ராதாமாதவம்- சுபஸ்ரீ

அன்புநிறை ஜெ,

ஆத்மானந்தர் குறித்து தங்கள் பதிவு வழியாகத்தான் முதன்முறை அறிந்தேன்.

சிலநாட்கள் முன்னர் நீலம் ஒலிப்பதிவுக்காக மீள்வாசிப்பு செய்தபோது,  முன்னுரையில் தாங்கள் ஆத்மானந்தர் குறித்து “பழுத்த வேதாந்தியான அவர் திடீரென்று ராதாமாதவ உபாசனைக்குள் சென்று ராதையாகவே சில வருடங்கள் வாழ்ந்தார். அப்போது அவர் எழுதிய ராதாமாதவம் என்னும் இசைப்பாடல்கள் மிகவும் பிரபலமானவை.” என்று எழுதிய வரிகள், அந்த “ராதாமாதவம்” பாடல்களை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. அதன் வழி அவரை மேலும் சற்று அணுகி அறிய முடியாதா, அவர் வாழ்ந்த அந்த மனநிலையில்  மேலும் திளைத்திருக்க முடியாதா என்றிருந்தது.

ராதாமாதவம் மலையாள வரிகள் கிடைத்தால் கூட மொழிபெயர்த்துக் கொள்ளலாம் என்றெண்ணி அவ்வப்போது இணையத்தில் தேடிக் கொண்டே இருந்தேன்.  எம் எஸ் சுப்புலக்ஷ்மி பாடியது கிடைக்கிறது. அதைக் கேட்டுப் பொருள் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன். இது அதிகமும் வடமொழி கலந்த மலையாளம்தான் என்றாலும் அவரது உச்சரிப்பில் மலையாள சொற்களும் கூட மிகவும் சமஸ்கிருதமாக காதுகளில் ஒலிக்கிறது. மலையாளத்தில் பிற பாடகர்கள் பாடியது எனக்கு கிட்டவில்லை. [“രാധാമാധവം+ആത്മാനന്ദ+കൃഷ്ണ+മേനോൻ” என்று விதவிதமாக உள்ளிட்டு தேடியதில் “ശ്രീ വിജയാനന്ദാശ്രമം, ആറന്മുള” என்ற ஒரு சேனல் மட்டும் கிடைத்தது.]

தங்கள் “அழகிலமைதல்” பதிவை வாசித்ததும் மீண்டும் ராதாமாதவம் வந்து எண்ணத்தை நிறைத்துக் கொண்டது. ஆத்மானந்தர் சிறிதுகாலம் ராதையாகவே புடவை கட்டி கிருஷ்ணபக்தியில் திளைத்தார் என்ற வரி. என்ன ஒரு தீவிரமான ஆட்கொள்ளப்பட்ட மனநிலை அது! தங்களுடைய புறப்பாடு கட்டுரைத் தொகுப்பில் “மதுரம்” கட்டுரையில் அந்த ராதே ஷியாம் மனநிலையின் ஒரு கீற்று வரும். விரஜர்கள் என்னும் ராதிகாவைஷ்ணவிகள். ஆறுமாதம் வேலை செய்து குடும்பத்திடம் அளித்து விட்டு ஆறு மாதம் ராதை என இருப்பவர்கள். நீலனைத் தேடிச் சென்று கொண்டே இருப்பவர்கள். பெண்ணாகி அவனை அறிவதன் பேரின்பத்தில் திளைப்பவர்கள்.

இவ்வுடல் தரும்  எல்லை கடந்து அவனை அறியும் பெரும்பித்தில் இருப்பவர்களைக் காணும்போது , பெண் என்று பிறவியமைந்து, கனிவதன் மூலமே கடப்பதன் கலையையை பிறப்பிலேயே பெற்று விடுவது எவ்வளவு பெரிய பேறு என்று புரிகிறது.  “பிரம்மன் படைத்தவற்றில் யுகங்களுக்கு ஒரு கனி மட்டுமே விண்ணை நோக்கி உதிர்கிறது” – நீலத்தின் வரி. இங்கு தளையிட முற்படும் புவியின் விசைகளில் இருந்து விடுவித்து, இவை அனைத்திலும் நிறைந்திருக்கும் அந்த வேய்குழல் ஓசை என்றேனும் எனை விண்ணோக்கி விடுவிக்கட்டும்.

ராதாமாதவம் குறித்த தேடலை மீண்டும் துவக்கினேன். அது குறித்து ஓரிரு வரிகள் மட்டுமே மீண்டும் மீண்டும் இணையத்தில் காணப்படுகிறது.  openlibrary, worldcat போன்ற புத்தகங்களை வகைபிரித்துத் தொகுக்கும் தளங்களில் தேடியதில்  “ராதாமாதவம்” வாஷிங்டன் நூலகத்தில் ஒரு பிரதி இருப்பதாக காட்டுகிறது.  இன்று பழைய புத்தகங்கள் விற்பனை செய்யும் தளத்தில் 378 US$ விலையில் “ராதாமாதவம்” புத்தகத்தைப் பார்த்தேன்!!! அதுவும் அர்ஜென்டினா-வில் இருந்து விற்பனைக்கு உள்ளது, spiral bound புத்தகம். அவர் சில காலம் தன் மாணவர்களுடன் அர்ஜென்டினாவுக்கும்  சென்றிருக்கிறார் எனத் தாங்கள் எழுதியது நினைவில் வந்தது. வேறு பதிப்புகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.

இன்று எம் எஸ் பாடிய LP இசைத்தட்டுடன் அச்சிடப்பட்ட சிறிய ஆங்கில மொழிபெயர்ப்பு கிடைத்தது,(இணைத்திருக்கிறேன்). அதுவும் முழுமையாக இல்லை என்றாலும் இந்தத் தேடலில் ஒரு சிறு வெளிச்சம். அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம்.

மிக்க அன்புடன்,
சுபஸ்ரீ

பின்குறிப்பு:

ஆத்மானந்தருடைய “Notes on Spiritual Discourses of Shri Atmananda Vol 1-3” புத்தகம் கிடைக்கிறது. அது குறித்து சில உரைகள் இணையத்தில் இலவசமாகவே இருக்கின்றன.
https://www.advaita.org.uk/discourses/atmananda/atmananda.htm

archive.org-ல் அவருடைய ஆத்ம நிவ்ரிதி-ஆத்மதர்ஷன் புத்தகம் முன்னர் இருந்து இப்போது நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதிலும் ராதாமாதவம் இல்லை.

முந்தைய கட்டுரை”ஆயன சிறுநவ்வு” – கடிதம்
அடுத்த கட்டுரைதொற்றிலக்கியவாதிகள் என்னும் இனம்