அன்புநிறை ஜெ,
இன்று கிடைத்த சிறு வெளிச்சத்தில் ராதா மாதவத்தை கேட்டுக் கொண்டும், அந்த சிறு குறிப்புகளை வாசித்தும், அதில் இன்று முழுதும் இருந்தேன். மீண்டும் ஒரு மதுரமான அனுபவம். தொகுத்துக் கொள்வதற்காக வரைந்து கொண்ட சிறு குறிப்பு:
“ராதாமாதவம்” பிருந்தாவனத்தின் அழகையும் அங்கு கோபியர்களுடனான லீலையையும் சொல்லித் தொடங்குகிறது. அத்தனை கோபியரும் அவனை நேசிக்கும் அளவிலா பக்தி கொண்டவர்களாக இருப்பினும் ராதை மட்டுமே பரமாத்மாவாகிய அவனைப் பற்றிப் படர்ந்து உறுதியாக தழுவிக் கொள்கிறாள். ராதையின் கிருஷ்ணப் பிரேமையைக் கொண்டும் அவனோடு அவள் ஒன்று சேரும் அனுபவத்தை விவரித்தும் ஆன்மாவின் பயணத்தைச் சொல்கிறது ராதாமாதவம்.
ராதையின் கிருஷ்ணானுபவம் – சில பகுதிகள்:
“ராதையின் நெஞ்சம் குறும்பு நிறைந்த பாலகோபாலனின் அழகிய தாமரை விழிகள் மலர்ந்த முகத்தைக் கண்டு தானும் மலர்வு கொள்கிறது. அவளுடைய அழகான வடிவம், ஒரு மென்மையான தாமரைத் தண்டென வெட்கத்துடன் அவன் அருகில் வருகிறது. இனிமையான தெய்வீகமான உணர்வுகளுடன் உருகுகிறது. அவள் இதயம் பற்றி எரிகிறது, அதே நேரத்தில் அன்பின் அமுதமாகிய குளிர்ச்சியை அனுபவிக்கிறது.
மெல்லிய தென்றல் கங்கேலி மலரின் நறுமணத்தை சுமந்து செல்கிறது. அது வெட்கத்துடன் நடுங்கும் அழகிய மலர் மொட்டைத் தொட்டு எழுப்புகிறது. சின்மயனாகிய நீலன் அந்த மொட்டைத் தழுவி, இயற்கையின் இனிமையை விவரித்து, நிலவொளி நிறைந்த தோட்டத்தில் ராதையைத் தன்னிடம் அருகிழுத்து, எல்லா துக்கங்களையும் நீக்குகிறான்.
மென்மையான ராதையின் இதயம், காளிந்தி நதியின் மணல் கரையில் அவனது விளையாடல்களில் சுத்திகரிக்கப்படுகிறது; எல்லையற்ற பக்தியின் பரிபூரணமான அந்த விருந்தாவன-கிரீடையில் நிகழ்வதைப் போல ஆத்மாவில் வேறு எங்கும் அமைதியையும் பரிபூரண இணைவையும் காண முடியாது.”
ராதா-மாதவ லீலை மாயையில் இருப்போருக்கு காமத்தின் வெளிப்பாடாக மட்டுமே தெரிகிறது. இருமை நிலைக்கு அப்பாற்பட்ட ஞானியரே அதை ஆன்மாவில் மனம் ஒன்றுபடும் லீலை என்று உணர்கிறார்கள்.
ராதையிடமும் ஒரு அகங்காரம் முளைவிடுகிறது. அதற்கு மருந்தென அவனுடனான பிரிவை அவளுக்கு அளிக்கிறான். “அகந்தை என்னும் நோய் நீக்கி அன்பின் இனிமையும், பிரேமையின் ஆவேசமும் மேலும் வளர்வதற்கான மருந்தாகும் பிரிவு” என்கிறார். அதன் பிறகு ராதை துக்கத்தால் எரிந்து புலம்புகிறாள்.
