காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-3, ஜெயமோகன்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]

[ 5  ]

[தொடர்ச்சி ]விக்ரமாதித்யனின் கவிதைகள் வழியாகச் செல்லும்போது அதிலிருக்கும் விந்தையானதோர் ஆன்மீக மறுப்பு வாசகர்களின் கவனத்துக்கு வந்திருக்கலாம். ஒரு நல்ல வாசகர் ஏராளமான கவிதைகளை நினைவில் கொள்வார். உலகுகடந்த அனைத்தையும், உன்னதமெனக் கூறப்பட்ட அனைத்தையும் மறுப்பவை என பல வரிகள் அவர் கவிதைகளில் உள்ளன. மெய்மையை, சாராம்சமான உண்மையை, அன்றாடம் கடந்த நிலையைக் கூட எள்ளி நகையாடி மறுக்கும் வரிகள் உள்ளன. ’முந்நூறு வார்த்தைகள் போதும் முழுதாய் வாழ்ந்து முடிக்க’ என்னும் பிரக்ஞையே அவருடைய உலகப் புரிதல். தன்னை வார்த்தைகளின் காட்டில் வழிதவறியவன் என்று உணர்வது அவருடைய தன்னிலையறிதல்.

தமிழ்க்கவிதையுலகில் மிக அரிதானது இந்த தூய உலகியல். ஏனென்றால் தன்னளவில் கவிதை என்பதே உலகியலுக்கு அப்பாற்பட்டது. தமிழ்க்கவிஞனோ முற்றிலும் உலகியலில் ஆழ்ந்துகிடக்கும் தமிழ்ச்சூழலில் இருந்து கசந்து வெளியேறியவன். தமிழின் இளங்கவிஞர்கள் அனைவரிடமும் ஒருவகை ‘போடாங்’ மனநிலை இருக்கும். நான் – நீங்கள் என்னும் இருமை இருக்கும். தன்னை ஒரு தூய நிலையில், விலகியநிலையில், அசாதாரணமான நிலையில் வைத்துக்கொள்வது கவிஞர்களின் இயல்பு. அங்கிருந்துகொண்டே அவர்கள் உறவுகளை, அரசியலை, அன்றாட உணர்வுகளை பார்க்கிறார்கள். மதத்தை, இயற்கையை, தத்துவத்தை அணுகுகிறார்கள்.

இந்தப் புள்ளியில் நின்றுகொண்டு தமிழ் நவீனக்கவிஞர்கள் ‘நான்’ ‘என்’ என எழுதிய வரிகளை நினைவுகூருங்கள். அவர்களின் அதீதநிலைகளை கணக்கிலெடுங்கள். தற்கொலை பற்றி எழுதும்போதும், சாவு பற்றி எழுதும்போதும்கூட தனது அசாதாரணநிலையையே கவிஞர்கள் முன்வைக்கிறார்கள். இந்தச் சூழலில் போலியாக அன்றி, பணிவின் வெளிப்பாடாக அன்றி, இயல்பாகவே சாமானியனின் குரலாக, முற்றிலும் உலகியலின் குரலாக, அன்றாடத்தில் இருந்து ஒலிப்பதாக எழும் விக்ரமாதித்யனின் வரிகள் மிகமிக அரிதானவை. அவை அன்றாடம் கடந்த அனைத்தையும் மறுக்கின்றன. ஐயம்கொள்கின்றன. அரிதான, உன்னதமான எதையும் அவை ஏற்பதில்லை.

