கல்வி பற்றி மேலும்…

நமது கல்வி

அன்புள்ள ஜெ

கல்வி பற்றி உங்களுடைய இரு கட்டுரைகளை வாசித்தேன். முன்பும் தொடர்ச்சியாக தமிழகக் கல்வி பற்றி எழுதியிருக்கிறீர்கள். அதுவும் பள்ளிக்கல்வி பற்றி. நான் கொண்டிருக்கும் ஐயம் இது. நீங்கள் எழுதும்போதெல்லாம் கிராமப்புற, அரசுப்பள்ளிகளைப் பற்றி மட்டுமே எழுதுகிறீர்கள். அங்கே போட்டியைச் சந்திக்கத்தேவையான கல்விப்பயிற்சி அளிக்கப்படவேண்டும் என்று எழுதுகிறீர்கள். இன்று புகழ்பெற்றுள்ள விளையாட்டுவழிக் கல்வி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பலவகையான மாற்றுக்கல்வி முறைகள் இன்றைக்கு அறிமுகமாகியிருக்கின்றன. அவற்றைப் பற்றி உங்கள் மதிப்பீடு என்ன? இன்றைய கல்வி தன்னறிவை உருவாக்குவதாக உள்ளதா? சிந்திக்கவைக்கக்கூடியதாக உள்ளதா?

அத்துடன் ஒன்றுண்டு, இங்கே இன்றைக்கு தனியார்க் கல்விநிலையங்களில் அளிக்கப்படும் கல்வி என்பது அரசியல்நீக்கம் செய்யப்பட்டது. அரசுப்பள்ளிகளிலேயே அரசியலுணர்வு உருவாக முடியும். அதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

என்.ஆர். லட்சுமிபதி

 

அன்புள்ள லட்சுமிபதி,

நான் சொல்வன எவையும் என்னுடைய மண்டையோட்டங்கள் அல்ல. நேரடியாக பார்த்து எழுதுபவை. என்னுடைய இயல்பு என்பது முற்றிலும் நேரடியனுபவம் சார்ந்த நடைமுறைப்பார்வையே. அந்த நடைமுறைப் பார்வையில் இருந்து உருவாகும் இலட்சியவாதத்தையே நான் முன்வைப்பேன்.வெற்று இலட்சியப்பேச்சுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

விளையாட்டுவழிக் கல்வி கேரளத்தில் முழுமையான ஆரம்பக் கல்வித் திட்டம் [TPEP. Total Primari Education Poliicy] என்றபேரில் அறிமுகப்படுத்தப்பட்டது  கேரளக்கல்விக்கு நிதியளிக்கும் ஆசியன் டெவலப்மெண்ட் வங்கி போட்ட நிபந்தனையால் அது கொண்டுவரப்பட்டது என்பது குற்றச்சாட்டு. முழுத்தோல்வி அடைந்த ஒரு திட்டம் அது. இன்று கேரள மாணவர்கள் தேசியப்போட்டிகளில், சர்வதேச வேலைவாய்ப்புகளில் கடும் பின்னடைவை சந்திக்க அது காரணமாகியது.

[இது வெளிப்படையான உண்மை. இதைச் சொல்லப்போனால் அதற்கு ஆதரவான கல்வியாளர்கள் புள்ளிவிவரங்களை கொண்டு அடிக்க வருவார்கள். புள்ளிவிவரங்களைச் சமைப்பது மிக எளிது என அறிந்தவர்கள், நடைமுறையைக் கண்டவர்கள் அவர்களை விட்டு ஒதுங்கிச்செல்லவேண்டும். வேறு வழியில்லை]

நடைமுறையில் இன்று கேரளத்தில் இடைநிலை பொருளியல் உள்ளவர்கள் கூட மாநில அரசின் டிபிஇபி கல்விமுறையை தவிர்க்கும்பொருட்டு தனியார் கல்விநிலையங்களை நாடுகிறார்கள். அதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை அடித்தள மக்கள்.

விளையாட்டுவழிக் கல்வியின் கொள்கைகள் எதுவானாலும் ஏன் நடைமுறையில் அது தோற்கிறது? முக்கியமான காரணம், ஆசிரியர் பற்றாக்குறை. ஐம்பது அறுபது மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்னும் நிலைமையில் விளையாட்டுவழிக் கல்வி என்பது குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு ஆசிரியர் சும்மா இருப்பதாகவே முடியும். பதினைந்து மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்னும் நிலையில், வசதியான பள்ளியறைகளிலும் தோட்டங்களிலும் மட்டுமே அக்கல்வியை அளிக்க முடியும்.

