அருண்மொழி எழுதிய கட்டுரைகளையும் ஒருவகையில் சிறுகதைகள் என்றுதான் சொல்லவேண்டும். இப்போது முதல் சிறுகதையை எழுதியிருக்கிறாள். வழக்கம்போல ஜானகிராமனின் சாயல்கொண்ட நடை.
முதற்கதையை எழுதுபவர்கள் பெரும்பாலும் உணர்வுபூர்வமாக தங்களைப் பாதித்த நிகழ்வு ஒன்றை எடுத்துக்கொள்வது வழக்கம். அதில் இருந்து கண்டடைந்த ஓர் உண்மையை அல்லது கருத்தை முன்வைக்கும்படியாக கதையை அமைப்பார்கள். கதையில் நிகழ்வுகள் வழியாக மோதலும் உச்சமும் நிகழும்.
அருண்மொழி வழக்கம்போல மிகச்சிறிய அன்றாட அனுபவம் ஒன்றை இயல்பாகச் சொல்லிச்செல்லும் பாணியில் இக்கதையை எழுதியிருக்கிறாள். அந்த மென்மையான ஒழுக்கினூடாக ஒரு கவித்துவ உச்சம் நோக்கிச் செல்கிறாள். முதற்கதை என்று பார்க்கையில் மிக அரிதான ஒரு நிகழ்வு.
அன்னைவடிவாக ஒழுகும் நதியின் உள்ளே திகழும் பிறிதொரு ஆற்றல் வடிவை நுட்பமான இருவகை நிலக்காட்சிகள் வழியாகச் சித்தரிக்கும் கதை பாட்டியை அவற்றுடன் பொருத்திக் காட்டுவது காய்ப்பேறிய கை என்னும் ஒற்றை உருவகம் வழியாக. அதை மட்டுமே நம்பி, முழுக்கமுழுக்க குறிப்பமைதியுடன் கதையை அமைத்திருக்கும் துணிவும் வியப்பளிப்பதே.
காவேரி வாழ்வாக, இயற்கையாக, உயிர்ப்பெருவெளியாக திகழும் தஞ்சையை விவரிக்குமிடத்திலுள்ள குதூகலம் நான் எப்போதும் அறிந்த அருண்மொழி. எந்நிலையிலும் தஞ்சையின் மகள்.