”உண்ணுங்கள், குடியுங்கள், கூடுங்கள், செத்து மறையுங்கள், இங்கு தேடவோ எய்தவோ பிறிதொன்றுமில்லை” என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் வரிகள் விக்ரமாதித்யன் எழுதுபவை. அவர் கவிதைகளில் இருந்து அத்தகைய வரிகள் இக்கணம் எண்ணும்போது எழுந்து எழுந்து வருகின்றன.  ”வானமென்றால்
நட்சத்திரங்கள் உண்டு,பூமியெனில் புல்பூண்டுகள்” என்று ஒலிக்கும் இன்றைய சார்வாகனின் அறைகூவல். “நாமெல்லாம் முதலாளி மனசுக்கு பிடித்ததைப் பேசும் மத்தியவர்க்க ஜாலக்காரர்கள்” என்ற தன்பழிப்பு. அல்லது ”வெட்டவெளி பொட்டல் நிஜமில்லையோ” என்னும் அகத்தயக்கம். முச்சந்தியில் சவுக்கால் தன்னைத் தானே அறைந்து கொள்ளும் வித்தைக்காரனின் வீம்புடன் விக்ரமாதித்யன் தனக்குத்தானே நான் சாமானியன், உலகியலில் உழல்பவன் என்று சொல்லிக் கொள்கிறார்.

அவருடைய கவிதையுலகில் இருந்து நாம் தொட்டெடுப்பது எப்போதும்  உலகியலை நோக்கிப் பேசும் ஒரு  கவிஞனை. இக்கவிதைகளின் உலகிலிருந்து நாம் தேர்வு செய்யக்கூடும் கவிதைகள் எல்லாமே உலகியலைக் கொண்டாடும் வரிகள் கொண்டவை. நல்ல தோசையை, கர்லான் மெத்தையை, துவைத்து அழுக்கு நீக்கப்பட்ட வேட்டியைக் கொண்டாடுபவை. எளிய குடும்பத்தை ,அல்லலற்ற அன்றாட வாழ்க்கையை வியந்தோதுபவை. சரிதான், மனிதனுக்கு வேறென்ன வேண்டும் என்று ஆதுரத்துடன் சொல்லிக் கொள்ளும் வரிகள். ”வெயில் காயும்,மழை புரட்டிப் போடும்
அல்பப்புழுக்களும் வாழ்ந்து கொண்டிருக்காமல் இல்லை” என்று தன் வாழ்க்கையை நிறுத்து நோக்கும் வரிகள்.

அதே விக்ரமாதித்யன் கவிதைகளில், “இதுவா வாழ்க்கை? இதன் பொருட்டா மானுடன் படைக்கப்பட்டிருக்கிறான்?” என்று பதைப்பனவற்றையும் பார்க்கலாம். அனைத்து அன்றாட இன்பங்களையும் பட்டியலிட்டுக் கொண்டு சென்று “ஆனாலும் கொடுமை ஆயிரங்கால வாழ்க்கை” என்று அலுத்துக் கொள்ளும் விக்ரமாதித்யன் “ஜீவராசிகள் ரத்தம்சிந்தக்கூடாது. தாமிரபரணி வற்றினால் தீ” என்று கண்டடைகிறது.

ஏற்கனவே சொன்னது போல, இல்லம் திரும்புதலும், இல்லம் துறத்தலுமாக ஊசலாடும் இந்தக் கவிதை உலகில் இரண்டுமே இயல்பாக இருக்கிறது. “கவிஞர்கள் ஆவதில்லை குமாஸ்தாக்கள்” என்று சொல்லும் விக்ரமாதித்யன், இனிய வாழ்வு என்று காட்டும் அனைத்தும் குமாஸ்தா வாழ்க்கை என்பது எவ்வளவு பெரிய முரண் என்பதை உணர்பவர்கள், இக்கவிஞன் உலகில் ஓயாது ஆடும் அந்த ஊசலை உணர்ந்து கொண்டவர்கள். விட்டுவிலகிப்போன கசப்பு,விடவே முடியாத விருப்பு என அலைபாயும் வாழ்க்கை அவர் காட்டுவது

வலை

பின்னுகின்றன சிலந்திகள்

இரை

சேகரிக்கின்றன எறும்புகள்

வாழ்ந்து

கொண்டிருக்கிறார்கள் ஜனங்கள்

பெய்யும் மழைக்கேற்ப

விளையும் நிலம்

கவிஞன் சாம்பல் கரைக்க

கங்கையும் காணாது குமரியும் போதாது !

