அழிவிலாத கண்ணீர் – கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’

ன்னுடைய ‘கண்ணீரைப் பின் தொடர்தல் ‘ என்னும் நூலில் இந்திய நாவல்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பெண்களின் கடலளவு துயரையும் மலையளவு தியாகத்தையும் வெளிப்படுத்துபவையாக அவை இருப்பதை கவனித்து எழுதியிருந்தேன். இந்தியப் பெருங்காவியங்களிலிருந்தே இம்மரபு இங்கே இருக்கிறது. சீதை, கண்ணகி என… நாட்டார் காவியங்களில்கூட காவியநாயகியர் பேரூவத்துடன் எழுந்துவருகிறார்கள், உதாரணமாக என் மனதில் வருவது மலையாளக் காவியமான’ மதிலேரிக்கன்னி ‘பின்னர், இந்தியா நவீன இலக்கியம் உருவாகி வந்தபோது மீண்டும் மீண்டும் பெண்களின் கதைகளே எழுதப்பட்டன. முதல் நாவலெனக் கருதப்படும் பங்கிம் சந்திராரின் ‘துர்கேச நந்தினி’ முதல் எத்தனை கதாபாத்திரங்கள். பலவிதமான குணநலன்கள் கொண்டவர்களாயினும் தாய்மையே தனியடையாளமாகக் கொண்டவர்கள். வாழ்க்கையின் நெருப்பில் வெந்து தணிந்தவர்கள், நீறிலிருந்து முளைத்து எழுந்தவர்கள்.எண்பதுகளில் இந்திய அளவில் தலித் இலக்கியம் உருவானபோது மீண்டும் அதே நாயகியர் முற்றிலும் புதிய ஓர் அடித்தட்டு வாழ்க்கையிலிருந்து எழுந்துவருவதையே கண்டோம். களம் மாறியது கண்ணீர் மாறவில்லை. தமிழ் தலித் இலக்கியத்தில் ஆனந்தாயி [ஆனந்தாயி -சிவகாமி] மாடத்தி [ தூர்வை,- சொ.தர்மன்] ஆரோக்கியம் [கோவேறு கழுதைகள்- இமையம்] ஆகிய கதாபாத்திரங்கள் வாசக மனதில் அழுத்தமாகப் பதிந்தவை. இவ்வரிசையில் வைக்கத்தக்கதும், இவற்றில் முதன்மையானதும் என நான் எண்ணுவது கண்மணி குணசேகரன் முன்வைக்கும் அஞ்சலையின் முகம்தான்.

@@

‘அஞ்சலை’

ஒரு இயல்புவாத நாவல். ‘உள்ளது உள்ளபடி’ என்ற புனைவுத்தோற்றத்தைக் கொண்டது. எது புறவயமாக இருக்கிறதோ அதுவே புனைவில் வரும். பாவனைகளோ, கற்பனாவாத எழுச்சியோ இல்லை.ஒரு பெண்ணின் கன்னிப்பருவம் முதல் முதிர்ந்த தாய்மைநிலை வரையிலான வாழ்க்கையை இயல்பாகச் சொல்வது. நிகழ்ச்சிகளை சிக்கல்கள் இல்லாமல் வரிசையாகச் சொல்லும் அமைப்பு கொண்டது. அதிகமும் புற நிகழ்ச்சிகளை சொல்லி அக ஓட்டங்களை தேவைக்குமட்டுமே விளக்கிச் செல்லும் ஆக்கம் இது.

ஒர் இந்தியப்பெண் அவள் வாழ்க்கையில் எதிர்கொள்ள நேரும் முக்கியமான சிக்கலிலிருந்து நேரடியாக நாவல் தொடங்குகிறது. வாழ்நாள் முழுக்க அஞ்சலை எதிர்கொள்ளப்போகும் அனைத்து இக்கட்டுகளுக்கும் துயர்களுக்கும் காரணமாக அமைவது அதுவே. அஞ்சலை மீது ஊர் ‘அலர்’ எழுகிறது. அவள் அவளுடைய சாதியில் அழகான பெண். இளமையின் துடுக்கும் தன்னம்பிக்கையும் கொண்டவள். கடுமையாக உழைக்க அஞ்சாதவள். ஆணுக்கு நிகராக நின்று வயலில் கதிரடிக்கக் கூடிய உடல் வலிமையும் மன வலிமையும் கொண்டவள்.

படாச்சி மகனுடன் ஒரு விளையாட்டு வம்புக்கு அஞ்சலை நின்றது அவளுடைய இயல்புக்கு ஏற்ற ஒன்றே. கள்ளமற்ற ஆசைகளினால் ஆன ஒரு பெண் அவள். அவளை அவள் சுற்றம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. அவளுடைய தோற்றமும் ஊக்கமும் உருவாக்கும் பொறாமையே அதற்குக் காரணம். அவள் மீதான அவதூறுகள் அவள் தாயை கதிகலங்க வைக்கின்றன. அவளுக்கு திருமணம்செய்துவைக்க முயல்கிறாள். ஆனால் கையில் காசு இல்லை. அஞ்சலை அவள் மூன்றாவது மகள். அஞ்சலையின் தம்பி படிக்கிறான். மூத்த இரு பெண்களுக்கும் மணமாகிவிட்டது. அவள் தன் இரண்டாவது பெண் தங்கமணியின் கணவனிடம் மகளுக்கு ஒரு மாப்பிள்¨ளை பார்க்கும்படிச் சொல்கிறாள்.

ஆனால் அவன் அஞ்சலையை மணக்க விரும்புகிறான். தாய்க்கு அது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் ஆண்துணை இல்லாத நிலையில் வேறு வழியும் தெரியவில்லை. அஞ்சலையும் அதை கிட்டத்தட்ட ஏற்கிற நிலையில் அவள் அக்கா ஆங்காரமும அழுகையுமாக அதை மறுக்கிறாள். அஞ்சலை தன் அத்தானை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுகிறாள்

அவனுக்கு அது ஒரு வன்மமாக ஆகிறது. ஆனால் அதை மறைத்தபடி அவனே அஞ்சலைக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறான். கிழக்கு ஊரில் இருந்து ஒரு மாப்பிள்ளை வருகிறது. பணம் நகை ஏதும் கொடுக்கவேண்டியதில்லை. அஞ்சலையின் தாய்க்கு திருப்தி. கருப்பாக திடமாக பெரிய மீசையுடன் இருக்கும் மாப்பிள்ளையை அஞ்சலைக்கு மிகவும் பிடித்தும் போகிறது. ஆனால் கல்யாணத்தன்று தாலி கட்டும்போதுதான் அவள் காண்கிறாள், மாப்பிள்ளை இன்னொருவன். குள்ளமான அசிங்கமான ஒரு ஊனமுற்றவன். மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் அஞ்சலையின் அத்தானும் சேர்ந்து அவளை ஏமாற்றிவிடுகிறார்கள்.

வேறுவழியில்லாமல் கணவனுடன் செல்லும் அஞ்சலைக்கு அவனது ஊர் மிகவும் பிடித்திருக்கிறது. அங்கே முந்திரி பொறுக்கியும் குளத்தில் குளித்தும் பொழுது போகிறது. ஆனால் தன்னை ஏமாற்றிய கணவனையும் வீட்டாரையும் அவளால் மன்னிக்கவே முடியவில்லை. பொருமுகிறாள். தருணம் கிடைக்கும்போதெல்லாம் ஆங்காரத்துடன் திட்டுகிறாள். அவள் கணவனை அருகே அண்டவிடுவதேயில்லை. அவன் கெஞ்சும்போதுகூட நிராகரிக்கிறாள். உண்மையில் ஏமாற்றி மணம் செய்ததில் அவனுக்கு பெரிய பங்கு ஏதும் இல்லை. அவன் அவள் மீது மையலாக இருக்கிறான்

அவள் கணவனாக எண்ணிய அந்த மீசைக்காரன் அவளுடைய கணவனின் தம்பி. அவனுக்கு ஏற்கனவே மணமாகி அவர்கள் வீட்டின் மறுபாதியில் குடியிருக்கிறார்கள். ஓர்ப்படிக்கு தன் கணவன் செய்த விஷயம் பிற்பாடுதான் தெரியவருகிறது. அஞ்சலை தன் கணவனை கைக்குள் போட்டுக்கொள்வாள் என்று அவளுக்கு பயம். கணவை மிரட்டி கண்காணித்து கைக்குள் வைத்திருக்கிறாள். அஞ்சலையை கிடைக்கும் தருணங்களில் எல்லாம் வசைபாடி அவதூறு செய்து குறுகவைக்கிறாள். தன் மனதில் முதலில் காதல் எண்ணத்தை விதைத்தவன் மீது மோகமும் அவனது உதாசீனத்தில் துயரமும் ஆவேசமுமாக இருக்கிறாள் அஞ்சலை. மனைவிக்குப் பயந்த அவன் அவளை அஞ்சி விலகி ஓடுகிறான்.

