காடு ஒரு வாசிப்பு

காடு அமேசானில் வாங்க
காடு வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

எளிமையாக இருக்கும் என்று எண்ணி விஷ்ணுபுரத்துக்கு முன்னால் பின் தொடரும் நிழலின் குரல்படித்தேன்.அதுவும் கடினமாகத்தான் இருந்தது.காடுசாதாரணமாகவே சிக்கலானது.ஜெயமோகனின் காடுஅடர்த்தி மிகுந்தது.

புல்வெளி தேசத்துக்கு வந்து காடு நாவல் வாசித்தேன்.பல கால நிலைகளில் வெவ்வேறுமனிதர்களின் பார்வையில் பல கோணங்களில் காடு காட்சிப் படுத்தப் பட்ட விதம் காடு சில நாட்கள் மனதை விட்டகலாது சூழ்ந்துள்ளன.அயனி மரத்தடியில் என்னை விட்டால் அய்யர் பங்களா சென்று, சந்தனக் காட்டுக் குடிலுக்கோ,வேங்கை மரத்தடிக்கோ சென்று விட முடியும் என்றே தோன்றுகிறது.கிரி நீலி மீது கொண்டது, துளியும் காமம் கலக்காத காதல்.அது காதல்கூட இல்லை.இரு குழந்தைகளின் விளையாட்டு.காட்டின் அழகோ,நீலியின் அழகோ உண்மையில் கிரியின் உள்ளத்தின் பிரதிபலிப்பே.அதனால்தான் பேச்சிப்பாறையைக் கடந்து குறிஞ்சிப் பூக்களைப் பார்த்தபின் நீலி ஒரு சாதாரணமான மலைப் பெண்ணாகத் தோன்றுகிறாள்.நீலியின் மறைவுக்குப் பின் அவனறிந்த அழகிய காடு மறைந்து போகிறது.அது வேறு காடு.அதுவல்ல அவனைக் கபிலனாக்கிய காடு.

அன்றாடப் படுத்தப்பட்ட கிரியாக முதிர்ச்சியான,ஆனால் இயலாத,சிறிது நேரத்திலேயே தலை கீழாய் மாறக்கூடிய கவிமனதோடு அய்யர் கவர்கிறார்.குறுந்தொகை,சிவஞான போதம்,சினேகம்மையின் பின் கழுத்து உரோமம் எல்லாவற்றையும் கிரி,அய்யர் இருவராலும் ரசிக்க முடிகிறது.எந்த மயக்கமுமின்றி,வாழ்க்கையை அதன் எல்லா பரிசுகளோடும் அதன் போக்கில் சிக்கலின்றி ஏற்றுக் கொள்வது குட்டப்பன்தான்.

கற்பைத் தவிர எல்லாவற்றிலும் காசு பார்க்க விரும்பும்,தன்னை அழகற்றவளாக காட்டிக் கொள்ளும்  எடத்துவா மேரி. அழகின்றி, ஆனால்  அது தந்த தாழ்வுணர்ச்யால் மருகி சாமியாடும் வேணி. பெண்களை பொருட்களாக எண்ணி பரிசளிக்கும்,அவ்வப்போது பிறரிடமிருந்து அபகரித்துக் கொள்ளும் கீழ்மையான மாமா.கம்பனில் உருகிக் கரைந்து விடும் தேவசகாயம் நாடார். பொறுப்பில்லாத கணவன் அமைந்ததால் குமைந்து உருகும் வேணி,கிரியின்அம்மா, அம்பிகா அக்கா..அனந்தலட்சுமி பாட்டியின் சரளமான பிரசங்கம்.அதைக் கேட்டு மகிழ தினம் திரளும் நேயர் கூட்டம்.

கடைசி வரை அப்பாவி போல  தேவாங்கை கொஞ்சும் சாலம்   “உள்ள நல்ல ஒரு புண்ணு உண்டும்” பின்னர் வெகுண்டெழுந்து தன் எஜமானனை கொலை செய்கிறார்.ரெசாலத்துக்கு தேவாங்கு. குரிசுக்கு  பைபிள்.இது உறவுகளின் காடு.காட்டின் நியாயங்கள் வேறு.கற்பின் நடைமுறை அர்த்தம் வினோதமானது.’இது தப்பில்லையா?’என்று கேட்கப் படும்போது சினேகம்மை “ஆரெயெங்கிலும் சொல்லி ஏமாத்தினா தப்பு.” என்கிறாள்.சொல் திறம்பாமை.” ஏன் கெட்டினா ஒத்திக்கோ பாட்டத்துக்கோ எடுத்திருக்கா?” என்ன ஒரு தெளிவான சிந்தனை!

