இலக்கியமென்னும் இலட்சியவாதம்

இலக்கியத்தை விலைபேசுதல்…

அன்புள்ள ஜெ,

பெருமாள் முருகனுக்கு நீங்கள் மறுப்பு எழுதிய கட்டுரையை இலக்கியத்தை விலைபேசுதல்… வாசித்தேன். வழக்கமாக நீங்கள் இந்தவகையான கடுமையான மொழிநடையில் எழுதுவதில்லை. ஆண்டுக்கணக்காக உங்களை வாடாபோடா என்றெல்லாம் முச்சந்தி மொழியில் எழுதிக்கொண்டிருப்பவர்களை பொருட்டென கொண்டதும் இல்லை. எழுத்தாளர்கள் உங்களைப் பற்றி கடுமையாக எழுதும்போது எதிர்வினையாற்றியதில்லை. நானே சிலவற்றை உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். முன்பு ஓர் எழுத்தாளர் எழுதிய கட்டுரையை நான் அனுப்பியதும் “அவர் எழுத்தாளர்…அவர்கள் அப்படித்தான்” என்று எழுதினீர்கள். பெருமாள் முருகன் விஷயத்தில் ஏன் இந்தக் கடுமை?

எஸ்.ஸ்ரீனிவாசன்

அன்புள்ள ஸ்ரீனிவாசன்,

ஆம் ,கொஞ்சம் எரிச்சலுடனேயே எழுதினேன். அதற்கு முதன்மைக் காரணம் பெருமாள் முருகனின் மொழி. தமிழில் சில பாவலா மொழிகள் எழுத்தாளர் நடுவே உண்டு. தமிழ் வாசகர்கள் எழுத்தாளர்களின் நிமிர்வை, சுதந்திரத்தை விரும்புவதில்லை. பணிவை தன்னிரக்கத்தை மட்டுமே ரசிக்கிறார்கள். பணிவை பெருந்தன்மையுடன் பாராட்டவும், தன்னிரக்கத்தை உச் உச் கொட்டி ரசிக்கவும் பழகியிருக்கிறார்கள்.

எழுத்தாளர்கள் சிலர் அந்த மனநிலையை சுரண்டுகிறார்கள். “நான்லாம் ஒண்ணுமே இல்ல” “நான்லாம் அப்டி ஒண்ணும் பெரிசா எழுதலை” “செருப்பு தைக்கிறதும் இலக்கியமும் ஒண்ணுதான்” “ஒரு ஆட்டோரிக்‌ஷாக்காரரா இருந்தா சந்தோஷமா இருந்திருப்பேன்” என்றெல்லாம் எழுத்தாளர் சொன்னால் தமிழக நடுத்தரவர்க்க குமாஸ்தா உள்ளம் நிறைவடைகிறது.

அந்த வாசக மனநிலையில் உண்மையில் இருப்பது சாமானியனின் உளப்புழுக்கம். தான் சாமானியன் என உணர்வதன் சிறுமையை அவ்வண்ணம் போக்கிக் கொள்கிறான். எல்லா அறியப்பட்ட ஆளுமைகளிடமும் அவன் “நீயெல்லாம் ஒண்ணுமே இல்ல” என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறான். ஆனால் அவனால் சினிமாக்காரர்களிடம், அரசியல்வாதிகளிடம், அதிகாரிகளிடம், செல்வந்தர்களிடம் அப்படி சொல்லவோ அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதை காணவோ முடியாது. ஆகவே எழுத்தாளனிடம் சொல்கிறான், எழுத்தாளன் அப்படிச் சொல்லவேண்டுமென எதிர்பார்க்கிறான்.

தமிழ்ச்சூழலில் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து எழுத்தாளர்களை வசைபாடித் தள்ளும் பாமரக் கும்பலின் உளவியல் உண்மையில் இதுதான். அவர்கள் ஏதோ அறத்தின் சிகரத்தில், அரசியலுணர்வின் உச்சத்தில், இலட்சியவாதத்தின் ஒளியில், மாந்தருள் மாணிக்கங்களாக வாழ்ந்துகொண்டிருப்பதாக பாவனை செய்வார்கள். எழுத்தாளர்கள் மட்டும் அறமில்லாதவர்கள், சமரசம் செய்துகொண்டவர்கள், அற்பர்கள், அறிவிலிகள் என திட்டுவார்கள். இந்தப்பாமரர்கள் நாலாந்தர அரசியல்தலைவர்களுக்கு கொடிபிடிக்கத் தயங்காதவர்கள். தன்னலத்துக்காக எங்கும் எந்த கும்பிடும் போடத்தயாரானவர்கள். அன்றாட அயோக்கியத்தனங்களில் வெட்கமில்லாமல் திளைப்பவர்கள்.

