ஈவேராவும் எழுத்துச்சீர்திருத்தமும்

அன்பின் ஜெயமோகனுக்கு,

னை, னா, லை, னோ, ணா இந்த எழுத்துச் சீர்திருத்தங்களைத் தமிழில் கொணர்ந்தது ஈ.வே.ராமசாமி என்று பெரியாரிஸ்டுகள் இன்று கூச்சலிடுகின்றனர். முடிந்தால் இவற்றை விட்டு எழுதிக்காட்டுங்கள் என்று  சவால் வேறு விடுகிறார்கள். இவர்களது போதாமையை நினைத்துப் பரிதாபப்படமட்டுமே முடியும் என்று நினைக்கிறேன்.

தமிழில் எழுத்துச் சீர்திருத்தங்கள் பல காலமாக நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக வீரமாமுனிவர் நிகழ்த்திய எழுத்துச் சீர்திருத்தம் தமிழ் வரலாற்றில் மிக முக்கியமானது. ஆனால் தமிழறிவு இல்லாத ராமசாமி உண்மையில் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொணர்ந்தாரா என்றால் இல்லை என்பதே எனது பதில்.ணை, ளை, னை, ணா, றா, னா இவற்றை முதல் முதலில் எழுதிக் காட்டியது சொ.முருகப்பா என்கிற ஒரு தமிழ் இதழாசிரியர். அதன் பின்பே இந்தச் சீர்திருத்தத்தை முருகப்பாவிடமிருந்து கொப்பி செய்து ஈவேரா தனது குடியரசிலும், விடுதலையிலும் எழுதத் தொடங்குகிறார்.

செல்வ வளம் மிக்கவரான ஈவேரா தொடர்ந்து இதழ் நடாத்துகிறார். ஆரம்பத்தில் இதனை எழுதிக்காட்டிய சொ. முருகப்பா வரலாற்றில் இன்று மறக்கப்பட்டுள்ளார். 1930-1931 இந்த இடைவெளியில்தான் சொ.முருகப்பா அந்தச் சீர்திருத்த முறைமையைத் தன்னுடைய குமரன் இதழ்மூலம் கொண்டுவந்தார். ஆனால் ஈவேரா 1935 இன் பிறகுதான் இதனை அறிமுகப்படுத்துகிறார். ஈவேரா தான் எல்லாவற்றுக்கும் மூலம் என்று பெரியாரிஸ்டுகளால் செய்யப்படும் வரலாற்றுத் திரிபு எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்று வாசிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ் சீர்திருத்த வரலாற்றைப் பார்த்தால் தெரியும் சாதியத்துக்கு எதிராக ஆரம்பத்தில் போராடிய எம்.சி. ராஜா மற்றும் இரட்டைமலை ஸ்ரீநிவாசன் முதலானவர்கள் இன்று வரலாற்றில் மறக்கடிக்கப்பட்டுள்ளனர். கூச்சலுடன் மேலெழுந்த ஈவேரா மட்டுமே சாதி எதிர்ப்பின் பிதாமகன் என்று முத்திரை குத்துகின்றனர். அதே போன்றுதான் இந்த எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய இவர்களது திரிபுக் கருத்தும்.

ஈ.வே. ராமசாமி தமிழறிவு அற்ற சமூகச் சீர்திருத்தவாதி. அவரை அனைத்துக்குமான மேதாவி என்று வரையறுப்பது முட்டாள்த்தனம். இதற்குள் புரையோடிக்கிடக்கும் மோசமான அரசியல் ஆதாயம் தமிழர்களைத் தற்குறிகளாக்கியபடிதான் இருக்கும். உண்மையான வரலாறுகள் இப்படித்தான் மறக்கடிக்கப்படும். இன்றைய இணைய காலத்தில் ராமசாமியை ஒரு அய்க்கோன் (Icon) ஆக ஆக்கித் திரியும் மூடர்களைப் பற்றி எனக்கொரு கவலையும் இல்லை. ஆனால் தமிழ் வரலாற்றின் முன்னோடிகளை ஈவேரா என்ற ஒரேயொரு அரசியல் முன்மாதிரியைக் கொண்டு மறக்கடிப்பதுதான் கொடுமையானது.

