கல்குருத்தை வாசித்தல்

கல்குருத்து- சிறுகதை

அன்புள்ள ஆசிரியருக்கு,

‘கல்குருத்து’  கதையை  வாசித்து  முடித்ததிலிருந்து அதைப்  பற்றி  எழுத  வேண்டும்  என்று  தோன்றிக்  கொண்டு இருந்தது.  அதற்காக  வரும்  வாசகர்  கடிதங்களையெல்லாம்  வாசித்துக்  கொண்டேயிருந்தேன்.  கதையின்  பல  நுட்பங்களை  முன்வைத்தபடி ஏதோ  ஒரு  தனிப்பார்வை  வரப்போகிறது  என்றும்  எதிர்பார்த்துக்  கொண்டிருந்தேன்.  இந்தக்  கதை  ஏன்  இத்தனை முறை  நினைவுகளில்  வந்து  கொண்டேயிருக்கிறது  என்றும்  யோசித்துக்  கொண்டிருக்கிறேன்.  அழியா  மனச்  சித்திரமாக,  மலைமாடனும்  மாடத்தியுமாக  இக்கதையில்  வந்து  அமர்ந்திருக்கும்  அந்தக்  கிழவனும்  கிழவியும்  தான்  இதனை இத்தனை  விசேஷமானதாக  ஆக்கியிருக்கிறார்கள்  என்று  எனக்குத் தோன்றுகிறது.

என்  தாத்தாவும்  பாட்டியும்  இப்படித்  தான்  இருந்தார்கள். அவர்களிருவரும்  மதியம்  இரண்டு  முதல்  மூன்று  நான்கு  மணி  வரை  ஒருவர்  அருகில்  ஒருவர்  அமர்ந்து  கொண்டு  இப்படித்  தான்  சம்பந்தமில்லாமல்  பேசிக்  கொள்வார்கள்.  பேச்சு  என்றால்   ஒரிரு  வார்த்தைகள்  தான் அவர்களின் பேச்சு.  ஒருவரை  பார்த்து  ஒருவர்  கூட  அமர்ந்து  கொள்ள  மாட்டர்கள்.  தாத்தா  சேரில்  அமர்ந்து  கொண்டால்,  பாட்டி  எதிர்திசையில்  கால்  நீட்டிக்  கொண்டு  வேறு  பக்கம்  பார்த்தபடி  அமர்ந்திருப்பாள்,  முட்டியை  நீவியபடி,  கடந்த  காலத்தை  அசை  போட்டபடி.  நாங்கள்  குழந்தைகள்  யாராவது  அருகில்  இருந்தால்,  தாத்தா  ஏதாவது  பழங்கதைகள்  சொல்ல  ஆரம்பிப்பார்.  பாட்டி  கேட்காதது  போலத் தான்  இருக்கும்,  ஆனால்  அவ்வப்போது  புன்னகைத்துக் கொள்வாள்,  அல்லது  உன்  தாத்தாவுக்கு  என்ன  தெரியும்  என்று  செல்லமாக  உடல்மொழியில் அலுத்துக்  கொள்வாள்.  நீட்டப்  பல்லும்  சுருங்கிய  தோலும்  கொண்ட  முகமாயினும்,  அத்தருணங்களில்  ஒரு  அழகிய  சோபை  அவள்  முகத்தில்  வந்து  அமர்ந்து  கொள்ளும்.  எனக்கு  அவள்  நொடிப்புகளையும், பின் அவளில் குடியேறும் மெல்லிய வெட்கத்தையும், அவ்வப்போது சட்டென்று ஒளிரும் அவள்  கண்களையும் பார்க்க  மிகவும்  பிடிக்கும்.  இப்பொழுது  நினைத்துப்  பார்த்தால்  தாத்தாவுக்கும்  அவை  தான்  பிடித்திருந்தன  என்று  தோன்றுகிறது.