ராதையின் கண்ணீர் துளிகள் சில:
“நீயே துணை என்று நம்பி, உருகும் இதயத்துடன், கண்ணீருடன் தங்கள் வாழ்க்கையைக் கழிப்பவர்களின் தேவைகளை அறிய இரவும் பகலும் தேடி, இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் தருகிறாய். அப்படியிருக்க, ஐயோ, என்னை மட்டும் ஏன் பிரிவென்னும் தீயில் எரிக்கிறாய். உன் தாசி, இந்த பிரிவெனும் நெருப்பில் சாம்பலாக வேண்டுமா?”
“ஓ கிருஷ்ணா, காயாம்பூ போன்ற நீலவண்ணனே! நீயே எனக்கு ஒரே துணை, என்னுள் இணைந்திருக்கிறாய், மாயையால் மட்டுமே நீ மனிதனாகத் தோன்றுகிறாய்; நீ பற்றற்றவனாக இருந்தாலும், பெண்ணென நான் நிலையாக இருப்பது கடினம் என்று தெரிந்தும் என்னை நீ ஏன் இப்படி விட்டுவிட்டாய்?”
“ஒளி இல்லாத விளக்கு போல, உடல் உடைந்த சங்கு போல, தயையின் மென்மை இல்லாத இதயம் போல, மலர்கள் இல்லாத தோட்டம் போல, சபிக்கப்பட்டவள் போல, கண்கள் இல்லாத முகம் போல! ஐயோ! ஓ கோபியர்களின் விருப்பத்துக்குரியவனே! ராதையாகிய நான் இந்த உலகில் எந்த ஆதாரத்தையும் காணவில்லை.”
பிருந்தாவனத்தின் கிளிகள், பசுக்கள், மான்கள், குயில், மந்தார மரம், மாமரம், தென்றல், வண்டுகள் என்று ஒவ்வொன்றிடமும் கண்ணனைக் கண்டாயா என்று அரற்றுகிறாள். அவனோடு அவை கொண்டிருந்த இனிய காலத்தை நினைவுறுத்தி இன்றைய பிரிவைத் தாளாது ஏங்குகிறாள்.
பின் அவையாவும் கண்ணென அறியும் மாற்றம் வருகிறது. தன்னிலும் அவனை உணர்கிறாள். அகத்தே அவன் இருக்க புறத்தே அவனைத் தேடியலைந்த பொருளின்மையை உணர்கிறாள். அவனை உள்ளுணர்ந்த பிறகு அவனோடு ஐக்கியமாகிறாள். உடலின் புலன்கள் ஒவ்வொன்றாக அவனை உணர்ந்து அவனாகி அடங்குகிறது. உடல் தளர்ந்து ஆன்மா பரமாத்மனுடன் இணைகிறது.
ராதாமாதவம் ஒரு வனத்தை உள்ளடக்கிய மிகச் செறிவான விதை. இனி இந்த இசை கேட்கும் போதெல்லாம் இது துளித்துளியாக மனதுள் வளரும். கேளாத போதும் கனவென்று நிறையும். மகத்தான கரங்கள் தொட மாபெரும் கலைவடிவாக இலக்கியமாக மலரும். ஆன்மத்தேடலில் தங்களையே முற்றளித்து அடையும், அரிய ஆன்மீக அனுபவங்களை இவ்விதம் கலைகளின் வழி, தங்கள் சொற்களின் வழி, காலம் பல கடந்து அவர்களைத் தேடி வருவோருக்கு கையளித்துச் செல்லும் ஞானியரின், ஆசிரியர்களின் கருணையை நம்பியே அறியா வழிகளில் காலடிகள் பதிகின்றன.
ஆத்மானந்தர் பாதம் பணிந்து இந்த இசைப்பாடலில் எனை கரைத்துக் கொள்கிறேன்.
மிக்க அன்புடன்,
சுபஸ்ரீ