ஒரு கட்டத்தில் அவ்வாழ்வின் பொருளில்லாமையையும் அவதூறுகளின் கொடுமையையும் தாங்க முடியாமல் ஊரைவிட்டே செல்கிறாள் அஞ்சலை. வழியில் அவளது இரண்டாவது அக்கா கல்யாணியின் கண்ணில் படுகிறாள். ஏற்கனவே அஞ்சலைக்கு திருமண ஆலோசனை நிகழ்ந்தபோது தன் கொழுந்தனுக்கு அவளைக் கொடுக்கவேண்டுமென கோரியிருந்தாள். அஞ்சலையின் அம்மா அதை நிராகரித்துவிட்டாள். அப்போது தன் கொழுந்தனைக் காட்டுகிறாள் ஆறுமுகம். சிவந்த உடல் கொண்ட அழகன். அஞ்சலை மனம் அவனில் ஈடுபடுகிறது. அவனை இழந்தது எவவ்ளவு பெரிய இழப்பு என நினைக்கிறாள்.

ஆறுமுகம் ஊருக்குச் செல்லும் அஞ்சலை அங்கே தன் தாலியைக் கழற்றி வீசிவிட்டு அக்காவின் கொழுந்தனை மணம் செய்துகொள்கிறாள். சில நாள் காமத்தில் திளைக்கும் வாழ்க்கை. பின்னர் அதன் உள் விவகாரம் தெரியவருகிறது. கல்யாணியுடன் ஆறுமுகத்துக்கு கள்ள உறவு இருக்கிறது. தன் குடிகாரக் கணவனை ஒரு புழு போல அவள் நடத்தி வருகிறாள். வேறு வழி இல்லாமல் அந்த நரகத்தில் உழல்கிறாள் அஞ்சலை. அக்காவின் ஏச்சுகளையும் கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு கணவனின் அன்பு திரும்பும் என எதிர்பார்த்து கிடக்கிறாள். அதற்கிடையே கருவுறுகிறாள். பேணுவாரில்லாமல் அனாதை போல குழந்தையைப் பெறுகிறாள். தன்னந்தனியாக குழந்தையை வைத்துக் கொண்டு அவர்களுக்கு பணிவிடைசெய்கிறாள்

ஆனால் கல்யாணி அக்காவும் கருவுறும்போது நிலைமை மாறுகிறது. அவளை அடித்து துவைக்கிறார்கள். துன்பம் தாளாமல் தற்கொலைக்கு முயல்கிறாள். குழந்தை இருக்க அதற்கும் முடியவில்லை. ஒரு புள்ளியில் தாங்கமுடியாமலாகி மீண்டும் குழந்தையுடன் தன் அன்னை வீட்டுக்கே திரும்புகிறாள். வாழாவெட்டியின் வாழ்க்கை. அவளை எளிதில் அடையலாம் என ஒவ்வொரு ஆணும் நினைக்க அவள் தங்கள் கணவர்களை கவரும் விபச்சாரி என சகபெண்கள் நினைக்க அவதூறும் வசைகளும் நிறைந்த வாழ்க்கை. அதை தாளாமல் ஒரு நாள் குழந்தையை விட்டுவிட்டு கால்போன போக்கில் கிளம்பிவிடுகிறாள்.

போகும் வழியில் அவள் தன் கணவனின் ஊரில் இருந்த ஒரே தோழி வள்ளியை சந்திக்கிறாள். அவள் கணவன் கேரளாவில் வேலைக்குச் சென்றிருக்கிறான். அவள் அஞ்சலையின் முதல் கணவன் மண்ணாங்கட்டி பற்றி சொல்கிறாள். அவனுக்கு மறுமணமாகியும் அம்மனைவியை தீண்டாமல் துரத்திவிட்டு அஞ்சலையையே நினைத்து அவன் வாழ்ந்துவருவதைப்பற்றி விவரிக்கிறாள். அஞ்சலைக்கு இருளில் ஒரு வழி தெரிகிறது. மீண்டும் முதல்கணவனிடமே செல்ல எண்ணுகிறாள். வள்ளி கூட்டிச்செல்கிறாள். அவனும் அவளை ஏற்றுக்கொள்கிறான்

மீண்டும் ஒரு தாம்பத்தியம். இம்முறை அவள் கணவனை ஏற்றுக் கொண்டாலும் அவளால் அவனை நேசிக்க முடியவில்லை. அவனை சகித்துக் கொள்கிறாள் அவ்வளவுதான். மெல்ல மெல்ல ஒரு குடும்பத்தை உருவாக்குகிறாள். இரு குழந்தைகள் பிறந்துவளர்கின்றன. ஆனால் ஊரார் கண்களுக்கு அவள் அறுத்துக் கட்டிய அரை விபச்சாரிதான். தன் ஓர்ப்படியின் வசைகளை மீண்டும் மீண்டும் பெற்றபடித்தான் அவளால் வாழ முடிகிறது.

தாய் வீட்டில் வளரும் முதல் பெண் நிலா அஞ்சலைக்கு ஆழமான குற்ற உணர்ச்சியை உருவாக்குகிறாள். அவளை தன் தம்பி படிக்கவைப்பதில் ஆறுதல் கொள்கிறாள். அவளை அவனே கட்டிக்கொள்வான் என்று எதிர்பார்க்கிறாள். கையில் பணமில்லாத நிலையில் வேறு எந்த எதிர்பார்ப்பும் அவளால் வைத்துக்கொள்ள முடியாது. அவள் கணவன் அஞ்சலை தாய் வீடு செல்வதையோ மகளைப் பாப்பதையோ விரும்புவதில்லை. அவன் மறக்க விரும்பிய அவள் வாழ்க்கையை அது நினைவூட்டுகிறது. அந்த மகளை அவன் வெறுக்கிறான். அஞ்சலை தன் சம்பாத்தியத்தை மூத்த மகளுக்கு அளித்து விடுவாளோ என்ற ஐயம் அவனை கசப்பு நிறைந்தவனாக்குகிறது.

அஞ்சலையின் தம்பி சட்டென்று தன் இரண்டாம் அக்காவின் மகளை மணம் செய்ய முடிவுசெய்கிறான். அஞ்சலை அவனிடம் கெஞ்சி மன்றாடி அழுதபோதும் அவன் மனம் மாறவில்லை. அந்த அக்காவின் பணவசதி ஒரு காரணம். தூக்கிவளர்த்த பெண்ணையே எப்படி மணம் செய்துகொள்வது என்ற காரணம் அவன் சொல்வது. மனம் உடைந்து பொலிவிழந்து அஞ்சலையிடமே மகள் நிலா திரும்பி வருகிறாள். அவளை வைத்துக்கொள்ள அஞ்சலையின் கேரளம் போயிருக்கும் கணவன் ஒப்புக்கொள்ள மாட்டான். அஞ்சலைக்கு எந்தவழியும் இல்லை

அந்நிலையில் ஊர் அஞ்சலையின் மகள் நிலா மீது அவதூறு சுமத்துகிறது. வசைகள் அவமதிப்புகள். அஞ்சலையின் ஓர்ப்படியும் குடும்பமும் அவளை அவமதித்து தெருவில் வைத்து அடித்து நொறுக்குகிறார்கள். துன்பங்களின் உச்சியில் முற்றிலும் நிராதரவான நிலையில் தற்கொலைக்கு செல்கிறாள் அஞ்சலை. ஓடி வரும் நிலா அப்படியே பாய்ந்து தாயை அறைந்து அறைந்து அழுகிறாள். ”நீ ஏன் சாகவேண்டும்? போக இடமில்லாமல் தெருவில் நிற்பவள் நான். என்னை கொன்றுவிடு…” என்று கதறுகிறாள். அவள் காலில் விழுகிறாள் அஞ்சலை

கண்ணீரை துடைத்து மனம் ஆறும் மகள் நிலா அஞ்சலையின் கைகளைப் பற்றி தூக்குகிறாள். ‘போனது போகட்டும். செத்தால் என்ன ஆகப்போகிறது’ என்கிறாள். மகளின் கையை நம்பிக்கையுடனும் ஐயத்துடனும் பற்றும் அஞ்சலையில் நாவல் முடிகிறது

@@

‘சாதாரணமாகச் சொல்வது’ என்பதைப் பற்றிய ஒர் அழகியல் பிரக்ஞை ஆசிரியரில் செயல்பட்டுள்ளது என்பதை அவரது முன்னுரை காட்டுகிறது. தான் சொல்ல முனையும் வாழ்க்கையின் தரத்துக்கு சிறிய அளவிலான அழகுகள் கூட சுமையாகும் என்று படுவதாக ஆசிரியர் சொல்கிறார். ஆகவே இலக்கணசுத்தமான இயல்புவாத அழகியல் கொண்ட ஆக்கமாக இந்நாவல் உள்ளது.