ஆனால் விக்ரமாதித்யனின் கவிதைகளில் வெளிப்படும் ஆன்மிகமான ஒரு தளம் அதை மேலும் ஆழம் கொண்டதாக ஆக்குகிறது. ஆனால் அதுவும் உலகியலுக்குள் அமைந்த ஆன்மிகமே. மெய்த்தேடல் என்பது ஒருவர் தன் இருப்பை உசாவி, அதைப் பொருள்கொள்ளும்படியாகப் பிரபஞ்சத்துடன் பொருத்திக் கொள்வது. இப்பிரபஞ்சத்திற்கு இருக்கும் மாபெரும் இருத்தல் பொருளுடன் தன் இருத்தலின் பொருளும் இணையும் ஓர் இசைவை அவன் கண்டடைவது. தான் என்று உணர்கையிலேயே அனைத்தும் என்று உணர்வது. அது என உணர்வதையே தான் என அறிவது. அதையே தரிசனம் என சொல்கிறோம். அதை கலையென்றும் கவிதையென்றும் அழகுறச் செய்யவும் ஆகும்.

அம்முயற்சிகள் அனைத்தையுமே மிக எளிதாக இடக்கையால் தட்டி அகற்றும் விக்ரமாதித்யனை நாம் அவர் கவிதைகளில் காண்கிறோம். அவை அனைத்தும் இங்குள்ள அன்றாடத்தின் மேல் போடப்படும் பாவனைகள் மட்டுமே என கவிஞர் எண்ணுகிறார். வெவ்வேறு கவிதைகளில் பிரபஞ்சப்பொருளை, இயற்கையின் அருளை நாடும் உள எழுச்சிகளை விக்ரமாதித்யன் கேலி செய்வதை, மறுப்பதைக் காண்கிறோம். அவற்றுக்கு நான் வாழும் இந்த தெருவில், இந்த ஒண்டுக்குடித்தன வாழ்வில் என்ன பொருள் என்கிறார். “மாயக்கவிதை எழுத மற்ற ஆளைப்பார். நான் நொம்பலப்பட்ட ஆத்மா” என்கிறார்.

தமிழ் புதுக்கவிதையில் நவீன ஆன்மீக விளக்க உரையாளர்களின் நேரடியான வரிகளையோ அவ்வரிகளின் பிறிதாக்கங்களையோ, நிழல் வடிவங்களையோ தொடர்ந்து காண முடியும். ஓஷோ தமிழ்க் கவிதைகளில் எங்குமென நிறைந்திருக்கும் ஒருவர். அடுத்தபடியாக ஜெ.கிருஷ்ணமூர்த்தி. ஜென் கவிதைகள் வழியாக பௌத்தம். ஜரோப்பிய மாற்று ஆன்மீக சிந்தனையாளர்கள் குர்ஜீஃப், கலீல் கிப்ரான். அத்தகைய எவருடைய ஒரு வரி கூட நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பிண்ணனி விசையாகவோ நிலை கொள்ளும் கவிதை இவர் படைப்புலகில் இல்லை. ஒரு வேளை தமிழில் அவ்வாறு முற்றிலும் அவ்வாறு எடுத்து அகற்றி வைக்கப்பட வேண்டிய கவிதைகள் விக்ரமாதித்யனுடையவை.

