இலக்கியத்தை விலைபேசுதல்…

சென்ற சில நாட்களில் இந்த குறிப்பை பார்க்க நேர்ந்தது, கு.ப.ரா கதைகளை இணையத்தில் ஏற்றுவதைப்பற்றியது. பெருமாள் முருகன் இவ்வாறு எழுதுகிறார்.

எதற்கு எழுத வேண்டும்? (கு.ப.ரா. கதைகள் பதிப்பு குறித்து)

கு.ப.ராஜகோபாலன் (கு.ப.ரா.) சிறுகதைகள் தொகுப்பை 2012ஆம் ஆண்டு வெளியிட்டேன். அத்தொகுப்பை உருவாக்குவதற்குப் பத்தாண்டுகள் செலவழித்தேன். ரோஜா முத்தையா நூலகம், உ.வே.சா. நினைவு நூலகம், மறைமலையடிகள் நூலகம், ஞானாலயா நூலகம் எனப் பலவற்றுக்கும் சென்று பழைய இதழ்களைத் தேடிக் கண்டடைந்து அவற்றைப் பக்கம் பக்கமாகப் புரட்டி வாசித்துக் கு.ப.ரா.வின் கதைகளைத் திரட்டினேன். அவர் காலத்தில் வெளியான தொகுப்புகளையும் மறைவுக்குப் பிறகு வெளியிடப்பட்ட நூல்களையும் அரிதின் முயன்று சேகரித்து ஒப்பிட்டுப் பார்த்தேன்.

இடைப்பட்ட காலத்தில் அ.சதீஷ் ‘கு.ப.ரா. கதைகள்’ என்னும் தொகுப்பை வெளியிட்டார். அத்தொகுப்பிலும் பல குறைபாடுகள் இருந்தன. பத்திரிகைகளில் இருந்து சேகரித்த கதைகள், நூல்களின் முதல் பதிப்புகள், இறப்புக்குப் பிறகு வெளிவந்த நூல் பதிப்புகள், அ.சதீஷ் பதிப்பு ஆகிய அனைத்தையும் ஒப்பிட்டுக் கு.ப.ரா. கதைகளில் நேர்ந்திருந்த குழப்பங்களை எல்லாம் போக்கிக் கதைகளின் காலவரிசையை ஒருவாறாகத் தயாரித்தேன். நூலின் முன்பகுதி, பின்னிணைப்பு ஆகியவற்றை உருவாக்கப் பட்ட பாடு பெரிது. இவையெல்லாம் இன்று சொல்லும் போது சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் இந்த வேலைகளுக்குச் செலவளித்த காலம் என் ஆயுளில் கணிசமானது.

இன்று ஒருவர் என் பதிப்பை அடியொற்றிக் ‘கு.ப.ரா. கதைகள்’ என்னும் மின்னூலை உருவாக்கி இணையத்தில் இலவசமாக வழங்குகிறார். ஓரிரு நாளுக்குப் பிறகு விலை வைத்து விற்கக்கூடும். என் பதிப்புரை, முன்னுரைகளை நீக்கிவிட்டுக் க.நா.சு., ந.பிச்சமூர்த்தி ஆகியோர் கட்டுரைகளைச் சேர்த்திருக்கிறார். நூலின் அட்டையைப் போலி செய்திருக்கிறார். கதைகளின் மூலபாடமும் காலவரிசையும் என் பதிப்பில் உள்ளவையே. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நண்பர் கல்யாணராமன் வழியாகக் கண்டடைந்த கு.ப.ரா.வின் ‘வேறு நினைப்பு’ என்னும் புதிய கதை ஒன்றைக் காலச்சுவடு இதழில் வெளியிட்டேன். அக்கதையையும் எடுத்துச் சேர்த்துக் கொண்டார். என் பதிப்புக்கும் காலச்சுவடுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதை ‘அறிவுத் திருட்டு’ என்று நான் கருதுகிறேன். இல்லை, கு.ப.ரா.வின் கதைகளுக்கு நீங்கள் எப்படி உரிமை கொண்டாட முடியும் என்று அவர் கேட்கிறார்.

