நிறையாக் கலத்துடன் அலையும் கபாலபைரவன்-அந்தியூர் மணி

 

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

இளிவரல் நாடகமான மத்தவிலாசப் பிரகஸனத்தில் காபாலிகனான சத்யசோமன் தன் துணையான தேவசோமாவிடம்  சொல்லும் வேள்விப் பந்தலுக்கும் மதுக்கடைக்குமான ஒப்புமை முதலில்  பெரும் அதிர்வையும் பின்  உன்னிப்பாகக் கவனித்தால் காபாலீகத்தின் அடிப்படை அறிதலையும் தரக்கூடியது.

கபாலி : அன்பே, பார்! பார்! இந்த மதுக்கடை வேள்விக் கூடத்தை ஒத்து விளங்குகிறது. இங்கிருக்கும் அடையாளக் கொடிக் கம்பத்தைப் பார். அதுதான் வேள்விக் குண்டத்துக் கம்பம். மதுதான் சோமரசம். ஜாடிகள் புண்ணியப் பாத்திரங்கள். பொரித்த கறியும் மற்ற பொருட்களும் சுவைக்கும் நைவேத்தியங்கள். போதைப் பிதற்றல்கள் யஜூர்வேத மந்திரங்கள். பாடல்கள் சாம வேத கீதங்கள். தோல் பைதான் வேள்வி அகப்பை. தவிப்பே தீ. கடைக்காரர்கள் வேள்வி நேர்ந்தவர்கள்.

தேவசோமா: நமது பிச்சை உருத்திரனுக்கு ஒதுக்கிவைத்துள்ள வேள்விப்பங்கு.

கபாலி: ஆ! போதை வெறியாட்டம் என்னே அழகு! மத்தள தாளத்துக்கு இசையே அங்க அசைவு, குரலசைவு கண் இமைப்பு. இப்பொழுது மேலாடையைச் சரிப்படுத்த ஒரு கை உயர்த்தி கழுத்தணியை விலகவிட்டு பின் கீழாடையைச் சரிப்படுத்தும்பொழுது தாளத்தை இழக்கிறது.

தேவசோமா : ஆஹா! ஆண்டவர் பொல்லாத ரசிகர்.

கபாலி : இந்த தெய்வீக மதுவைக் கிண்ணத்தில் ஊற்று. ஆடை ஆபரணங்கள் நீங்கட்டும். ஊடிய காதலர் ஒன்றுவர். இளைஞர்கள் வெட்கம் நீங்கி வீரர் ஆவர். வாழ்க்கை முழுவதும் காதல் பெருகும். இனி என்ன பேச்சு இருக்கிறது?

முன்னர் அரனார் மூன்றாங்கண் தீ

மதனனைச் சுட்டது எனுமொழி பொய்மொழி

மன்மதன் தானே நீராய் உருகிட

மாண்புறு நேயக் கொழுந்து எரிந்தது;

அதுவே நம்மைச் சுடுகுது;

நம் மனங்களையும் பொசுக்குது.

இதை காபாலிகன் இளிவரலாகச் சொல்லியிருக்கிறான் என்றாலும் காபாலிகத்தின் மெய்மைகளுள் ஒன்றாக அவன் சொல்லியதிலிருந்து இதை நாம்எடுத்துக் கொள்ளமுடியும்.

“இங்கு உருவாகி வந்த அனைத்தும் இறையிடமிருந்து வந்த்தால் அனைத்திலும் அதன் துளி இருக்கும் .எனவே  அன்னத்தினை உண்டு மதுவினை அருந்தி இல்லறபோகத்தினைக் கொண்டாடி இறையைக் காண முயல்வோம் ”

இம்மெய்மையோடு நோக்கினால் வைதீகரது  வேள்வியும் காபாலிகனது துய்ப்பும் ஒன்றே என உணரமுடியும்.

