விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
சமீபத்தில் மனமொன்றிப் படித்த நாவல் எம் கோபாலகிருஷ்ணனின் தீர்த்த யாத்திரை.(தமிழினி வெளியீடு)
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு ஆணின் மனதிலும் துறவு இச்சை ஒருபக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.பெரும்பாலான இந்தியப் பெண்களின் மனதில் ஒரு தற்கொலை எண்ணம் இருப்பது போல.இது குறித்த fantasies ஒரு சேப்டி வால்வ் போலவோ லட்சியம் போலவோ பழிவாங்குதல் போலவோ இருக்கின்றன.(இந்த நாவலுக்குள்ளேயே அப்படியொரு தற்கொலை வருகிறது)எம் வி வியின் பைத்தியக்காரப் பிள்ளை கதை ஒரு உதாரணம்.
மதம் ஒரு பக்கம் ஆன்மீகம் ஒருபக்கம் என்று இப்போது இருக்கும் பிளவு முன்பு இருந்ததில்லை. பெரும்பாலான நபர்களின் மைய விசையாக இருக்கும் ஜென்மம் ஈடேறுதல் என்கிற இந்த விஷயம் குறித்து தமிழில் தீவிர இலக்கியத்தில் அதிகம் எழுதப்பட்டதில்லை.பாலகுமாரன் நிறைய வணிகப் பரப்பில் எழுதியுள்ளார்.
யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம் முக்கியமான ஆக்கம்.தி ஜாவின் சிறுகதைகள், சில அசோகமித்திரன் கதைகள் போன்றவை நினைவுக்கு வருகின்றன. இந்த தேடலின் இருள் பக்கத்தை சரவணன் சந்திரன் ஒரு நாவலாக எழுதியிருக்கிறார்.
தீர்த்த யாத்திரை துறவு அல்லது வானப்பிரஸ்தம் மேற்கொள்ளும் வாழ்வு,சிக்கல்கள்,போராட்டங்கள் அதன் முடிவு பற்றிப் பேசுகிற ஒரு முக்கியமான நாவல்.திடீரென்று குடும்பத்தை உதறி தீர்த்த யாத்திரை க்கு புறப்பட்டுவிடும் ஒரு மத்தியவயது மனிதன் பற்றிய கதை.எனது ஆரம்பகால அலைந்து திரிதலில் இதுபோன்ற மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன்.
பொதுவாக இதுபோன்ற நாவல்களின் தரிசனம் நிகழும்போது அபத்தமாய்த் தோன்றும் இலக்கில்லாதது போல்த் தோன்றும் நம் வாழ்க்கையும் அதன் இன்ப துன்பங்களும் ஆரம்பத்திலிருந்தே நம்மை ஒரு இலக்கை நோக்கிச் செலுத்தப் பின்னப்பட்டவையே என்பதுதான்.புத்தன் தற்செயலாக ஒரு பிணத்தையும் ரோகியையும் முதியவனையும் காண்பதில்லை.
தீர்த்த யாத்திரை நாவலில் ஒரு இளம் விதவை தற்கொலை செய்துகொள்கிறாள்.நாயகன் அவளை விட இளையவன் அவனது அக்காளின் தோழியுடன் உறவுகொள்கிறான்.இளம் வயதிலேயே விதவையாகிவிட்டவள் அவள்.இருவரும் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன.ஆண் ஏதோ ஒரு மோகாவேச தருணத்தில் அவளை மணந்துகொள்வதாய்ச் சொல்கிறான்.பெண்ணும் அதை நம்புகிறாள்.அந்த உறவின் குற்ற முள்ளை நீக்க அப்படியொரு பொம்மை தேவைப்படுகிறது அவர்களுக்கு.ஒரு நாள் ஊரைவிட்டு ஓடிப்போகத் திட்டமிட்டு ஆண் கடைசி நேரத்தில் அச்சமடைந்து வழமையாகப் போகும் ஆபீசுக்குப் போய் அமர்ந்திருக்கிறான்.அவள் பையுடன் நம்பிக்கையுடன் காத்திருக்கும் பேருந்து நிறுத்தத்தைத் தாண்டிதான் அவன் ஆபீஸ் போகும் பேருந்து செல்கிறது..