பிற நூல்களுக்கும் என் பதிப்புக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு கதைகளின் மூலபாடம். ‘கனகாம்பரம்’ தொகுப்பின் முதல் பதிப்பு என்னைத் தவிர வேறு யாருக்கும் இதுவரை கிடைக்கவில்லை. அத்தொகுப்பின் மூலபாடத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கிறேன். அதே போல நான் பார்த்துச் சேகரித்த புதிய கதைகள் நூலில் உள்ளன. என் பதிப்புக்கென உருவாக்கிய காலவரிசை பிற பதிப்புகளில் இல்லை. தலைப்பகராதியைப் பின்னிணைப்பில் கொண்டதும் என் பதிப்புத்தான். இவ்வளவையும் அப்படியே பயன் கொண்டிருக்கும் மின்னூல் பதிப்பாளர்  ‘எதற்கும் நீங்கள் உரிமை கொண்டாட முடியாது’ என்று சட்டம் பேசுகிறார். சட்டம் அவருக்குச் சாதகமாக இருக்கலாம். பதிப்பு அறம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதுவேனும் எனக்குச் சாதகமாக இருக்காதா?

பழைய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேடித் தொகுத்துப் பிறருக்குத் தாரை வார்க்க வேண்டும் என்றால் எதற்குக் காலத்தையும் சிந்தனையையும் வீணாக்க வேண்டும்? சில நகாசு வேலைகள் செய்து ஒருவருடைய உழைப்பை இன்னொருவர் எளிதாகத் தமதாக்கிக் கொள்ள முடியுமானால் ஏன் உழைக்க வேண்டும்? இலவசமாகக் கிடைக்கிறதென்று புளகாங்கிதம் கொண்டு வாசகத் தரப்பு இதை ஆதரிக்குமானால் எதற்கு எழுத வேண்டும்? [பெருமாள் முருகன் கட்டுரை]

அதற்கு அந்நூலை பதிப்பித்த அழிசி சீனிவாசன் இவ்வாறு பதில் சொல்கிறார்.

மதிப்புக்குரிய பெருமாள்முருகன் அவர்களுக்கு,

வணக்கம். கு. ப. ராஜகோபாலன் படைப்புகள் நாட்டுடைமை ஆகிவிட்டவை. அவரது கதைகளை கிண்டிலில் பதிப்பித்து இலவமாக வழங்குவதை திருட்டு என்று சொல்வது ஏற்புடையதல்ல. நீங்களும் கு. ப. ரா. கதைகளைப் பதிப்பித்திருக்கிறீர்கள்.

அட்டைப்படம் உங்கள் பதிப்பினுடையதை நினைவூட்டும் வகையில் இருக்கிறதுதான். ஆனால், இந்தப் பதிப்பில் உள்ளது உங்கள் பதிப்பில் உள்ள அதே ஓவியத்தைத் திருடிக்கொண்டது அல்ல. முகப்பில் எழுத்துரு ஒற்றுமை உள்ளது. இப்படி ஒரே பாணியிலான எழுத்துரு கொண்ட முகப்புடன் வந்த வெவ்வேறு நூல்கள் ஏராளம். அது எப்படித் திருட்டாகும்? உங்கள் பதிப்பின் முகப்பைப்போல இருப்பதால் இந்தப் பதிப்பின் முகப்பு மாற்றப்படுவதை நீங்கள் விரும்பியிருந்தால் அதனைச் செய்திருக்கலாம். அட்டை ‘உட்பட’ என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். வேறு எதைச் சொல்லவருகிறீர்கள்?