என்னைப் பொறுத்தவரை மெய்மை நோக்கிய பயணத்தில் இருக்கும் அனைத்துயிரும் படைப்பினைக் கொடுக்க முயலும் படைப்பாளியும் கபால பைரவர்களே. மெய்மை தேடும்போதும் படைப்பாளி படைப்பினைக் கொடுக்க முயலும்போது உயிராற்றல் மெய்மையின் துளியாக படைப்பாக வெளிவரும்போது அதன் உயர்வை உணர்ந்தும் தனக்குள் இருந்து வருவது தன்னைவிடப் பெரிதாய்இருக்க முடியாதெனும் ஆணவத்தால்  அதை முழுமையாகக் கைப்பற்ற முயலும்போது பிரம்மனின் தலையைக் கொய்த காலபைரவனாக நிலை உருவாகிவிடுகிறது.அப்பிரம்மன் தலையை கொய்த பிரம்மஹத்தியான தன்னுணர்வுடன் அலையும் வாழ்வு அப்போதே ஆரம்பித்துவிடுகிறது.

முதல் காலபைரவனுக்கு தன் கட்டளையை மீறினான் பிரம்மன் என்பதும் பெரு நெறியினைத் தாண்டி நடந்ததும் மட்டுமே பிரம்மஹத்திக்கான காரணம்.அதற்கே நிறையாக் கபாலத்துடன் பிரம்மன் படைத்த உலகில் அலைந்து காசியில் நிறைவெய்தினான். ஆனால் இங்கிருக்கும் கபாலபைரவர்களுக்கோ எது தனக்கு நிறைவளிக்கும் என்பதைத் தேடி அலையும் வாழ்வு.அது எண்ணிக்கையில் அடங்காப்பிறவிகள்.பிரம்ம கபாலத்தின் இயல்பே அது படைப்பின் துளி என்பதால் இடப்படும் எப்பொருளின் துளியையும் பலமடங்கு  பெருக்கியே உணரும். இடப்படும் பொருளின் முதல் துளியைப் பெற்றவுடன் அதைவிடப் பலமடங்கு தானே பெருகும் கலத்தினை ஏந்தியவாறு  நிறைவு எங்கெனத் தேடியலைவதே படைப்பாளியின் நிலை.

எப்போது படைப்பாளி தன் கபாலமேந்தலை ஆரம்பித்தாலும் அதில் முதலில் வந்து விழுவது குடும்பமும் உறவும் சமூகமும் கொடுக்கும் பொருட்களே.அவைகளின் துளி கபாலத்தினைத் தொட்டவுடன் கபாலம் தன் வேலையை ஆரம்பித்துவிடுகிறது.கபாலத்தின் படைப்பு இங்கு கவிதையாக மாறுகிறது.

உயிர் வளர்வதற்கான ஆதாரம் அன்னம்.வளர்வதற்கான இச்சை பசியாக மாறி உறுத்த புலன்களின் ஆசை ருசியாக இழுக்க இரண்டுக்கும் இடையே அலைபாயும் படைப்பாளியின் நிலை மஹேஸ்வர பூஜை கவிதையாகிறது.

மஹேஸ்வரபூஜை

பசித்துக்கொண்டே

கொட்டிக்கொண்டே

ருசிருசியாய்

தின்று என்ன கண்டாய்

 

என்ன குழம்பு

இன்றைக்கு என்ன சமையல்

அம்மா கைபாகம்

மதினி கைபாகம்

இருந்து சமைத்தால்

விருந்து சமைப்பாள் இவள்

 

ஓட்டல்சாப்பாடு

ஒத்துக்கொள்ள மாட்டேனென்கிறது

எந்நேரமும் சாப்பிடலாம்

இட்லி

பிள்ளைமார் வீட்டுத் தோசைக்கு

பெறுமதியே இல்லை

அடை செரிக்கிற

குடல் வேண்டும்

பட்டினி கிடக்கும்

திராணி வேண்டும்

 

எப்போதாவதுதான்

செய்கிறார்கள் இடியாப்பம்

சப்பாத்தி

தமிழ் உணவில்லையென்கிறது மனசு

சின்ன வயசில்

பழையது சாப்பிட்ட ஞாபகம்

கூட்டாஞ்சோறென்றாலே

கொண்டாட்டம்தானே

 

மாட்டுக்குத் தீவனம்

மனுஷனுக்குச் சாப்பாடு

மனுஷி கையால்

மஹேஸ்வரபூஜை.

