சூல்-கதைகளால் தொடுக்கப்பட்ட கதை 

சூல் வாங்க

[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]

அன்புள்ள ஆசிரியருக்கு,

எழுத்தாளர் சோ.தர்மனின் தூர்வை நூலை வாசித்திருந்ததால், சாகித்ய அகாடமி விருது  பெற்ற அவரது மற்றொரு நாவலான “சூல்” நூலை தயக்கமின்றி இரண்டு வருடங்களுக்கு முன்பே வாங்கிவிட்டேன். விருது பெற்றதைப் பற்றிய செய்திகளின் போது சூல் கொண்ட தாய்போல இருந்த கண்மாய் எப்படி வரண்டுபோனது என்பதைப் பற்றிப் பேசும் நாவல் என திரும்பத் திரும்ப கூறப்பட்டதில் அதன் பேசுபொருளில் சிறிய அலுப்பு ஏற்பட்டு வாசிக்காமலேயே இருந்தது. வேறு நூல்களை எடுக்கும் ஒவ்வொரு முறையும் என்னை எப்போது வாசிப்பாய் என இந்நூல் ஏக்கமாய் கேட்பதுபோலவே இருக்கும். தயக்கத்தை உடைத்து நூலை வாசிக்க ஆரம்பித்தபின்தான் தள்ளிப்போட்டது தவறென்று புரிந்தது.

“சூல்’ என்ற இந்நூல் நிறை கண்மாயைப் பற்றிக் கூறுவதென்பது அந்தக் கண்மாயை மட்டுமல்ல அதை அண்டியிருக்கும் இருளக்குடி என்ற ஊரையும். ஊரைப் பற்றி என்றால் ஊரில் வாழும் மக்களையும். மக்களின் வாழ்வை பலப்பல கதைகளின் வழியே கூறுகிறார் சோ.தர்மன்.

கி.ராவின் கோபல்ல கிராமம் போல,  ஒரு ஊரில் வாழும் மக்களின் வாழ்வைக் கூறும் நாவல்கள் பல உண்டு. ஆனால் அவற்றிலிருந்து இந்நூல் மாறுபடுவது அதன் கூறு முறையினால். ஒன்றுடன் ஒன்று இணைந்தும் விலகியும் நிற்கும் வெவ்வேறு வகையான கதைகளின் வாயிலாக இருளக்குடி மக்களின் வாழ்வைக் காட்டுகிறார் ஆசிரியர். இன்றும் நம் கிராமங்களில் புழங்கும் கதைகளை வெறும் கதைகள்தானே என எளிமையாகக் கடப்பதை தவறென சுட்டிக்காட்டி, இம்மாதியான கதைளின்  முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.

இயல்பாக நடந்தது, புனைவுடன் கூடியது, புராணக் கதை, தொன்மக் கதை, வரலாற்றுக் கதை என எத்தனை விதக் கதைகளுண்டோ அத்தனை வகைக் கதைகளையும் கூறுகிறார்.  அய்யனாரப்பன் தன்னால் தனியாக காவல் காக்க முடியாததால் கண்மாயின் மடைக்குடும்பனை தன்னிடம் அழைத்துக் கொண்டு அவனை கருப்பன் என்ற சாமியாக தன்னருகிலேயே அமர்த்திக் கொள்கிறான். சற்று யோசித்தால் அய்யனாரப்பனே  முன்பு காவல்காரனாக இருந்தவன்தான் என்பது புரியும். இதேபோல கள்ளன் சாமி, குரவன் சாமி என மக்களால் வணங்கப்படுபவர்களின் கதைகளையும் கூறுகிறார். இந்த ஒவ்வொரு கதையுமே அவ்வூரில் வாழ்ந்தவரின் வாழ்க்கை.

வெற்றிலை கொடிக்கால் போட்டு விளைவித்த மகாலிங்கம் பிள்ளை பொய் சொல்லி தொழில் ரகசியம் அறிந்து வந்ததால் அகால மரணமடைகிறார். பின்பு அமைக்கப்படும் கொடிக்காப்பிள்ளை கோவிலில் சாமியாக இருந்து வயல்களை நாசமாக்கும் எலிகளையும் பூச்சிகளையும் அழித்து மக்களுக்கு அருள் பாலிக்கிறார்.