இந்தக் காட்சி நாவலில் நுட்பமாக விவரிக்கப்பட்டுள்ளது.மாலை வரை பேருந்து நிலையத்திலேயே காத்திருந்துவிட்டு அந்தப் பெண் அவனது ஆபீசுக்கு வந்து பார்க்கிறாள்.அவன் ஒன்றுமே நடவாதது போல் வேலை செய்துகொண்டு அமர்ந்திருப்பதைப் பார்க்கிறாள்.மறு நாள் காலை தற்கொலை செய்துகொள்கிறாள்.
இன்னொரு தருணத்தில் தன் கீழ் வேலை பார்ப்பவன் ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொண்டு உதவிக்கு வரும்போது அவனைப்பற்றி மிகக் கடுமையான குறிப்புகள் எழுதி அவன் வேலையைக் காலி பண்ணிவிடுகிறான்.அவனது மனைவி மிக அழகாய் இருந்தது ஒரு காரணம்.மிக நேர்மையான அவனுக்கு ஒரு நோய்வாய்ப்பட்ட மனைவி.ஆபீஸ் பணத்தைக் கையாள்பவனுக்கோ ஒரு அப்ஸரஸ் மனைவி இருப்பது அநீதி என்கிற கோபம்.இரண்டு பெண்களின் சாபங்கள்.
அதே நேரம் நோயுற்று இறந்து போகும் தன் மனைவியிடமும் அவனை ஏமாற்றி வாழும் தம்பியிடமும் மிகவும் அன்பாகவும் பொறுமையாகவும் நடந்துகொள்ளும் மனிதனாகவே அவன் இருக்கிறான்.ஒரு மிடில் க்ளாஸ் ஆணின் இரண்டுபக்கங்களும் நாவலில் காட்டப்படுகின்றன.தன்னுடைய காமத்துக்குப் பொறுப்பேற்க அஞ்சும் கோழைத்தனம் ஒருபுறம்.கடமைகள் குறித்த அதீத தன் உணர்வு ஒருபுறம்.
இந்தியாவில் ஒரு பெண் பொதுவாக ஒரு ஆண் உடல் உறவுக்குத் தயாராகிவிட்டான் எனில் அவன் அதைத் தொடர்ந்த பொறுப்புகளுக்கும் தயாராகிவிட்டான் என்று எடுத்துக்கொள்கிறாள்.எதிர்பார்க்கிறாள்.இந்தியாவின் மிடில் க்ளாஸ் கோழைத்தனம் நிரம்பியது.முதுகெலும்பற்றது.அதன் பெண்களை விட ஆண்கள் இன்னும் கோழைகள்.
அவன் காதல்,காமம்,ஆன்மீகம்,துறவு எல்லாம் இந்தக் கோழைத்தனத்திலிருந்து பிறப்பது.அவன் மேல் எப்போதும் அவனது நிறைவேறாத ஆசைகள் சாபங்கள் போல்த் தொங்குகின்றன.அவனது உண்மையான துறவு முதலில் இந்த தளைகளிலிருந்து விடுபடுவதே.
தீர்த்த யாத்திரை நாவலில் வரும் விதவைப் பெண்ணின் தற்கொலை எனக்கு மோகமுள்ளின் தங்கம்மாவின் தற்கொலையை நினைவூட்டியது.மிகவும் வயதான ஒருவருக்கு இரண்டாம் தாரமாக அமைந்துவிட்ட தங்கம்மாவுடன் பாபுவுக்கு ஒரு முறை உறவு நிகழ்ந்துவிடுகிறது.அவள் அவனது கவனத்தை ஈர்க்க மிகவும் முயன்றாள்தான்.ஆனால் ஒருமுறைக்கு மேல் பாபுவுக்கு தான் ஏதோ அசிங்கத்தை மிதித்துவிட்டது போல் தன்னுடைய கலைக்கு துரோகம் செய்துவிட்டது போல் தோன்றி அவளை உதறிவிடுகிறான்.அவள் தற்கொலை செய்துகொள்கிறாள்.
