அன்பின் ஜெ,
நலமுடன் இருக்க அருணைப்பித்தனின் ஆசீர்வாதம் என்றும் உங்களோடிருக்கட்டும்.
“அசைவென்பது அவன் கரங்களாக,
அதிர்வென்பது அவன் கால்களாக,
திசையென்பது அவன் சடைமுடிக்கற்றைகளாக,
ஒளியென்பது அவன் விழிகளாக,
இருளென்பது அவன் கழுத்துநாகமாக இருந்தது.
அவனென்பதை அவனே அறிந்திருந்தான்.
ஆடுகையில் அவனில்லை என்பதையும் அவனறிந்திருந்தான்”.
புழு என்ன செய்துவிட முடியும்? புழு எனக்கு இரண்டு ஆசான்களை அறிமுகப்படுத்தியது. என்னுடைய பணிநிமித்தம் புழு மண்டிய பிணங்களை இறப்பறி பரிசோதனை செய்ய நேரும். அந்த தருணங்களில் புழுக்கள் பல விஷயங்களை உணர்த்தும், அதனூடாக எவ்வாறு நோயறிதலுடன் அணுக்கமாவதை கற்பிக்கும் என்று போதித்த எனது முதல் ஆசான் சி. பாலச்சந்திரன்.
இரண்டாவது, 2007 ல் யானைடாக்டர் குறுநாவல் மூலம் அறிமுகமாகி வாழ்வியலாகவே மாறிப்போன ஜெயமோகன்.
நீங்கள் கூறியதுதான் “கங்கையை மதிப்பிடும் அளவுக்கு கரைமரங்களுக்கு வேர்கள் இல்லை”. வெண்முரசோ யானை டாக்டரோ புழுக்கள் வரும் தருணங்களை வாசிக்கும்போதெல்லாம் ஒரு நிலைகுலைவு உருவாகிறது. அதுவரை என்னைப்பற்றி கொண்டிருந்த எண்ணங்கள் மாறுபடுகின்றன. என்னை நானே உடைத்து மறு ஆக்கம் செய்துகொள்கிறேன். அவ்வாறு வெண்முரசு உருவாக்கிய கேள்விகளுடனும் அலைவுகளுடனும் நாட்கள் கடந்துகொண்டிருக்கின்றன.
புழு என்றெண்ணம் வரும்போதே நமக்கு கீழ்மையும் சேர்ந்தே நினைவில் வரும். பொதுவாக. பொருள், பதவி, புகழ், அதிகாரம், வசதிகள் ஆகியவற்றை மட்டுமே நோக்கி நகர்கின்ற லௌகீக வாழ்க்கை, கையூட்டு, குழைதல், புறம்பேச்சு, அகங்காரம், ஆணவம், கீழ்த்தர எண்ணங்கள், ஏமாற்றுதல், வஞ்சித்தல், காக்காபிடித்தல், கூழைக்கும்பிடு, சுயமிழத்தல், நம்பிக்கை துரோகம், நேர்மையின்மை, அழகியலின்மை, மொண்ணைத்தனம் என ஓராயிரம் நிகழ்வுகள் புழு இயல்பு என நம்மை எண்ணவைக்கின்றன.
ஆனால் இவற்றையெல்லாம் கடந்தோ புறந்தள்ளியோ புழுக்களின் அறியா மற்றொரு முகம் எனக்கு கனவில் நனவெனவோ நனவில் கனவெனவோ அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறது. தங்களை எப்போதும் உளமெழச்செய்யும் படிமமான, குமாரசம்பவத்தில் காளிதாசன் சொல்லும் புகழ்பெற்ற உவமையாகிய ‘யானைமத்தகத்தை அறைந்து பிளந்து உண்டு, உகிர்களிலிருந்து உதிர்ந்த குருதித்துளிகள் பனிப்பரப்பில் செம்மணிகள் என உதிர்ந்து மாலையென்றாக, நடந்துசென்ற சிம்மத்தின் பாதை”. அந்தத் தடமும் அழியும். ஆனால் எளிய காலடித்தடங்களைவிட மதிப்புமிக்கது அது. புழுக்களின் தடங்களும் அவ்வாறே என எண்ணுகிறேன்.