நல்ல உதாரணம் ஒன்று உண்டு. அண்மையில் ஒரு நண்பர் பேசும்போது கூறினார் பண்டார வன்னியன் என்கிற தமிழரசனின் சிலையைப் பார்த்துச் சிங்களப் போலிஸ்காரர் ஒருவர் கூறினாராம் பண்டார வன்னியன் ஒரு சிங்கள அரசர் என்று. ஏனென்றால் “பண்டார” என்பது இங்குள்ள சிங்களவர்களின் பெயர்களில் காணக்கூடிய ஒன்று. அந்த போலிஸ்காரருக்கு பண்டார வன்னியன் ஒரு தமிழ்ப் போர் வீரன், வன்னியின் கடைசித் தமிழ் அரசன் என்ற வரலாறு தெரியாமல் போனதில் சிறிய பெயர் அடையாளமே குறுக்காக நின்றுள்ளது. அந்த போலிஸ்காரரைப் போலத்தான் ஈ.வே. ராமசாமியைப் பின்தொடர்ந்து கூச்சல் போடுபவர்களின் அறியாமையும்.

வரலாறு தொடர்ந்து திரிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். அதற்கு எல்லைகள் என்பதே கிடையாது.  இந்த பெரியாரிஸ்டுகள் திரித்த வரலாற்றைவிட, கேவலப்படுத்திய தமிழ் மரபைவிட வேறு யாருமே இங்கு செய்யமாட்டார்கள். சொ.முருகப்பா கம்பராமாயணத்தை மிக உவந்து ஏற்றுப் பொருள் விளக்கம் எழுதி பல தமிழ் நூல்களைப் பதிப்பித்தார். ஆனால் ராமசாமி என்ன செய்தார் கம்பராமாயணத்தை எரித்துத் தமிழர்களின் மதச்சார்பின்மையின் அறிவுக்கருவூலமான திருக்குறளைக் காறி உமிழ்ந்தார்.

என்னைக் கேட்டால் ராமசாமி ஒரு பொருட்படுத்த வேண்டிய தமிழறிஞர், எழுத்துச் சீர்திருத்தவாதி என்று சொல்லமாட்டேன். ஒரு சாதாரணமான சமூகசேவகர். ஜனநாயகத்தை விரும்பியவர். அவ்வளவுதான். அதற்கும் அவர் மட்டுமே முன்னோடி இல்லை.

இன்றைய இணைய யுகத்தில் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவு வேகமாக வரலாற்றைத் திரிக்கிறார்கள் இந்த அரசியலிலுள்ளவர்கள். தங்களுடைய பதிவுகளில் சொ.முருகப்பா பற்றித் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய விரிவான வரலாற்றை அறிந்து கொள்ள முடியுமா?. இதனை அரசியல் ஆதாயங்களுக்காகப் போட்டுக் குழப்புகிறார்கள். விரிவான விளக்கத்தை எதிர்பார்த்துள்ளேன் ஜெமோ.

சுயாந்தன்.
வவுனியா.

அன்புள்ள சுயாந்தன்,

தமிழ் எழுத்துக்களில் பல்வேறு சீர்திருத்தங்களை வெவ்வேறு அறிஞர்கள் முன்வைத்துள்ளனர். அவற்றில் இந்த நெடில் சீர்திருத்தமும் ஒன்று. அதை ஏற்று தன் அச்சகத்தில் கடைப்பிடித்தவர் ஈவேரா அவர்கள். எம்ஜிஆர் தட்டச்சுப்பொறியின் வசதிக்காக இந்த வடிவை அரசுமுறையாக அறிமுகம் செய்ய விரும்பினார். தமிழ்ப்பற்று பேசும் திமுகவின் எதிர்ப்பைச் சமாளிக்க அவர் ஈவேராவின் எழுத்துச் சீர்திருத்தம் என இதைப்பற்றிச் சொன்னார். அந்தச் சூழ்ச்சி வேலைசெய்தது.

எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்தபோது தன்னை ‘ஒரிஜினல்’ என காட்டும் பொருட்டு ஈவேராவை தொடர்ந்து முன்வைத்தார். ஆகவே திமுகவும் அவரை தீவிரமாக முன்வைக்கவேண்டியதாயிற்று. அரசியலில் சி.என்.அண்ணாத்துரை முன்னணிக்கு வந்தபோது பின்னடைவைச் சந்தித்து, ஆத்திரத்தில் சம்பந்தமில்லாதவர்களை எல்லாம் ஆதரித்தமையால் ஆதரவாளர்களை இழந்து, ஒரு குறுங்குழுவை நடத்திக்கொண்டிருந்து மறைந்த ஈவேரா நாம் இன்று காணும் பேருருவாக எழுந்தது அவ்வாறுதான்.

இப்படித்தான் வரலாறுகள் உருவாகின்றன

ஜெ

முந்தைய கட்டுரைமகிழ்ச்சி- கடிதம்
அடுத்த கட்டுரைபாலைச் சிறுபொழுது- கடலூர் சீனு