தான் வளரவேண்டுமெனும உயிரின் வாழும் இச்சையினை அழித்தொழிப்பது பிணி.அது வருவதற்குப் பல காரணங்களை மானுடம் சொல்லிக் கொண்டேயிருக்கிறது.எளிய பிணிகளே இவ்வாறிருக்க  வெளிவரத் துடிக்கும் படைப்பெனும்  எனும் பெரும்பிணியால் பாதிக்கப்பட்டவன் நிலை சொல்லும் தரமன்று.பிறர் அதை அறியாமல் திருஷ்டி என்றும் கிரகநிலை என்றும் நடத்தை என்றும் சொல்லி அதற்கான மாற்றினையும் கூறும் இடத்தில் கவிதையால் வந்ததெனச் சொல்ல இயலாமல் தன் துயரைக் இக்கவிதையாய் வடித்திருக்கிறார் கவிஞர்.

 

முன்பெல்லாம் இப்படியில்லை

சமீபகாலமாகத்தான்

மண்டைக்குள் குடைந்தெடுத்துக் கொண்டிருக்கிறது

வார்த்தைகள் வாக்கியங்கள் வரிகள்

 

இருக்கமுடியவில்லை படுக்கமுடியவில்லை

பொறுக்கமுடியவில்லை தலைவலி வேதனை பல்கடிப்பு

சூறைத்தேங்காய் சிதறிக்கிடப்பதுபோல கனவிலும்

சொற்களிள் திரள்கள் கவிதைச் சில்லுகள்

வெளியே கொட்டித் தொலைக்க

வழிவகை வாய்க்கால் தெரியவில்லை

 

வைத்தியரைப் போய்ப் பார்த்தால்

எழுத படிக்கக்கூடாது என்றிட்டார்

திருஷ்டி திருஷ்டிதான் எல்லாம் என்கிறார்

தைக்காத்தெரு அமீர்பாய்

ஜோஸியர் ஹரிஹரசுப்ரமண்யஐயர் யோசனை

அஷ்டமாதிபதிதிசை படுத்துது

வியாழக்கிழமைதோறும்

தக்ஷ்ணாமூர்த்திக்கு விளக்குப்போட்டுவரணும்

கோமதியம்மனுக்கு மாவிளக்கெடுப்பதாக

கவலையோடு நேர்ந்துகொண்டாள் அம்மா

அப்பாவின் தீர்மானம்

அதீதக்குடி செய்யும் சேட்டை

இவளானால் இளக்காரம் பண்ணுகிறாள்

இன்னும் என்னல்லாம் பாக்கியிருக்கோ

நீங்க வந்த வரத்துக்கு

 

கற்பனைபண்ணிப் பார்த்துக்கொண்டேன்

கவிஞனுக்குக் கோட்டிபிடித்தால்

கவிதையைத் தொட்ட பாவத்துக்கு

காலம்பூரா கொடுமை ஒண்ணா ரெண்டா

எதிரிக்கும் வரக்கூடாது இந்த கஷ்டம்

யாருக்கும் நேரப்படாது இந்த துன்பம்

பசியும் பிணியும் வாழ்வில்  தொடர்ந்திருக்க எதையேனும் நம்பிக்கையோடு பற்றிக் கொள்ள வேண்டிய சூழலில் எளிதாகப் பற்றிக் கொள்ளக் கிடைப்பது அன்னையின் அன்பு.அன்னை அருகிலிருக்கிறாள் என்னும் தைரியத்தில் அழும்பனாக ஆடும் நிலையை விவரிக்கிறது இக்கவிதை.

