மகிழ்ச்சி- கடிதம்

மகிழ்ச்சியும் பொறுப்பும்

அன்பின் ஜெ வணக்கம்.

உங்களின் ‘மகிழ்ச்சியும் பொறுப்பும்’ கட்டுரையை வாசித்தேன். இரண்டு நாட்களாக அக்கட்டுரையில் நீங்கள் சொல்லியதையே திரும்பத்திரும்ப நினைத்துப் பார்க்கிறேன். நம் கேள்வியில் உண்மையும் ஆழமும் இருந்தால், நமக்கான பதில் ஏதோ ஒரு வகையில் எப்படியாவது நம்மிடம் வந்துவிடும் என்பதை நான் நம்புகிறவன். அதனை நம்ப ஆரம்பித்தவுடம் அது நடப்பதையும் உணரத்தொடங்கினேன். என் உடலில் சளி தொல்லையைத் தவிர வேறெந்த உடற்பிணியும் இருக்கவில்லை. அதன் பொருட்டு அடிக்கடி மூக்கடைப்பு எப்போதாவது மூச்சிறைப்பு ஏற்படும், மருந்து எடுத்து மறுநாளில் சரியாகிவிடும். வழக்கமாக வந்துப்போகும் காய்ச்சலால் எனக்கு எந்த அதிகப்படியான சிக்கலும் வந்ததில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், என்னை சிலர் கடத்த முயன்று, அதிலிருந்து நான் தப்பினேன். தலையில் மார்பில் காலில் இப்படி பல இடங்களில் அடிவாங்கியும் ஏதோ ஒரு ஆவேசத்தில் நான்கு பேரிடம் மல்லுகட்டி ஓடும் வேனில் இருந்து கீழே குதித்தேன். ஏறக்குறைய ஒரு மாதம் மருத்துவமனையில் இருந்தேன். அடிக்கடி என் தலையை ஸ்கேன் செய்தார்கள். ரிப்போட்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தன. தலையில் அடிபட்டதால் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் ஆனால் அது கொஞ்சம் அபாயகரமானதால் அதை தவிர்க்க மருந்துகளைக் கொடுத்திருந்தார்கள். அதன் பின் என் வழக்கமான வாழ்வு தலைகீழாகிப்போனது. தொடர்ந்து ஒரே இடத்தில் நிற்பதோ அதிக தூரம் காரில் தனியாக செல்லவோ கூடாது என்பதால் வெளியில் சென்று வேலை செய்ய முடியாத சூழலுக்கு ஆளானேன். போதாததற்கு அடிக்கடி மயக்கமும் மனதில் குழப்பமும் நினைவுப்பிழையும் ஏற்பட்டது. வாசித்த பக்கங்களை மறந்து திரும்பத்திரும்ப வாசிக்கலானேன். ஒரு கப் காபியைக் கூட அதிக நேரம் கையில் பிடித்திருக்க முடியாது. சட்டென கையில் ஏதுமில்லாத உணர்வில் கையை திறந்துவிடுவேன்.

எனக்கும் என்னை சுற்றி உள்ளவர்களுக்கும் இது வேதனை கொடுத்ததை உணர்ந்தேன். வாசிப்பதையும் எழுதுவதையும் அதிகப்படுத்திக்கொண்டேன். வாசித்ததையே திரும்பத்திரும்ப வாசிப்பதும், எழுதியதையே அழித்து அழித்து எழுதுவதும் மேலும் வீட்டார்களுக்கு பயத்தைக் கொடுத்தது. மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு வர வாசிப்பும் எழுத்துமே துணையாக இருந்தது. அப்போதுதான் மீண்டும் குறுங்கதைகள் எழுத ஆரம்பித்தேன். தொடங்கிய வேகத்தில் முடிந்துவிடும் வகையில் அக்கதைகளை நான் முயன்றதால் சிக்கல் இன்று எழுத முடிந்தது. மெல்ல மெல்ல அது என் வாசிப்பையும் எழுத்தையும் கூட்டியது. இன்றும் அவ்வபோது உடல் ஏற்படுத்தும் சங்கடங்களுக்கும் உபாதைகளுக்கும் மருந்துகளை நாடிக் கொண்டிருக்கிறேன். கூடவே சுகமளிக்கும் நிகழ்ச்சிக்கும் சென்றுக் கொண்டிருக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஏதோ ஒரு கேள்வி எனக்குள் இருந்துக் கொண்டேதான் இருந்தது. எனக்கு ஏன் இப்படி ஆகிவிட்டது. இந்த நோயையும் உபாதையையும் எத்தனை நாட்களுக்கு நான் சுமக்கப்போகிறேன். பல நாட்கள் இந்த கேள்வியுடன் இரவில் தனியாக அமர்ந்து வானத்தைப் பார்த்துக் கேட்டுக் கொள்வேன். பகலில் தூக்கமும் இரவில் விழிப்பும் எனக்கும் ஒரு மாதிரி போதையைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. உங்களின் கட்டுரையில் ஒரு பத்தியில் எனக்கான பதிலை நான் கண்டுணர்ந்தேன்.