அத்துடன் மேலைநாட்டுச் சூழலில் நான் நேரடியாகக் கவனித்த ஒன்று உண்டு. அங்குள்ள குழந்தைகள் வீட்டிலேயே கட்டுப்பாட்டுடன் வளர்பவர்கள். நான் செல்லும் இல்லங்களில் எல்லாம் குழந்தைகள் டிவி பார்க்கவேண்டிய நேரம் எழுதி ஒட்டப்பட்டிருப்பதை காண்பதுண்டு. ஒரு நாளுக்கு அரைமணி நேரம். வீடு சுத்தம் செய்வது முற்றத்தில் புல்வெட்டுவது உட்பட ஒவ்வொரு குழந்தையும் அதன் கடமையைச் செய்தே ஆகவேண்டும். விருந்தினர்களை உபசரிப்பது உட்பட ஒவ்வொன்றிலும் நெறிகள் உண்டு, அவற்றை குழந்தைகள் கடைப்பிடித்தே ஆகவேண்டும். அப்படி எதையும் எந்த இந்தியக்குடும்பத்திலும் கண்டதில்லை.

அவ்வண்ணம் அடிப்படைக் கட்டுப்பாட்டுடன் வளரும் குழந்தைகளுக்குரியது விளையாட்டுவழிக் கல்வி. இந்தியக்குழந்தைகள் பெரும்பாலும் இன்று எந்த கட்டுப்பாடும் இல்லாமல் வளர்கின்றன. மதிப்பெண் மட்டுமே அவர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றை பள்ளிகளில் கட்டுப்படுத்துவது மிகக்கடினம். அங்கே விளையாட்டுவழிக் கல்வி என்றால் அது கல்வியாக இருப்பதில்லை.

டிபிஇபி கல்வி பற்றி ஸ்ரீனிவாசன் எழுதி மலையாளத்தில் ‘இங்கிலீஷ் மீடியம்’ என்று ஒரு சினிமா வந்தது. டிபிஇபி முறையால் ஏழைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதைக் கண்டு கொதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கிலவழிக் கல்வி அளிக்கும் தனியார்ப்பள்ளி ஒன்றை ஆரம்பிப்பதே அந்த படத்தின் கதை. அதில் டிபிஇபி முறைக்கு ஸ்ரீனிவாசன் ஒரு விளக்கம் அளிப்பார். ‘தரித்ரராய பிள்ளேர் எங்கினெயெங்கிலும் படிச்சோட்டே’ [ஏழைப்பிள்ளைகள் அவர்களே எப்படியாவது படிக்கவேண்டியதுதான்]

நான் மாற்றுக் கல்விமுறைகளை கவனித்துக்கொண்டிருக்கிறேன். அவை உயர்செல்வநிலையில் உள்ள குழந்தைகளுக்கு, உடனடியாக கல்வி- வேலைவாய்ப்புச் சந்தையில் போட்டியிடவேண்டிய தேவையற்ற குடும்பத்துப் பிள்ளைகளுக்கு மட்டுமே பயனுள்ளவை. அடிப்படைச் சூழல்களில் இருந்து வரும் குழந்தைகளுக்கு எவ்வகையிலும் உதவாதவை.

வெளியே ஒவ்வொரு களத்திலும் வெறிகொண்ட போட்டியை மட்டுமே நெறியாக வைத்திருக்கிறோம். ஒரு மதிப்பெண் வேறுபாட்டில் வாழ்க்கையே திசைமாறும் சூழல் உள்ளது. அதை அப்படியே வைத்துக்கொண்டு அமெரிக்கபாணியின் ‘படைப்பூக்கக் கல்வி’ பற்றி கனவு காண்பது அபத்தமானது.

அரசுப்பள்ளிகளின் கல்வி ஆங்கிலவழியில் அமையவேண்டும் என்பதும் என் உறுதியான எண்ணம். தமிழ்வழிக்கல்வி அத்தனை தனியார்ப்பள்ளிகளிலும் தவிர்க்கப்படுகிறது. அத்தனை வேலைவாய்ப்புப் போட்டிகளும் ஆங்கிலம் சார்ந்தவை. அந்நிலையில் அடித்தள மாணவர்கள் மட்டும் தமிழ்படித்து தமிழை வாழவைக்கவேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். எனக்கு கல்வியாளர்களாக நண்பர்கள் உள்ளனர். அனைவரிடமும் நான் ஆணித்தரமாகச் சொல்வது தரமான ஆங்கிலம் கிராமப்புற மாணவர்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்பதைத்தான்.