முற்றிலும் உலகியல் சார்ந்த பிறிதொரு கவிஞன் தமிழில் உண்டா என்று எண்ணி எண்ணிப் பார்க்கிறேன். விக்ரமாதித்யன் உலகுடன் அவருக்கு இணையாக ஒப்பிடத்தக்க தகுதி கொண்ட தமிழ்ப் பெருங்கவிஞர்களை நினைத்துப் பார்க்கிறேன் – தேவதேவன், தேவதச்சன், அபி. எவரும் இல்லையென்றே தோன்றுகிறது. ஒருவேளை விக்ரமாதித்யனைத் தனித்துக் காட்டுவதும் தமிழ்க்கவிகளில் அவருடைய இடத்தை திரும்பத் திரும்ப அடிக்கோடிடுவதும் இந்த சமரசமற்ற உலகியல் தன்மைதான். இந்த ஆன்மீக மறுப்பு எனச் சொல்லத்தக்க உலகியல் தன்மை விக்ரமாதித்யனை கவிதை வாசகர்களிடையே ஏற்பும் மறுப்பும் கொண்டவராக ஆக்குகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு விக்ரமாதித்யனைப் பற்றி சாரு நிவேதிதா எழுதிய போது ’திரும்பத் திரும்ப சோறும் வேட்டியும் வேண்டும் என்பற்கு அப்பால் வேறு எதுவும் சொல்வதற்கு இல்லாதவர்” என்றார். அது ஒரு இழித்துரைத்தல் என்றாலும் கூட விக்ரமாதித்யனை வேறொரு கோணத்தில் அடையாளம் காண்பதற்கு உதவும். ”தாமிரபரணிப் பக்கத்தில் இருந்தால் சரி.தாய் அண்டையிலிருந்தால்
போதும். துணைவி கூட இருந்தால் நல்லது.பிளைகளோடு வாழ்ந்தால் சந்தோஷம்
கோயிலுக்குக் கிட்டத்தில் மொழிக்கு நெருக்கத்தில் இருப்பின் விசேஷம்” என்றே அவர் கவிதை ஏங்குகிறது. அங்கிருந்து எழுந்து “நெல்லையப்பருக்கு இல்லையென்றாலும் காந்திமதி தாய்க்குப் புரியாதா கவிமனசு” என தன்னை அடையாளம் காண்கிறது. அவருடைய ஆன்மிகம் அதுவே.  சோறென்றும் துணியென்றும் வந்து நின்றிருக்கும் ஆன்மிகம் அவருடையது. உலகியல் என உருமறைத்து வந்து நிற்கும் ஆன்மீகம்.

இந்த உருமாற்றம் நிகழ்ந்தது சோழர் காலத்தில் என்று சொல்வார்கள். எளிய மார்க்சிய விமர்சகர்கள் சோமாஸ்கந்தர் என்னும் சிலையின் உருவகம் தோன்றியது சோழர் காலத்தில் என்றும், அதற்கு அரசியல் பொருளியல் காரணங்கள் உள்ளன என்றும் சொல்வார்கள். உமையுடன் அமர்ந்திருக்கும் சிவன், முருகனும் கணபதியும் அமர்ந்திருக்க குடும்பத்துடன் அமர்ந்திருக்கும் அம்மையப்பர். சிலை வடிவில் தமிழகம் முழுக்க செல்வாக்கு செலுத்தும் கருதுகோள் அது. சைவ மரபில் காணபத்யம், கௌமாரம், சாக்தம் ஆகியவை இணைந்ததைக்   காட்டுகின்றன அச்சிலைகள். அவை ஓர் இலட்சிய குடும்ப உருவகத்தை தமிழகத்துக்கு அளிக்கின்றன. “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என மதத்தை மறு சமையல் செய்து அளிக்கின்றன. அவ்வண்ணம் மறு அமைப்பு செய்யப்பட்ட பிறகே சைவம் பெருமதமாகியது என்பது இயந்திரவாத மார்க்சியத்தின் கொள்கைகளில் ஒன்று.

விக்ரமாதித்யனின் சைவம் என்பது சோமாஸ்கந்தரின் சைவம் என்று சொல்லலாம். அவர் உலகில் அம்மையும் அப்பனும் வீற்றிருக்கிறார்கள். அவர்களுக்கிடையே ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் உலகியல் சண்டைகளும் சச்சரவுகளும் இருக்கின்றன. அம்மைக்கு அப்பன் ஆடிக் காட்டுகிறான். அம்மை அரவணைத்து வைத்திருக்கிறாள். கடலைக் கரை தழுவி நிறுத்தியிருப்பது போல. திரும்பத் திரும்ப இந்த தெய்வக் குடும்பத்திற்கு விக்ரமாதித்யன் வந்து சேர்கிறார். அவனுடைய அலகிலா விளையாட்டோ, அவளுடைய சக்திப்பெருக்கோ அவர் கவிதைகளில் இல்லை. ‘எங்கெங்கு காணிணும் சக்தியடா’ என்றும் ‘நோக்க நோக்கக் களியாட்டம்’ என்றும் அவர் கவிதை பரவசம் கொள்வதில்லை.