செண்பகக்காட்டில்

செம்பாதேவி

குற்றால அருவிப்பக்கம்

குழலி

உலகம்மை ஒய்யாரமாக ஆற்றங்கரையில்

வேணுவனத்தில் விநயமாக காந்திமதித்தாய்

அம்மா இருக்கிற தைரியத்தில்

அழும்பனாக நான்

தொடர்ந்து இங்கு வாழ்வதன் பொருட்டு முதலில் சாந்தமும் பக்குவமும் பின்  துடியும் உக்ரமும் கேட்டுப் பெற்றாலும் அதைத் தாண்டி உயிரின் ஆதார இச்சை எழுவதற்கான சூழல் உருவாகிறது.அது தன்னையே தனக்கு யார் என்று உணர்த்துகிறது என்று சொல்லும் கவிதை.

ஒரு பெளர்ணமி இரவில்

வானம்

சுடரொளி கொண்டிருந்த நடுச்சாமம்

சொல்லமுடியாத குளுமை

விரிந்திருந்த நிலாக்காலம்

விளக்கவொண்ணாத அமைதி

நிலவிய நல்லநேரம்

தூக்கம் பிடிக்காது

வெளியில் வந்து நின்றிருந்த இனியபொழுது

தெக்ஷ்ணாமூர்த்தி

தேடிக்கொண்டு வந்து விசாரித்தார்

சாந்தமும் பக்குவமும்

வேண்டிக் கேட்டேன்

வழங்கினேன் என்றார்

அருமையாய்

பிறகு

கொஞ்சநேரம் சென்று காளி தோன்றினாள்

சிறிது துடியும் உக்ரமும்

தந்துவிட்டுப் போனாள் பாசமாய்

பிரமிள் கவிதைகள்

படித்துக்கொண்டிருந்த பிரம்மமுகூர்த்தம்

சுக்ராச்சாரியார் வந்திருந்தார் வழக்கம்போல

பிதர்ந்துகொண்டேனங நிகழ்ந்தவற்றையெல்லாம்

போதும் போதும் கவியெழுத என்று

பூரித்துப்போனார் சந்தோஷத்தில்

ஆசையாய்க்கேட்டேன்

நீங்கள் என்ன தரப்போகிறீர்கள்

என் கொடைதானே

உன் கவிதைகள் என்றார் இளமுறுவலோடு

நீர்த்துப்போனாற்போல

தெரிகிறதே என கவலைப்பட்டேன் அவரிடம்

சுக்கிலம் போலத்தான்

கவித்துவமும்

சும்மா விரயம் பண்ணக்கூடாது

என்று அறிவுறுத்தினார் சீரியதாய்

காலில் விழுந்து நமஸ்கரித்தேன்

தோள் பிடித்துத் தூக்கியெழும்பி ஆசிர்வதித்தார் கனிவாய்

நான்தான் நீ

கவிஞனென்றாலே சுக்ராம்சம்தான்.

அடைந்தன இன்னும் இன்னும்  வேண்டுமென்னும் என்பதால் இனிஅடையாதவைகளால்தான் இக்கலத்தினை நிரப்ப முடியும் என்று உணர்பவனுக்கு அனைத்தும் வெறுமையாகவே தோன்றும் .வெறுமையின் துளியை பெருக்கிக் காட்டுகிறது இக்கவிதை.

வாழ்நாள் முழுக்க

வெறுமையிலிருந்துதான்

துயிலெழுகிறான்

வெறுமையைச் சுமந்துகொண்டுதான்

காலைக்கடன் முடிக்கிறான்

வெறுமையில் அமர்ந்துதான்

சிற்றுண்டி சாப்பாடெல்லாம்

வெறுமையில் பாதம்பதித்துதான்

நடக்கிறான்

வெறுமையில் உட்கார்ந்துதான்

படிக்கிறான் எழுதுகிறான்

வெறுமையில் ஜமுக்காளம்விரித்து

விடிய விடியவும்

வெறுமைக்குள்தான்

அகமும் புறமும்

வெறுமையே வெறுமையே

வாணாள் பூராவும் தொயங்கட்டும் வயணமென்ன.