நீந்தும் நெளியும் வளையும் துடிக்கும் பல்லாயிரம் கோடிப் புழுக்களே இப்புவியின் வலியனைத்தையும் அறிபவை. வலியறியும் அக்கணமே வாழ்வென்றானவை. மிதித்து மிதித்துச் செல்லும் உயிர்க்குலங்களுக்குக் கீழே நெளிந்து நெளிந்து வாழ்ந்து இறந்து பிறந்து இறந்து அவை அறிந்ததென்ன? சொல்லாத நாக்கு. உணர்வறியா நரம்பு. அறையாத சாட்டை. சுடாத தழலாட்டம். ஒழுகாத நீர்நெளிவு. முளைக்காத கொடித்தளிர். கவ்வாத வேர்நுனி. சுட்டாத சிறுவிரல். எழாத நாகபடம். கொல்லாத விஷம். இவற்றில் புழுவாகி வந்ததுதான் என்ன? [வண்ணக்கடல்]
நீந்தி நெளிந்து வளைந்து துடிக்கும் பல்லாயிரம்கோடிப் புழுக்களே இப்புவியின் உயிரானவர்கள். விழியின்மையில், செவியின்மையில், சிந்தையின்மையில், இன்மையில் திளைத்துத் திளைத்து அவைகளறியும் முடிவின்மையும் நெளிந்துகொண்டிருக்கிறது.
சிவமாகிய சீவம் புழு. ஆன்மாவுடைய சீவமா எனில், ஆம். புழுக்கள் ஆழத்தில் காத்திருக்கின்றன. குடல்மட்டுமேயான பெரும்பசியாக. பறப்பவையும் நடப்பவையும் நீந்துபவையும் அனைத்தும் வந்துவிழும் உதரத்தின் ஆழ்நெருப்பாக. சில தருணங்களில் அதன் கொஞ்சலோசை சிறு குழவிகள் தன்னை தூக்கிக்கொள்ளும் பொருட்டு எழுப்பும் குரல் போலிருக்கும். கொஞ்சலோசை எழுப்புமா எனக் கேட்பவன் அடுத்த பிறவியில் புழுவாக பிறந்து அறியட்டும். ஆம் அவ்வாறே!.
எரியும் ஈரம். நிலைத்த பயணம். பருவடிவக் கிரணம். தன்னைத் தான் தழுவி நெளியும் புழுக்களால் உண்ணப்படுகின்றன அனைத்தும். தன்னைத்தானேயும். வளைந்து சுழிக்கும் கோடுகளால் பசியெனும் ஒற்றைச் சொல்லை எழுதி எழுதி அழிக்கின்றன அவை. உடலில் ஆற்றலற்ற ஒருவனால் நேரான சிந்தனையை அடையவே முடியாது என்று துரோணர் சொன்னதை நினைத்துக்கொண்டேன். ஆனால் நேரான சிந்தனைதான் வெல்லும் என்பதில்லை. நேரான சிந்தனையே பயனுள்ளது என்றுமில்லை. சிந்தனையில் வளைவு என்பது எப்போதும் முக்கியமானதே. வேறுபாடே அதன் வல்லமையாக ஆகமுடியும் என்பார் துரோணர் அல்லது ஜெயமோகன். அஷ்டவக்ரர் என்னும் ஞானியை போல. புழு அஷ்டவக்ரரோ?.