இன்னொரு வாசிப்பில், இல்லாமலாகிப்போன தன் குடும்பத்திற்கு நிகராக ஒரு தெய்வ குடும்பத்தைக் கொண்டு வந்து வைக்கிறாரோ என்று கூடத் தோன்றும். திரிந்து கசந்து போன அன்னைக்குப் பதிலாக ஒருபோதும் திரியாத பாற்கடலாகிய உமையை எண்ணிக் கொள்கிறாரோ என்று தோன்றுகிறது. கைவிட்ட தந்தைக்கு பதிலாக அம்மைக்கு அடங்கி அவள் சொல்லில் அமைந்த தந்தையை கண்டடைகிறாரா? மைந்தன் என சென்று நிற்கும் ஒரு மகத்தான இல்லம் மட்டுமே அவருடைய கோயில். அம்மையும் அப்பனும் அங்கே என்றும் வற்றாத அன்புடன் அமர்ந்திருக்கிறார்கள். எத்தனை கவிதைகள் நினைவில் எழுகின்றன. அங்கே இருப்பவர்கள் உலகுபுரக்கும் சிவசக்தியர் அல்ல. நெல்லையை ஆளும் நெல்லையப்பனும் காந்திமதியும்தான்.

விக்ரமாதித்யன் ஆலயங்கள் தோறும் சென்று கொண்டிருக்கிறார். சித்தர் போல பல ஆலயங்களின் வாசல்களில் அவர் நின்றிருக்கிறார். நள்ளிரவில் அழைத்து அவரிடம் ஆலயங்கள் பற்றிய ஐயங்களை நான் கேட்டிருக்கிறேன். முழுப்போதையிலும் கூட எந்த ஆலயத்தில் எந்தப் பூசை, எந்த ஆகமம், என்ன சிறப்பென்று அவரால் சொல்ல முடியும். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை நவபாஷாணம் பற்றி ஒரு ஐயத்தை அவரிடம் கேட்டது நினைவிருக்கிறது. அப்போது அவருடைய நா குழறிக் கொண்டிருந்தது. ஆயினும் அவர் சொன்னது எந்த மத அறிஞனும் சொல்லும் அளவிற்கு கூரிய சரியான விளக்கம்.

சடங்குகள், நேரங்கள் ஆகியவை அவருடைய மதத்தின் அடிப்படை. இன்று அவர் தேர்ந்த சோதிடர் என்கிறார்கள். ஆனால் ஓதுவார் மரபிருந்த போதிலும் கூட மிகக் குறைவாகவே நேரடியாக தேவார திருவாசகங்களை அவர் எகவிதையில் டுத்தாண்டிருக்கிறார். அவற்றின் சாயல் உள்ள வரிகளை எங்கேனும் தேடிப் பிடிக்க முடியுமோ என்னவோ! ஆனால் பகடியாகவோ மறுப்பாகவோ சைவக் குரவர்களைக் குறிப்பிட்டிருக்கிறாரே ஒழிய போற்றிச் சொன்னதில்லை. சைவராக இருப்பினும் ஆண்டாள் மேல் அவருக்கு அணுக்கமும் பிரியமும் இருக்கிறது. அவருடைய மதம் என்பது மண்ணில் எழும் வானம்தான். இரு துகள்களுக்கு இடையே வானம்தான் இருக்கிறது என்று நவீன கவிஞன் கண்டடைந்த விவேகம் அவரை ஆள்கிறது.