“நோய். உடலில் உருவாகும் நோயும் அதன் வதையும் நம்மை மீறியவை. அவற்றுக்கு எதிராக நாம் நம் ஆன்மவல்லமையை குவிக்கலாம். ஓர் எல்லைவரை அவற்றைக் கடந்துவரவும் முடியும். ஆனாலும் அது தூலமானது, மாற்றமுடியாது. அது ஊழ். ஊழை எதிர்கொள்வதொன்றே உயிர்களுக்கு வழி.”

என வாசித்ததும். என்க்குரிய பதிலை நான் கண்டுகொண்டதாகத் தோன்றியது. ஆமாம். இது என் ஊழ் தான், இதனை நான் எதிர்க்கொள்வதுதான் ஒரே வழி என்பதை புரிந்துக் கொண்டேன்.

அடுத்ததாய் நீங்கள் சொல்லியுள்ள; “மகிழ்ச்சி என்பது எப்போதும் நம்மை மட்டுமே சார்ந்தது. இன்னொருவர் அளிப்பது அல்ல.  மகிழ்ச்சிக்காக எவரையும், எதையும் நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை. எவர் தனிமையில், தானாகவே மகிழ்ச்சியாக இருக்கிறாரோ அவர்தான் உண்மையில் வாழ்கிறார்.” என்ற வரிகள் வாழ்வின் மீதான பற்றுதலைக் கொடுத்தது….

ஒரு வேளை இது ரொம்பவும் சாதாரண ஒன்றாக சிலருக்கு தெரியலாம். ஆனால் ஊழ் வினையில் உழன்று மீள முயல்கின்றனுக்கு இச்சொல் ஒரு துடுப்பு என்பது எளிதல் புரிந்திடாதுதான். நிறைவாக; நீங்கள் சொல்லியிருக்கும் “மகிழ்ச்சியாக இருக்க முதன்மைத்தேவை நாம் இங்கே அவ்வளவொன்றும் முக்கியமானவர்கள் அல்ல என்னும் அறிதல். நாம் செய்யவேண்டியதைச் செய்யவேண்டும், ஆனால் நாம் இங்கே எதற்கும் பொறுப்பு அல்ல. நம் தலைமேல் எதுவும் இல்லை. நம் இருத்தலென்பது நமக்கு மட்டுமே முக்கியம். நம்மை எவரும் பெரிதாக ஒன்றும் கருத்தில்கொள்வதில்லை.” என்பதை எப்போதும் மறக்காதிருக்கப் போகிறேன்.

அன்புடனும் நன்றியுடனும்

டி

அன்புள்ள டி

நான் இன்று மேலும் மேலும் ஊழ் மேல் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். ஒருவரின் உடல்நிலை, வாழ்க்கைச்சூழல் அமைவது, வாழ்வின்  எதிர்பாராமைகள் ஆகியவை அவருக்கு அப்பாற்பட்டவை. அவரால் அவற்றை எதிர்பார்க்க முடியாது, தவிர்க்கவும் முடியாது. அவை ஊழால் அமைபவை

ஆனால் அந்தச் சூழலிலும் நாம் நம்மை அமைத்துக் கொள்ளலாம். நம்மை குவித்துக்கொள்ளலாம். நம் அகத்தை சிதறவிடாமல் காக்க முயலலாம். இருப்பது என்பதே ஒரு பெருங்கொடை, அது தன்னளவிலேயே மகிழ்ச்சியானது என்னும் எண்ணம் இருந்தால் போதுமானது.

தேவையான அளவுக்கு மருத்துவம் வேண்டும். ஆனால் நம்மை நாம் ஆளமுடியாமல் பொறுப்பை மருத்துவத்துக்கு விட்டுவிடக்கூடாது. அந்நிலையில்தான் மிகைமருத்துவம் நிகழ்கிறது. அதை தவிர்த்தாகவேண்டும்.

நாம் நம்மைக் கவனிப்பதே நம்மை ஆள்வதன் முதல் விதி. நம்மையறியாமல் நம்மில் ஏதும் நிகழாதவரை நாம் கைவிடப்படவில்லை. நம்மை கவனிப்பது நமக்கு கல்வி. அதிலிருந்து நாம் மேலே செல்லமுடியும். எழுத்தாளர் என்றால் எழுத முடியும். வணிகர் என்றால் வணிகத்திறன் அடைய முடியும்.

உங்களை கவனியுங்கள்.திரட்டிக்கொள்ளுங்கள். மீண்டுவிடுவீர்கள். மீள்கையில் இன்னும் பயிற்சி அடைந்தவராக, மேம்பட்டவராக, இருப்பீர்கள். எழுதவும் எண்ணவும் அனுபவச்செல்வம் ஒன்றும் கொண்டிருப்பீர்கள்

ஜெ

மகிழ்வதே போதுமா?

முந்தைய கட்டுரைகல்குருத்து- கடிதம் -13
அடுத்த கட்டுரைஈவேராவும் எழுத்துச்சீர்திருத்தமும்