எளிமையான முறையில் அஞ்சலையின் கதாபாத்திரத்தின் தனித்தன்மைகளை கண்மணி சித்தரித்துக் காட்டுகிறார். படிக்கப்போனவள் வயல்காட்டில் கிடைக்கும் உண்டைச் சோற்றுக்கு ஆசைப்பட்டு பள்ளியை விட்டு ஓடிஓடி வருகிறாள். நாளடைவில் வயல்வேலையே அவள் இயல்பாக ஆகிறது. அஞ்சலையின் இயல்பில் உள்ள இந்த ‘நாக்குத்துடிப்பை’ அவளுடைய அடிப்படையான ஒரு குணத்தின் வெளிப்பாடாக நாம் காணலாம். உடலின்பம் மீது இயல்பாக உருவாகும் இச்சை. இந்த இச்சைக்கும் எப்போதும் வேவுபார்த்தபடி இருக்கும் சமூகத்தின் கண்களுக்கும் இடையேயான முரண்பாடு மூலம் உருவாகும் சிக்கல்களே விரிந்து விரிந்து அவள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்று எளிமையாகச் சொல்லலாம்.

உணவுச்சுவை போலவே எளிமையான காமம்தான் அஞ்சலை தேடுவது. சின்ன அக்கா கணவன் அவளை பெண் கேட்டபோது ஒரு சிறு யோசனைக்குப் பிறகு அதை ஒப்புக் கொள்வதில் அவளுக்கு தயக்கம் இல்லை. அவளை தனியாகச் சந்திக்கும் சின்ன அக்கா தங்கமணி ”… இந்தா பாரு புள்ள படுபயலா இருந்தாலும் வேற எவனையாம் பாத்துக் கட்டிக்க. மீறி நீயும் உன் அம்மாவும் ஏதாவது திட்டம் போட்டீங்க,அப்றம் என் பொணத்தைத்தான் பாக்கலாம்…” என்று மிரட்டியமையால்தான் அவள் பின் வாங்குகிறாள்.

பெண்பார்க்க வந்த கும்பலில் மாப்பிள்ளையாகக் காட்டப்பட்டவன் திடகாத்திரமாக இருக்கிறான். அதுவே அவளுக்கு ஆழமான உவகையும் மெல்லிய காதலுணர்வுகளையும் அளித்துவிடுகிறது. கிட்டத்தட்ட பசிக்கு உணவு என்ற அளவிலேயே இது இருப்பதை கண்மணி நுட்பமாகச் சொல்லிச் செல்கிறார். ஏமாற்றப்பட்டு இன்னொருவன் கணவனாகும்போது அஞ்சலையை உண்மையில் வதைத்தது எது என சொல்வது கஷ்டம். ”எமாத்தின பயலுவோடா நீங்க…உங்கள கண்டாலே பத்தி எரியுதுடா” என்று அவள் தினம் எல்லாரிடமும் பொங்கி வடிந்தாலும் உள்ளூர இருப்பது நிறைவிலா காமத்தின் வெம்மையே. அவளுடைய பசிக்கு இயலாத உணவு அவள் கணவன் என்பதே உண்மையான சிக்கல்.

உள்ளூர அவளுக்குத் தெரியும், அவளது கணவன் மண்ணாங்கட்டி அவளை ஏமாற்றவில்லை என்று. ஆனாலும் அவனை வெறுக்கிறாள். அவனை அவமதித்து வெறுகிறாள். ஆனால் அவளை திட்டம் போட்டு ஏமாற்றிய மீசைக்காரக் கொழுந்தனை அவள் வெறுக்கவில்லை. அவனுடன் காம உறவையே அவள் நாடுகிறாள். அவனை பார்ப்பதே அவளுக்குப் பரவசம் அளிக்கிறது. அவனைப்பற்றிய நினைவு எந்நேரமும் அவளில் நிறைந்திருக்கிறது. அவளை கோபம் கொள்ளச் செய்வது அவனது உதாசீனமே. அந்த வெறியில் அவனது சட்டையைப் பற்றிக்கொண்டு அவள் கேட்பதெல்லாம் ,” எனக்கொரு வழி சொல்லுடா கம்னாட்டி ” என்றுதான் ‘..உன் பெண்ணாட்டி உன்னை என் கூட விடுவாளா?’ என்றுதான். அவன் அதற்கு ஒப்புக் கொண்டிருந்தான் என்றால், அவன் மனைவி அப்படி ஒரு ஆவேசமான பெண்ணாக இல்லாலிருந்தால் கதை அங்கேயே முடிந்திருக்கும். அஞ்சலை அக்கா கல்யாணி போல அவளுக்கும் ஒரு மீறல்வாழ்க்கை அமைந்திருக்கும்.

கணவனை உதறிவிட்டு தன் அக்கா கல்யாணியுடன் சென்று ஆறுமுகத்தைப் பார்த்தக் கணமே அவனால் அஞ்சலை கவரப்படுகிறாள்.பசித்தவன் உணவைக் கண்டது போல என்றுதான் மீண்டும் சொல்ல முடிகிறது. அவனது சிவப்பு நிறம் மற்றும் அழகிய தோற்றம் குறித்து அவள் கொள்ளும் பரவசத்தை விரிவாக எழுதும் கண்மணி அவள் ஒரே கணத்தில் தன் முந்தைய வாழ்க்கையை உதறி ஆறுமுகத்தை கணவனாக ஏற்றுக் கொள்வதைக் காட்டுகிறார். அவனுடனான உறவில் அவள் நிறைவு கொள்கிறாள். அவனுக்கும் கல்யாணிக்குமான உறவு தெரியவந்தபோது அவள் கொதிப்பும் வெறுப்பும் கொண்டபோதிலும்கூட மெல்லமெல்ல அதை ஏற்றுக் கொள்ளும் இடத்தை அடைவதைக் காண்கிறோம்

கல்யாணிக்கு அஞ்சலை மீது பொறாமையும் குரோதமும் வளராவிட்டால், ஆறுமுகம் ஓரளவு இருவரையும் சரிசமமாக நடத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? அஞ்சலை சாதாரணமாக அதை ஏற்றுக்கொண்டு சிறு அதிருப்தியுடன் வாழ்க்கையை முன்னெடுத்திருப்பாள். தங்கமணியின் கணவனிடம் வாழ்க்கையைப் பகிர எளிதில் முன்வந்தவள் தானே அவள்? அவளது தேவை எளிய பசி மட்டுமே. பெரிய கனவுகள் அவளை வழிநடத்தவில்லை.

மீண்டும் முதல்கணவனிடம் திரும்போது அஞ்சலை உடலும் மனமும் தளர்ந்து காம நாட்டத்தை இழந்து வெறும் தாய் மட்டுமாக ஆகிவிட்டிருக்கிறாள். நான்குபேர் மதிக்கும் ஒரு எளிய வாழ்க்கை. குழந்தைகளின் நலமான வாழ்க்கை. அவளுக்கு அதுவே பெரும் சுமையாக உள்ளது. அவளைச்சூழ்ந்த சமூகம் அதை அவளிடமிருந்து பறிக்கிறது.

இந்நாவலில் முக்கியமாக முதன்மைப்படும் சமூகப்பிரச்சினையே சமூகத்தின் வன்முறைதான். அஞ்சலையை ஓட ஓட துரத்தியடிக்கிறது சமூகம். இந்திய சமூகத்தில் எல்லா சாதிகளுக்குள்ளும் புறங்கூறுதல், வம்பு பேசுதல் இயல்பாக உள்ளது என்றாலும் ஐச்சூழலில் அது இன்னும் அதிகமாக இருக்கிறது. நாவலே அதற்கான காரணங்களையும் காட்டிச்செல்கிறது. மனிதர்கள் அசாத்தியமான அளவுக்கு அடர்ந்து நெருங்கியடித்து சேரியின் சந்துக்குள் வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் இன்னொருவரின் கண்முன் தான் வாழ்க்கையைந் அடத்த வேண்டியிருக்கிறது. அந்தரங்கமே இல்லை. ஆகவே அந்தரங்கம் என ஒன்று உண்டு என்ற நினைப்பே எவரிடமும் இல்லை.