வெறுமையைப் பின்தொடர்வது பொறுமை.வாழ்வின் பல அல்லலுக்குப்பின் தான் யார் என்பதை அறியும் போது தன்னால் வருவதல்லவா அது?.

பூமிபோல

நடக்கும்

நடக்காதென்று சொல்ல

நான் யார்

வேண்டும்

வேண்டாமென்று நினைக்கத்தான்

நான் யார்

நன்மை

தீமையென யோசிக்க

நான் யார்

உண்மை

பொய்மையென கருதத்தான்

நான் யார்

பூமிபோல

இருக்கவேண்டியதுதான் சாமி.

வாழ்வின் அலைபாய்தலில் சிக்கித் தவிக்கும்போது தேடுதல் உள்ளவனை அனைத்தும் தேடிவரும் எனும்  பிரபஞ்சவிதிப்படி கனவில் கவிஞனுக்கான விடை கிடைத்திருக்கிறது.ஆனால் அதை நனவில் அடைய எவ்வழியும் இல்லை.கனவில் வந்தக் காட்டுக் கோவிலுக்காக ஏக்கம் கவிதையாக.

கனவில் கண்ட கோயில்

எங்கே

இருக்கிறதோ

இங்கேதான்

எங்கேயாவது இருக்கவேண்டும்

காட்டுக்கோயில்

தெரிகிறது

இலக்கு

தெரியவில்

எவ்வாறு

கண்டறிவது

எப்படி

போவது

அலட்டிக்கொள்ளாமல்

இருக்கலாம்

கனவில் வந்த கருப்பசாமியே

காட்டித் தருவான் இதையும் ஒருநாள்

கோயிலைக் காண்பித்தவனுக்கு

இடமும் வழியும் தெரியப்படுத்துவது

பெரிய காரியமா என்ன

கனவிற்கும் நனவிற்கும் இடையே சிக்கித் தவிப்பவனுக்கு வாழ்க்கை கொடுக்கும் பாடம் வகுத்த வகைப்படியே இங்கு யாவையும் நடக்கின்றன என்னும் புரிதல்.ஆழ்ந்தெடுக்கும் தெய்வத்திடம் தானறிந்தது உண்மையா என வினவுகிறார் கவிஞர்.

வகுத்த வகையல்லால்

நேர்ந்தன அனைத்தும்

நேர்ந்து முடிந்தனதாம்

நேர்ந்து கொண்டிருப்பன தப்பாது

நேர்ந்து கொண்டிருப்பனதாம்

நேரவிருப்பன

நேராமல் போகா

வெறுமை

நேரும்வரை

எல்லாம் நேரும்தாமே

இவ்வளவுக்கும் நடுவே

இருப்பே அதிசயம்தான்

வகுத்த வகையல்லால்

வாழ்வும் தாழ்வும் உண்டோ வாராஹி.

வாழ்வின் புரிதலைத்  தாண்டினால் அடுத்து வருவது  தான் யார் என்பதன் தத்ததுவக்குழப்பம்.இந்தியாவின் இரண்டு பெரும் தத்துவத்தில் தான் எவ்வகை  என்பதன் விடையைக் இக்கவிதை பேசுகிறது.