வெண்முரசில் ஒவ்வொருவரும் தங்கள் எதிரியைத்தான் பார்க்கிறார்கள். கர்ணன் ஒருவன் மட்டிலும் எவரையும் பார்க்காமல் தான் மட்டுமே இருப்பதுபோல தருக்கி நிமிர்ந்திருக்கிறான். எப்போதும். உண்மையிலேயே இப்புவியில் எதிரிகளற்றவனா அவன்? எதிரிகள் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லையா?. நம்முள் இருக்கும் எச்சிறுமையும் அவனுக்குள் சிறிதும் இல்லையா என்ன? ஆம், நிச்சயமாக இல்லைதான். ஏனென்றால் அவன் எதையும் விழையவில்லை. நாட்டை, வெற்றியை, புகழை. எதை இழக்கவும் அவனுக்குத் தயக்கம் இல்லை. ஆகவே அவனுக்கு எதிரிகளே இல்லை. எதிரிகளே இல்லாதவனைப்போல விடுதலை பெற்றவன் யார்? புழு கர்ணனோ?.
கொல்லும்புலியுடன் கூண்டிலிருப்பவனின் காலம் எத்தனை செறிவானதோ அதேயளவு செறிவானது புழுக்களின் வாழ்வும்.
புழுவெளி!!!
ஒரு இனிய நாள் இப்படி ஆரம்பித்தது. மொத்தம் 28 நாய்களின் பிணங்கள். செத்து மூன்று நாட்களுக்கு மேலிருக்கும். எங்கள் இறப்பறி சோதனைக்கூடம் முழுவதும், மேலும் வழிநெடுகிலும் நெளியும் புழுக்கள். மரணத்தின் மேல் மரணமின்மையின் குதூகலம் என. கானல் நீர்போல. லேசான கருமை கலந்த வெண்புழுக்கள். உடைத்த உளுந்து ஊறவைத்து பரப்பி வைக்கப்பட்டது போல. காற்றில் அலைந்து நெளியும் பட்டு வஸ்திரம் போல. இருள் சற்று கலந்து வெண்மை ஒரு பெருநதியாக மாறி அதன் வாய்வழியாக பீறிட்டு உள்ளே சென்றது போல. பொங்கி ஓடும் பாற்கடலின் நெய்போல. விரிந்து பரந்து கிடக்கிறது புழுப்பெருவெளி. உயிரின் இயல்பு ஆனந்தம் என்று கற்பித்துகொண்டே இருக்கின்றன. அகங்காரத்தை களைத்து ஆனந்தமாக இருப்பது எப்படியெனவும்.
எத்தனை எத்தனை புழுவேறியப் பிணங்கள். அந்தப் புழுக்கள் தரும் தகவல்கள் மிகமுக்கியமானவை. புழுக்களின் வகை மற்றும் வயது கொண்டு இறப்பு நடந்த இடம் மற்றும் நேரத்தை கணிப்பது (Forensic entomology) ஒரு இறப்பறி பரிசோதனையில் ஒரு பிரிவு.
பிறிதோர் புழு தருணம் உண்டு. மாடுகளில். வாலால் ஈ விரட்ட முடியாத இடங்களில் ஏற்படும் புண்கள் சரியாக கவனிக்கப்படாமல் விடும்போது புழு வைத்துவிடும். அவை அதிஅற்புதமானவை. ஈசல் புற்றுகள் போல.தேனடை போல அறைகள் கொண்டவை. அதனுள்ளிருந்து புழுக்கள் தலைக்குமேல் நூறு சாளரவிழிகள் திறந்து தன்னை அர்த்தமின்றி வெறித்துநோக்கிக் கொண்டிருக்கும் என்னை ஏளனமாக பார்ப்பதுண்டு. பார்த்ததை நான் அறிந்திருக்கவில்லையெனினும் என் ஆன்மா அறியும். பலசந்தர்ப்பங்களில் புழுவாக உணர்ந்தது அதனால்தானோ என்னவோ. பல நாட்களில் இரவின் தனிமையில் என் போர்வைக்குள் அவை புகுந்துகொள்வதுமுண்டு. சின்னாட்களில் அவற்றைக் காணுகையில் பெருவெளியில் கோள்களைச் செலுத்தும் பேராற்றலின் விசையுடன் ஒன்றோடொன்று முட்டிமோதி நெளிவதுபோல் தோன்றும்.
