சொல் தட்டச்சு -கடிதம்

வணக்கம் ஜெ,

விஷ்ணுபுரம் விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே நான் எனது அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டேன், தொடர்ந்து வெண்முரசு வாசிப்பதன் வாயிலாக நனவிலும் அக்கனவு நிலையில் அதன்  நிகழ்வுகளின் சாத்தியங்களால் எனக்கான ஒரு வெண்முரசை நனவிலியில் உருவாக்க விழையும் எண்ணத்தினால் பெரும்பாலும் தங்களுக்கு கடிதம் எழுதவில்லை என்பது முதன்மையாக இருந்தாலும், குறும் தொடுதிரையில் தட்டச்சு செய்வதன் சலிப்பே பின் காரணம் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

இதற்கு ஒரு மாற்று கிடைத்துவிட்டது, இதற்கு முன் தாங்கள் வெளியிட்ட கணினியில் எழுதுவது என்ற பதிவில் தட்டச்சு செய்வது பற்றிய உரையாடல் நிகழ்ந்தது, அதில் சுரேஷ் பிரதீப் தனக்கு கணினியில் தட்டச்சு செய்வதை விட புத்திசாலியான தொலைபேசியில் குறும் தொடுதிரையில் தட்டச்சு செய்வது மிகவும் எளிமையாக இருப்பதாக கூறியிருந்தார். இதோ அதன் அடுத்தகட்ட பரிணாமமாக ஒலி ஏற்பு தட்டச்சு முறையில் இக்கடிதத்தை தங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

இதில் ஒரு மெல்லுணர்வாக நான் கருதுவது என்னவென்றால், இது ஒரு ஒலி வடிவ உரையாடலாகவும், கடிதமாகவும் ஒருங்கே அமையப்பெற்றமை.   இனிவரும் காலங்களில் இந்த ஒலி  ஏற்பு தட்டச்சு முறை எம் போன்ற மந்த தட்டச்சு வாசகர்களின் முதன்மை தேர்வாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை. விழாவில் சந்திக்க ஆவலுடன்….

நன்றி

அன்புடன்

சசிகுமார் ரா

சேலம்

அன்புள்ள சசிகுமார்

நான் இந்த ஒலி-தட்டச்சு முறையை இன்னும் பயன்படுத்தவில்லை. எனக்கு அது சரிவரவில்லை. நான் சொல்வதை அது சரியாக தட்டச்சு செய்வதில்லை. சொற்கள் மாறிவிடுகின்றன. எழுதுவதை விட திருத்தியமைப்பது பெரும் சிக்கலானதாக உள்ளது. எழுதுவதிலுள்ள இன்பம் இல்லாத சொல்பொறுக்கும் செயல் அது. ஒருவேளை நான் சரியான செயலியை பயன்படுத்தாமையாலாக இருக்கலாம்

ஜெ

முந்தைய கட்டுரைபாமரர்களும் எழுத்தாளர்களும்
அடுத்த கட்டுரைவெற்றி, ஒரு கடிதம்