நாவலுக்குள் பல கதாபாத்திரங்கள் ஒருவரோடொருவர் காட்டும் கொடிய வெறுப்பும் இழைத்துக்கொள்ளும் தீங்குகளும் முதல் நோக்கில் அதிர்ச்சி ஊட்டுகின்றன. ஆனால் கூரிய வாசிப்பில் அவர்கள் எதிரிகளிடம் மட்டுமல்ல சொந்தக் குழந்தைகளிடம்கூட அதே குரூரத்துடன் நடந்துகொள்வதையே மீண்டும் மீண்டும் காண்கிறோம். அஞ்சலை உட்பட அனைவருமே பெற்ற குழந்தைகளை காரணமிருந்தும் இல்லாமலும் அடித்து துவைக்கிறார்கள். கணவனையும் தாயையும்கூட கொடுமையாக வசை பாடுகிறார்கள். அடிக்கவும் துணிகிறார்கள். அந்த வன்மம் ஒருவகையில் தன்மீதான, தன் விதி மீதான வன்மம். ஒரு மொத்தப்பார்வையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அவ்வாழ்க்கை மீதான ஆறாக் கசப்பு அது.

அது உண்மையில் மனம் சார்ந்த பிரச்சினையே அல்ல. ஒரு வாய் சோற்றுக்காக கடித்துக் குதறிச் சண்டையிடும் மக்களைப் பார்த்து அது அவர்களின் உளச்சிக்கல் என்று சொல்லிவிடமுடியுமா என்ன? ஒருவரின் சிறு மகிழ்ச்சி கூட பிறரிடமிருந்து பறிக்கவேண்டிய ஒன்றாக அமையுமளவுக்கு வறுமையும் போட்டியும் நிலவும் உலகம் அது. அத்துடன் மீட்பு கண்ணுக்குத்தெரியாத கொடிய வறுமை மூலம் உருவான முரட்டுத்தனமும் குரூரமும் அவர்களை ஆள்கிறது.

துயரமே வாழ்க்கையாக உள்ள அந்தச் சூழலில் ஒவ்வொருவரும் பிறருக்கு முடிந்தவரை தீங்கிழைத்து தங்களுக்கு விதிக்கப்பட்ட கொடிய வாழ்க்கையை மேலும் மேலும் துயரம் மிக்கதாக ஆக்கிக் கொள்கிறார்கள். நாவல் காட்டுவது அஞ்சலை மற்றும் அவள் சுற்றத்தின் கதையை. ஆனால் உதிரிக் காட்சிகள் வழியாக அந்தச் சூழலின் ஒவ்வொருவருமே அதே நரகத்தில்தான் வாழ்கிறார்கள் என்று தெரிகிறது. ஒவ்வொரு நாளும் தெருவில் சண்டை நடக்கிறது. உள்ளங்கள் குத்தி கிழிக்கப்படுகின்றன. எளியமுறையிலான வாழ்க்கையைக்கூட பக்கத்துவீட்டாரை வதைத்துத்தான் வாழவேண்டியுள்ளது, அல்லது பக்கத்து வீட்டாரை அஞ்சி வாழவேண்டியுள்ளது.

கொஞ்சம் கூலி அதிகம் கிடைப்பதற்காக பக்கத்து தெருவுடன் வேலைக்குப் போனால் சிக்கல் உருவாகிறது. பக்கத்து தெருவினர் இந்ததெருவுக்கு ஜென்ம எதிரிகளாக இருக்கின்றனர். ஒரு பசுமாட்டுக் கன்றை கொண்டுவந்து வளர்க்க ஆரம்பித்தால்கூட ஊரே பொறாமை கொண்டு ஒழிக்க சதி செய்கிறது. பரம ஏழைகளான ஒவ்வொருவருமே பிறரை பார்த்து ‘பணம் சேக்கிறான்’ என்று புலம்புகிறார்கள்.

அஞ்சலை இந்நாவலில் அடையும் அனைத்து துயரங்களுக்கும் காரணமாக இருப்பது ஊரலரே. சங்க காலம் முதல் பன்னிப்பன்னி பேசப்பட்டு வரும் இது நமது பண்பாட்டின் அடித்தளம் போலும். அவள் வீட்டை விட்டுக் கிளம்பி இன்னொரு வாழ்க்கைக்குள் செல்வதற்கான காரணங்களாக மூன்றுமுறை சொல்லப்படுவதும் ஊரார் அளிக்கும் உளவன்முறைதான்.

இன்னொரு கோணத்தில் இதன் வேர்களை நாம் பழங்குடி வாழ்வில் தேடலாமெனப் படுகிறது.கேரளப்பழங்குடிகள் வாழ்க்கையை ஓரளவுக்கு அறிந்தவன் என்ற முறையில் இதைச் சொல்லத்துணிகிறேன். ஒரு பழங்குடிச் சமூகத்தில் தனிமனித சிந்தனை, தனி வாழ்க்கை என்பதற்கே இடமில்லை. பழங்குடி சமூகமென்பது ஓர் உடல் போல ஒற்றைஅமைப்பு. அதன் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையும் பிறர் வாழ்க்கையுடன் இறுக்கமாகப் பிணைந்துள்ளது. ஆகவே ஒருவரை அவர் சமூகமே ஒவ்வொரு கணமும் கண்காணிக்கிறது. கட்டுப்படுத்துகிறது. பழங்குடிச் சமூகங்களில் சமூகக் கட்டுப்பாடுகள், சடங்குமுறைகள், நம்பிக்கைகள் மற்றும் குடித்தலைவனின் ஆணைகள் கிட்டத்தட்ட இயற்கையின் மாறாவிதிகள் போன்றவை. ஒன்றாகவே சிந்தித்து ஒன்றாகவே வாழும்வரை அது இயல்பாக இருக்கிறது. ஒருவர் சிறிதளவு மீற ஆரம்பித்தால்கூட மொத்தச் சமூகத்தின் அழுத்தமும் மாபெரும் வன்முறையாக அவர் மீது கவிகிறது

இருபதாம் நூற்றாண்டில் பழங்குடிச் சமூகங்களில் கல்வி ,மதமாற்றம், இடம்பெயர்தல் ஆகியவை நிகழ ஆரம்பித்ததுமே பெரும்பாலான பழங்குடி சமூகங்கள் வன்மூறை மிக்கதாக ஆகிவிட்டன. ஊர்விலக்கு, சமூக விலக்கு முதல் ஊர்க்கொலைகள் வரை நடக்க ஆரம்பித்தன. நம் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடையே பழங்குடிவாழ்க்கையே தொடர்கிறது என்பதைக் காணலாம். அஞ்சலை நாவல் காட்டும் சமூகத்தின் சித்திரம் ஒருவகை அரைப்பழங்குடித் தன்மையுடனேயே இருப்பதை வாசகர் உணரலாம். பழங்குடிவாழ்க்கையின் இரு கூறுகள், இறுக்கமான சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் உள்பிரிவினைகள். அஞ்சலை வாழும் சமூகமும் மீண்டும் மீண்டும் தன்னை பிரித்துக் கொண்டே இருக்கிறது. ஊர்ப்பிரிவினை, தெருப்பிரிவினை முதல் குடும்ப்பப் பிரிவினைவரை.

ஆக, அஞ்சலையின் துயரத்தின் காரணம் அவளது பழங்குடிவாழ்க்கைப் பின்னணி என்றும் சொல்லலாம். பழங்குடிச் சமூகங்களில் இவ்வாறு விதிமீறிச் சென்றமையால் சமூக விலக்களிக்கப்பட்டு அழிந்தவர்கள் ஏராளம். இருபதாண்டுகளுக்கு முன் கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத்தின் சார்பில் காஸர்கோடு மாவட்டத்தின் காட்டிற்குச் சென்றபோது இவ்வாறு விலக்கப்பட்டு அழியும் நிலையிலிருந்த ஒரு குடும்பத்தைக் கண்டோம். பேசியபோது அப்பழங்குடித்தலைவன் ‘புகஞ்ஞ கொள்ளி புறத்து’ [புகைவிடும் விறகை அடுப்புக்கு வெளியே எடு]என்ற மலையாளப் பழமொழியைச் சொன்னார்.

அஞ்சலை நாவலைப் படித்து முடித்தபின் முன்னுரையைப் பார்க்கையில் கண்மணி அஞ்சலையைப்பற்றிச் சொல்ல அதே உவமையை கையாண்டிருப்பதைக் கண்டு வியந்தேன். நாவலின் முதல்வரியே அதுதான், ”புகைய ஆரம்பிக்கும்போதே அணைத்துவிடத்தான் பாக்கியம் நினைத்தாள்…’

அஞ்சலையின் வாழ்க்கையை கூர்ந்து கவனிக்கையில் எழும் எண்ணங்களில் ஒன்று ஆணாதிக்கம் குறித்தது. நில உடைமைச் சாதிகளில்தான் உச்சகட்ட ஆணாதிக்கம் நிலவும். காரணம் நிலம் ஆணின் கையில் இருக்கிறது. ஆணால் புறக்கணிக்கப்படும் பெண் உயிர்வாழவே முடியாதவள். அவனை அவள் உணவுக்கே நம்பியிருக்கிறாள். ஆனால் உடலுழைப்புச் சமூகங்களில் ஆணாதிக்கத்துக்கான நேரடியான காரணம் இல்லை. அஞ்சலையின் சூழலை வைத்துப் பார்த்தால் ஆண் அளவுக்கே பெண்ணும் பொருளீட்டுகிறாள். சிலராவது பெண்ணை நம்பியே வாழ்கிறார்கள். உதாரணமாக தங்கமணியின் கணவன் அஞ்சலையை மணம் முடித்து இருவரின் சம்பாத்தியத்தில் வாழ நினைக்கிறான்.

