சூஃபிகள், மதக்காழ்ப்புகள்
அன்புள்ள ஜெ
சூஃபிகள், மதக்காழ்ப்புகள் என்னும் கட்டுரை எனக்கு மிக முக்கியமான ஒன்று. ஞானிகளை புரிந்துகொள்வதிலுள்ள மிகப்பெரிய பிழை என்பது அவர்களின் எதிர்விமர்சனங்களை உணர்வதுதான். நான் பெரிதும் மதிக்கும் குணங்குடி மஸ்தான் சாயபு அவர்கள் கிறித்துமத கண்டன வச்சிர தண்டம் என்னும் நூலை எழுதியிருக்கிறார் என்னும் செய்தி என்னை மிகவும் கலங்க வைத்தது. எப்படி அவர் ஒரு மதகண்டனத்தை எழுதலாம் என்றே எண்ணியிருந்தேன். உங்கள் கருத்து மிக முக்கியமான ஒன்று.
எம்.நவாஸ்
அன்புள்ள நவாஸ்,
குணங்குடியாரின் காலம் ‘கண்டனநூல்கள்’ ஓங்கியிருந்த காலகட்டம். இதே போன்ற கிறிஸ்துமத கண்டனநூலை சட்டம்பி சுவாமிகள் இயற்றியிருக்கிறார். இத்தனை கண்டனநூல்கள் ஏன் கிறிஸ்துவ மதம் மீது வந்தன? ஏன் இஸ்லாமிய மதகண்டனங்கள் இந்துக்களாலும் இந்து மதகண்டனங்கள் இஸ்லாமியராலும் எழுதப்படவில்லை? ஏனென்றால் மதகண்டனம் என்பதை தொடங்கியவர்களே மதமாற்ற நோக்கம் கொண்டிருந்த கிறிஸ்தவப் போதகர்கள்தான். பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் அரசுப்பின்புலத்துடன் கிறிஸ்தவம் இந்தியாவுக்குள் நுழைந்து உச்சகட்ட பிரச்சாரங்களைச் செய்துகொண்டிருந்தது. ஆகவே அன்றைய ஞானிகள்கூட அதை மறுத்துரைக்க நேர்ந்தது. மற்றபடி அவர்கள் மதப்பூசல்களில் ஈடுபட்டவர்கள் அல்ல.
ஜெ
அன்புள்ள ஜெ,
அஜ்மீருக்கு நீங்கள் சென்ற செய்தியை ஒட்டிய விமர்சனங்களின்போது அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்ட கண்டனங்கள் வந்தபடியே இருந்தன. அவை எல்லாமே உள்நோக்கம் கொண்டவை என தெரிந்திருந்தாலும்கூட அவ்வாறு இந்துமதத்தை எதிர்த்து அழிக்க முனைந்த ஒருவரை வழிபடலாமா என்னும் கேள்வி எனக்குள் இருந்தபடியே இருந்தது. அந்தப் பதில் ஆணித்தரமான ஒன்று.
ரவிச்சந்திரன்
அன்புள்ள ரவிச்சந்திரன்,
பொதுவாக மதங்களின் தோற்றங்களின்போது கடுமையான மதப்பூசல்கள் இருக்கும். சமூகங்கள் நிலைபெயர்கையில், ஆக்ரமிக்கப்படுகையில் மதமோதல்கள் இருக்கும். அரிதாக தத்துவப்பூசல்கள் மதமோதல்களாக ஆகும். அவை மதங்களின் தனித்தன்மைகள் முன்வைக்கப்படும், முரண்பாடுகள் ஓங்கியிருக்கும் காலகட்டம்
நாம் இருக்கும் இக்காலகட்டம் மதங்களின் சாரம்கண்டு அவற்றை ஒருங்கிணைக்கவேண்டிய சமன்வயக் காலகட்டம். ஏனென்றால் இன்று உலகமே ஒற்றைப்பெரும்பரப்பாகச் சுருங்கிவிட்டது. ஆன்மிகமும் உலகளாவியதாகவே இருக்கமுடியும். ஆகவே அனைத்து மதங்களையும் இணைத்து நோக்கும் பார்வையே இன்று அவசியமானது
ஜெ