த்வைதம் X அத்வைதம்

அவன்

வீடற்றவனா வெளியில்

அலைந்துகொண்டிருக்கின்றான்

ஊரற்றவனா

தேசாந்தரியாய்த் திரிந்துகொண்டிருக்கின்றான்

பசிமிகுந்தவனா

கண்டதுகடியதையெல்லாம் தின்றுகொண்டிருக்கிறான்

தாகம் நிரம்பியவனா

கிடைத்ததையெல்லாம் குடித்துக்கொண்டிருக்கிறான்

தூக்கமற்றவனா

நீண்ட இரவுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறான்

காமம் செறிந்தவனா

நீச்சஸ்திரீகளைத் தேடிக்கொண்டிருக்கிறான்

வாழ்வற்றவனா

மாயமான் வேட்டையாடிக்கொண்டிருக்கிறான்

சுகமற்றவனா

துக்கத்திடம் ஒப்படைத்திருக்கிறான்

நம்பிக்கையற்றவனா

அவநம்பிக்கையிடம் சரணடைந்திருக்கிறான்

தன்நினைவிலிருந்து போதைக்கும்

போதத்திலிருந்து அபோதத்துக்கும்

சாந்தியிலிருந்து அசாந்திக்கு

புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்

அற்பஜீவியை

என்னவென்று சொல்வீர்கள்.

தத்துவக் குழப்பத்தினைப் பின்தொடர்வது  தனக்கு வேண்டியதை அடையும் பிராப்தம் இருக்கிறதா என்ற எண்ணம்.தான் யார் தனக்கான பாதை எது அடையப்போகும் இடம் எது என்ற புரிதல் இருந்தாலும் அடைய வேண்டிய இடத்தினை அடைந்து விடுவோமா அதற்கான முன்வினையினை நாம் செய்திருக்கிறோமா என்ற எண்ணம் இங்கு கவிதையாக.

தாமிரபரணியின் கதையே தனி

சிற்றாறு

எங்கே போகும்

பேராற்றில்

கலக்கும்

மஹாநதியோ

வாங்கும்

தாமிரபரணியின் கதையே

தனி .

பிரச்னையும்

புரிகிறது

தீர்வும்

தெரிகிறது

பின்னே

என்ன

அடைபட

பிராப்தம் இல்லையே நெல்லையப்பா

இங்கு நிகழும் அனைத்தையும் உணர்ந்தபிறகு எவ்வாறு இங்கு வாழவேண்டுமென்பதை உணர்ந்த உயிரின் நிலை இந்தக் கவிதையில் .

அருவி

யாருக்கும் சொந்தமில்லை

அதனால்

அருவிக்கு யாரும் அந்நியமுமில்லை

விழுவது தவிர்த்து

வேறு லட்சியமென்ன உண்டு அருவிக்கு

குளிர்ச்சியும் தெளிவும் அதன்

குணங்களல்ல இயற்கை

அரசுகள் மாறுவதும் ஆட்சியாளர்கள்

புதிதாக வருவதும்

அதற்கொரு விஷயமேயில்லை

அருவியின் எல்லைக்குள் யாரும்

செய்தித்தாள் மேய்வதோ

அரசியல் பேசுவதோ இல்லை

அருவியிடம் கோபம் கொள்வோர் யாருமில்

அவசியமென்ன இருக்கிறது அதற்கு

அருவி

வாழ்தல் பயம் அறியாதது

அதனால்

சுரண்டல் தெரியாதது

அருவி

இரை தேடியோ புணர்ச்சிக்கோ அலைவதில்லை

கேள்வி கேட்பதும் குழம்பித் தவிப்பதும்

கிடையவே கிடையாது

பொறுப்பு அலட்சியம்

மகிழ்ச்சி வருத்தம்

பேறு இழப்பு

எல்லாம் கடந்தது அருவி

அத்வைதம் மார்க்ஸியம் ஸ்டரக்சுரலிசம்

எதுவும் தெரிந்துகொள்ளவேண்டிய ஹிம்ஸையற்றது அது

ஆயிரம் தடவை அருவியில் குளித்தாலும்

யாருக்கும் ஏன் புத்திவருவதில்லை.

