விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் அமைப்பு 2009ல் உருவாக்கப்பட்டது. 2007ல்தான் என்னுடைய இணையதளம் நண்பர் சிறில் அலெக்ஸ் அதை ஒரு வலைப்பூவாக எனக்காக ஆரம்பித்தார். ஆனந்த விகடன் உருவாக்கிய ஒரு வம்புப்பரபரப்பால் அதன் வருகையாளர் எண்ணிக்கை பத்து மடங்காக ஆகியது. நாள்தோறும் வெளிவரத் தொடங்கியது. பன்னிரண்டு ஆண்டுகளில் தமிழில் முதன்மையான இலக்கிய இணையதளமாக உள்ளது.
நண்பர் லண்டன் முத்துக்கிருஷ்ணன், ஆஸ்டின் சௌந்தர் ஆகியோர் அதை நடத்துகின்றனர். நண்பர் திருமலை, நண்பர் மதுசூதனன் சம்பத் ஆகியோர் அதன் தொழில்நுட்பத்தை பராமரிக்கின்றனர். நண்பர் லஓசி சந்தோஷ் அதை பராமரிக்க உதவுகிறார்.
2009ல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் அமைப்பை உருவாக்கினோம். பொறுப்பாளர்கள் ஏதுமற்ற ஒரு இயல்பான நட்புக்கூட்டமைப்பு இது. 2010 முதல் விருதுகள் வழங்கி வருகிறோம். இவ்வாண்டு விருதுபெறுபவர் விக்ரமாதித்யன். விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் விஷ்ணுபுரம்- குமரகுருபரன் நினைவு இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கியவிழா கோவையிலும், விஷ்ணுபுரம் – குமரகுருபரன் இலக்கியவிழா சென்னையிலும் நிகழ்கிறது. ஆண்டுதோறும் ஊட்டியில் குருநித்யா நினைவு கவிச்சந்திப்பு நிகழ்கிறது. ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு வாசகர்சந்திப்புகளும் இலக்கியவிழாக்களும் ஒருங்கிணைக்கிறோம்.
இந்நிகழ்வுகளை எல்லாம் சிறிய ஒரு நட்புக்குழுவே நடத்தி வருகிறது. விஷ்ணுபுரம் அமைப்புக்கு என ஓர் வலைப்பூ மட்டுமே இருந்தது. இப்போது நண்பர் மதுசூதனன் சம்பத் அவரே முயற்சி எடுத்து ஒரு முழுமையான இணையப்பக்கத்தை உருவாக்கியிருக்கிறார். விருது குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய முழுமையான தளம் இது. கணிப்பொறியாளரான மதுசூதன் சம்பத் விஷ்ணுபுரம் நட்புக்குழுமங்களில் தீவிரமாகச் செயலாற்றுபவர்.
ஒருங்கிணைப்புக்கும் செயல்திறமைக்கும் புகழ்பெற்ற ஓர் இயக்குநர் என்னிடம் சொன்னார். “இத்தனை திறமையாக ஒருங்கிணைக்கப்படும் ஒரு அமைப்பு தமிழகத்தில் இல்லை. இவ்வளவு பிழையில்லாமல், உச்சகட்ட தீவிரத்துடன் ஓரு வணிக அமைப்பு செயல்படவேண்டும் என்றால் லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும்” நான் சொன்னேன். “ஆமாம், பல லட்சம் செலவாகும். அல்லது ஒரு ரூபாய் கூடச் செலவாகாது. இரண்டு எல்லைகளில் ஒன்றில்தான் இது நிகழும். இது தலைமை என ஏதும் அற்ற அமைப்பு. மையம் என ஏதுமற்றது. செயல்புரிய ஆர்வம் கொண்டவர் எவராயினும் வந்து செயல்படுவதற்கான களம்”
உலகம் முழுக்கவே இதை நாம் பார்க்கலாம். மிகப்பெரிய தொழில்-வணிக நிறுவனங்களில் முதல்தர நிபுணர்கள் இருப்பார்கள். அல்லது வெறும் இலட்சியவாதம் மட்டுமே கொண்ட அமைப்புகளில் , பணமே இல்லாமல் பணியாற்றும் நிபுணர்கள் இருப்பார்கள். உண்மையில் இரண்டாம் வகை அமைப்புகளிலேயே ஒரு படிமேலான கலையும் திறமையும் வெளிப்படும். பாண்டிச்சேரி ஆரோவில்லின் அச்சுத்தொழில்நுட்பத்தை கோடிக்கணக்கில் செலவிடும் நிறுவனங்களில் காணமுடியாது. தமிழிலேயே தன்னறம் நூல்களின் அச்சு- வடிவமைப்பை எந்த வணிக நிறுவனமும் அருகே நெருங்க முடியாது.
விஷ்ணுபுரம் அமைப்பும் அத்தகையதே. எங்கள் நிகழ்ச்சிகளின் ஒழுங்கு, ஒவ்வொன்றிலும் வெளிப்படும் துல்லியமும் தரமும் எனக்கே எப்போதும் வியப்பளிப்பது. ஒவ்வொரு முறையும் சிறுசிறு குறைகளை கண்டடைந்து சரிசெய்தபடியே செல்வோம். இத்தனைக்கும் ஒரு வணிக நிறுவனம் ஒரு சராசரி நிகழ்ச்சிக்குச் செலவிடும் தொகைதான் எங்கள் வருடாந்தர பட்ஜெட்டே. மதுசூதனன் சம்பத் போன்ற நிபுணர்களுக்கான களமாக இது இருப்பதனால், பிறர் அவர்களால் பயிற்றுவிக்கப் படுவதனால் இவ்வமைப்பு வெல்கிறது.