உங்கள் பதிப்பில் உள்ள பதிப்புரையோ ஆய்வுரையோ இந்தப் பதிப்பில் இல்லை. கதை அமைப்பு காலவரிசையில் உங்கள் பதிப்பில் உள்ளதைப் போல இருக்கிறது. யார் காலவரிசைப்படுத்தினாலும் ஒரே வரிசை அமையக்கூடும். அது எப்படித் திருட்டாகிறது? இந்தப் பதிப்புக்கு வேறு சில நூல்களுடன் உங்கள் பதிப்பும் உதவியிருக்கிறது. அதற்காக நூலில் நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் பதிப்பில் நீங்கள் தவறவிட்டவை சிலவும் இந்தப் பதிப்பில் அடங்கியிருக்கின்றன. உங்கள் பதிப்பும் முந்தைய பதிப்பாசிரியர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளாமலே உருவான பதிப்பு அல்ல. அதனால் உங்கள் பதிப்பும் முந்திய பதிப்புகளிலிருந்து திருட்டப்பட்டது என்று சொல்லிவிடலாமா? உணர்ச்சிவயப்பட்டு ‘ஐயோ வென்று போக!’ என்கிறீர்கள்.

நாட்டுடைமையான கு. ப. ரா. சிறுகதைகளைப் பதிப்பித்தது ‘திருட்டு’ என்று அவதூறு பரப்பினார் ‘பதிப்புணர்வு மிக்க’ எழுத்தாளர் ஒருவர். இப்போது அமேசானுக்கு புகார் கொடுத்து கணக்கையும் முடக்கிவிட்டார்கள்.

ஏற்கெனவே நாட்டுடைமையான க. நா. சு. படைப்புகளுக்கு உரிமை கோரி கணக்கை முடக்கினார்கள். அதே கதை தொடர்கிறது. இந்த கு. ப. ரா. கதைகள் தொகுப்பு நண்பரின் கணக்கிலிருந்து பதிவேற்றப்பட்டது. பாவம், எனக்கு உதவப்போய் அவரது கணக்கில் இருந்த மற்ற நூல்களும் சேர்த்து அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன. நாட்டுடைமையான எழுத்துகளை மின்னூலாக்கி இலவசமாக விநியோகித்ததெல்லாம் இப்படி திருட்டுப்பட்டம் கட்டிக்கொள்ளத்தான். [அழிசி ஸ்ரீனிவாசன் குறிப்பு]

*

 

இதிலுள்ள சங்கடமான சில விஷயங்களை முதலில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அழிசி ஸ்ரீனிவாசன் தமிழில் வழக்கொழிந்துபோன நூல்களை தேடித்தேடி இணையத்தில் பதிப்பிப்பவர். அது நிறுவனங்கள் செய்யவேண்டிய பெரும்பணி. அதை தனிமனிதனாகவே செய்கிறார். அந்நூல்கள் பெரும்பாலும் இலவசமாகவே வெளியிடப்படுகின்றன. அமேசான் நூல்களுக்கு இலவச விலையை ஒப்புவதில்லை. ஆகவே மிகக்குறைந்தபட்ச விலையாகிய ஐம்பது ரூபாய் பலசமயம் அந்நூல்களுக்கு வைக்கப்படுகிறது. அந்தத் தொகையும்கூட சம்பந்தப்பட்டவர்களின் வாரிசுகள் உயிருடனிருந்தால் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.இந்தப்பெரும்பணிக்காக அவருக்கு முகம் விருது வழங்கப்பட்டுள்ளது.

நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்பாளிகளின் படைப்புகளையும் அழிசி ஸ்ரீனிவாசன் வெளியிடுகிறார். நாட்டுடைமை என்றால் என்ன? ஓர் ஆசிரியரின் படைப்புக்கள் அவர்களின் வாரிசுகளுக்கு முழு உரிமைத்தொகையும் முன்னரே அளித்து அவர்களின் படைப்புகளை மக்களின் உரிமையாக ஆக்குவது. அவர்கள் அதை எவ்வகையிலும் வெளியிடலாம். வாரிசுகளோ பிறரோ அதற்கு உரிமை கொண்டாட முடியாது. அவ்வண்ணம் முன்னர் நாட்டுடைமை ஆக்கப்பட்ட க.நா.சுவின் படைப்புகளை அழிசி ஸ்ரீனிவாசன் வெளியிட்டபோது எவரோ ஒருவர் அமேசானுக்கு எழுதி அந்தக் கணக்கையே மூடிவிட்டார். அக்கணக்கில் அழிசி ஸ்ரீனிவாசன் வலையேற்றம் செய்திருந்த மொத்த நூல்களும் காணாமலாயின. நூல்வேட்டை

