சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

தமிழில் கலைப்படம் எடுப்பது பற்றி எனக்கு போதிய நம்பிக்கை இல்லை, அதற்கான பார்வையாளர்கள் இங்கே இல்லை என்பதே என் எண்ணம். இங்கே முன்பு வந்த கலைப்படங்களுக்கு வந்த எதிர்வினைகளில் இருந்து அவ்வெண்ணத்தை அடைந்தேன்.

கேரளத்திலோ கர்நாடகத்திலோ மகாடாஷ்ட்ரத்திலோ வங்காளத்திலோ நிலைமை வேறு. அங்கே திரைப்பட இயக்கங்கள் அரைநூற்றாண்டுக்காலம் செயல்பட்டு பெரிய அடித்தளத்தை உருவாக்கியிருக்கின்றன.

தமிழகத்தில் விரைவான கதையோட்டம் கொண்ட வணிகப்படங்களுக்கும் ஓங்கிய குரல்கொண்ட பிரச்சாரப்படங்களுக்கும்தான் இன்றுவரை பார்வையாளர்கள் உள்ளனர். முதல் வகைமைக்கு இரண்டாம் வகைமையே எதிர்நிலையாக உள்ளது. விமர்சகர்களின் ரசனைநிலையும் இதுவே.

கலைப்படம் பார்ப்பதற்கான அடிப்படைத் தகுதி என்பது கண்களுக்கு ஆழ்மனதை ஒப்படைப்பது. கண்வழியாகவே அறிய முயல்வது. எண்ணங்களை தள்ளி நிறுத்துவது. அடுத்தது என்ன என்றோ, இப்படி இருக்குமோ என்றோ, இதுதான் என்றோ தாவும் சிந்தனைகளுக்கு இடம்கொடுக்காமல் காட்சிகளுக்கு ஒப்புக்கொடுப்பது. அதற்கான பயிற்சி இங்கே இல்லை.

ஆகவே என்னிடம் என் கதைகளை கலைப்படமாக்க விரும்புபவர்களிடம் வலுவாக மறுப்பு சொல்வதும், வணிகப்படம் எடுக்கும்படி அறிவுரைப்பதுமே என் வழக்கம். வசந்த் சாய் சென்ற ஆண்டுகளில் பல கதைகளை படமாக்க முன்வந்திருக்கிறார். உறுதியாக மறுத்திருக்கிறேன்.

ஆயினும் நம்பிக்கையுடன் கலைப்படம் எடுப்பவர்கள் மேல் பெரும் மதிப்பும் வியப்பும்தான் எனக்கு உள்ளது. வசந்த் சாய் அசோகமித்திரன், ஆதவன் கதைகளுடன் என் கதையையும் படமாக எடுக்க எண்ணியபோது நான் எவ்வகையிலும் அதில் ஈடுபடவில்லை. அனுமதி அளித்ததுடன் சரி. படத்தை நான் பார்த்தது திருவனந்தபுரம் திரைவிழாவில். படத்திற்கு அரங்கில் எழுந்த தன்னிச்சையான கைத்தட்டலும் வரவேற்பும் மகிழ்ச்சி அளித்தன.

பல்வேறு சர்வதேச அரங்குகளில் விருதுகளைப் பெற்றபின் இப்போது ஓடிடி தளத்தில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் வெளியாகியிருக்கிறது. இயல்புவாத [நாச்சுரலிச] அழகியல் கொண்ட படம். முதல் கதையில் வசந்த் சாய் காட்டும் அந்த இடுங்கலான சென்னைக் குடித்தனம் நாம் சாதாரணமாகப் பார்ப்பது. ஆனால் அதை திரையில் பார்க்கையில் மூச்சுத்திணறல் எழச்செய்கிறது. என்ன ஒரு எலிவாழ்க்கை என்னும் திகைப்பு உருவாகிறது. ஒவ்வொரு படத்திலும் அந்தக் காட்சிகளே அதன் சாராம்சத்தை உணர்த்துகின்றன. அது அதுதான் இத்தகைய படங்களின் அழகியல்.

நண்பர்கள் பார்க்கவேண்டும் என்று கோருகிறேன்.

மதிப்புரைகள்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் – மஞ்ஞிமா தாஸ்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்-  விஷால் மேனன்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் கே.பாலகுமார்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திங்கள் மேனோன்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் இந்து மதிப்புரை

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் க விக்ரம்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்- பிஞ்ச்ட்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் பரத்வாஜ் ரங்கன்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் தமிழ் ஹிந்து

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் மாத்ருபூமி

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் டிஎன்என் 

 

 

முந்தைய கட்டுரைகவிச்சித்தனின் அகவெளிக் குரல்-சுபஸ்ரீ
அடுத்த கட்டுரைகண்மணி குணசேகரனும் சாதியும்