ஆனாலும் இச்சமூகம் முழுக்க ஆணாதிக்கமே நிலவுகிறது. அஞ்சலை,அவள் அக்காக்கள் ஓர்ப்படி என அனைவருமே தங்கள் கணவர்களைத் தக்கவைத்துக் கொள்ள அல்லது விரும்பிய ஆணை தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறார்கள். அஞ்சலை தன் வாழ்நாள் முழுக்க நிகழ்த்தும் போராட்டமே ஆணுக்காகத்தான் என எளிமைப்படுத்திச் சொல்லிவிட முடியும்தான். அவள் வாழ்க்கையின் எல்லா நிராதரவான கட்டங்களும் ஆணால் கைவிடப்படும்போது உருவாகின்றன. கடைசியில் அவள் மகள் அவள் தம்பியால் கைவிடப்படுகிறாள். ஆணாதிக்கம் இங்கே ஆழ்மனங்களிலும் சமூகப் பழக்கவழங்கங்களிலும் நுண்கருத்தியலாக ஒளிந்து உறைகிறது.

இந்நாவலின் ஆண் கதாபாத்திரங்களில் பலவகையான வண்ண வேறுபாடுகள் இருந்தாலும் ஆணாதிக்க இயல்பு முக்கியமாக உள்ளது. பெண்ணை அவர்கள் ஒரு பொருட்டாக நினைப்பதேயில்லை. தங்கமணியின் கணவன் அஞ்சலையை அடைய நினைக்கிறான், முடியாதபோது அவளை தகுதியற்றவனுக்குக் கட்டிவைக்கிறான். அவளை ஏமாற்ற துணைபோகிறான் ஒருவன். அவனுக்கு அவள் உணர்வுகள் பொருட்டாகப் படவில்லை. அவளை இரண்டாவதாக மணந்துகொண்டவனுக்கு அவள் ஒரு சதை என்பதற்குமேல் ஏதுமில்லை. அவளுக்காக ஏங்கி மீண்டும் அவளை அடைந்த முதல்கணவனோ விரைவிலேயே அவளை வெறுக்க ஆரம்பிக்கிறான். அவளுடைய உணர்வுகள் அவனுக்கு பொருட்டாகவே படவில்லை, அவன் வழிபட்டது அவள் உடலை மட்டுமே. விதிவிலக்காக வருபவன் கல்யாணியின் கணவன். அவனும் கூட ஒன்றும் செய்ய இயலாத கையறுநிலையில் வாழ்பவனே ஒழிய மாறான மனநிலை கொண்டவன் என்று சொல்லிவிட முடியாது.

அப்படிப் பார்த்தால் அஞ்சலையின் துயரம் ஓர் ஆணாதிக்கச் சமூகத்தில் எளிய காமத்திற்காகவும் குடும்ப வாழ்க்கைக்காகவும் ஏங்கி அது பறிக்கப்பட்ட ஒரு பெண்ணின் அவலம் என்றும் சொல்லலாம். ஆண்களின் காமத்திற்காகவும் ஆண்களின் குரோதத்திற்காகவும் விளையாடப்படும் சதுரங்கத்தில் வெட்டுபட்டு விழும் ஒரு காய் மட்டும்தான் . இதை விரிவாகப்பார்த்தால் தங்கமணி, கல்யாணி , ஓர்ப்படி முதல் கடைசியில் அவள் மகள் நிலா வரை அதே சதுரங்கத்தில் வெட்டுபடும் காய்களே என தோன்றுகிறது. அவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொள்வது கூட இயக்கும் கைவிரல்களின் இச்சைக்கு ஏற்பத்தான். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உள்வாழ்க்கையைச் சொல்ல வந்த இந்நாவல் தமிழ்வாழ்க்கையின் ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தையே காட்டி நிற்கிறது.

@@

அஞ்சலையின் கலைவெற்றிக்கு அடிப்படையாக இருக்கும் முக்கியமான அம்சம் குணச்சித்திர அமைப்பில் கண்மணி கொடுக்கும் நுட்பமேயாகும். தமிழில் இயல்புவாத நாவல்களில் பல சமயம் இது அமையாது போய்விடுகிறது. அஞ்சலை,தங்கமணி, கல்யாணி, அவர்களின் தாய் பாக்கியம் போன்று நாவல் முழுக்க நீளும் எல்லா பெண்களும் திட்டவட்டமான அடையாளங்கள் கொண்ட ஆளுமைகளாக உருவாக்கப்பட்டுள்ளனர். இந்த குணச்சித்திர வார்ப்புகளை சிக்கலாக்காமல் நேர்த்தியாக நாவல் முழுக்க கொண்டுசெல்கிறார், கதைமாந்தரின் புழக்கங்களில் குணச்சித்திர எல்லைகள் மழுங்குவதுமில்லை

பாக்கியம் திடமான நெஞ்சும் உலகியல் ஆர்வமும் கொண்ட உழைப்பாளியான கிராமத்துப் பெண்ணாக நாவலில் வருகிறாள். அவள் ஆளுமையின் பல முனைகளை திட்டவட்டமாக காட்டுகிறது நாவல். ‘ இந்தக் கார்குடல் பறத்தெருவில என்ன மாதிரி புள்ளைய பெத்தவளும் இல்ல, வளத்து கட்டிக்குடுத்தவளும் இல்ல” என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்பவள். கடைசிவரை தனக்கு எவருடைய உதவியும் தேவையில்லை என்பதில் தெளிவுள்ளவள். கையும் காலும் உள்ளவரை உழைத்து வாழும் திராணி கொண்டவள். பாக்கியம் அஞ்சலையை எப்போதும் உள்ளூரப் புரிந்துகொண்டவளாகவே இருக்கிறாள். அவர்களிடம் நெருக்கமான ஓர் உரையாடல் நிகழவில்லை என்றாலும்கூட .

கணவனை விட்டுவிட்டு மூத்த அக்காவின் கொழுந்தனை மணந்து அதுவும் சரியாகாமல் குழந்தையுடன் அஞ்சலை தாய்வீட்டுக்கே திரும்பும்போது அஞ்சலைக்கு உள்ளூர அச்சமிருக்கிறது, அம்மா என்ன சொல்வாள் என்று. ஆனால் அதை பாக்கியம் அன்புடன்தான் எடுத்துக் கொள்கிறாள். அஞ்சலை அக்குழந்தையையும் விட்டுவிட்டு முதல் கணவனுடன் வாழச்செல்லும்போது அதையும் அவள் ஏற்றுக் கொள்கிறாள். அக்குழந்தையை வளர்க்கிறாள். குழந்தையைப் பார்க்க அஞ்சலை வரும்போது பாக்கியம் அதைச் சொல்லிக்காட்டவோ வெறுக்கவோ இல்லை. இந்த மௌனமான புரிதல் நாவலின் முக்கியமான ஒரு சரடு

அம்மாவீடுவரும் அஞ்சலை அங்கிருந்து ஒரு பசுக்கன்றைக் கூட்டிச் செல்கிறாள். அதை அவள் வளர்க்கக் கண்டு ஊர் வயிறு எரிகிறது. மாடுதேடி வரும் கும்பல் ஒன்று அதை தங்கள் மாடு என்று சொல்கிறது. தான் மாடு திருடவில்லை என்று அஞ்சலை அழுததை அவர்கள் பொருட்படுத்தவில்லை. மாடுமேய்க்கும் பையன் வந்து சாட்சி சொல்லியும் அவர்கள் நம்பவில்லை.பசுவைக் கொண்டு வரச்சொல்கிறார்கள். பசுவுடன் பாக்கியமே வருகிறாள். நாவலில் இந்த இடம்தான் தாய்க்கும் மகளுக்குமான ஆழமான உறவின் தடையமாக இருக்கிறது. கன்று இரு பசுக்களை கண்டு இரண்டையும் நாடாமல் மிரண்டு நிற்கிறது. ஆவேசமடைந்த பாக்கியம் பசுவை இழுத்துக் கொண்டு செல்ல கன்று தொடர்கிறது. மொத்த நாவலையுமே ஒருவகையில் குறியீட்டுத்தளத்தில் புரிந்துகொள்ள உதவும் ஒரு கவித்துவத் தருணம் இது.