அச்சிறுமையை அறுவடை செய்ய முயலும் ஒரு பாவனையே “ நான் வீழ்த்தப்பட்ட, நம்பிக்கையிழந்துபோன எழுத்தாளர்” என்பது.  “எழுதி என்ன பயன்?” “இங்கே எல்லாமே சூழ்ச்சிதான்” ”எல்லாவனும் அயோக்கியனுங்க” என்பதுபோன்ற புலம்பல்கள் இன்றைய இணையவெளியில் ஒரு பெரும்சாராரால் ரசிக்கப்படுகின்றன. ஆறுதல்சொற்களுடன் கூடிவிடுவார்கள். இலக்கியத்தை, இலக்கியச் சூழலை, அறிவியக்கத்தைச் சிறுமைசெய்து என்ன எழுதினாலும் சிலநூறு அற்பர்களின் ஆதரவு உறுதியாகிறது. பெருமாள் முருகன் இந்த தன்னிரக்கப் புலம்பல் வேடத்தை மாதொரு பாகன் விவகாரத்தில் வெற்றிகரமாக நடித்தார். அது அவருக்கு அமோக அறுவடையை அளித்தது. அதை அப்படியே இந்தக்குறிப்பு வரை தொடர்கிறார்.

அறிவியக்கம் பற்றிய பெருமிதம் எழுத்தாளனுக்கு இருக்கவேண்டும். அறிவியக்கத்தையே அறியாத பெருந்திரள் முன், அதற்கு எதிரான அரசியல்கும்பல் முன் அவன் அந்நிமிர்வை முன்வைக்கவேண்டும். அடுத்த தலைமுறைக்கு இந்த இலட்சியவாதத்தை அளித்துச் செல்லவேண்டும். இதில் பணம் இல்லை, புகழும் பெரிதாக இல்லை. இருப்பது அகநிறைவு. வாழ்க்கையை பொருளுடன் வாழச்செய்யும் ஒரு காலக்கடமை. அதையே எழுத்தாளன் தன்னைச் சூழ்ந்துள்ள பெருந்திரள்முன் வைக்கவேண்டும்.

எழுத்தாளனை அடுத்த தலைமுறை பார்த்துக்கொண்டிருக்கிறது. பல்லாயிரம்பேர் அவனை பழிக்கலாம். பத்துபேர் அவனைநோக்கிக் கிளம்பி வந்துகொண்டேதான் இருப்பார்கள். அவர்களே முக்கியமானவர்கள். அவர்கள் வழியாகவே இந்த இலட்சியவாதம் முன்னகர்கிறது. இது தொழில் அல்ல, வணிகம் அல்ல, இது ஒரு பெரும்கனவு, இக்கனவின் களியாட்டே இதன் லாபம் என அவன் அவர்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்

மாறாக, திரும்பத்திரும்ப புலம்புகிறார்கள் சிலர். என்ன கிடைத்தாலும் மேலும் பிலாக்காணம். மேதைகள் எல்லாம் வாழ்நாள் முழுக்க அரும்பணியாற்றி அறியப்படாதவர்களாக மறைந்த சூழல் இது. அவர்களுக்காக ஒரு சொல்கூடச் சொல்லாதவர்கள் தங்களுக்கு தனக்கு ஏதோ கிடைக்கவில்லை என எண்ணி ஒட்டுமொத்த இலக்கியச் சூழலே மோசடியானது, சூழ்ச்சியானது என்கிறார்கள். மொத்த அறிவியக்கமே இருண்டது, பயனற்றது என்று பாடுகிறார்கள். அவர்கள் உண்மையில் செய்துகொண்டிருப்பது ஒரு மாபெரும் அழிவுச்செயல். அவர்களின் அந்த தன்னிரக்கப் பிலாக்காணத்தை ஒரு வகை நஞ்சாகவே எண்ணவேண்டும். அடுத்த தலைமுறைக்கு முன் அதிலுள்ள கீழ்மையை வெளிப்படுத்தியே ஆகவேண்டும்.