இப்போது நாட்டுடைமை ஆக்கப்பட்ட கு.ப.ராஜகோபாலனின் கதைகளை அழிசி ஸ்ரீனிவாசன் வலையேற்றம் செய்திருக்கிறார். இலவசநூலாக சிலநாட்களும் பின்னர் மிகக்குறைந்த விலையில் மீண்டும் அந்நூல் கிடைத்தது. அதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் பெருமாள் முருகன் அமேசானுக்கு எழுதி அக்கணக்கையும் முடக்கியிருக்கிறார். அக்கணக்கில் வலையேற்றம் செய்யப்பட்டிருந்த அத்தனை கிடைத்தற்கரிய நூல்களும் மறைந்துவிட்டன. சட்டப்பூசல்களை அமேசான் கண்காணிப்பதில்லை. ஆகவே அவை நாட்டுடைமையாக்கப்பட்டவை, எவருக்கும் சட்டபூர்வ உரிமை அற்றவை என்றெல்லாம் வாதிட வாய்ப்பே அளிப்பதில்லை.

பெருமாள் முருகன் செய்திருப்பது கீழ்த்தரமான செயல்பாடு. அறிவியக்கம் பற்றியோ, இலக்கியம் பற்றியோ எந்த ஆர்வமும் இல்லாத வெறும் எழுத்து வியாபாரியின் செயல். அக்கணக்கில் வந்திருந்த அரிய நூல்களை வெறுமே பார்த்திருந்தாலே அது எத்தனை பெரிய பணி என்பது புரிந்திருக்கும். ஆனால் அதற்கு இலக்கிய அறிவியக்கத்தில் அக்கறையோ பழக்கமோ வேண்டும். இங்கே, அழிசி ஸ்ரீனிவாசன் பெயரே பெருமாள் முருகனுக்கு தெரியவில்லை. அவரை திருட்டுப்பட்டம் கட்டி அவமதிக்கிறார்.

இலக்கியத்தை ஓர் அறிவுச்செயல்பாடாகப் பார்க்கும் தரப்புக்கும் இலக்கியத்தை விற்றுமுதல்- லாபம் மட்டுமாகப் பார்க்கும் பார்வைக்குமான முரண்பாடு இது. வாழ்க்கையை இலக்கியச்செயல்பாட்டுக்காக அளிக்க அழிசி ஸ்ரீனிவாசனுக்கு இருக்கும் தீவிரம் இலக்கியம் மீதான பற்று. பெருமாள் முருகனுக்கு அதன் ஒவ்வொரு சொல்லும் காசு. அது பேராசிரியர்களின் மனநிலை. சென்ற பல ஆண்டுகளாக பல்கலை மானியக்குழுவும் பிற அமைப்புகளும் கல்வித்துறை ஆய்வுகளுக்கு காசை அள்ளி வீசுகின்றன. அவற்றை பெறுவதற்காகப் பேராசிரியர்கள் போட்டியிடுகிறார்கள். அவற்றை பெற்று எழுதப்பட்ட நல்ல ஆய்வேடுகள் அரிதினும் அரிது. ஆனாலும் அவையெல்லாம் நூலாகிவிடுகின்றன. அந்த நூல்களை தவறாமல் அத்தனை கல்விநிலையங்களும் வாங்கும்படி அவர்களே செய்துகொள்கிறார்கள். நூலகங்களை நிரப்பி பதிப்புப்பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

