திசைதேர் வெள்ளம்- பேரிசையின் தொடக்கம்

அன்புள்ள ஜெ,

திசைதேர் வெள்ளம் நாவலை வாசித்துக்கொண்டு இருக்கையில் எனக்கு ஒரு உவமை தோன்றியது. நாவலை சீக்கிரம் படித்து முடித்து… அந்த உவமையை உங்களுடன் எப்பொழுது பகிர்ந்து கொள்வேனா என்று தவித்தது மனம். எனக்கெல்லாம் இந்த மாதிரி ஒரு நல்ல யோசனை வருவதே ஒரு அபூர்வம் இல்லையா!

அந்த உவமை இசையை பற்றியது. இளையராஜா, ரஹ்மான் போன்ற மாஸ்டர்களின் பெரும்பாலான பாடல்களில் ஒரு ஒற்றுமையுண்டு : கேட்பவர்களை உள்ளுக்கிழுக்கும் நல்ல பல்லவி, மெட்டு  இருந்தாலும் பாடலை உடனே அங்கு கொண்டு செல்ல மாட்டார்கள்.  சற்று நீண்ட அற்புதமான வாத்திய இசையை அல்லது கோரஸை  முதலில் வைப்பார்கள். அதில் எத்தனையோ வர்ணஜாலங்களை அமைப்பார்கள். மீண்டும் மீண்டும் கேட்கையில் ஏதோ ஒரு புதிய இசை நெளிவுகள்,  குழைவுகள், புதிய புதிய ஓசைகள், ஓசையின்மைகளை அதில் ஒளித்து வைத்து இருப்பார்கள். ஒவ்வொரு முறை கேட்கையிலும் புதிய கண்டடைதல்களை பெற வைப்பார்கள்.

ரசிகர்களுக்கு இசை உச்சங்களின் சிறு கீற்றலை காண்பிக்கும் முயற்சி இதுவென்று தோன்றும். அந்த இரு மாஸ்டர்களின் இசையிலும் எத்தனையோ பாடல்களை இப்படி சொல்லலாம்.  கர்நாடக சங்கீதத்தின் ‘வர்ணம்’ களில் வரும் மிக நீண்ட ஆலாபனை- பல்லவி முறைக்கு இது ஒரு சுருக்கமான வடிவம் என்று நினைக்கிறேன். மற்ற இசைமைப்பார்களில் இந்த குணம் அபூர்வம். ஹிட்டடிக்கும் மெட்டு இருந்தால் போதும்… நம்மை அதிகம் காக்க வைக்க  மாட்டார்கள்.  ஒரு சம்பிரதாயத்துக்கு வாத்திய இசையை வைத்து விட்டு உடனே நம் செவிகளை தாம் கண்டடைந்த ஹிட் பல்லவிக்கு கொண்டு செல்வார்கள்.  நல்ல பாட்டு தான், அற்புதமான மெட்டுதான்… ஆனால் அதை தாண்டி ரசிகர்களுக்குள் வேறு எந்த ஒரு கண்டடைதலையம் அவை  நிகழ்த்துவதில்லை.  அப்படி அல்லாமல் கேட்பவர்களை ரசிகராக ஒரு படி மேல் உயர்த்துபவர்களே  மாஸ்டர்கள் ஆகிறார்கள்.

நீங்கள் அப்படி ஒரு இலக்கிய மாஸ்டர். சிறு வயதில், தூர்தர்ஷன்  ராமாயணம் குடும்பத்துடன் சேர்ந்து தான் பார்ப்போம். அதில் வரும் யுத்த காட்சிகள் தான் எனக்கு  விருப்பம். ‘அப்பா ஃபைட்டு எப்பப்பா வரும்…’என்று நச்சரித்து கொண்டு இருப்பேன். ‘மகாபா… ரத்’ ஒளிபரப்பு ஆகும்போது சற்று வளர்ந்து இருந்தேன். அதில் சில அற்புதமான நாடக தருணங்களை ரசிக்க முடிந்தாலும் மனம் யுத்தத்துக்காகவே ஏங்கி கொண்டு இருந்தது.  வீட்டில் யாருக்கும் இந்தி  புரியாது. ஆனால், அப்பாவிற்கு மகாபாரதம் தெரியும். தெலுங்கு ‘கவித்ரயம்’ எழுதிய மகாபாரதத்தின் ‘ஆதி பர்வம்’ புத்தகத்தை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருப்பார்.  இந்தி மஹாபாரதம் வரும் போது அதை தோராயமாக புரிந்துக்கொண்டு எங்களுக்கு விளக்குவார்.