மனிதர்களின் சூல்களுக்கு மட்டுமில்லாமல் கால்நடைகளின் சூல்களையும் காத்து ரட்சிக்கும் மாதாயி மற்றும் உளிக் கருப்பனின் கதை, குமரிகளை ஏமாற்ற எண்ணும் குமாரர்களை நல்வழிப்படுத்த ஊருக்குள் நிலைத்துள்ள கதையாகும்.

எருமைகளையும் மரங்களையும் வளர்த்து, இருளக்குடி மக்களுக்கு மட்டுமில்லாமல் அந்த ஊரைக் கடந்து செல்பவர்களுக்கும் மோரும் நிழலும் தந்து  குளிர்விக்கிறாள்,  அவ்வூர் மக்களுக்கு வாழும் தெய்வம் போல் விளங்கும்  பிள்ளைப் பேறில்லாத சித்தம்மாள் என்கிற கொப்புளாயி.

மண் கலயங்களை உருவாக்கித் தரும்  செண்பக வேளாளர், தனது தச்சு வேலை மூலம் விவசாய ஆயதங்களை செம்மை செய்து தரும் தங்கையா ஆசாரி போன்றவர்களின் கதைகளைக் கூறுவதன் வழியே இருளக்குடியின் வாழ்க்கை முறையை துலங்கச் செய்கிறார் ஆசிரியர்.

அரண்மனையில் பணியாற்றிய   நங்கிரியானின் கதை, இக்காலத்திலும், கடமை தவறும் அரசு ஊழியர்கள்  எண்ணிக் கலங்கும் வண்ணம் உரைக்கப்பட்டுள்ளது. குற்றம் எது பாவம் எது என்பதைப் பற்றிய விளக்கமும், எதற்கு எது மாதிரியான தண்டனைகள் போன்ற விவரங்களும் ஆசிரியரின் வாழ்வனுபவத்தை உணர்த்துகிறது. பாவத்தைப் போக்க வாழ்த்துகளைப் பெற்றாக வேண்டுமென்ற பாடம் நிறைவளிக்கும் வண்ணம் உள்ளது. பாவத்தினால் நங்கிரியானுக்கும் அவன் பிள்ளைக்கும் பாதகம் விளைகிறது. பாவத்திலிருந்து விடுபட  நங்கிரியான் இயற்றும் பணி அவனுக்கு மட்டுமில்லாது இந்தப் பூமிக்கே பலன் தருவதாக அமைவது சிறப்பு.

பங்காளியின் மேல் உண்டான காழ்ப்பில் ஊருக்கும் ஊரிலிருக்கும் அத்தனை உயிர்களுக்கும் கேடு செய்யும் சித்தாண்டி மற்றும் அவன் மனைவி மயிலின் கதை மனதை கரைய வைக்கிறது. கோபத்தில் செய்யும் காரியம் எப்படி சரி செய்யமுடியாத பாவமாக உருமாறுகிறது என்பதை இந்தக் கதை காட்டுகிறது.

பட்டாளத்திலிருந்து விடுமுறைக்கு வந்த பயனார்ரெட்டியார் தன் வேட்டைத் துப்பாக்கியால் பயிரை மேய்ந்த ஆட்டைச் சுட்டுக் கொள்வதையும், அதனால் இரண்டு ஊர்களுக்குள் நடக்கும் பிரச்சனைகளையும் அதன் முடிவையும் விவரிக்கும் கதை மிக  சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கதையிலும் முன்னிறுத்தப்படும் பாவம் புண்ணியம் மற்றும் அறம் பற்றிய கருத்துகள் ஆசிரியர் சமூகத்திற்கு சொல்ல விரும்பியவை என்று தெளிவாகவே புரிகிறது. இதில் தவறேதும் இல்லை. ஆயினும், பண்டாரத்தான் பாத்திரம் கூறும் எதிர்கால நிகழ்வுகள் குறித்த அனுமானங்கள் துருத்திக் கொண்டு தெரிவதையும் குறிப்பிட வேண்டும்.