தமிழை காப்பாற்றவேண்டும்தான். அதை ஏன் நடுத்தர, உயர்குடி மக்கள் செய்யக்கூடாது? அவர்கள் தமிழ் படிக்கட்டுமே. ஆங்கிலமே இன்று பொருளியல்கல்விக்கு அடிப்படை. அது அனைவருக்கும் அளிக்கப்படவேண்டும்.

விளையாட்டுவழிக் கல்வி, பண்பாட்டுக்கல்வி ‘கூடுதலாக’ அளிக்கப்படலாம். ஆர்வமுள்ள திறமையுள்ள மாணவர்களுக்கு மட்டும். அதையே குக்கூ போன்ற அமைப்புகள் செய்கின்றன. அவை மிக முக்கியமான முயற்சிகள். குறிப்பாக பின்தங்கிய கிராமங்களில் அளிக்கப்படும் அத்தகைய கல்வி ஒரு பெரும் கொடை.

தன் ஏழ்மைசூழ்ந்த வாழ்க்கையை கல்வி மீட்கும் என நம்பி பள்ளிக்கு வரும் ஒரு மாணவன் ஏமாற்றப்படலாகாது. அவன் நாடுவது கிடைக்கவேண்டும். ஆகவே போட்டிகளில் வெல்லும் தகைமை கொண்ட கல்வியை மட்டுமே நான் ஆதரிக்கிறேன். எதன்பொருட்டும் கல்வித்திட்டம் எளிமைப்படுத்தப்படுவதை நான் ஏற்கவில்லை.

அரசியல் பற்றி…. அத்தனை அரசியலார்வம் கொண்டவர்கள் தங்கள் பிள்ளைகளை அரசியலில் இறக்கட்டுமே. இங்குள்ள அத்தனை புரட்சிப்புயல்களின் பிள்ளைகளும் சிறந்த தனியார் கல்விநிலையங்களில்  முறையான போட்டிக்கல்வி பெற்று உயர்பதவிகளில், உயர் பொருளியல் நிலைகளில் இருப்பவர்கள் என்பதை மறக்கவேண்டியதில்லை. இவர்கள் சொல்வதெல்லாம் அடித்தள மக்கள் அரசியல்தொண்டர்களாகி தங்கள் அரசியலுக்கு கூட்டம்சேர்க்கவேண்டும் என்று மட்டுமே. என் மகன் அரசியல் தொண்டன் ஆவதை நான் விரும்ப மாட்டேன். ஆகவே எந்தக் குழந்தைக்கும் நான் அதை பரிந்துரைக்க மாட்டேன்.

கேரளத்தின் சென்ற முப்பதாண்டுக்கால பொருளியல் வளர்ச்சியை ஆராய்ந்து தாமஸ் ஐசக் ஒரு கட்டுரையில் சொல்லும் ஒரு செய்தி என்னை எப்போதுமே ஆழ்ந்து யோசிக்கச் செய்வது. கேரளத்தில் தீவிரமாக அரசியல்மயப் படுத்தப்பட்ட சமூகங்கள் பொருளியல் பின்னடைவைச் சந்தித்தன. வணிகத்திலும் தொழிலிலும் ஈடுபட்ட சமூகங்கள் மேலெழுந்து ஆட்சியதிகாரத்தையும் கைப்பற்றின.

ஆகவே இன்று எந்த அடித்தள இளைஞரிடமும் நான் சொல்வது பொருளியல் அடிப்படையை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்றுதான்.அதுவே முக்கியமானது, இன்றியமையாதது. போராட்ட அமைப்பை உருவாக்கி எழுந்த தலைவர் திருமாவளவன் கூட தன் சமூகத்திடம் இன்று சொல்வது கல்வி, தொழில் ஆகியவற்றில் கருத்தூன்றும்படித்தான் என்பதை கவனித்திருக்கிறேன். சென்ற இருபதாண்டுகளில் எதன்பொருட்டும் அவர் தன் சமூக இளைஞர்களை தெருஅரசியலுக்கு இறக்கியதில்லை. கடுமையாகச் சீண்டப்பட்டபோதும்கூட. அதுவே நடைமுறை விவேகம்.

ஜெ

முந்தைய கட்டுரைநந்தனாரின் நந்தியும் சுடுகாட்டுச் சேவலும் -இரம்யா
அடுத்த கட்டுரைகுக்கூ ஆவணப்படம்