சுபிட்சமுருகன் வாசிப்பு – கதிர்முருகன்

திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்

சுபிட்சமுருகன், வாசிப்பு

சுபிட்சமுருகன் – கடிதங்கள்

சுபிட்ச முருகன், மின்னூல், கடிதம்

அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி எப்பொழுதும் தூய வெண்ணிற பருத்தி ஆடைகளையே அணிவார் அவ்வளவாக புகழ் பெறாத காலகட்டத்தில் பேருந்துக்காக காத்து கொண்டு நின்று கொண்டிருந்திருக்கிறார் பேருந்தில் இருந்த ஒரு பெண்மணி மென்று குதப்பிய வெற்றிலைச்சாற்றை மகரிஷியின் முகம் மார்பு பகுதிகளில் எதிர்பாராமல் துப்பிவிட்டாள்.பதறித் துடித்து இருக்கிறாள் அந்த அம்மாள் ஐயா மன்னித்துவிடுங்கள் கவனிக்கவில்லை என்று பல முறை மன்னிப்பு கேட்டுள்ளாள்.

துளியும் சலனமின்றி மகரிஷி சொன்னாராம் இந்த உடம்பே அம்மாவின் எச்சில் தானே அம்மா.நீங்கள் வேண்டுமென்று செய்யவில்லை பரவாயில்லை என்று கூறியுள்ளார்.இந்நாவல் முழுக்க எச்சில் பலவற்றின் குறியீடாய் வந்து கொண்டே உள்ளது.

கதை நிகழும் ஊர் மழைக்காக ஏங்கித் தவிக்கிறது குடிக்க நீரில்லை கால்நடைகள் மடிகின்றன, செடி கொடிகள் உயிர் தண்ணீர்க்கு ஏங்கித் தவிக்கின்றன.நாயகன் கட்டுக்கடங்காத ஆசைகளின் வெப்பத்தினால் உடலும் உள்ளமும் உருகி கொஞ்சம் கொஞ்சமாக கருகுகிறான்…

பிண்டத்தின் சூட்டிலிருந்து விடுபட்டு அண்டத்தின் முருகனின் குளிருக்காக தவம் இருத்தலும் நிறைவில் முருகனின் அருளால் அவன் அகம் நிறைவதுமே கதை.கிறிஸ்துவின் இறுதிச் சபலம், மிர்தாதின் புத்தகம், லிட்டில்   புத்தா என ஏற்கனவே படித்த பார்த்த பலவற்றை நினைவு மீட்டிக் கொண்டே இருந்தது இந்நாவலை வாசிக்கும் பொழுது.

கிறிஸ்துவும் சரி மிர்தாதும் சரி உண்மையை நோக்கிய தங்களுடைய யாத்திரையில் பெரு வலிகளை எதிர்கொள்கின்றனர்.எவ்வளவு வலி தாங்குகிறோமோ நிறைவில் வரும் இன்பம் ,அவ்வளவு பெரிதாக இருக்கும், இரவு தன் உச்சத்தை எட்டுகையில் விடியல் அருகில் இருக்கிறது.நாவலில் வலி குறித்து வரும் சில வரிகள்.

வலியை உணர்ந்து பின்தொடர்ந்து  போ.அதை   எடைபோடுகிற உரிமை உனக்கு இல்லை எண்ணங்களுக்கு உன்னை ஒப்புக் கொடுத்து விடு எண்ணங்களை உருக்குகிற சட்டி ஒன்றின் பெயரை அறிவாய் எண்ணங்கள் செல்கிற திசையில் போய் கணக்கைத் தீர்த்து விடு

கடைசி வலி உக்கிரமாத்தான் இருக்கும் பொறுத்துக்கிட்டீனா எல்லாத்தையும் கடந்துடுவ

மேலும் மனதைத் தொட்ட சில வரிகள்

சந்தேகம்  செந்நிறபூரானை போல மனதில் ஊற ஆரம்பித்தது

பயம் ஒரு பாம்பைப் போல பின் தொடர ஆரம்பித்தது என்னை

உள்ளுக்குள் சலனமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் உயிர்  ஓடைகொப்பளித்து நீரை வெளியேவே துப்ப வேண்டும் அது வரைக்கும் அலைச்சல்கள் பொதுவானவை உயிர் ஓடை தேடி மக்கள் எறும்புகள் போல் அலைந்தனர்//.