இலக்கியத்தின்பொருட்டு மைய, மாநில அரசுகள் செலவிடும் மொத்தப்பணமும் பேராசிரியர்களுக்குச் சென்றுவிடுகிறது. இலக்கியம் முழுக்கமுழுக்க வாசகர்களின் நன்கொடையில், என்னைப்போன்றவர்களின் கைப்பணத்தில் நிகழும் செயல்பாடுதான் இங்கே. ஆனாலும் பேராசிரியர்களின் பணப்பித்து மேலும் மேலுமென வளர்கிறது. அது எப்போதும் அப்படித்தான். பணத்தை பார்த்துவிட்டால் அதன்பின் அது மட்டுமே கண்ணுக்குத்தெரிகிறது. பெருமாள் முருகனுடையது பணம் தின்று பசிகொண்ட பேராசிரியரின் பார்வை. அதற்கு இங்கே அறிவியக்கம் என ஒன்று உண்டு என்பதே கண்ணுக்குப் படாது.

இதன் சட்ட, நியாய விஷயங்களுக்கு வருகிறேன். பெருமாள் முருகன் கு.ப.ராவின் சில பழைய கதைகளை கண்டுபிடித்திருக்கிறார் என்று கொள்வோம். அது எப்படி பெருமாள் முருகனின் சொத்து ஆகும்? இனி எஞ்சிய காலமெல்லாம் அந்தக் கதைகளை பெருமாள் முருகனும் அவருடைய வாரிசுகளும் உரிமை கொண்டாடுவார்களா என்ன? என்ன அபத்தம் இது. அத்தனை படைப்பாளிகளுக்கும் அவ்வாறு புதிய கதைகள் கண்டடையப்படுகின்றன. அவையெல்லாம் கண்டடைந்தவர்களின் சொத்தா என்ன? நாளைக்கு என் கதையை எவரேனும் விகடனில் கண்டுபிடித்து என்னிடமே அவற்றுக்கு உரிமைகொண்டாட ஆரம்பிப்பார்களா?

புதுமைப்பித்தனின் அறியப்படாத கதைகளை வெவ்வேறு இதழ்களில் தேடி கண்டடைந்து அட்டவணையிட்டவர் வேத.சகாயகுமார். புதுமைப்பித்தன் புனைபெயர்களில் எழுதிய கதைகளை கண்டடைந்து அவை அவரால் எழுதப்பட்டவை என ஆதாரபூர்வமாக நிறுவியவர். ஆனால் அக்கதைகளை அப்படியே காலச்சுவடு செம்பதிப்பு நூலாக வெளியிட்டது. அக்கதைகளை தாங்களும் சொந்தமாக மீண்டும் ‘கண்டுபிடித்ததாக’ அதன் தொகுப்பாளர் சொன்னார். அதை ஆதரித்து நின்றவர் பெருமாள் முருகன். அன்று அந்த அநீதிக்கு எதிராகச் சொல்புதிது இதழ் கட்டுரைகள் வெளியிட்டது.

கு.பரா கதைகளை இன்று ஓர் ஆய்வாளர் பிழைநோக்கி, மூலத்துடன் ஒப்பிட்டு, செம்மை செய்து ஒரு பதிப்பு கொண்டுவருகிறார் என்று கொள்வோம். பிற பதிப்பாளர்கள் அந்த பதிப்புக்கு முந்தைய செம்மைசெய்யப்படாத பதிப்பையே வெளியிடவேண்டுமா என்ன? அதைப்போல அசட்டுத்தனமான அறிவியக்க எதிர்ப்புச் செயல்பாடு உண்டா என்ன? அடுத்த பதிப்புகள் அதுவரை செய்யப்பட்ட செம்மையாக்கத்தை உள்வாங்கி, மேலும் செம்மை செய்யப்பட்டே வெளிவரும். அடுத்தடுத்து செம்மையாக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

