அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களுடைய டால்ஸ்டாய் உரை சமீபமாக கேட்டேன். நான் ஒரு தேர்ந்த பேச்சாளன் அல்லன் என்று பலமுறை தாங்கள் சொல்லி வந்தாலும், அதை நீங்கள் செயலில் காட்டாமைக்கு வருந்துகிறேன் ! வழக்கம்போல, உரை கேட்டு முடித்தவுடன் , மனதின் பல அடுக்குகளில் வேர்பரப்பி உரையின் கரு சூழ்ந்துகொள்கிறது. நிறுவன அறம் தொடங்கி தனிமனித அறம், சமுதாய அறம் என்று உரை பலகோணங்களில் சிந்திக்க வைத்தது.
தனிமனிதனுக்கான அறத்தை எப்பொழுதும் அடுத்தவர் சொல்லி உள்வாங்க இயலாது, தன் அனுபவத்தின் அவதானிப்புகள் மூலமே சென்று அடையமுடியும் என்ற உங்கள் கருத்து மூளையின் ஒரு இடுக்கில் இருந்துகொண்டேதான் உள்ளது. எனக்கான அறமாக தோன்றுவதை எங்கேனும் யாரேனும் சொல்லி கடக்க நேர்ந்தால், அவர்பால் பெருமதிப்பை உண்டாக்கும். இப்படியாக நான் சென்று அடைந்தவர் தான் திருவள்ளுவர், காந்தி போன்றோர். பாடப்புத்தகத்தில் மனனம் செய்யும்போது நான் பார்த்த குறள் வேறு, இப்பொது அதே குறள் பன்மடங்காக விரிவு பெறுகிறது. அந்த அறத்தின் உள்ளடக்கம் வியப்பில் ஆழ்த்துகிறது. தற்பொழுது பிளாட்டோ . அவர் cardinal virtues என்று எடுத்துரைத்த Justice, Temperance, Prudence, Courage ( இவ்வார்த்தைகளுக்கெல்லாம் தமிழில் சரியான அர்த்தத்தை தொக்கி நிற்கும் வார்த்தை எட்டவில்லை எனக்கு, எனவே ஆங்கிலம்) மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. நான் பெரும்பாலும் மனதிற் கோழையாக உணர்பவன். ஆனால் இந்த பிளாட்டோவின் courage ஐ கண்டடைந்தவுடன் , மனதில் ஒரு தைரியம் தானாகவே பிறக்கிறது.
இம்மூவரில் பிளாட்டோ, வள்ளுவர் சொன்ன அறத்தை அறிவதற்கும் காந்தியின் அறத்தை அறிவதற்கும் என்னுள் பெரிய இடைவெளி உள்ளதாக தோன்றுகிறது. பிளாட்டோவின் அறமானது மனதிற்குள் ஊறி ,நமக்கு எந்த அளவுக்கு பருகமுடியுமோ , அதற்கேற்ப நம் அறத்தின் எல்லையை கண்டடைய முடியுமென தோன்றுகிறது. ஆனால், காந்தி சொன்ன அறவிழுமியங்களை அவை வாழ்க்கையினூடாக சென்றடைவதை நினைத்தாலே, பெரும் அயர்வினை தருகிறது.
எனக்கான கேள்வி இதுதான், தனிமனித அறத்திற்கான எல்லையை தீர்மானிப்பது எப்படி? எனக்கான உண்மையை கண்டடையும் பயணத்தில், சறுக்கல்கள் ஏராளம். சறுக்கல்களை விட, என்னை நானே ஏய்த்துகொண்டேன் என்றே சொல்லலாம். அப்படியான நேரத்தில், சமூகத்திடம் வரும் அறிவுரை ஒன்றுதான், இவ்வளவு படித்தும் என்ன உபயோகம் என. சாதாரண சமூக அறத்தை கூட கடைபிடிக்க முடியாத வறியோனாக இருக்கிறாயே என்பதுதான்.ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது போன்ற தத்துவங்கள் வேறு.