கடைசியாக கௌரவ அவைக்கு தூதுவரும் கண்ணன்… துரியனின் மேல் சக்கரத்தை எடுத்து, தொடுக்காமல் ஆவேசமாக பேசும் காட்சி இடம் பெற்றது.  பீஷ்மரும், துரோணரும் ‘உனக்கு தெரியாததா பெருமாளே!’ என்று பக்தி கொப்பளித்து நிற்க, கண்ணன் கிளம்பிச் செல்வார். அப்போதுதான் அப்பா சொன்னார்… ‘இன்னும் சில வாரத்துல யுத்தம் நடக்கும்டா!’ என்று. அடுத்த இரண்டு வாரங்கள் ஓடின. அதற்கும் அடுத்து… என் மனது குதூகலிக்க அர்ஜுனன் வெயிலில் தகதகக்கும் கவசங்களுடன் ரதத்தில் நின்று இருக்கிறான். ஆனால், அம்பு தொடுக்கவே இல்லை. அதுவும் எனக்கு பிரச்சனை இல்லை, ஆணால் ஒப்பாரி வைக்கிறான். அப்பொழுது கண்ணன் சம்ஸ்க்ருதத்தில் பாட தொடங்குகிறான்!

நான் அழாத குறையாக ‘என்னப்பா இது…’ என்கிறேன். ‘இது தான் பகவத் கீதை நைனா! அடுத்த வாரம் அர்ஜுனன் வில்லு எடுப்பான்’ என்றார். ஆனால், பீ ஆர் சோப்ரா அதற்காகவே இன்னொரு மூன்று வாரங்கள் எடுத்து கொண்டார். ‘சே… இனி பாரதமே ப்ப்பார்க்க கூடாது!” என்று நிச்சயித்த பிறகுதான்… ஊக்க மருந்து போன்ற  பின்னணி இசையுடன் அர்ஜுனன் அம்பை எடுக்கிறான். முதல் அம்பு பீஷ்மரின் பாதங்களுக்கு. ‘இது பெயர் தான் மர்யாத பாணம்’ என்று அப்பா விளக்கினார். இப்படித்தான் எனக்கு மகாபாரத புரிந்தது. பிறகு இது தமிழில் மீண்டும் ஒளிபரப்பு ஆனபோது தான் முழுக்க ரசித்தேன்.

ஆனாலும், மகாபாரத போர் என்னை எப்பொழுதும் கிறங்க வைத்துக்கொண்டு தான் இருக்கிறது. மகாபாரத யுத்தத்தின் உச்ச காட்சிகள் எல்லோர்க்கும் தெரியும்தான். ‘திசைதேர் வெள்ளம்’ அதன் தொடக்கம். இசை மாஸ்டர்கள் அளிக்கும் தொடக்கஇசை போன்றது. தன்னளவே உச்சங்கள் நிறைந்தது. ஒரு பீபத்ச, வீர ரசம் நிறைந்த பாடல்…  இசையுடன் தொடங்கி  பல்லவிக்கு செல்வது போல. பீஷ்மரின் மரணம் அல்லது ‘தன்கொடை’ தான் அந்த பல்லவி.  பீமனில் தொடங்கி… இரு பக்கங்களிலும் அறப்பிழைகள். நியதிகளில் இருந்து பெரும் சறுக்கல்கள். அசங்கன் உட்பட சாத்யகியின் கை தேறா மைந்தர்களின் மரணங்கள், அவர்களை கொன்று குவித்து சாத்யகியை கொல்லாமல் விட்டுவிடும் பூரிஸ்ரவஸின் அதே தத்தளிப்பு.

சுபாகுவின் மகன் சுஜயனின் மரணம். முதலில் சாதாரண நிகழ்வாக கடந்து செல்லும் அவனின் மரணம்… நாவலின் முடிவில் பப்ருவாகனின் சொற்களில் பெரும் விசையுடன் வந்து அறைகிறது. எத்தனையோ கேள்விகளை எழுப்பிச் செல்கிறது. இதெல்லாம், ஒரு பக்கம் இருக்க ருக்மியின் வருகை இந்த நாவலில் ஒரு அற்புதமான நிகழ்வு. அவனை பார்த்து கண்ணன் காலில் விழும் அந்த காட்சியை வாசித்து ஜோராக கைதட்டி விட்டேன்.  ‘என்ன ஒரு ஆளுமையாக்கம் இது! நம்மாளு இந்த கிருஷ்ணனை  எப்படி படைச்சிருக்கான் பாரு!’ என்று சிரித்து விட்டேன்.

நன்றி சார்,

ராஜு

முந்தைய கட்டுரைஇலக்கியமென்னும் இலட்சியவாதம்
அடுத்த கட்டுரைஎம்.கோபாலகிருஷ்ணனின் ’தீர்த்தயாத்திரை’- போகன் சங்கர்