கல்குருத்து- சிறுகதை
அன்புள்ள ஜெ
கல்லின் கனிவு என்று அந்தக்கதையைச் சொல்லலாம். கன்மதம் என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு சொல்லாட்சி உண்டு. கந்தகத்துக்கான பெயர் அது. கல்லில் ஊறும் மதம் அது. [வெண்முரசில் நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்கள்] அது கல்லின் கோபம் என்றால் கல்லின் கனிவு இது. சிற்பியே சொல்கிறர். காலாதீதத்தில் உறைந்திருக்கும் கல்லானது ஒரு சிற்பமாக அல்லது அம்மியாக ஆவதென்பது கல்லின் கனிவுதான் என்று. அது காலத்தை ஏற்றுக்கொண்டு தன்மேல் காலம் ஓடவிடுகிறது
எத்தனை கற்பனைகளை அக்கதை எழுப்புகிறது என்று எண்ணிக்கொண்டேன். ஒரு பழைய அம்மிமேல் எத்தனை முறை குழவி உருண்டிருக்கும். அதெல்லாம் காலம் அதன்மேல் ஓடுவதுதானே? காலத்தால் அது மீண்டும் குருத்தாக ஆகிறது. காலம் அதை இளமையின் மெருகும் அழகும் கொள்ளச் செய்கிறது. ஒரு கவிதைபோல வளர்ந்துகொண்டே இருக்கும் இமேஜ் அது
என்.பி.சாரதி
ஜெ
இந்தக்கதையில் இரண்டு ஜோடிகளை நாம் பார்க்கவில்லை. ஊன்று ஜொடிகளைப் பார்க்கிறோம். சிற்பி தாணுலிங்கமும் காளியமையும். அவர்களும் அற்புதமான இணைதான். சிவபார்வதி வடிவம்
“இவ காப்பி குடிக்கமாட்டா.”
“அப்டியா?” என்றாள் அழகம்மை.
”ஆமா, காப்பின்னா கள்ளுமாதிரின்னு நினைப்பு களுதைக்கு”
என்று சொல்லும் அந்த ஜோடியும் சரி
“நாலஞ்சு தடவை கருப்பட்டி கருப்பட்டின்னு பேச்சு வாக்கிலே சொன்னா.., செரி, சவத்துக்கு இனிப்பு ஞாபகம் வந்துபோட்டுது போலன்னு நினைச்சு கொண்டுவரச் சொன்னேன்” என்றார் கிழவர்.
என்ற வரிகளும் சரி அழகாக ஒன்றுடன் ஒன்று இணைந்துகொண்டன. இரண்டு மூத்த ஜோடிகளும் பொருந்தி ஒன்றாக இருக்கிறார்கள். நடுவே இளைய ஜோடி உரசி உரசி மெல்லமெல்ல பாலீஷாகிக்கொண்டே இருக்கிறது
எஸ்.ராஜ்குமார்
அன்புள்ள ஜெ
நான் கல்குருத்து கதையை வாசித்துக்கொண்டே இருந்தேன். அங்கே இங்கே தொட்டுத்தொட்டுக் கதை சென்றுகொண்டே இருந்தது. கிழவனும் கிழவியும். அழகம்மையும் கணவனும். சிற்பியும் மனைவியும். அம்மிகள்… கதை முடியப்போகும் இடத்தில் இந்த வரி. மேடுகள் ஒண்ணொண்ணா இல்லாமலாகணும்… அதுதான் கதையின் மையம் என்று தெரிந்தது ஒரே கணத்தில். அப்படியே மெய்சிலிர்த்துவிட்டேன். நான் ஒரு கதையை இப்படி சொந்தமாக கண்டடைவது இப்படித்தான். அங்கே அந்தக்கதை மொத்தமாக ஒரு ஜுவல் போல ஆகிவிட்டது
செல்வி முருகானந்தம்