உதாரணமாக கள்ளுண்ணாமை என்ற அறத்தை மனம் இதுவரை ஏற்க மறுக்கிறது. என்னளவில் தவறாக உணரவில்லை. அது ஒரு மகிழ்ச்சியின், களியாட்டத்தின் பங்காகவே எனக்குத் தோன்றுகிறது. சங்க காலத்தில் அது ஒரு சமூக செயல்பாடாகவே இருந்தும் வந்துள்ளது. இச்சூழலில் என்னுடைய தனிமனித அறம் , சமூகத்தால் ஏற்க முடியாதாகிறது. பல நற்குணங்கள் இருந்தும் , இந்த ஒரு செயலால் தள்ளி வைக்கப்படுவேன்.
இதுபோல, சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல விழுமியங்கள் மீது கேள்வி எழுந்து , அதை என் அனுபவம் மூலம் கண்டடையவே மனம் தவிக்கிறது . இன்னொருபுறம், சமுதாயத்தின் குரலே என் மனதின் குரலாக , ஏற்கனவே கண்டடைந்த அறவிழுமியங்களை ஒழுங்காக கடைப்பிடிக்க வேண்டியதுதானே? இது என்ன முட்டாள்தனம் என்றொருபுறம் ! இப்படியாக, தனக்கான அறத்தை கண்டடைய இன்றைய சமூகத்தில் இடமுள்ளதா? அப்படி இருப்பின், அதை சமூக அறத்தோடு ஒட்டி நிறுவ வாய்ப்புள்ளதா?
கார்த்திக் குமார்
அன்புள்ள கார்த்திக் குமார்
இருவேறு சொற்கள் உள்ளன. அறம், ஒழுக்கம். இரண்டும் வேறுபட்ட பொருள் கொண்டவை. ஆனால் நாம் அவற்றை குழப்பிக்கொள்கிறோம். தோராயமாக ஆங்கிலத்தில் ethics and morality எனலாம். ஆனால் அறம் என்னும் சொல் ethics ஐ விட மேலும் அழுத்தமும் விரிவும் கொண்டது.
அறம் என்பது ஒரு சமூகம் ஏற்றுக்கொண்டுள்ள பொதுவான அடிப்படை. அச்சமூகத்தையே உருவாக்கி நிலைநிறுத்தியிருக்கும் சில விழுமியங்களால் ஆனது அது.
தர்மம் என்னும் சொல்லுக்குச் சமானமாக தமிழில் அறம் பயன்படுத்தப்படுகிறது. தர்மம் என்னும் சொல் ’செயல்நெறி’ ‘இயல்புநெறி’ என பொருள்கொள்கிறது. ஒவ்வொன்றுக்கும் செயல்நெறியும் இயல்புநெறியும் உண்டு. தீ எரிவதும் நீர் கழுவுவதும் அவற்றின் தர்மம். அதேபோல மானுடனுக்கும் சில செயல்நெறிகளும் இயல்புநெறிகளும் உண்டு. அவையே தர்மம் எனப்பட்டன. அனைத்தும் அவற்றின் தர்மப்படியே இயங்குகின்றன என்பது இந்து, பௌத்த, சமண நம்பிக்கை.
தமிழில் அறம் என்னும் சொல் அறுதல் என்னும் வேர்கொண்டது. அறுதி எல்லை அற்றம் எனப்பட்டது. அதுவே அறம் ஆகியது. மீறமுடியாத அறுதியான நெறி அது. அவ்வண்ணம் சிலவற்றை மானுடம் தனக்கென கண்டடைந்தது. அவற்றைக்கொண்டே அது சமூகமாக உருவானது. பண்பாடாக வளர்ந்தது.
அந்த அறம் இருவகை. பிறருடன், சமூகத்துடன், இயற்கையுடன் ஒத்திசைவதற்குரிய அறம் பொதுஅறம் எனப்பட்டது. கொல்லாமை முதலியவை அப்படிப்பட்ட பொது அறங்கள். தனக்கென ஒவ்வொருவரும் கொள்ளவேண்டிய அறம் தனியறம் அல்லது தன்னறம். முழுமையைநோக்கிச் செல்லுதல், வாழ்க்கையைப் பொருள்கொண்டதாக்குதல் தன்னறம் எனலாம். இரு அறங்களும் முரணின்றிச் சென்றாகவேண்டும்.