கலப்பில்லா காமமே காட்டின் நெறிவேறுபட்ட மனிதர்கள் மட்டுமின்றி அவ்வப்போது தலை  காட்டும்,கிரியோடு சேர்ந்து கையெழுத்திடும் மிளா.வேட்டியை உருவும் மோழைக் கொம்பி,மனிதரைக் கொல்லும் புள்ளிக் கண்ணன்,அச்சமூட்டும்,ஆனால் தீங்கற்ற கீறக்காதன்–எல்லாம் யானைகள்.காட்டின் உண்மையான நாயகர்கள்.சிறிய பாத்திரங்கள்கூடகாட்டின் மரங்களைப் போலவே ஒவ்வொன்றும்தனித்துவமும் முக்கியத்துவமும் கொண்டவை.

” நாடு கண்டவன் நாட்டை விட்டாலும் காடு கண்டவன்காட விடமுடியாது.”கிரியால் விட முடியவில்லை.ஒருநாள் கூட அவனால் காட்டைப் பிரிந்து வீட்டில் இருக்க முடியவில்லை.அவன் தன்னை மலையன் என்றே நம்பத் தொடங்கி விடுகிறான்.நீலி என்ற பெயர் பிரபஞ்சமாய் விரிந்த நாட்களில் கிரியால் மலையடிவாரத்துக்கு –48 மைல் –ஓரிரவில் இறங்க முடிந்தது.

கவித்துவம் கொப்பளிக்கும் வரிகள்.”நட்சத்திரங்களை ஏறிட்டுப் பார்த்தேன்.பிரம்மாண்டமான ஓர் அலங்காரக் கூரை.அற்பனும்,அபத்தமானவனுமான மனிதன் என்ற பிராணிக்கு சற்றும் தேவையில்லாத ஆடம்பரம்.”

விசும்பு தோய் பசுந்தழை.

வறனுறல் அறியாச் சோலை.

“சாந்தில் தொடுத்த தீந்தேன்.”

மகத்துவங்களை என்னால் என் சிறிய மனதைக் கொண்டு அள்ளமுடியவில்லையா?”

நள்ளிரவில் விழித்து,காட்டுக்குள் நுழைந்த கிரிமலையுச்சிகளை நோக்கி செல்லும்போது மொழி கவித்துவ  உச்சிகளை நோக்கி செல்கிறது.

“படுக்க வைக்கிறவனுக்கு பத்து பொண்ணு.பாத்து

ரசிக்கிறவனுக்கு பத்தாயிரம் பொண்ணு.”

“கற்றதனாலாய பயனென்கொல் அவ்வப்போது கக்கி வைக்காவிடில்.”

“காடு ஏன் புனிதம்னா அது யாருக்கும் சொந்தமில்லைங்

கறதுனாலேதான்.சாலை என்பது மனிதன் காட்டை

உரிமை கொள்ளச் செய்யும் முதல் முயற்சி.”

எஞ்சினியர் நாகராஜ அய்யர் அவ்வப்போது உதிர்க்கும் பஞ்ச் வசனங்கள்.

நீலி விஷக் காய்ச்சலில் இறந்தது போகிற போக்கில் சொல்லப் படுகிறது.குட்டப்பனுக்கும் பிறருக்கும் அவள் ஒரு அழகிய மலைப் பெண் மட்டும்தான்.கிரிக்கும்,வாசகனுக்கும் அப்படியா?

“உள்ள நல்ல ஒரு புண்ணு உண்டும்”  எல்லோருக்கும்தான்.

நன்றி,ஜெயமோகன் சார்.

 

அன்புள்ள,

ஜெ.சாந்தமூர்த்தி,

மன்னார்குடி.

காடு- எம்.கே.மணி

காடு,கடிதம்

காடு- கதிரேசன்
கீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்
காடு இரு கடிதங்கள்
காடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்- கலைச்செல்வி
காடு- வாசிப்பனுபவம்
கன்யாகுமரியும் காடும்
காடு-முடிவிலாக் கற்பனை
காடு -கடிதம்
காடும் மழையும்
காடு- கடிதங்கள்
காடும் யானையும்
கன்யாகுமரியும் காடும்
காடும் குறிஞ்சியும்
காடு- ஒரு கடிதம்
காடு– ஒரு கடிதம்
காடு – பிரசன்னா
காடு -ஒரு பார்வை

 

முந்தைய கட்டுரைஇலக்கியமும் தேர்வுகளும்
அடுத்த கட்டுரை”ஆயன சிறுநவ்வு” – கடிதம்