கல்குருத்து- சிறுகதை
அன்புள்ள ஜெயமோகன்,
பாட்டாவும் பாட்டியும் நாள்பட்ட அம்மியும் குழவியும் போல் நெடிய வாழ்வு இசைபட வாழ்ந்து மாடனும் மாடத்தியுமாக ஆவது போல், மூத்த கருங்கல் பாறையான கண்ணப்பனை நீலிமை எனும் தனது பிரேமையால் உடைத்து மெருகேற்றி குருத்தென வடித்தெடுக்கும் அழகம்மை அடையும் தாய்மை உணர்வு மிக இனிமை.
நெல்சன்
அன்புள்ள ஜெ
கல்குருத்து கதையை நுட்பமாக வாசித்து உள்வாங்க வேண்டியிருக்கிறது. ஒரு கதை நுட்பமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே நுட்பமாக காட்டிக்கொள்ளும். மொழியை திருகி எழுதினால், நீளநீள சொற்றொடர்களாக எழுதினால், நாம் அதை நிறுத்தி கூர்ந்து வாசிப்போம். அப்போது சின்னச்சின்ன வரிகள் கூட நம் கவனத்தில் நிற்கும். அது ஆழமான கதை என்ற எண்ணம் வரும். பொதுவாகவே நாம் கஷ்டப்பட்டு ஒன்றை வாசித்தால் அதை நல்ல படைப்பு என்று சொல்லும் மனநிலை வந்துவிடும். ஆனால் மாஸ்டர்கிளாஸ் கதைகள் இயல்பானவை. சரளமான ஒரு வாழ்க்கைச்சித்திரத்தை மட்டுமே அளிப்பவை. அவற்றை சாதாரணமாக வாசித்துச் சென்றுவிடுவோம். அவற்றின் ஆழமும் கவித்துவமும் தெரியாமலாகிவிடும்
கல்குருத்து தலைப்பிலேயே இது கவித்துவமான கதை என்று சொல்லிவிடுகிறது. ல்லா தோட்டங்களும் ஆற்றை நோக்கி சரிவனதான் என்ற வரியிலேயே கூர்ந்து வாசி என்று சொன்னது. எல்லா கலைக்கும் உண்டு அதுக்கான சோசியம், அதுக்குமேலே காலதேவனுக்க கண்ணு விளப்போகுது, ரெண்டு பேருக்கும் வயித்திலே அக்கினி இல்ல என வரிகள் வந்துகொண்டே இருக்கின்றன.
மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கும் கதை. இதன் மையத்தை படிமமாக பார்க்கலாம். ஆனால் அப்படி பார்க்கவேண்டும் என்பதுமில்லை. இயல்பாக ஒரு அம்மிகொத்தும் கதையாகவும் இருக்கிறது. எந்த வகையிலும் தன்னை முன்னிறுத்தாமல் இயல்பாக இருக்கிறது இந்தக்கதை.
எம்.பிரபாகர்
அன்புள்ள ஜெ
அம்மிகொத்தும் கலையை நான் பார்த்ததே இல்லை. ஆனால் நீலச்சாயம் முக்கி அதை உருட்டி மேடுகளை கரைக்கும் உத்தி அழகாக இருந்தது. கல்லில் இருக்கும் மேடுகளை தொட்டுத்தொட்டுக் கரைக்கும் அந்த உளியை கண்ணருகே பார்க்கமுடிந்தது. ”ஒரு கல்லு கோயிலிலே நிக்குது. ஒரு கல்லு தான் தேய்ஞ்சு சமையலுக்கு கூடுது. ரெண்டும் கல்லுக்க கனிவுதான்” அற்புதமான வரி
எஸ், ராஜசேகர்