இன்றைக்கு குறுந்தொகையை பதிப்பிப்பவர் உ.வெ.சாவை ஆதாரமாகக்கொண்டு மேலும் செம்மைசெய்து வெளியிடலாமே ஒழிய  அந்த பதிப்பு உவெசாவின் சொத்து என்று எடுத்துக் கொண்டு, அவருடைய பதிப்புக்கு முந்தைய  ஏட்டுச்சுவடியில் இருந்து தொடங்க முடியாது. உவேசாவின் வாரிசுகள் வந்து உவேசா செய்த பிழைதிருத்தங்கள் காரணமாக அந்தப்பதிப்பு அவர்களின் சொத்து என்றும் சொல்லமுடியாது. இங்குள்ள அத்தனை நூல்களும் மேலும் மேலும் முழுமை செய்யப்பட்டவையே. உலகம் முழுக்க அதுவே நடைமுறை. அதுதான் பதிப்பக அறம். அறிவியக்கத்தை தொடர்ந்து மேம்படுத்துவதே அதன் இலக்கு. அன்றி, சிலர் சில்லறை தேற்றுவதன் அடிப்படையில் அந்த அறம் அமைந்திருக்கவில்லை.மேற்கொண்டு ஆய்வுசெய்பவர்கள் தன் ஆய்வை பயன்படுத்திக்கொள்ளக்கூடாது, அது தன் சொத்து, தனக்கு முன்பிருந்த ஆய்வுகளையே ஒருவர் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்பவர் ஒரு கல்வியாளர் என்பதைப்போல வெட்கச்செய்வது வேறில்லை.

அவ்வண்ணம் மேலும் பதிப்புகள் வரும்போது அந்நூலின் பதிப்புவரலாற்றில் செம்மையாக்கம் செய்தவரின் பெயர் விடுபட்டிருக்கும் என்றால் அது பெரும்பிழை. அவருடைய உழைப்பு மறுக்கப்படுகிறது.ஆனால் புதுமைப்பித்தன் கதைகளுக்குச் செம்பதிப்பு வந்தபோது வேத சகாய குமாரின் பெயர் குதற்கமாகச் சொல்லப்பட்டதே ஒழிய அவருடைய பங்களிப்பு பதிவுசெய்யப்படவில்லை. [அவர் சில பிழைகள் செய்தவர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டார்.] புதுமைப்பித்தன் கதைகளின் ஆய்வு வரலாற்றைச் சொல்லும்போது வேதசகாயகுமார் பெயர் விடப்படலாகாது. ஆனால் அக்கதைகள் மேல் வேதசகாயகுமாருக்கோ அவருடைய வாரிசுகளுக்கோ எந்த உரிமையும் இல்லை.

கு.ப.ரா கதைகள் பற்றி பெருமாள் முருகன் ஆய்வுக்குறிப்புகள் எழுதியிருந்தால், பதிப்புரை எழுதியிருந்தால் அது அவருடைய சொத்து. அதை அவரை குறிப்பிடாமல் இன்னொருவர் எடுத்தாண்டிருந்தால் அது பிழையானது. ஆனால் கு.ப.ரா பற்றிய தரவுகள் பெருமாள் முருகனால்  கண்டடையப்பட்டிருந்தால் அவற்றை பொதுவான அறிவுத்தளத்திற்கு உரியவையாகவே கருதவேண்டும். அவற்றை பெருமாள் முருகனின் சொத்துக்களாக கருதமுடியாது. அவற்றைப் பயன்படுத்தும்போது ஒவ்வொரு முறையும் அவர் பெயரைச் சொல்லவும் தேவையில்லை.

கு.ப.ரா பற்றிய பெருமாள் முருகனின் நூலே அறுதியாக வெளிவந்த பிழைநீக்கம் செய்யப்பட்ட படைப்பு என்றால் அதிலுள்ள அத்தனை கதைகளையும் மேலும் செம்மை செய்து பதிப்பிக்க அனைவருக்கும் சட்டரீதியான உரிமை உண்டு. எந்த வகையிலும் அதை பெருமாள் முருகன் உரிமைகோரவோ தடைசெய்யவோ முடியாது. அமேசானின் கவனமின்மையை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இங்கே ஒட்டுமொத்த இலக்கிய இயக்கம் மீதும் தாக்குதல் தொடுத்திருக்கிறார் பெருமாள் முருகன்.