இங்கு அசிங்கம் என்பது எது?அது வெறும் உடல் சார்ந்த உறவாய் மட்டுமே இருந்தது என்பதாலா?ஆனால் தங்கம்மாவுக்கு அது அப்படியில்லை.அதே உடல் உறவை தன்னை விட வயதில் மூத்த யமுனாவுடன் நிகழ்த்தும்போது அது அசிங்கமென பாபுவுக்குத் தோன்றுவதில்லை.ஏதோ கடும் சாதகம் செய்து ஒரு ஸ்வரத்தை,ஸ்தாயியைப் பிடித்துவிட்டது போல்தான் தோன்றுகிறது. பாபு நாவல் முழுவதும் சங்கீதத்தையும் யமுனாவின் மீதான பிரேமையையும் சாதகம் பண்ணிக்கொண்டே இருக்கிறான்.யமுனாதான் அதுவும் உடலுறவுதான் என்று ஒரு போதத்தை அவனுக்கு அளிக்கிறாள்.தங்கம்மாவுடன் நிகழ்ந்தது போலதான் அதுவும்.”இதுக்குத்தானா?”
மதுரையில் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு ஒரு தங்கம்மாவைத் தெரியும்.அவளும் மிக வயதான நோய்வாய்ப்பட்ட கணவனுடன் இருந்தாள்.நான் அவள் தண்ணீர் எடுக்கப்போகும்போதெல்லாம் அவளது உருண்டு திரண்ட பின்பாகங்களைப் பார்த்துக்கொண்டே நிற்பேன்.ஒரு நாள் என் வீட்டுக்குள் ஒரு கடிதம் எறியப்பட்டது.
“என்ன பார்த்துட்டே இருக்கிறே?’
நான் லேசாகக் கலவரமானேன்.
மறு நாள் இன்னொரு கடிதம் ” நாளைக்கு காலைல பதினொரு மணிக்கு இந்த இடத்துக்கு வா”
நான் போகவில்லை.
“ஏன் வரலை?சரி.நாளைக்கு ராத்திரி பனிரெண்டு மணிக்கு புறவாசலைத் திறந்து வச்சிரு”
நான் பயந்து அன்று மாலையே வீட்டைப் பூட்டிவிட்டு ஊருக்கு வந்துவிட்டேன்.பின்பு அதைக் காலி செய்யப்போனபோது அவள் பார்த்த பார்வையின் இகழ்ச்சி எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
பிறகு யோசித்துப் பார்த்தேன்.அன்று நான் ஏன் மிகுந்த அச்சமடைந்தேன்?முதலில் அவளைக் காமமாய் பார்த்துக்கொண்டிருந்தவன் ஏன் அவள் எதிர்வினை ஆற்றியதும் பயந்து ஓடிவிட்டேன்?
முதல் காரணம் நான் ஒரு பெண்ணை அடைய விரும்பினேன்.ஒரு பெண் என்னை அடைவதை விரும்பவில்லை.அதை என் ஆண் அகந்தை விரும்பவில்லை.இரண்டாவது மிடில் க்ளாஸ் ஆண்களுக்கே இருக்கும் free sex fantasy.வரிகள் பின்னால் வரக்கூடும் என்று தெரிந்ததும் ஏற்படும் அச்சம். ஆண்கள் வாசிக்கிற போர்ன் புத்தகங்கள் யாவும் ஆணுக்கு எங்கோ கிடைக்கும் இலவச செக்ஸ் பற்றிய பகல் கனவுகளால் நிறைந்திருக்கின்றன.
யமுனா போல் ஏதோ ஒரு பெண் அதை இலவசமாய் தருவாள்தான்.அன்பினால். தங்கம்மாவும் தன்னுடலை அதே போல்தான் தந்தாள்.அது வெறும் காமம் என வாங்கியவரால் கருதப்பட்டதும் கூசி தன் உடலை அழித்துக்கொண்டாள்.இது ஒரு விஷச்சுழல்.இந்த தலைமுறை இதிலிருந்து விடுபடக்கூடும்.
உடலை மிகுந்த புனிதமானதாகவோ மிகுந்த அசூயைக்கு உரியதாகவோ கருதாமல் சம நிலையுடன் நோக்கும் ஒரு தலைமுறை வரலாம்.ஆனால் அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகும் என்றே தோன்றுகிறது.
ஆனால் உடலைச் சார்ந்த கதைகள் மறையும்போது உடல் சார்ந்த ஈர்ப்பும் குறைந்து போய்விடலாம்
போகன் சங்கர்
தீர்த்தயாத்திரை- மதிப்புரை பாவண்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்