இங்கு கிடைத்த அனைத்தையும் விரித்து அடைதலின் இனபமெனக்காட்டி உடனே அதைத் துயராக மாற்றும் பிரம்மஹத்தியின் பிடியிலிருந்து தப்ப தனக்கு முன் சென்ற காலபைரவனின் வழியில்  செல்வதைச் சொல்லும் கவிதை.

ருத்ரபூமி

கையில் ஒட்டிக்கொண்ட கபாலமென‌

கனக்கிறது நிகழ் இருப்பு

ஜோதிடரத்னா சொன்ன சொல்கேட்டு

வந்தாயிற்று வாரணாசிக்கு

வெள்ளிப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது

விரிந்து பரந்த புனித கங்கை

கங்கையில் நீராடி

கரைத்தாயிற்று கர்மவினைகளை

கண்குளிரத் தரிசித்தாயிற்று

கெளரியம்மையையும் கேதாரநாதரையும்

சகஸ்ரநாமம் சொல்லச் சொல்லியே

வழிபட்டாயிற்று அன்னபூரணியை

விசாலாக்ஷித்தாயின் முன்னுள்ள மேருவுக்கு

குங்கும அர்ச்சனைசெய்து வேண்டிக்கொண்டாயிற்று

காசிவிஸ்வ நாதரைக் கண்டு

கஷ்டங்களைக் கூறி முறையிட்டாயிற்று

காலபைரவர் ஆலயம் சென்று

கறுப்புக்கயிறு கட்டிக்கொண்டாயிற்று

துர்க்காதேவியயும் ஆஞ்சநேயரையும்

துணையிருக்கக் கேட்டுக்கொண்டாயிற்று

முறைப்படியே எல்லாம் நடத்தி

முடித்தாயிற்று

இனிமேல் எல்லாம்

நேரமாகிவிடும் பாப்பா.

முன் சென்ற காலபைரவனின் வழியில் சென்றாலும் தனக்கு அங்கு மெய்மை அருளப்படவில்லை  என்பதை உணர்ந்து தனக்கான குருவினைத் தேடிச் சென்றாவது தன் பிணி தீருமா என்பதற்கான அலைதலைச் சொல்லும் கவிதை

சித்தர்காடு

சூரியனார்கோயிலண்டை

சிவாக்ரகயோகிகள்

சுக்ர ஸ்தலப்பக்கம் சுயம்பிரகாசர்

ராமேஸ்வரம் நடராஜர்சன்னதியில்

பதஞ்சலிமுனிவர்

பழனியில்

போகர்

திருவொற்றியூர் கடற்கரையில்

பட்டினத்தடிகள்

திருவான்மியூர் கடலோரம்

பாம்பன்சுவாமிகள்

சங்கரன்கோயிலில்

பாம்பாட்டிசித்தர்

சீர்காழியில்

சட்டநாதர்

தருமபுரத்தில்

ஸ்ரீ குரு ஞானசம்பந்தர்

சித்தர்காடு சென்றுவந்தால்

இத்தரைமீது பிறவிப்பிணி தீரும்.

தன்னைத் தொட்ட அனைத்தையும் பெருக்கி உணரவைத்து  மீண்டும் மீண்டும் அவைகளைக் கொடு எனத்தூண்டி அடைந்தவற்றால் நிறைவினைத் தராமல் அடையாததைத் தேடி அலைய வைக்கும் கபாலத்தினை இங்கு ஏந்தி வாழ்ந்து கொண்டிருக்கும் பலரின்  நிலையை இங்கு கவிதையாய வெளிப்படுத்தியவர் கவிஞர் விக்ரமாதித்யன்.நிறையாக் கலத்துடன் அலையும் அக்கபால பைரவனின் கலம் நிறைய பிரம்மம் அருளட்டும்.ஆம்.அப்படியே ஆகுக!.

 

முந்தைய கட்டுரைமதம், அறம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇலக்கியமென்னும் இலட்சியவாதம்