ஒழுக்கம் என்பது அறத்தின் அடிப்படையிலான நடத்தை வரையறைகள். ஒழுக்கம் காலம் சார்ந்தது, சூழல் சார்ந்தது, மாறிக்கொண்டிருப்பது. அறம் மாறாதது, ஏனென்றால் ஒரு சமூகத்தையே கட்டியமைத்திருக்கும் அடிப்படைகளால் ஆனது. அறத்தை அந்தந்தக் காலத்தில் நிலைநிறுத்தும் பொருட்டு ஒழுக்கம் உருவாகிறது. காலம் மாறும்போது அறத்துக்கும் அதற்கும் இசைவில்லாமல் ஆகுமென்றால் அந்த ஒழுக்கம் காலாவதியாகிறது. நேற்று ஒழுக்கம் என்று கருதப்பட்டது இன்று அவ்வாறு இல்லாமலாகலாம். அவ்வாறு எத்தனையோ ஒழுக்கங்கள் மாறிவிட்டிருக்கின்றன.
இந்த வேறுபாட்டை நாம் மிக எளிதில் உணர்ந்துகொள்ள முடியும். தமிழ்ச்சமூகம் அறம் என சிலவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறது. ’அனைவருக்கும் வாழ்வுரிமை உண்டு’ என்பது ஓர் அடிப்படை அறம். பிறரை அழிக்காமலிருப்பது அதற்குரிய நெறி.கொல்லாமை என்பது அதன் விளைவான ஒழுக்கம்.
வள்ளுவர் அறங்களில் அதுவே முதன்மையானது பிறவற்றின் வாழ்வுரிமையை ஏற்றுக்கொள்ளல் என்கிறார். ஆகவே கொல்லாமையை முன்வைக்கிறார். பிற அறங்கள் எல்லாம் அதன் விளைவாக வருவனவே என்கிறார்.
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
ஆனால் போரில் கொல்லுவது ஏற்புடையது, ஏனென்றால் அது வாழ்வுரிமைக்காவே செய்யப்படுகிறது. கொலைக் குற்றவாளியை கொல்வது ஏற்புடையது, ஏனென்றால் அது ஓர் எளியவனின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டமைக்காக அளிக்கப்படும் தண்டனை. வள்ளுவரே அதை சொல்கிறார்
கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
கொலைக்குற்றவாளியை அரசன் கொல்வது என்பது பசும்பயிருக்கு களைபறிப்பதற்குச் சமமானது.
இதுதான் வேறுபாடு. கள்ளுண்ணாமை என்பது ஒழுக்கம். ஒருவன் எந்நிலையிலும் தன்னுடைய உணர்வுநிலையில் இருந்தும் அறிவின் கட்டுப்பாட்டில் இருந்தும் விடுபடலாகாது என்பதும், அவன் தன் செயல்களுக்கான பொறுப்பை தானே முழுமையாக ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்பதும் அறம். அந்த தன்னுணர்வை மழுங்கடிக்கும் என்பதனால்தான் கள்ளுண்ணாமை ஒழுக்கரீதியாக தடைசெய்யப்பட்டது.
கள்ளுண்ணாமை அறம் அல்ல, ஒழுக்கம்தான். அதை கடைப்பிடிக்கவேண்டுமா வேண்டாமா என்பது அந்த அடிப்படை அறமாகிய தற்பொறுப்பை பேணுவதற்கும் அதற்கும் தொடர்பு உண்டா என்பதை ஒட்டியே முடிவாகிறது. அது உங்கள் தெரிவு. ஆனால் என் நோக்கில் எந்தவகையான போதையும் மனிதன் தன் செயலுக்கு தானே பொறுப்பெற்கமுடியாமலாக்குகிறது. ஆகவே போதை என்பது அறமீறலுக்கு வழிவகுக்கும் ஒழுக்கமீறல்.
ஜெ