இக்கதையில்  வரும்  மாடனுக்கும்  மாடத்திக்கும் (அவர்களை  அவ்வாறு தான்  அழைக்கப் போகிறேன்.)  இவ்வளவு  communication கூட  இல்லை,  வெளிப்படையாக. ஆனால் Subconscious level-ல்  அவர்கள்  நிரந்தரமாக  connect ஆகியிருக்கிறார்கள்.  அவளை  மொத்தமாக  அவருக்குத்  தெரியும், அவளின் பொருளில்லாச்  சொற்கள்,  உடல்  மொழி ,  சொல்லாச்  சொற்கள் என அனைத்தும். அவளுக்கும்  தான்.  அவர்கள்  உலகைப்  பற்றி  நமக்குத்  தான்  ஒன்றும்  தெரியாது.  அவர்களின்  மொழி  பறவைகளின்,  மிருகங்களின்,  எவற்றின் காதல்  மொழியை  விடவும்  நுட்பமானது.  இந்தக் கயிறு  தான்  அவர்களை  இத்தனை  வயது  வரை  இவ்வுலகில்  கட்டிப்போட்டு  வைத்திருக்கிறது.  ஒருவரை  விட்டு  பிரிந்து  செல்ல  மற்றவருக்கு  மனமேயில்லை.  அதிமதுரத்தின்  ருசி  அறிந்தவர்கள்  அவர்கள்  இருவரும்.

ஒரு  வகையில்  இதற்கு  முந்தைய  கதையான  ‘கேளாச்  சங்கீதமும்’  இது  போன்ற  ஒரு  connect-ஐயே  பேசுகிறது.  ஒரு  சொல்  இல்லை,  ஒரு  உடல்  மொழியில்லை,  வெறும்  எண்ணங்களால்  மட்டுமே  உருவாகும்,  அகம்  மட்டுமே  அறியும்  ஒரு  தொடர்பு.  அவனை  பித்து  கொள்ள  வைக்கும்  அவர்கள்  மட்டுமே  அறிந்த  அவர்களின் ஒரு  இணைப்பு.  நீலத்தின்  பிச்சி,  ராதைக்கு கண்ணனிடம் இருந்ததைப் போல. வேடிக்கை என்னவென்றால், அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று அவர்கள் நம்பும் அவ்விணைப்பை, உலகமே முதல் நொடியிலிருந்தே அறிந்து வைத்திருப்பது தான்.

இக்கதையில்  கிழவி  பேசும்  சொற்களை  மட்டும்  தொகுத்துப்  பார்த்தால்,  அழகம்மைக்கு  குழந்தை  உண்டாகியிருப்பது,  அழகம்மைக்கு  முன்னால்  கிழவிக்குத்  தெரிந்து  விட்டது  என்று  எனக்குத்  தோன்றியது. அதனால்  தான்  அவள்  கருப்பட்டி  கேட்கிறாள்  என்றும்  நினைத்துக்  கொண்டேன்.

இப்பொழுது  நினைத்துப்  பார்த்தால்  அம்மி  கொத்தும்  அப்பெண்மணிக்கும் அது தெரிந்து தான் விட்டது  எனத்  தோன்றுகிறது.  அழகம்மையை  நேரில்  பார்த்திருந்தால்  நானும்  சொல்லியிருப்பேனாயிருக்கும்:)

சொற்களை  மீறிய   சொற்களே  தேவையற்ற  ஒரு  மொழியைப்  பற்றிய  கதைகள்  இவ்விரண்டும். அந்தர்தியானமாக  ஓடிக்கொண்டிருக்கும்  அப்பெரு  நதி  தான்  எத்தனை  பிரம்மாண்டமானது.  எத்தனை  சத்தியமானது.  எத்தனை  இனியது.  எத்தனைச்  சுழல்கள்  நிறைந்தது.

அன்புடன்,

கல்பனா.

முந்தைய கட்டுரைகார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு யுவபுரஸ்கார்
அடுத்த கட்டுரைநாளை மற்றுமொரு நாளே- கிறிஸ்டி