விண்ணாளும் புள்ளுக்கு உணவாவது மட்டும் தானா மண்ணில் நெளியும் புழுவின் ஊழ் ?. இல்லைதானே?. அவை இருள்போல. விரைந்து பரவி நிறையும் ஆற்றல் கொண்டவை. ஆனால் ஒளி. [முதற்கனல்]
எண்ணிநோக்கினால் ஆரம்பகாலங்களில் புழுவை வெறுப்பேன். பிறகு அந்த வெறுப்பை நானே அஞ்சுவேன். ஏனெனில் என் வாழ்வின் அங்கமாக இருக்கப்போவது அவைகளே. அதன்பின் மெள்ள தெளிந்தேன். நூல்களின் எழுத்துக்களெல்லாம் புழுத்தடங்கள் போலாயின.
மக்கள் திரளில் மானுடரின் அற்பத்தனங்கள் மட்டும் ஒன்று திரண்டு வெளிப்படுவதை போல புழுத்திரளில் அற்பங்கள் வெளிப்படுவதில்லை. மாறாக அவை வெளிப்படுத்துபவை முக்கண்ணனின் அற்புத நடன அசைவுகள். மானுடர்களைப்போல அவை தங்கள் சிறுமையை கொண்டாடுவதோ சிறுமையைக் கொடுத்து சிறுமையைப் பெறுவதோ, சிறுமையை நட்டு வளர்ப்பதோ இல்லை. தன்னுள் தான் என, பிறவெளி ஏதுமில்லையென மகிழ்ந்திருக்கின்றன புழுக்கள்.
அவை துயரம் கொள்வதில்லை. இறந்த காலம் இல்லை, எதிர்காலமும் இல்லை. அந்ததக்கணங்களே வாழ்க்கை என புழுந்திருக்கின்றன. கணமும் சோராத ஊக்கம் குன்றாத செயலாற்றலின் பேரின்பத்தை வெளிப்படுத்தும் புழுக்கள் எப்போதும் ஆர்வமூட்டுபவை.
முன்பொருமுறை நீங்கள் சொன்னீர்கள். வாழ்க்கையின் சாரமென்ன என்ற கேள்விக்கு சாராம்சமாக மிகப்பெரிய, மிக மர்மமான, முற்றிலும் தர்க்கபூர்வமான ஒரு பதில் இருக்கமுடியும் என்ற நம்பிக்கையே மனிதனின் மாயை. தன்னை பெரிதாக எண்ணிக்கொள்ளும் அகந்தையில் இருந்து முளைப்பதல்லவா அது? மிகச்சிறு விஷயங்களில் ததும்புகிறது வாழ்க்கையின் பொருள். ஒவ்வொரு தருணத்திலும். வெற்றியில், உச்சத்தில், மையத்தில் மட்டும் அது இல்லை. எங்கும் எக்கணத்திலும் உள்ளது. புழுக்கள் இவற்றை உணர்ந்திருக்கும்போல. மகிழ்வும் துடிப்பும் துள்ளலும் ததும்பலும் மட்டுமேயான குழவிபோல. [பனித்துளியின் நிரந்தரம்]
ஞானம் என்பது நிலைபெறுநிலை. துருவன்போல. ஆனால் நிலையற்ற புழுவால் ஞானமடைந்தவர் தாங்கள். புத்தனுக்கு தியானம். தங்களுக்கு காசர்கோடு இரயில் தண்டவாளப் புழு. நிலையில்லாமை அளித்த நிலைபேறு. புழுக்கள் போதிசத்துவனாக, ஆசானாக, களித்தோழனாக, எவ்வாறும் ஆகலாம்.
நிகரற்ற செல்வத்தை அளித்திருக்கிறீர்கள். அளித்துகொண்டிருக்கிறீர்கள். அதன்பொருட்டு உங்களுக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறோம்.
பேரன்புடன்
தங்கபாண்டியன்,
செங்கல்பட்டு
[பி.கு: இதிலுள்ள பெரும்பாலான வரிகள் வெண்முரசில் இருந்து எடுக்கப்பட்டவை]