[  6 ]

 

விக்ரமாதித்யன் கவிதைகள் அவற்றின் நேரடி எளிமையினாலேயே அடித்தள மக்களிடம் சென்று சேர்ந்திருப்பதைக் காண்கிறேன். அவருக்கு விருது கொடுத்த அறிவிப்பு வந்த பிறகு வந்த கடிதங்கள் பெரும்பாலானவற்றை நான் திரும்பி எழுதித்தான் பிரசுரிக்க முடிந்தது. அந்த அளவுக்கு பண்படாத உரைநடையில் எழுதப்பட்டவை. பல கடிதங்கள் பேசி பதிவுசெய்து அனுப்பப்பட்டவை. அவற்றின் வாசகர்கள் எளிய பாத்திர வியாபாரிகள், கமிஷன் மண்டியில் இருப்பவர்கள். தன் கவிதையை அவர் கிட்டதட்ட விசிறியடித்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.
“உப்புக்கும் பாடி புளிக்கும் ஒரு கவிதை ஒப்பிக்கும் எந்தன் உளம்” என்று சொன்ன தமிழ்ப் பாணினி மரபு அது.

விக்ரமாதித்யன் ஐம்பது பிரதிகள் மட்டுமே அச்சிடபடக்கூடிய சிறிய இதழ்களில் எழுதியிருக்கிறார். மரபுக் கவிதை இதழ்களில் எழுதியிருக்கிறார். துப்பறியும் கதைகளை வெளியிடும் பதிப்பகங்களில் கவிதைகளைக் கொண்டு சென்று கொடுத்திருக்கிறார். நாலாந்தர கிசுகிசு பத்திரிக்கைகளின் பின்னட்டையில் அவர் கவிதைகள் பிரசுரமாகி இருக்கின்றன. ஒரு வகையில் கவிதைக்கு சிறுமை சேர்க்கிறார் என்று சொல்லலாம். தகுதியற்ற இடத்தில் கவிதைகளைக் கொண்டு கொடுக்கிறார் எனலாம். ஆனால் அவர் கவிதைகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருந்திருக்கின்றன.

கவிதைகளைத் திரும்ப எழுதியுள்ளீர்களா என்ற கேள்விக்கு, அந்த நேரத்தில் இன்னொரு கவிதை எழுதலாமே என்று அவர் பதில் சொன்னார். திரும்பத் திரும்ப செம்மைநோக்கி எழுதுவதல்ல அவருடைய வழி. அவர் எழுதுவது ஒரு வெளிப்பாடு மட்டும்தான். மொழியை வைத்துக்கொண்டு தனக்குள் நுண்ணிய ஒன்றைத் தேடிச் செல்பவர் அல்ல அவர். தனக்குள் ஒன்று தோன்றினால் அது அக்கணமே மொழியென வெளியேறிவிட வேண்டுமென எண்ணுபவர். வெளியேறிவிட்டவற்றில் இருந்து தான் வெளியேறி செல்பவர். ஆகவே விக்ரமாதித்யன் எழுதிக் குவித்திருக்கிறார்.

பெருமழை பெய்தால் மட்டுமே ஊறும் கிணறுகள் போன்றவர்கள் நமது பாமர வாசகர்கள். ஆகவே தமிழ்க் கவிஞர்களில் அவர்களையும் சென்றடைந்தவர் அவர் ஒருவரே. அவர்களில் பலர் அவருடைய கவிதைகளை அருள்மொழிகளாகவே படித்திருக்கிறார்கள். மறைபொருளோ பண்பாட்டு நுண்பொருளோ அவர்களிடம் செல்வதில்லை. நேரடியாகவே வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் வரிகள் என வாசித்திருக்கிறார்கள்.

“என் அடுப்பில் நெருப்பில்லை எனினும் எங்கெங்கோ அடுப்புகளில் நெருப்பு எரியத்தான் செய்கிறது” என்னும் வரி தன்னை வாழ்நாளின் மிகப் பெரிய நம்பிக்கையாளனாகவும் நேர்நிலைப் பண்பு கொண்டவனாகவும் எவ்வண்ணம் மாற்றியது என்றும் ஒருவர் எழுதியிருந்தார். மேலும் மேலும் அவர் அதை சொல்லி அனுப்பியிருந்தார். அச்சொற்களைக் கேட்கும் போது முதல்முறையாக ஒரு தமிழ் நவீனக் கவிஞன் அந்த ஆழம் வரை சென்று சேர்ந்திருக்கிறான் என்ற எண்ணம் வந்தது. எவனோ ஒரு எளியவன் தன் வாழ்நாளுக்கு உரிய ஒரு வரியாக அவருடைய ஒன்றிரண்டு சொற்களைக் கொண்டு செல்ல முடிகிறது. சிறு வட்டத்துக்குள் தனக்குத்தானே படித்துக்கொண்டு தேங்கியிருக்கும் புதுக்கவிதையின் சுவர்களை உடைத்துக் கொண்டு அவர் வெளியேறி இருக்கிறார். அது தமிழில் எளிய நிகழ்வு அல்ல.

