அன்புள்ள ஜெ
நலம்.நலம் அறிய ஆவல்!
இருட்கனியைப் பற்றி ஏதாவது எழுதியே ஆக வேண்டும் என்ற உந்துதலில் இதை எழுதிகிறேன்.
தற்பொழுது நீர்க்கடன் வாசித்து கொண்டிருக்கிறேன்.வெண்முரசை வாசிக்கும் எளியவனாக சொல்கிறேன் ,வெண்முரசின் உச்சம் இருட்கனியே !.நீலத்தின் பித்தை விடவும் ,இமைக்கணத்தின் ஞானத்தையும் விடவும் இருட்கனி ஒருப்படி மேல் !
கர்ணனின் வீழ்ச்சி சோர்வடைய செய்யும் என்றே எண்ணினேன் ,17ஆம் நாள் இரவில் இருந்து இருட்கனி பின் சென்றதால் என்னவோ தெரியவில்லை ,சோர்வில்லை ..ஓர் முழுமையை நோக்கிச் சென்று அமையும் பயமாகவே இருந்தது.
என் கர்ணணை வீழ்த்த விண்ணளந்தோனுக்கும் ஓர் வேள்வி தேவைப்படுகிறது இந்திரன் தேவைப்படுகிறான்,அவன் கொடை தேவைப்டுகிறது,அதுவும் ஆயுதம் இல்லாத கர்ணனை வீழ்த்தவே! .
“அவன் அருளலே, அவன் தாள் வணங்கி” என்பதைப் போல் ..”அவனருளாலே அவனை வென்றான் அம்மாயக்கண்ணன்”.சகுனியை அறைகூவும் பிரேசனன் எஞ்சும் கர்ணனாய் நிற்பது இருட்கனியின் இனிப்பின் எச்சம்.இருட்கனியின்ச் சுவைக்காக தங்களுக்கு என் வணக்கங்களும் ,நன்றிகளும்.
பின் ஓர் சிறிய சந்தேகம் ,
11ஆம் நாள் அர்ஜுனனும் (விண்ணளந்தோன் கையை விரிக்கும் தருணம்)
14ஆம் நாள் இரவுப்போரில் சகதேவனும் ,
16ஆம் நாள் தர்மனும் பீமனும் தத்தம் உயிரை கெடையாய் பெறுகின்றனர் (அ) சிறுமை செய்யப்படுகின்றனர் ,அவ்வாறு போர்களத்தில் நகுலன் மட்டும் தப்பித்தது ஏன்? நகுலன் தன்னை உணர்ந்து தனியாக கர்ணனை எதிர் கொள்ளாம்ல் இருந்ததாலா ?இல்லை இயல்பாய் அவ்வாறு அமைந்ததா?!..
நன்றி,
அன்புடன்,
செ.சரவணப் பெருமாள்.
அன்புள்ள சரவணப்பெருமாள்
உண்மையில் இப்போது வெண்முரசு பற்றிய எந்த கேள்விக்கும் நான் பதிலளிக்க முடியாது. எந்த விவாதத்திலும் கலந்துகொள்ள முடியாது. மலையேறிச் சென்று உச்சியில் நின்று கண்டவை அதிலுள்ளன. இப்போது வேறு மலைகளில் இருக்கிறேன்.
வெண்முரசில் வரும் ஐயங்கள் அல்லது குழப்பங்களுக்கு வெண்முரசின் நல்ல வாசகர்கள்தான் பதில் சொல்லமுடியும். அப்படி ஏராளமானவர்கள் உள்ளனர். பல விவாத அரங்குகள் நிகழ்கின்றன. அங்குதான் இவற்றுக்கெல்லாம் பதில் கிடைக்கும்.
ஜெ
இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்