பாக்கியத்தின் குணங்களின் வாரிசாகவே நாவலில் அஞ்சலை வருகிறாள். கன்று பசுவைத் தொடர்கிறது. பாக்கியத்தின் பெண்களில் தங்கமணி ஓர் எல்லை. அவளும் ஆவேசமும் வேகமும் கொண்ட உழைக்கும் பெண்தான். ஆனால் கணவனுக்குக் கட்டுப்பட்டவள். நல்லவள் அத்துடன் உணர்ச்சிகரமான பலவீனம் கொண்டவள். அவள் கணவன் அதையே பயன்படுத்திக் கொள்ள முயல்கிறான். கல்யாணி மறு எல்லை. கணவனின் பலவீனத்தை அவள் பயன்படுத்திக் கொள்கிறாள். காமமும் உலகியலாசையும் கொண்டபெண். அதன் வேகமே அவளிடம் குரூரமாக வெளிப்படுகிறது. தன் முன் இருக்கும் ஒன்றை இழக்க விரும்பாத பசியின் உக்கிரமே அவள் ஆளுமை.

அஞ்சலை இரு எல்லைகள் நடுவே இருக்கிறாள். அவளை கண்மணி வழக்கமான மிகையுணர்ச்சிக் கதைகளில் வரும் நாயகி போல அனைத்து நன்மைகளும் நிரம்பியவளாகக் காட்ட முனையவில்லை. அஞ்சலையின் இயல்பான காமவிழைவு நாவலில் நேரடியாகவே சொல்லப்படுகிறது. அச்சூழலில் பிறரிடம் இருக்கும் அதே குரூரம் அவளிடமும் இருக்கத்தான் செய்கிறது. சிறந்த உதாரணம் அவள் தன் கணவனிடம் நடந்துகொள்ளும் முறை. அதைவிட கணவனின் வயோதிகத் தந்தையை நடத்தும் முறை. பல தருணங்களில் அது எல்லை மீறிச்செல்கிறது. அஞ்சலை கையாளும் பல சொற்கள் அவளுக்குள் இருக்கும் கல்யாணியைக் காட்டுபவை. அவற்றை கண்மணி குணசேகரன் மழுப்பவேயில்லை.

அத்துடன் அவள் மண்ணாங்கட்டி மீது காட்டும் முழுமையான உதாசீனம் நாவலின் முக்கியமான ஒரு சரடாகும். அவன் தரப்பில் நின்று நோக்கினால் அதன் முகம் கொடூரமானது. அதையும் கண்மணி மழுப்பவில்லை. அவன் அஞ்சலை போன்ற ஒரு பெண்ணை மணக்க விரும்பவோ முயலவோ இல்லை. அவனையும் ஏமாற்றித்தான் அஞ்சலைக்கு கணவனாக்கியிருக்கிறார்கள். இருந்தும் அவன் அவள்மீதான தன் உரிமையை வன்முறை மூலம் காட்டவில்லை. அவள் மீது மதிப்பும் அனுதாபமும் கொண்டிருக்கிறான். அவளை வழிபடுகிறான். அவள் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறான். அவள் உதறிச்சென்றபின்னரும் காத்திருக்கிறான். அவள் மீண்டு வரும்போது ஏற்றும் கொள்கிறான்

அந்தப்பிரியத்தை அஞ்சலை எதிர்கொண்ட விதம் எப்படி? அவளுக்கு ஆணின் தோற்றம் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. அயோக்கியனாக இருந்தும் ஆறுமுகத்தை கெஞ்சிக் கொண்டிருந்தவளுக்கு மண்ணாங்கட்டி ஒரு மனிதனாகவே படவில்லை. அவனுடைய உழைப்பில் குடும்பத்தை கட்டி எழுப்பும்போதுகூட அவனை அவள் அன்புடனும் மதிப்புடனும் நடத்தவில்லை. ஒரு கட்டத்தில் கணவன் என்ற இடத்திலிருந்தே விலக்கி விடுகிறாள். மண்ணாங்கட்டி அவள் மீது கொள்ளும் மனத்திரிபுக்கும் ஐயத்திற்கும் அதுவே ஊற்றுக்கண். அவ்வகையில் பார்த்தால் அஞ்சலையின் கடைசிக்காலத்து நிராதரவான நிலைக்கு அவளே பொறுப்பு.

இப்படி ஊகிக்கலாம். அஞ்சலை மண்ணாங்கட்டியின் பிரியத்தை புரிந்துகொண்டிருந்தால் அவனுடன் அவள் இரண்டாவது கட்டத்திலேனும் மனம் ஒன்ற முடிந்திருந்தால் அவளும் மகளும் கடைசியில் அடையும் அந்த துயரம் அத்தனை வீச்சுடன் இருந்திருக்குமா? தன்னை உதறிச்சென்ற மனைவியை ஏற்றுக் கொண்ட மண்ணாங்கட்டி அவள் மகளை அப்படி மூர்க்கமாக மறுத்துவிடுவானா என்ன? பிழை-சரிகளை வைத்து மனிதர்களை அளவிட முடியாது, வாழ்விலானாலும் புனைவினாலாலும். மனித மனத்தின் விருப்புகளும் வெறுப்புகளும் காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டவையே. ஆனாலும் பலசமயம் வாழ்க்கையின் சிக்கல்கள் பல அம்மனிதர்களின் உளச்சிக்கல்களாகவே இருக்கின்றன.

அஞ்சலைக்கும் அவள் தாய்க்கும் இடையேயான ஒரு பொது இயல்பு இந்நாவலில் கவனத்திற்குரியது. வாழ்க்கையுடன் சலிக்காமல் போராடும் இயல்பு என்று அதைச் சொல்லலாம். பாக்கியமும் சரி அஞ்சலையும் சரி வாழ்க்கை அவர்களுக்கு அளித்த அடிகளை ஏற்று மீண்டும் மீண்டும் ரோஷத்துடன் தலைதூக்குகிறார்கள், அடியேற்று சீறிப்படமெடுக்கும் நாகம் போல. அவதூறுகள் வசைகள் என சமூகத்தின் வன்முறை தன்னைத் தாக்கும்போது அஞ்சலை சீறிசினந்தெழுந்து எதிர்க்கிறாள். அடிக்கிறாள் அடிபடுகிறாள். பாக்கியம் நம்பிக்கையை இழப்பதேயில்லை. அஞ்சலை தன் உளச்சக்தியின் இறுதி எல்லையைத் தொட்டு சோந்து சரியும் கணம் நாவலின் இறுதியில்வருகிறது. அங்கே அஞ்சலையின் அதே ஆளுமையைக் கொண்ட அவள் மகள் நிலா வந்து அவளைத் தாங்கிக் கொள்கிறாள்.

நாவலின் தொடக்கத்தில் அஞ்சலையை மணம்புரிந்து அனுப்ப பாக்கியம் முடிவெடுக்கும்போது அஞ்சலை ‘ நீ நான்கு பெற்றாய். கடைசிக்காலத்தில் உன்னைப்பார்க்க யாருமே இல்லை என்ற நிலை வரக்கூடாது. நான் உன் கடைசிக் காலம் வரை கூடவே இருந்து உனக்கு சம்பாதித்துப் போடுகிறேன்’ என்று உளம் கனிந்து சொல்லும் இடம் முக்கியமானது. நாவலின் இறுதியில் மரணத்தை ஏற்கத் தயாராகும் அஞ்சலைக்கு மகள் நிலா அளிப்பதும் அதே உறுதிமொழியைத்தான்.