எந்த அணியும் இல்லாத அவருடைய வரிகள் கவிதையென எளியோருக்குத் தோன்றியிருக்கிறது என்பது அதைவிடப் பெரிய வியப்பு. அவற்றின் கூறுமுறையாலேயே அவை கவிதை என்று அவனுக்குத் தெரிகிறது. கவிஞன் என்று  அவரை எண்ணித் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்திருக்கிறவர்களுக்கே அவை கவிதையாகின்றன. ’சிறு தெய்வங்களை சுலபத்தில் வசியப்படுத்தி விடலாம்
பெருந்தெய்வம்தான் பிடிகொடுத்துத் தொலைக்காது’ என்னும் வரியை கவிதை என ஓர் எளிய வாசகன் எண்ணுவதும் அரிதான ஒரு நிகழ்வு.விக்ரமாதித்யன் தமிழில் நவீனக்கவிதையுலகு என திரண்டுள்ள மொழிச்சூழலை [ஒரு சிறு குமிழிதான் அது] கடந்து தமிழில் அடிப்படை அறிவும் வாழ்க்கையனுபவமும் கொண்ட எவரும் வாசிக்கத்தக்க, உள்வாங்கக்கூடிய ஒருவராக இருக்கிறார். தமிழ் நவீனக் கவிஞர்களிடையே விக்ரமாதித்யனிடம் மட்டுமே இப்பண்பு இருக்கிறது.

அவருடைய கவிதைகள் ஒழுக்கானவை, செறிவற்றவை என்னும் எண்ணம் நவீனக் கவிச்சூழலில் உள்ளது. செறிவு என்பதைக் கூறும்முறையில் மட்டுமல்ல உறுபொருளிலும் நாம் தேட இயலும். விக்ரமாதித்யனின் கவிதையில் செறிவு என்பது அவருடைய உளநிலையில் மட்டுமே உள்ளது. அவருடைய கூறுபொருள் எப்பொழுதுமே உலகியல் சார்ந்தது, நேரடியானது. அவருடைய மொழியோ பேச்சுவழக்குக்கு அருகே நிற்பது, வெளிப்படையானது. அக்கவிதைகள் வழியாக அவர் சுட்டும் பொருள் மட்டுமே செறிவானது. அவருடைய சொந்த வாழ்வனுபவங்களால் அடிக்கோடிடப்பட்டது அது. அவற்றை செறிவாக்கி, கவிதையாக்குவது அவருடைய ஆளுமை மட்டுமே.

லக்ஷ்மி மணிவண்ணன் ஒருமுறை உரையாடும் போது சொன்னார். அவருடைய கவிதைகளைப் பிறிதொருவர் எழுதியிருந்தால் அவை கவிதைகள் ஆகாது என்று. கவிதையை எழுதிவிட்டு அதனருகே நின்றிருக்கிறார் அவர். கவிதையைத் தன் வாழ்க்கையால் சூழ வளைத்து ஒரு பின்புல உலகை உருவாக்குகிறார். கவிதைக்கு விரிந்த அனுபவப் புலத்தை தன் வாழ்க்கையால் அவர் அளிக்கிறார். ஆகவே அவருடைய கவிதை என்பதனால் மட்டுமே அவை கவிதைகள்.

[மேலும்]

காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள் – ஜெயமோகன்1

காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-2, ஜெயமோகன்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது, கடந்த ஆண்டு…
அடுத்த கட்டுரைஜா.தீபா கடிதங்கள்-2