கதைகள் திரும்புதல் – கடிதம்

அன்புள்ள ஜெ.,

முன்பெல்லாம் எழுத்தாளர்களின் கதைகள் திருப்பி அனுப்பப் படுவது பற்றி பத்திரிகைகளில் ‘ஜோக்’குகள் வருவதுண்டு. இணைய வசதி வந்த பிறகு திருப்பி அனுப்புதல் ஒழிந்தது. அசோகமித்திரன் எழுதுவார் க நா சு வின் அறையில் கட்டுக் காட்டாக எழுதிக் குவிக்கப்பட்ட காகிதங்கள் (manuscript) இருக்கும். பாதியும் பத்திரிகை அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தவை என்று. சி. சு. செல்லப்பாவைக் குறித்தும் அதேபோல் சொல்லப்படுவதுண்டு. சுஜாதாவின் ‘லாண்டரி லிஸ்ட்’டை அனுப்பினாலும் பத்திரிகைகள் பிரசுரிக்கத் தயாராக இருந்ததாகப் படித்திருக்கிறேன். புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளும் திருப்பி அனுப்பப் பட்டுள்ளனவா? உங்கள் அனுபவம் எப்படி?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

***

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்

ஓர் இதழ் பிரசுரத்தை மறுப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அந்தப்படைப்பு ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு உகந்ததாக இல்லை, அவ்வளவுதான். சிலசமயம் கூடுதல் தரமானவை என்பதனால்கூட மறுப்பு நிகழும். ஆகவே அதைப் பொருட்படுத்தலாகாது. நம்மை நாம் மறுபரிசீலனை செய்துகொண்டே இருக்கவேண்டும்.

நான் மிக இளமையிலேயே எழுத வந்தவன். ஆகவே எழுதிக்கொண்டே இருந்தேன். பிரசுரமாகிறதா இல்லையா என கவனிப்பதில்லை. நண்பர்களுக்கும் எழுதிக்கொடுப்பேன். அவர்களின் பெயர்களிலும் பிரசுரமாகும். நிராகரிக்கப்பட்ட கதைகளை திரும்ப அனுப்புவதில்லை. அவை கருப்பையை சென்றடையாத உயிரணுக்கள் போல.

ஆனால் எனக்கு எழுத்தாளன் என்னும் தன்னடையாளம் உருவானபின், என் இருபது வயதில் இருந்து நிராகரிப்பு என்னை சீற்றம் கொள்ளச் செய்தது. ஒருமுறை ஒரு கதை ஏற்கப்படவில்லை என்றால் மீண்டும் அவ்விதழில் எழுதுவதில்லை. என் ஒரு கட்டுரை நிராகரிக்கப்பட்டதனால் தினமணியில் எழுதுவதை விட்டுவிட்டேன்

என் படைப்புகள் திரும்ப வந்ததோ நிராகரிக்கப்பட்டதோ மிகமிகக்குறைவு. இல்லை என்றே சொல்லலாம். 1990ல் என் திருமணத்திற்கு காசு வேண்டும் என்பதற்காக ஒருநாள் வெளியே சென்று அன்று வந்துகொண்டிருந்த அத்தனை இதழ்களையும் வாங்கி தமிழிலும் மலையாளத்திலும் வெளியான எல்லா இலக்கியப்போட்டிகளுக்கும் கதை அனுப்பினேன். ஆறு போட்டிகள். ஆறிலும் பரிசு பெற்றேன்.

ஒரு கதை எஸ்.அருண்மொழிநங்கை என்ற பேரில் கல்கியில் பரிசு பெற்றது. அப்போது அவள் என் மனைவி அல்ல. இன்றைக்கு அவள் எழுதுகிறாள். நாளைக்கு அவளைப்பற்றி எவராவது ஆய்வுசெய்து அந்தக்கதையையும் அவள் கணக்கில் சேர்த்துவிடக்கூடாது…

ஜெ

முந்தைய கட்டுரைதேவிபாரதி விருது விழா
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் பல்கலைக் கழகம்