காக்கை ஏன் தலையைச் சாய்த்துப் பார்க்கிறது என்பதற்கு புராணக்கதை போன்று உலவும் கதையொன்றைக் கூறுகிறார். மிக நீண்ட, அனுமன் முனிக் கதை ஒன்றும் உள்ளது. முனியை சங்கில் அடைத்து, கொண்டு செல்லும் மாந்திரீகன் குஞ்ஞான் சந்திக்கும் பிரச்சனைகள் மிக விரிவாகக் கூறப்படுகிறது.

இந்நாவலில் தொடர்ச்சியாக வரும் கதை, கட்டபொம்முவுக்கு உதவி செய்ததால் பரிசாக பொன்னாபரணங்களைப் பெறும் பனையேறி எலியன் மற்றும் லாடம் கட்டும் ஆசாரி பிச்சையின் வாழ்க்கைதான். பொன் நகைகளை புதைத்து வைத்து காவல் காப்பதும் அதை அவர்களின் வாரிசுகளும் தொடர்வதும் நாவலின் பெரும் பகுதியாக வருகிறது. இவர்களின் வாரிசுகள் சுதந்திர இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தின் மூலம் கிராமத்தை கட்டுப்படுத்துவதையும் அதன் மூலம் கிராமத்தில் ஏற்படும் விளைவுகளையும் கூறுவதோடு நாவல் முடிவடைகிறது.

இந்தக் கதைகள் எல்லாமே தனித்தனியாக இருந்தாலும் இருளக்குடி என்ற ஒரு சரத்தால் பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு கதையில் ஆரம்பித்து அந்தக் கதைக்குள் மற்றொரு கதை திறப்பதும், உள்ளேயுள்ள கதை முடிந்தபின் முதல் கதை தொடர்ந்து, பின் முடிவதும் நல்ல வாசிப்பின்பத்தைத் தருகிறது.

கட்டப்பொம்முவின் கதை, ரெயில் வருவது போன்ற வரலாற்றுத் தகவல்களில் காலக் குழப்பம் தெரிந்தாலும்,  ஊரில் உள்ள பெரியவர் தன் நினைவில் இருந்து கூறும் கதையில் காலம் முன் பின் மாறி வருவதுபோல என்று எடுத்துக் கொள்ளலாம் என்றே எண்ணுகிறேன்.

மாந்திரீகன் குஞ்ஞானின் கதைதான், நீண்டு ஊருக்கு வெளியியேயும் சென்று நிகழ்வது சற்று விலக்கத்தை அளிக்கிறது.  நாவலின் தொடக்கத்தில் இருந்து வரும் நிதானம் மாறி, நாவலின் கடைசிப் பகுதியின் கதையோட்டம் மிக வேகமானதாக தோன்றுகிறது. ஆனாலும் இத்தனை நூற்றாண்டுகள் கால்நடையாகவும் மாட்டு வண்டியாகவும் இருந்த மக்களின் வாழ்க்கைப் பயணம் கடந்த ஐம்பதாண்டுகளில் மிக வேகமானதாக மாறியுள்ளதைப் போல கதாசிரியரும் கதையை விரைவு படுத்தியிருப்பதாகக் கொள்ளலாம். ஆனாலும் கிராமங்களில் நடந்த அந்தச் சிதைவு குறுகிய காலத்தில் நிகழ்ந்துவிட்டது என்பதும் யாராலும் மறுக்கமுடியாத உண்மைதானே.

விதவிதமான கதைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து ஊர் என்ற பொதுமைக்குள் தொடுக்கப்பட்ட பூமாலை போல அமைந்துள்ள சூல் நாவலை வாசித்து முடிக்கும்போது அது கூறும் அழிவின் தோற்றத்தை  முழுமையான உணர முடிகிறது. கி.ராவைப் போன்ற நல்ல கதை சொல்லி என சோ.தர்மனை தயங்காமல் கூறலாம்.

கா. சிவா 

சூல் -ஒரு கடிதம்


விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்

விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா

விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்

 

முந்தைய கட்டுரைமரக்கார் – இன்றைய வரலாற்றுப்பார்வை.
அடுத்த கட்டுரைபிழைத்தலும் வாழ்தலும்!