நூல்வேட்டை – கொள்ளு நதீம்
கொள்ளு நதீம் இணையப்பக்கம்
வணக்கம் ஜெ.
கடந்த 10ந்தேதி பெய்த பேய் மழையில் என் 250/300 நூல்கள் மழையில் நனைந்து சேதமடைந்துவிட்டன. அதுபோக அதை வைத்திருந்த புத்தக கடைக்கு அதைவிட பல மடங்கு சேதம். ஒன்றும் செய்ய வழியின்றி திக்கித்துப் போய்விட்டேன். மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் / இரண்டாயிரம் என்று நூல்களை காசு கொடுத்து வாங்கிக் கொண்டே இருக்கிறேன், என் மாத பட்ஜெட்டின் முதல் ஒதுக்கீடே இந்த நூல்களை வாங்குவதற்காக எடுத்து வைக்கும் பணம்தான். இந்த நிலையில் வாசிப்பு வாழ்வில் முதன்முறையாக இவ்வளவு பெரியளவில் நூல்களை பறிகொடுத்ததில்லை. அதைவிட பெருந்துயரம் பல்லாண்டுகளாக இலக்கிய அமர்வுகளில், நூல்களில், நேர்பேச்சில் என கையிலெழுதிய குறிப்பேடுகளையும் வாரிச் சென்றுவிட்டது இந்த அடைமழை.
திருவல்லிக்கேணி வாலாஜா பழைய பள்ளிவாசலின் எதிர்புறமுள்ள பெருநாள் தொழுகைக்கான (பல ஏக்கர்) திடல் முழங்கால் வரை குளம்போல் நான்கு நாட்கள் ஏரிபோல் கிடந்தது. பேயறைந்த சூன்யத்தில் இருந்தேன். அபி சார் 13-ந்தேதி காலையில் சென்னை வந்துவிட்டார், நிலவரம் இயல்பாக இருந்து இருந்தால் நான் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சென்றிருப்பேன். காலையிலிருந்தே வேறு நண்பர்களிடம் நேரில் போகச் சொல்லி அபிசார் நலம் விசாரித்தேன். மாலை 6 மணியளவில் மனம் நிலைகொள்ளவில்லை. நேரே தி.நகர் வாணிமகால் விழா அரங்கிற்கு சென்றேன். பபாசி விருது விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அபி சாரை (நேரில் விஷ்ணுபுரம் விழாவில்தான் 2019) கடைசியாக பார்த்தது, பெருந்தொற்று, பொதுமுடக்கம் அனைத்து சந்திப்புகளையும் சீர்குலைத்திருந்தது அல்லவா? ஈரோடு / மதுரை நவீனுக்கு போன் போட்டுவிட்டு சென்றிருந்ததால் அவரும் என்னை எதிர்நோக்கியிருந்தார். அபி சார், ஒன்றும் கவலைப்படாதே என்று கைகளைப் பற்றிக் கொண்டு கூறியதும் பாதி உயிர் வந்தது, இதுதான் இயேசுவின் healing touch-ச்சாக இருக்கும்போல் தோன்றியது.
மறுநாள் நற்றுணை – யாவரும் இணைந்து நடத்திய எஸ்.ரா.வின் நிகழ்வு. கடைசியாக தாங்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் டோக்கியோ செந்திலின் ‘இசுமியின் நறுமணம்’ நூலை வெளியிட்ட அதே அரங்கு. சினிமா தியேட்டர் வாசலில் டிக்கெட் செக் செய்பவரைப் போல் வழிமறித்த காளிபிரசாத், சௌந்தர் ஆகியோரிடம் வெறுமனே ஒரு ஹாய் சொல்லி உள்ளே நுழைந்தேன், நீதிபதி சந்துரு பேசி முடித்திருந்தார், தேநீர் இடைவெளியில் எஸ்.ரா.விடம் சற்று பேசிக் கொண்டிருந்தேன்,
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி இலக்கிய நிகழ்வுகளில் பார்த்துக் கொண்டிருந்த பல்வேறு முகங்களை இங்கு பார்த்ததே ஆறுதலாக இருந்தது. அபிசார் போன் செய்தார், முழு சார்ஜ் ஏற்றிக் கொள்ள இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்று நேராக ராதாகிருஷ்ணன் சாலை யெல்லோ பேஜஸ்-சிலிருந்து நுங்கம்பாக்கம் பால்குரோவ் ஓட்டலுக்கு சென்றேன். அங்கு யோகேஷ் ஹரிஹரனை அழைத்துக் கொண்டு நவீன் வந்து சேர்ந்தார். இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை, இதற்கிடையே எனக்கு கேரள தொடர்பு இருப்பதால் கூனம்பாறை சந்திப்பு : தம்பி அந்தோணியின் மலையாள நாவல், வளைகுடா அரபு நாட்டில் பணிபுரிந்ததால் அதை கதைக் களனாக கொண்டு ஆசாத் எழுதிய மின்தூக்கி நாவல்; Conrad Wood எழுதிய The Moplah Rebellion and its genesis
ஐராவதம் மகாதேவன், கி.கஸ்தூரிரங்கன், மாலன் ஆகியோர் ஆசிரியராக இருந்தபோதிருந்து தினமணி படித்துக் கொண்டிருந்தேன். பிறகு இராம.திரு.சம்பந்தம் ஆசிரியர் பொறுப்பேற்றபோது தங்களின் நண்பர் மதுரை மவ்லவி சதக்கத்துல்லா ஹசனியும் அவ்வப்போது நடுப்பக்க கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தார். சுகதேவும் கூட என்று நினைக்கிறேன், அதனால் அவருடைய கட்டுரைத் தொகுதியான “படைப்பாளிகள் முகமும் அகமும்” என நான்கு நூல்களிலிருந்து ”போணி” செய்திருக்கிறேன்.
