நூல்கள் வாங்க
https://www.vishnupurampublications.com/
உச்சவழு வாங்க
அன்புள்ள ஜெ
உச்சவழு கதையை நான் சமீபத்தில் படித்தேன். அழகான கெட்டி அட்டைபோட்ட சிறிய புத்தகம். அந்தக்கதை அளித்த ஒரு பெரிய கொந்தளிப்பை என்னால் சொல்ல முடியாது. நான் அதே டாப்ஸ்லிப்புக்கு 2010ல் சென்றிருக்கிறேன். அதே நோக்கத்துடன். உயிர்வாழவேண்டியதில்லை என்று முடிவெடுத்து போனேன். அங்கே அதற்கான இடம் தேடிச் சென்றேன். ஏன் அங்கே சென்றென் என்று தெரியாது. அன்று ஒரு மோசமான பிரிவு. ஒரு கைவிடப்படுதல். அல்லது துரோகம். என்னவேண்டுமென்றாலும் சொல்லலாம். அப்படியே உடைந்துபோய்விட்டேன். ஆகவே சாக முடிவெடுத்தேன்.
ஆனால் சாகவில்லை. ஏன் சாகவில்லை என்றால் வேறு காரணம் ஒன்றுமில்லை. அந்த கடைசிப்புள்ளியில் ஒரு கணத்தில் வேண்டாம் என்று தோன்றிவிட்டது. அந்த கடைசிநிமிட நழுவுதல்தான் என்னுடைய இதுவரையிலான வாழ்க்கையாக நீண்டுள்ளது. இன்றைக்கு அதெல்லாம் பழைய கதைகள். இன்றைக்கு அதை அவ்வப்போது வேடிக்கையாக நினைத்துக்கொள்வதுடன் சரி. ஆனால் அன்றைக்கு ஏன் அந்த நழுவுதல் நடந்தது என்று நினைத்துக்கொண்டே இருப்பேன். அது ஒரு தெய்வ ஆணை என தோன்றும். அல்லது சாதாரண உயிராசை.
ஆனால் அந்த ஊரின் பெயரிலேயே அந்த ஸ்லிப் இருப்பதை இந்தக்கதையை வாசிக்கும்போதுதான் உணர்ந்தேன். அந்த ஊரின் பெயரை சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறேன். ஆகவேதான் அந்த ஊர் என்னை காப்பாற்றியிருக்கிறது. இன்றைக்கு உச்சவழு வாசிக்கும்போதும் அவனை காப்பாற்றியது அந்த ஊரின் பெயர்தான் என நினைக்கிறேன். அற்புதமான பெயர். டாப் ஸ்லிப். உச்சவழு. அழகான கதை. ஒன்றுமே சொல்லாமல் என்னென்னவோ சொல்லிச்செல்லும் கதை.
கதையில் அவனை யானை கொல்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். எனக்கு அப்படி தோன்றவில்லை. அது மீட்பு என்றும், அந்த யானையை பார்த்தபின் அவன் மீண்டு வருகிறான் என்றும்தான் நினைக்கிறேன். அவன் காட்டின் தெய்வத்தைத் தரிசனம்கொண்டுவிட்டான். வாழ்க்கையின் பொருளை அறிந்து தெளிவடைந்துவிட்டான். நான் அன்றைக்கு இரவில் கண்டது காட்டின் அடர்ந்த இருட்டை. அதுதான் அந்த யானை.
ஆர்.