கு.ப.ரா மேல் குறைந்த பட்ச ஈடுபாடு கொண்டிருக்கும் ஒருவர் என்றால் இவ்வண்ணம் அவர் ஆக்கங்கள் பரவலாகச் சென்று சேர்வது பற்றி மகிழ்வே அடைந்திருப்பார். நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுவதே இதற்காகத்தான். தன் பதிப்பை உள்வாங்கி மேலும் செம்மையான பதிப்புகள் வரவேண்டியதுண்டு என்றே எண்ணியிருப்பார். அதுவே இங்கே இலக்கிய இயக்கம் ஒன்று நிகழவேண்டும் என்று எண்ணுபவர்களின் இயல்பு.

பெருமாள் முருகனின் அறச்சீற்றம் எல்லாம் இத்தகைய சிற்றிதழாளர்களிடையே  மட்டுமே. காலச்சுவடு போன்ற நிறுவனங்கள் எழுத்தாளர்கள் மேல் போடும் பதிப்புரிமை ஒப்பந்தங்களை அவர் நன்கறிவார். அனைத்துக்கும் தலைவணங்கி நிற்பவர் அவர். காலச்சுவடு ஓர் ஆசிரியரின் நூல்களை வெளியிட்டால் அந்நூலின் எந்த மொழியாக்கத்திலும் பாதிப்பங்கு பதிப்புரிமையை தான் எடுத்துக்கொள்கிறது. எவர் மொழியாக்கம் செய்து செய்து எங்கு எவர் வெளியிட்டாலும். அந்த ஆசிரியரே ஏற்பாடு செய்து வெளியிட்டாலும் விசாரித்து, அந்த மாற்று மொழி பதிப்பகத்துக்கு எழுதி, பதிப்புரிமையை தான் வாங்கி பாதியை ஆசிரியருக்கு அளிக்கிறது. சொ.தர்மன் நூல் சார்ந்து உருவான சர்ச்சையை பதிவுசெய்திருக்கிறேன். அங்கெல்லாம் எந்த அறச்சோர்வும் இவருக்கு இல்லை.எழுத்தாளனின் ரயிலடி

ஒருவகையில் விந்தையாகவே இருக்கிறது. தமிழில் சொந்தப்பணத்தைப் போட்டு சிற்றிதழ் நடத்துகிறார்கள், இலக்கியக்கூடுகைகள் நடத்துகிறார்கள். அழிசி ஸ்ரீனிவாசனே அவ்வண்ணம் தேவதேவனுக்காகவும் பிறருக்காகவும் பல நிகழ்வுகளை நடத்தியிருக்கிறார். எவருக்கும் இது ஒரு வருமானம் வரும் தொழில் மட்டுமே என்று தோன்றவில்லை. மறுபக்கம் இவரைப்போன்ற பேராசிரியர்கள் ஒவ்வொரு பைசாவையும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். சிந்திய பருக்கைகளைக்கூட ஊசியால் குத்தி எடுத்து கழுவி சாப்பிடும் கருமிகளைப்போல இருக்கிறார்கள்.

இருவகையிலும் இங்கே இலக்கியம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. வருந்தலைமுறையினர் இதை உணர இந்தக்கட்டுரை ஆவணமாக இங்கே இருக்கவேண்டும்

நூல்வேட்டை

முகம் விருது விழா

ஸ்ரீனிவாச கோபாலன் – கடிதங்கள்

ஸ்ரீநிவாச கோபாலன் – பேட்டி

அழிசியின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா

முகம் விருது,ஸ்ரீனிவாச கோபாலனுக்கு

சோ.தர்மன், காலச்சுவடு

எழுத்தாளனின் ரயிலடி

முந்தைய கட்டுரைஎத்திசை செலினும்- சாம்ராஜ்
அடுத்த கட்டுரைஅதிமதுரம்