அப்துல்வஹாப் பாகவி என்று ஒருவர் முன்பு இருந்தார். இன்று தமிழின் மிக முக்கியமான நட்சத்திர எழுத்தாளர்கள் பலரும் இவரை தங்களின் குருவென கூறுகின்றனர், “திராட்சைகளின் இதயம்” என்கிற நாவலில் தமிழ் மரபின் நீட்சியென வந்த ஒரிஜினல் சூஃபி மாஸ்டர்களில் ஒருவர் என்பது உண்மையும்கூட. பள்ளிவாசல்களுக்கு வெளியே மாலை வேளைகளில் சிறு பிள்ளைகளுக்கு மந்திரித்து தண்ணீர் ஓதி ஓதும் இந்த ஆலிம்சா புகைப்பவர். ஏனிந்த சிகரெட் என்று கேட்டவர்களிடம் சொல்லும் பதில்தான் என்னுடையதும்.
250/300 நூல்கள் என்பது என் முழு ஆண்டு நூல் கொள்முதலைவிட பெரியது, இருப்பினும் முன்பு போலவே இந்த நான்கு நூல்களுடன் மீண்டும் வாசிப்பு பந்தயத்தில் இணைந்து கொண்டிருக்கிறேன், இதில் தங்களின் வலைதளத்தில் ஏதோ பெரியவரைப் போல முதிர்ச்சியான கடிதங்களை எழுதிய விக்னேஷ் ஹரிஹரன் அபிசாருடன் அமர்ந்திருந்தபோது சிறுவனைப் போல தெரிந்தார். அவருடைய வயதில் நான் வெறும் வணிக எழுத்தாளர்களிடம் பல்லாண்டுகள் வீணடித்திருந்தேன். இதுபோன்ற இளம் வாசகர்கள் அலையலையாக வந்துகூடும் சரணாலயம் விஷ்ணுபுரம். சொல்லப் போனால் என் இருபதுகளுக்கு போன நம்பிக்கையை இந்த கூடுகைகள் அளிக்கின்றன, அபிசாருக்கும் – விருந்தோம்பலுடன் புது நம்பிக்கையை பெற்றுக் கொள்ள ஏதோவொரு வகையில் காரணமான காளிபிரசாத், சௌந்தர், ஜீவகரிகாலன் ஆகியோருக்கும் – இவை அனைத்துக்கும் பின்னே முகம் காட்டாமல் பின்னணியில் மறைமுக வினையூக்கியாக இருக்கும் தங்களுக்கும் நன்றி.
கொள்ளு நதீம்
ஆம்பூர்.
அன்புள்ள கொள்ளுநதீம்,
நூல்களின் இழப்பு துயர்மிக்கது. என்னால் அழிந்துபட்ட நூல்களை கண்ணால் பார்க்கவே முடியாது. ஆனால் வாசித்தவை நமக்கு வெளியே நூல்களில் இருக்கலாகாது என்பதற்கான அறிவுறுத்தலாகவும் எடுத்துக்கொள்ளுங்கள்.கிரானடா நாவலிலேயே நூல்கள் அழிந்தபின்னரும் அவை நினைவு வழியாக நீடித்துவாழ்வதன் சித்திரம்தானே உள்ளது
ஜெ