நிலாவின் ஆளுமை அதிகம் விவரிக்கப்படாமல் நிறைவு கொண்டுள்ளது. தாயில்லாமல் வளர்ந்தவள். அதாவது தாயால் துறக்கப்பட்டவள். தாய் மீது அவள் வன்மம் கொண்டிருக்க எல்லா நியாயங்களும் உண்டு. ஆனால் அவளிடம் பாசம் மட்டுமே உள்ளது. தாயின் பிழைகளை அவள் காணவே இல்லை. தன்னைத் துறந்த தந்தையைத் தேடி அவள் போகும் இடமும் அதே மனநிலையைத்தான் காட்டுகிறது. எவ்வித எதிர்மறை எண்ணங்களும் இல்லாத இளம் மனம். உலகை நம்பிக்கையுடன் நோக்கும் பருவம். அவளிடம் அப்பிராயத்திற்குரிய பாவனைகள் கூட இல்லை. உடலெல்லாம் சுண்ணாம்புடன் மெலிந்து குலைந்த அஞ்சலை அவளை சக மாணவிகள் நடுவே தெருவில் சந்திக்கும் தருணம் ஓர் உதாரணம். நிலா அன்னையை நிராகரிக்கக் கூடுமென்ற எண்ணம் அப்போது வாசகனுக்கு வரலாம். அவள் அப்படிச் செய்யவில்லை

ஆனால் தாயைப்போலவே அனைத்தையும் சிதறடிக்கும் பெரும் அடியை அப்பிராயத்தில் நிலாவும் ஏற்க நேர்கிறது. அவளுக்குள் தன் தாய்மாமன் மீதிருந்த காதல் சில குறிப்புகள் மூலம் நாவலில் சொல்லப்படுகிறது. மூர்க்கமாக அது உதாசீனம் செய்யப்பட்டு ஒரே நாளிலேயே அவள் அனாதையாகிறாள். அந்த அடியை பாக்கியம் போல அஞ்சலை போல திடமாக அவள் எதிர்கொள்ளும் இடத்தில் நாவல் உச்சம் கொள்கிறது. நாவல் காட்டுவது ஒரு அறுபடாத ஓட்டத்தை. வாழ்க்கைமீதான இச்சையின், தன்னம்பிக்கையின், உழைப்பைச் சாந்திருக்கும் துணிவின் பிரவாகத்தை. அது அப்பெண்கள் வழியாக அழியாது நீள்கிறது

@@

உணச்சிகரமான பல காட்சிகள் வழியாக நகரும் இந்நாவலில் மூன்று உச்சங்கள் உள்ளன என்று படுகிறது. அம்மூன்று உச்சங்களை மட்டும் தொட்டுத்தொடர்புபடுத்தி சிந்திக்கும் வாசகன் இந்நாவலின் பல தளங்களை ஒன்றாக எளிதில் தொகுத்துக் கொள்ள முடியும். ஒன்று அஞ்சலை தன்னை ஆசை காட்டி ஏமாற்றிய மீசைக்காரனிடம் காட்டில் வழிமறித்துப் பேசும் இடம். இரண்டு நிலாவை மணம் செய்ய மறுக்கும் தம்பியிடம் அவள் தன்னை இழந்து கெஞ்சும் இடம். மூன்று அவள் தற்கொலை செய்துகொள்ள முயல்கையில் நிலா அவளை மறிக்கும் இறுதிச் சந்தர்ப்பம்.

முதல் காட்சியில் நாம் காணும் அஞ்சலை வாழ்வாசை நிரம்பிய உயிர்த்துடிப்பான பெண். அவள் மீசைக்காரனிடம் கோருவது மறுக்கபப்ட்ட வாழ்க்கையை. அது ஒரு விரிந்த நோக்கில் அவள் தான் வாழும் சமூகத்திடம் முன்வைக்கும் கோரிக்கையே.” கம்னாட்டி நாயே மொதமொதல்லா எம் மனச கெடுத்ததும் இல்லாம என் வாழ்க்கையையே வீணாக்கிட்டியேடா பாவி! எப்டி இருந்தவ இப்டி லோலுபட்டு லொங்கழிஞ்சு நிக்கிறேண்டா . ஒரு பெத்தவளைப் போயி பாக்க முடியாம அண்ணாந்தோலு போட்ட மாடு மாதிரி நிக்கிறேண்டா.. எல்லாம் ஒன்னாலத்தாண்டா. ஒன்ன ஆம்படையானா நெனைச்சித்தாண்டா சம்மதிச்சேன். ஒன்ன மனசில வச்சுக்கிட்டு அவன் கூட எப்டிடா படுப்பேன்? கொலக்காரப்பாவி..” என்னும் வரிகளில் நாம் காண்பது தார்மீக ஆவேசமும் வாழ்வாசையும் மிக்க அஞ்சலையை.

ஆனால் தம்பியிடம் கெஞ்சும் இடத்தில் அஞ்சலை வாழ்வின் அடிகளால் ஆளுமை இழந்து நொய்ந்து போயிருக்கிறாள். தன் இறுதி நம்பிக்கையாக தம்பியை எண்ணியிருக்கிறாள். மீசைக்காரனிடம் அவள் தான் இழந்த வாழ்க்கையை அதட்டி வைது சாபமிட்டு ஆவேசமாகக் கோருகிறாள். ஆனால் தம்பியிடம் தன் சுயமரியாதையை முற்றிலும் இழந்து மண்ணளவு தாழ்ந்து கெஞ்சுகிறாள். அதுவும் சமூகத்திடமான கோரிக்கை என்று சொல்லலாம். உயிர்வாழ்வதற்கான கடைசி வாய்ப்பைக் கோரும் குரல் அவளுடையது. சமூகத்தின் அடிகளை ஏற்று நைந்து போன நெஞ்சம் அதனிடமிருந்து கடைசியாகச் சற்று கருணையை எதிர்பார்க்கும் பாவனை அது. அவள் மீது கருணை காட்டுவதென்றால் அதற்கு வாய்ப்புள்ள கடைசி மனிதன் அவன்தான்.

”எஞ்சாமி ஒன்னத்தைவிர வேற எங்க குடுத்தாலும் என்னை காரணங்காட்டி ஏம் புள்ளையக் கொத்தி புடுங்கிடுவானுவோ சாமி. காலம்பூரா ஒங்கட்டுத் தெருவில சாணியள்ளிட்டு கெடக்கிறேன் சாமி…எம் புள்ளைய விட்டுடாதேப்பா…” என்ற அஞ்சலையின் தீனக்குரலுக்கு பதிலாக அவன் அவள் மகளை படிக்கவைத்த செலவுக்குக் கணக்குசொல்கிறான். உண்மையில் தலையில் துணியைப்போட்டுக்கொண்டு வெளியே வந்து பஸ்ஸில் ஏறி ஏதோ அந்தரத்தில் போவதுபோல போய்க்கொண்டே இருக்கும் அஞ்சலை அக்கணத்தில் ஆன்மீகமாக இறந்துவிடுகிறாள்.

ஒரு பெண்ணாக அவள் தான் வாழும் சூழலில் இருந்து எதிர்பார்க்க இனி ஏதுமில்லை. அதன் பின் தன் மகளை வைத்துக்கொண்டு அவள் வாழும் முயற்சி என்பது கிட்டத்தட்ட இறந்துபோன ஒருத்தியின் யத்தனம் போலவே உள்ளது. அந்நிலையிலும் ஓர்ப்படியும் பிள்ளைகளும் அவளை தாக்கும்பொருட்டே சீண்டும்போது அவளில் எஞ்சிய உயிர் கசந்து எழுகிறது. சீறிச் சினந்து அடி வாங்கி தெருவில் சரிகையில் நாம் காண்பது ஒரு மனிதக் குப்பையை. சமூகத்தால் சிதைத்து வீசப்பட்ட ஓர் ஆத்மாவின் சடலத்தை.

தற்கொலைக்குச் செல்லும் அஞ்சலையை மகள் மீட்கும் காட்சி இந்நாவலின் இயல்பான உச்சம். தமிழ் நாவல்களில் அடையபெற்ற மிகச்சிறந்த கலையழகு மிக்க தருணங்களில் ஒன்று. ஆவேசமும் கண்ணிருமாக அன்னையை மாறி மாறி அடிக்கிறாள் நிலா. அவளுக்குள் பொங்கும் ஆவேசம் அவள் ஆளுமைக்குரிய முறையில் தாக்கும்தன்மையுடன் வெளிப்படும் இடம் கண்மணி என்ற கலைஞனை அடையாளம் காட்டும் தருணமாகும். ”நாடுமாறி நீ ஏண்டி சாவப்போற? நீ பண்ணனதுக்கு நாந்தாண்டி சாவணும்…..எனக்கு யாருடி இருக்கா? ” பின் நிதானத்துக்கு வந்து அவள் அன்னையை அரவணைத்துக் கொள்கிறாள். ”…இன்னம் பத்துப்பொழுது இந்தச் சனங்ககிட்ட இருந்து வாழ்ந்து பாக்காம செத்துபோறதுதானா பெரிசு? ஏந்திரு சாவப்போறாளாம் சாவ”

இத்தருணத்தில் தன் இறப்பிலிருந்து அஞ்சலை உயிர்கொண்டு மீண்டெழுகிறாள். ஒட்டுமொத்தமாக அவளை நிராகரித்துப் புதைத்த சமூகத்தின் சாரத்திலிருந்து எழுந்தவள் போல வந்து நிலா அவளை மீட்டெடுக்கிறாள். அவளை ஏமாற்றிய கைகள் அவளை கைவிட்ட கரங்கள் அவளை அடித்து துவைத்த கைகள் அவளை எள்ளி நகையாடிய கைகள் என பல்லாயிரம் கைகளுக்குப் பதிலாக நிலாவின் இளம் கைகள் நீண்டு அவளுக்குக் கை கொடுக்கின்றன.