தொழில்முறை ஹாக்கி விளையாட்டு வீரரான நாவலின் ஆசிரியர் தன் முன்னுரையில் இவ்வாறு சொல்கிறார்.பந்தை தொடுவதற்கு முன் பணி வைத்தான் கற்றுக்கொடுப்பார்கள் குருவிடம் சரண் அடைகிரஇடத்திலேயே பயிற்சிக்கான முதல் புள்ளி துவங்குகிறது.

குரு-சிஷ்ய உறவு பற்றி எவ்வளவு எழுதப்பட்டுள்ளது இருந்தும் இன்னமும் எழுத மிச்சம் உள்ளது.

குருவைப் பார்க்க ஒருவர் வருகிறார் தரமான சந்தனக் கலவை சட்டி ஒன்றை சாமி முன்னால் நீட்ட சாமி அதில் ஒரு     தீற்றலை பக்கத்தில் படுத்திருந்த நாயின் குண்டியில் தடவி விடுகிறார்.(ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர்)

குரு எப்போதும் ஒரு வேப்பங்குச்சியை மென்றுகொண்டே இருக்கிறார். அவர் துப்பும் எச்சில் பக்தர்களால் ஆசீர்வாதம் என நம்பப்படுகிறது.

கசப்பு விஷத்தை தான் விழுங்கிறார் நீலகண்டனை போல.

ஒரு சாதகன் ஞான முழுமையை பெரும்பொழுது அங்கே சிஷ்யன் குரு இறை என பேதங்கள் எல்லாம் இல்லை.நாவலில் இது ஒரு சம்பவமாக வருகிறது கதை நாயகன் முழுமையை நோக்கி நகரும் ஒரு தருணத்தில் அங்கே கோவிலில் உள்ள குருவின் புகைப்படம் விழுந்து நொறுங்குகிறது தானாகவே.

நாவலில் நிறைய சுவாரசியமான பாத்திரங்கள் உண்டு . தாத்தா,அத்தை,என அதில் ஒன்று விருதுநகர் வடை மாஸ்டர் சுப்ரமணி.

குரு சொன்னார் என்ற ஒற்றை காரணத்திற்காக ஒரே இடத்தில் தொடர்ந்து வடை சுடுகிறார் பல இடங்களில் பெரிய சம்பளத்திற்கு வேலைக்கு அழைத்து போதும் குரு வாக்கினை மீறாது காக்கிறார் இதே சுப்பிரமணி இரவில் குடித்துவிட்டு குருவினை திட்டி தீர்க்கிறார். நான் யின் யாங்கினை நினைத்து கொண்டேன்.அதீத அன்பும் பற்றும் தானே ஒரு புள்ளியில் கோபமாக மாறுகிறது.

என்னளவில் நாவலில்  பித்துநிறைந்த அத்தியாயங்களாக முற்பகுதி அத்தியாயங்களை சொல்லுவேன்.இந்த இந்திய மண்ணில் பிறந்தது எவ்வளவு பேரதிர்ஷ்டம் நாயகன் இதே வேலையை பாலைவன நாடுகளில் செய்திருந்தால் எப்போதோ தலையை அல்லது குறைந்தபட்சம் கையையாவது வெட்டியிருப்பார்கள்.

எவ்வளவு கீழான காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் காட்டும் தீவிரம் ஈடுபாடு உங்களை முழுமையை நோக்கி நகர்த்தும்.நாவல் இவ்வாறு நிறையும் சாமி கடலுக்குள் அமிழ்ந்து பலம் கொண்டு எச்சில் துப்பினார் மயிலோன் விந்துதுளி செங்காட்டு நிலத்தில் விழுந்தது.

இந்த தீபாவளி திருநாளில் எல்லோருக்கும் இறைவனின் எச்சில் கருணை கிட்டட்டும்.

மு.கதிர் முருகன்

கோவை

 

https://www.amazon.in/Books-Saravanan-Chandran/s?rh=n%3A976389031%2Cp_27%3ASaravanan+Chandran

முந்தைய கட்டுரைஇருட்கனியின் ஐயங்கள்
அடுத்த கட்டுரைமதம், அறம் -கடிதங்கள்