண்டுகளுக்கு முன்பு என்றால் அந்த இதழ்களை தேடிக்கண்டுபிடிக்கவேண்டும். வேதசகாயகுமார் மூல இதழ்களை தேடித்தேடி சி.சு.செல்லப்பா, பி.எஸ்.ராமையா வீடுகளுக்கெல்லாம் அலைந்ததை எழுதியிருக்கிறார். இவரே பழைய இதழ்களை புரட்டி படித்ததைத்தான் கஷ்டமான பத்தாண்டுக்கால ஆய்வு என்றெல்லாம் எழுதியிருக்கிறார். பேராசிரியர்கள் ஆய்வேடுகளுக்கு ஓராண்டை ஐந்தாண்டு ஆக்குவார்கள். அது கொஞ்சம் பழக்கமான விஷயம்தான். பத்தாண்டுக்கால உழைப்பு இது என்றால் இவர் உழைப்பு என்று எதைச்சொல்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

ரவிச்சந்திரன்

முந்தைய கட்டுரைஎம்.கோபாலகிருஷ்ணனின் ’தீர்த்தயாத்திரை’- போகன் சங்கர்
அடுத்த கட்டுரைஎல்லாமுமான கவிஞன் – காளிப்பிரசாத்