உயிர்த்தெழும் அக்கணத்தை நுட்பமான இயல்புவாதப் படைப்பாளிக்கே உரிய முறையில் கண்மணி குணசேகரன் மிதமான சொற்களில் சாதாரணமாக அமைத்து நாவலை முடிக்கிறார். ‘உள்ளுக்குள் நடுக்கம் இருந்தாலும் இறுக்கிப்பிடித்திருந்த நிலாவின் கைத்தெம்பை நம்பி மெல்ல அடியெடுத்து வைத்தாள் அஞ்சலை’ மகளின் கை பற்றி தாய் நடைபழகும் இடம் மறுபிறப்புக்குப் பிந்தைய வாழ்க்கையின் தொடக்கம்.

@@

இந்நாவலை உருவாக்கிய முக்கியமான அம்சங்களில் நடையும் ஒன்று. மிகச் சாதாரணமான நடை அது. கடலூர் வட்டாரப் பேச்சுவழக்கை ஒட்டிய கூறல்நடை சிலசமயம் நேரடியான பேச்சுவழக்காகவே மாறிவிடுகிறது. உரையாடல்கள் எளிய நேரடியான பேச்சுகளாகவே உள்ளன, அவற்றிலும் நடையழகு என்பது இல்லை. யதார்த்தவாதியான ஒரு கிராம வாசி வாழ்க்கையைச் சொல்ல எவ்வளவு சொல்வாரோ அவ்வளவே இந்நாவலிலும் உள்ளது. நுட்பம் என்பது அது காட்டும் வாழ்க்கையிலேயே, கூறுமுறையில் இல்லை. இயல்புவாதத்தின் அழகியல் அது.

கிட்டத்தட்ட அம்மக்களின் பேச்சுமொழியிலேயே ஆசிரியரும் கதை சொல்கிறார்” அரிபிரியாய் நடவு வேலை நடந்துகொண்டிருந்தது..” என்பதுபோல. வருணனைகள் கூட மண் சார்ந்த எளிமையுடன் உள்ளன. அஞ்சலையின் அழகை விவரிக்கும் இடத்தில் ‘தெளிந்த நீரில் மண்புழு போல’ அவள் கழுத்தில் கிடந்த மெல்லிய மணிச்சரம் கிடந்தது என்கிறார் கண்மணி குணசேகரன்.

அம்மக்களின் பேச்சுமொழி செறிவானதல்ல. குறைவான சொற்கள். பெரும்பாலும் ஆவேசமாகச் சொற்களைக் கொட்டும் பேச்சுமுறை. இந்நாவலெங்கும் உரையாடல்களில் நகைச்சுவை, நக்கல், நையாண்டி ஏதுமே இல்லை. இதுவே குமரிமாவட்ட மக்களின் பேச்சு என்றால் அதில் பெரும்பகுதி இடக்கரடக்கல்களும் நக்கல்களும் நிறைந்திருக்கும். சுந்தர ராமசாமி, நாஞ்சில்நாடன், தோப்பில் முகமது மீரான், ஆ.மாதவன், நான் என அனைவர் எழுத்திலும் காணப்படும் பொதுக்கூறு இது. இது நிலப்பகுதியின் இயல்பாக இருக்கலாம்.அல்லது இந்நாவலின் உணர்வுபூர்வமான தேவைக்கேற்ப விடுபட்டதாக இருக்கலாம்.

பெரும்பாலும் வசை, புலம்பல் என்ற அளவிலேயே உரையாடல்கள் நிகழ்கின்றன என்பது இந்நாவலில் வாசகன் கவனிக்க வேண்டியது. இம்மக்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான தடையம் இது. மகிழ்ந்துபேச மிகக் குறைவாகவே இருக்கும் வாழ்க்கை. இன்பம் என்பது உழைப்பு எளிய உணவு இரண்டிலும் அடங்கிவிடுகிறது. அஞ்சலையின் மொத்த வாழ்விலேயே வள்ளி மட்டுமே அவளுக்கு மகிழ்வுடன் உரையாட ஏற்ற ஒரே துணையாக இருக்கிறாள்

உரையாடல்கள் செறிவில்லாத்து இருக்கும் இந்நாவலில் மிக அபூர்வமாகவே ஆழம் வெளிப்படும் பகுதிகள் உருவாகின்றன. இந்நாவலின் இயல்புவாதக் கட்டமைப்புக்குள் ஆழமாகச் சிந்திக்கும் ஒருமனிதர் வர வாய்ப்பில்லை. சாத்தியமான ஆழம் என்பதே அனுபவம் முதிர்ந்து உருவாகும் ஆழமே. இரு இடங்களைச் சொல்லலாம். தொளாரில் அஞ்சலையிடம் அவள் அக்காவுக்கும் கொழுந்தனுக்குமான உறவைப்பற்றிச் சொல்லும் பாட்டி ”நீ செவப்புத்தோலைப்பாத்து ஏமாந்துட்ட எம்மா. கறுப்புத்தான் நமக்குச் சொந்தம். இது ஊர ஏமாத்துற செவப்பு…. செவப்புகூட ஒருநாள் வெயிலுபட்டா கறுப்பாவும். கறுப்பு எண்ணைக்குமே செவப்பாவாது…” என்கிறாள்.

இதேபோல இன்னொரு இடம் இறுதியில் பாக்கியம் அஞ்சலையிடம் சொல்லும் கிட்டத்தட்ட கடைசி உரையாடல். ”அதுக்குல்லாம் யாரைச் சொல்லியும் குத்தமில்லை. எல்லாம் ஒன்னாலத்தான். நல்லதோ கெட்டதோ அவன்கிட்டயே இருந்திருந்தேன்னா இப்டி நடக்குமா?வெளிய வந்துட்ட. வந்த எடத்தில ஒத வாங்கினாலும் அடி வாங்கினாலும் நம்ம கையில புள்ள இருக்குத இத தூக்கிட்டு வராம இருந்திருக்கணும்…அதுவும் இல்ல. பழையபடி வேப்பம்பழமா இருந்தவன் பெலாப்பழமா இனிக்குதான்னு அவன் கிட்ட போயி ரெண்டு பெத்துக்கிட்ட”

அஞ்சலையின் முக்கியமான சிக்கலை அம்மா இங்கே தொட்டு விடுகிறாள். வாழ்க்கையை உறுதியாக எதிர்கொள்ளாமல் சட்டென்று உடைந்துபோய் நழுவி ஓடிவிடுவதே அவள் மீண்டும் மீண்டும் செய்வது. கடைசியில் அவள் கொள்ளும் தற்கொலைமுயற்சிகூட ஒரு தப்பி ஓட்டமே. ஆனால் நிலா அப்படி இல்லை. நாவலின் இறுதியில் அவள் சொல்லும் சொற்களில் திடமாக முடிவெடுத்து நின்று எதிர்கொள்ளும் மன ஆற்றல் தெரிகிறது.

கார்குடல் ,மணக்கொல்லை, தொளார் என மூன்று ஊர்களையும் அதிகமாக விவரிக்காமலேயே வேறுபடுத்திக் காட்டுகிறார் கண்மணி குணசேகரன். வயலும் நீரும் நிறைந்த கார்குடல், முந்திரிக்காடுகள் மண்டிய மணக்கொல்லை, நகர்சார் ஊரான தொளார் என இயற்கை மக்களின் இயல்பு அனைத்துமெ திட்டவட்டமாக மாறுபடுகின்றன. நிலக்காட்சிகளை தீட்டுவதில் பருவ மாறுதல்களைச் சொல்வதில் ஆர்வம் காட்டாத சித்தரிப்பு முறை இது. கதாபாத்திரங்களின் கண்வழியாக தெரியும் தகவல்களே அச்சித்திரங்களை எளிமையாக வாசக மனத்தில் உருவாக்குகின்றன.

@@

கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையை கண்ட அனுபவத்தை அளிப்பதே இயல்புவாதத்தின் கலை. பரிசீலனை அல்ல. வரலாற்றில் வைத்துப் பார்த்தல் அல்ல. உட்புகுந்து அறிதல் கூட அல்ல. ஆசிரியர் ‘இல்லாமலேயே’ நிகழும் கூறல் அது. உண்மையான வாழ்க்கை எப்போதுமே முடிவுகளும் பதில்களும் அற்றது. அறியும்தோறும் விரிவது. அவ்வனுபவத்தை அளிக்கையில் இயல்புவாத நாவல் கலைவெற்றி கொள்கிறது. அஞ்சலை அப்படிப்பட்ட வெற்றிகரமான இலக்கிய ஆக்கம்.

[அஞ்சலை. நாவல். கண்மணி குணசேகரன். தமிழினி பிரசுரம்.சென்னை]

முந்தைய கட்டுரைமண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் – நாஞ்சில் நாடனின் கலை
அடுத்த கட்டுரைசிகரத்தில் நிற்கும் ஆளுமை