ஒவ்வொரு முறையும் ஓர் இளைஞர் இலக்கியவேட்கையுடன், அறிவியக்கவாதிக்குரிய தீவிரத்துடன், தற்கொலைத்தனமான அர்ப்பணிப்புடன்  எழுந்து வருவதைக் காண்கையிலும் நிறைவடைகிறேன். அவர்களிடம் “நல்லது, கூடவே கொஞ்சம் பொருளியல் வாழ்க்கையையும் பார்த்துக்கொள்” என்று மன்றாடுகிறேன். ஏனென்றால் நான் ஒரு தந்தையும்கூட. ஆனால் அவர்கள்மேல் பெரும் பிரியம் எனக்கிருக்கிறது. அவர்களை காண்பதே உளஎழுச்சியை அளிக்கிறது. விஷ்ணுபுரம் விழாவில் அந்த இளைஞர்கூட்டத்தை காண்கையில் சிலசமயம் கண்கலங்குமளவுக்கு நெகிழ்ந்திருக்கிறேன்

ஆனால் இங்கே பெருமாள் முருகன் அத்தகைய இலட்சியவாதச் செயல்பாடுகளைப் பற்றி அறியாமையுடன் இருக்கிறார். அவற்றை தயங்காமல் இழிவு செய்கிறார். அவர் சேகரித்த சில தரவுகளை மேலதிகமாக சட்டபூர்வமாக ஆய்வுக்குப் பயன்படுத்திக் கொண்டதை திருட்டு என்கிறார். அதன்பொருட்டு அழிசி ஸ்ரீனிவாசன் செய்து வந்த ஒட்டுமொத்த அறிவுப்பணியை அழிக்கிறார். அதற்கு அவருக்கு எந்த அறத்தடையும் இல்லை. அழிசி ஸ்ரீனிவாசனிடம் ஒரு வார்த்தை பேசக்கூட உள்ளமில்லை. இவ்வளவும் செய்துவிட்டு தன்னிரக்கப் பிலாக்காணம்.

அழிசி ஸ்ரீனிவாசனிடமும் அவரைப்போன்று வரும் இளைஞர்களிடமும் ஒன்றையே சொல்லிக்கொள்வேன்.

“நண்பர்களே, உங்களுக்கு இன்னும் சில தலைமுறைக்காலம் இங்குள்ள பொதுச்சூழல் எந்த மதிப்பையும் அளிக்கப்போவதில்லை. உங்களை இங்குள்ள அரசியல்கும்பல் வசைபாடும். உங்கள் செயல்களை வீணானவை, அல்லது தங்கள் பிழைப்பை கெடுப்பவை என்றே கல்வித்துறையினர் நினைப்பார்கள். இலக்கியச்சூழலிலேயே காழ்ப்புகளையும் நீங்கள் சந்திக்கவேண்டியிருக்கும்.

உங்களுக்குப் பின்னால் எழுந்துவரும் அடுத்த தலைமுறை இலட்சியவாதி ஒருவருக்கு மட்டுமே உங்கள் பணியும் உங்கள் இடமும் புரியும். அவர்களுக்காக பணியாற்றுங்கள். அவர்கள் உங்களை மதிப்பார்கள். அனைத்துக்கும் மேலாக இந்த பணியால் உங்களை நீங்களே மதிப்பீர்கள். அது மிகமிகமிக முக்கியமானது. நம் சூழலில் லட்சத்தில் ஒருவரிடம்கூட இல்லாத செல்வம் அது.

ஆகவே,  தாழ்வுணர்வோ தன்னிரக்கமோ கொள்ளாதீர்கள். பிறர் அவ்வண்ணம் உங்களிடம் இரக்கம் காட்டினால் ஏற்காதீர்கள். உங்கள் நிமிர்வே நீங்கள் ஈட்டிக்கொள்வது. நிமிர்ந்திருங்கள், வெல்லுங்கள்.”

ஜெ

முந்தைய கட்டுரைநிறையாக் கலத்துடன் அலையும் கபாலபைரவன்-அந்தியூர் மணி
அடுத்த கட்டுரைதிசைதேர் வெள்ளம்- பேரிசையின் தொடக்கம்