குழந்தைவதை

அன்புள்ள ஜெ.

இன்று ஊடகங்கள் அனைத்திலும், குழந்தைகளை முன்னிறுத்தி, பாடல், ஆடல்,நகைச்சுவை, போட்டிகளும், மிகப்பெரிய பரிசுத்தொகைகளும், அதற்கான மெனக்கெடல்களும், அபரிமிதமாக உள்ளது. குழந்தைகளும், பெற்றோரும் கிட்டத்தட்ட “உயிரை பணயம்” வைத்து இதில் கலந்து கொள்கின்றனர்.

“Child prodigy “எனும் “குழந்தை மேதைகள் ” பற்றி எப்படி புரிந்து கொள்வது? முன் எப்போதும் இந்த அளவு குழந்தைகள் திறமை சார்ந்து நம் மக்கள் கவனம் செலுத்தி உள்ளனரா?  இந்த மேடைகளில் ஏறாத அல்லது சோபிக்காத குழந்தைகள் ” மக்கு ரகம்” என்கிற முடிவுக்கு தாய்மார்கள் வந்துவிட்டனர்.  80-90 களில் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவன்  மட்டும் தான் மீதி 39 மாணவர்களுக்கு முன் மாதிரி, இன்று இப்படி பல “முன் ,”மாதிரிகள்”  வந்து விட்டது. ஒரு குழந்தை என்ன தான் செய்ய வேண்டும்?

“இந்த குழந்தை மேதைகள்” மேற்கொண்டு என்னவாகிறார்கள்?இன்னும் 20-30 வருடம் கழித்து என்ன தேவைப்படும் ,அதற்கு இப்போது எந்த துறையை தேர்ந்தெடுப்பது, என்ன படிப்பது என்கிற தெளிவு, யுவாலுக்கே இன்னும் சரியாக தெரியவில்லை, நம் பெற்றோர் பற்றி கேட்கவே வேண்டாம்.

உங்கள் சிந்தனையை அறிய விரும்புகிறேன்.

அன்புடன்

செளந்தர்.G

அன்புள்ள சௌந்தர்,

நான் குழந்தைப்பத்திரிகைகளை அடிக்கடி வாசிப்பதுண்டு. அவற்றில் எல்லா இதழ்களிலும் இருக்கும் செய்தி ‘ஆறுவயதிலேயே மிருதங்கம் வாசிக்கும் சிறுவன்’ ‘ஒன்பது வயதில் குத்துச்சண்டை போடும் சிறுமி’ வகை செய்திகள். ஒரு குழந்தை இயல்பான திறமையுடன் இருந்தால் அதில் ஆச்சரியம் இல்லை என்றும் அது இளமையிலே அசாதாரணமான திறனுடன் இருந்தால்தான் அதில் ஆச்சரியம். யானை நடனமடுவதைப்போல.குதிரை பேசுவதைப்போல.

இந்த பாமர மனநிலையின் வெளிப்பாடு குழந்தைகளை பெரிய அளவில் பாதிக்கிறது. திறமைசாலிகள் குழந்தைப்பருவத்திலேயே மேதமையை வெளிப்படுத்துவார்கள் என நம் ஊர் மொண்ணைப்பெற்றோர் நினைக்கிறார்கள். ஆகவே தங்கள் குழந்தையை மேதையாக ஆக்கும்பொருட்டு கடுமையான பயிற்சிகளுக்கு ஆளாக்குகிறார்கள். அவர்களை காட்சிப்பொருளாக கொண்டுசென்று நிறுத்துகிறார்கள். அவர்கள் அவ்வண்ணம் ஆகவில்லை என்றால் ஏமாற்றமுற்று அவர்களின் வாழ்க்கையை நரகமாக்கி தாங்களும் துன்புறுகிறார்கள். அவ்வாறு ஆன குழந்தைகளை மேலும் மேலும் எதிர்பார்த்து வதைக்கிறார்கள்.

மெல்ல மெல்ல இது ஒரு வணிகமாக ஆகிவிட்டிருக்கிறது. தொலைக்காட்சிகள் குழந்தைகளைச் சித்திரவதை செய்கின்றன. இந்தப்போக்கு பேரழிவை உருவாக்குவது. இந்த அற்பர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். இன்று சாதனையாளர்களாக அறியப்படும் மேதைகள் எவருமே குழந்தைப்பருவத்தில் மேதையாக ஆனவர்கள் அல்ல. அவர்கள் வாழ்க்கை வழியாக உருவாகி வந்தவர்கள்

 

ஜெ

குழந்தைமேதைகள்

முந்தைய கட்டுரைகோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் வெண்முரசு கூடுகை-13
அடுத்த கட்டுரைகீதை கடிதங்கள்