அன்பு ஜெ,
இன்று வெண்முரசு நீர்ச்சுடரின் 31ம் அத்தியாயம் வாசித்துக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம் பற்றிய தங்களின் சித்தரிப்பு அபாரமாக இருந்தது. நான் அதுவரை அதிமதுரத்தைச் சுவைத்தது இல்லை. நீர்க்கடனில் அதிமதுரம் உண்ட யுதிஷ்டிரன், சகதேவன், மற்றவர்கள் பற்றிய தங்களின் வர்ணனை மிகவும் என்னை ஈர்த்துவிட்டது. அத்தியாயத்தை முழுமையாகக்கூட வாசிக்காமல் அந்தப் பகுதியை மட்டும் வாசித்து விட்டு உடனே அதைச் சுவைத்துப்பார்த்துவிட வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட, உடனே அதை செயல்படுத்தியும் விட்டேன்.
நல்லவேலையாக நாட்டுமருந்து கடை எங்கள் இல்லத்திற்கு மிக அருகில்தான் இருக்கிறது. இருபது ரூபாய்க்கு மூன்று சிறு துண்டுகள் மட்டுமே கொடுத்தார்கள். கிடைத்தவரை சந்தோஷம் என்று அதிமதுரத்தை வாங்கி சுவை பார்த்துவிட்டேன். ச்சே! இத்தனை நாட்களாக இப்படி ஒரு சுவையை இழந்ததுவிட்டேன்! என்ற வருத்தம்தான் முதலில் ஏற்பட்டது. என்ன ஒரு இனிப்பு, அப்படி ஒரு இனிப்பை உடலின் உள்ளிருந்து சுரக்கும் ஒரு இனிப்பை எந்த இனிப்பிலுமே நான் சுவைத்தது இல்லை. இனிப்புகள் பொதுவாகவே நாக்கிலேயே தங்கிவிடுபவை உள்ளிருந்து அதன் சுவையை நம்மால் அறியமுடிவதில்லை. மற்ற சுவைபொருட்களான காரம், கசப்பு, துவர்ப்பு ஆகியவை அவ்வாறில்லை. அதனால்தான் இனிப்பு எவ்வளவு உண்டாலும் நமக்குப் போதவில்லைபோலும்.
ஆனால் அதிமதுரமோ அவ்வாறில்லை சுவைக்கும்போது கொஞ்சம்போல துவர்ப்பு தெரிந்தது நன்றாக அந்த வேரை மென்று முழுங்கிய ஓரிரு நிமிடங்களில் உள்ளிருந்து நாக்கிற்கு வந்த இனிமையை நன்றாக உணர முடிந்தது. சற்று நேரத்திலேயே நாக்கிலிருந்து உதடுகளில் இனிப்பை உணர முடிந்தது. சுவைக்க சுவைக்க மீண்டும் மீண்டும் ஊறி வந்துக்கொண்டிருப்பது போன்று…. மிக மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் குழந்தையாக மாறி நன்றாக சப்புக்கொட்டினேன் எனலாம். பொதுவாகவே இனிப்பு மீது எனக்கு அவ்வளவு ஆர்வம் இருப்பதில்லை. மிகவும் தேர்ந்தெடுத்த இனிப்பு வகைகளை மட்டுமே சாப்பிடும் பழக்கம் கொண்டவன். எனக்கே அதிமதுரம் இவ்வளவு பிடித்திருக்கிறது என்றால் இனிப்புப் பிரியர்களுக்கு கேட்கவே வேண்டாம்.
இந்த இனிப்பு ஊற ஊற மீண்டும் நீங்கள் விவரித்த அதிமுதரத்தின் பகுதியை வாசிக்க ஆரம்பித்தேன். சுவை தெரியாமல் வாசிப்பதற்கும் சுவை தெரிந்து அந்தச் சுவையுடன் அதை வாசிப்பதற்கும் ஆஹா அப்படியே முக்தவனத்தில் இருப்பது போன்றே உணர்ந்தேன். நீங்கள் எழுத்தில்கொண்டுவந்த அதிமதுரத்தின் இனிப்பு என் உடலிலிருந்து ஊறி சுவைக்க சுவைக்க வாசித்துச் சுவைத்தேன் எனலாம். அதிமதுரத்துடன் இன்றைய நாள் மிக அருமையாக உள்ளது.
அன்புடன்
ரா. பாலசுந்தர்
நீர்ச்சுடர் வாசிப்பு முனைவர் ப சரவணன்