கல்குருத்து – கடிதங்கள் 5

கல்குருத்து- சிறுகதை

அன்புள்ள ஜெ

நல்ல ஒரு சிறுகதையின் இலக்கணம் என்ன என்று நான் யோசிப்பதுண்டு. அது கவிதையாக இருக்கவேண்டும். சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் ஓர் உரையில் சொன்னதுபோல கவிதையை நோக்கித்தான் இன்றைக்கு கதை சென்றுகொண்டிருக்கிறது. கேளாச்சங்கீதம் கவிதைதான். இதுவும் கவிதைதான்.

இது அடிபப்டையில் ஒரு படிமம். தேய்ந்து ஒன்றையொன்று தொடாமலாகிவிட்ட அம்மிகள். அவை அரைப்பதற்கு உதவாது. அவற்றுக்கு இந்த உலகச்செயல்களில் இனி இடமில்லை. ஆனால் அவை பல்லாயிரம் முறை ஒன்றுடன் ஒன்று உரசி உரசி எல்லா முரண்பாடுகளையும் களைந்துதான் அப்படி ஆகியிருக்கின்றன. அந்த உரசல்கள் வலி மிகுந்தவை. இழப்பு உடையவையும்கூட. ஆனால் ஒன்று இன்னொன்றை மென்மையாக்குகிறது. கடைசியில் கல்குருத்துகளாக மாறி நின்றிருக்கின்றன இரண்டும்.

அந்த படிமம்தான் கதை. அதை ஒரு கவிதை ஏழெட்டு வரிகளில் சொல்லிவிடும். அதன் அழகு வேறு. அது கதையாக ஆகும்போது கண்ணெதிரே அந்த வீடு, அம்மிகொத்த வந்த தம்பதிகள், அந்த கிழடுகள் எல்லாவற்றையும் பார்க்கமுடிகிறது. உண்மையில் சென்று அதைப்பார்த்தது மாதிரியும் இருக்கிறது. நானே இப்படிச் சொல்லிக்கொள்கிறேன். ஒரு கவிதை நிகழ்வதற்கு ஒரு கணம் முன்னால் அந்தக் கவிதையை நிகழ்த்தும் சூழலை நேரில் சென்று பார்ப்பதுபோல இருந்தால்தான் அது சிறந்த கதை

ஸ்ரீனிவாஸ்

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்.

கல்குருத்து சிறுகதையை வாசித்தேன்.

கணவனின் அம்மையின் தாத்தா பாட்டியை பராமரிக்கும் கடன் அழகம்மைக்கு. அது வரமாகும் அல்லது மனம் அதை விரும்பும் தருணத்தை  சொல்கிறது கதை. மூத்தது குருத்து ஆகும் என்பதை அழகம்மை உணர்கிறாள். உள்ளபடி அவளுக்கு அவர்கள் மீது வெறுப்பில்லை.  கணவனின் சிடுசிடுப்பும் கிழ தம்பதிகளின் தொணதொணப்பும் அவளுக்கு ஒருமாதிரியான எரிச்சலை கிளப்புகிறது. இதை என்னவென்று மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது? சொன்னாலும் புரிந்துக் கொள்ள இயலுமா என்றெல்லாம் எண்ணிக் கொண்டு  அவளுக்கு அழுகை வருகிறது.

கல்லுக்குள் இருக்கும் அம்மியை போல, அவளுக்குள் மூன்று குழவிகள் இருப்பதாக சொல்லும் கல்லாசாரி தம்பதிகளின் பேச்சு அவளுக்குள் சிலிர்ப்பாக ஓடி மறைகிறது. மனம் முதிய தம்பதிகளிடம் நெகிழ்ந்துப் போகிறது. அத்தனை அழகாக குழைந்து வருகிறது கதை. அதில் உள்ள நுணுக்கங்கள் வழக்கமான உங்கள் டச் என்றாலும் மீண்டும் மீண்டும் படிக்க வைக்கிறது.

‘பழைய அம்மியின் பரப்பு கன்னங்கரேலென்று உருகி வழிந்ததுபோல தெரிந்தது. படகு போலிருந்தது அம்மி. குழவியின் உருளைவடிவம் மெழுகுபோல கரைந்து குழிவாகியிருந்தது. அதனை கல் என்றே சொல்லமுடியாது. இரவில் கொல்லைப் பக்கம் வந்து பார்த்தால் அங்கே அண்டாவில் தண்ணீர் இருப்பதுபோல அதன் பளபளப்பு தெரியும்’  சித்திரம் போல, புகைப்படக்காட்சி போல அத்தனை தெளிவான வர்ணனை.

‘அது பாய்ந்து அன்னையின் அகிடில் முகம் சேர்த்து முட்டி முட்டிக் குடிக்கத் தொடங்கியது. அதன் கடைவாயில் பாலின் நுரை எழுந்தது’ அதே.. அதே… மனிதக்குழந்தை கடைவாயில் பாலோடு சிரிப்பும் வழிய தன் சொக்க வைக்கும் பளபளத்த விழிகளோடு தாயிடம் பேசும் முதல் மொழி அது.

மிக மிக பிடித்தமான கதை

அன்புடன்

கலைச்செல்வி

கல்குருத்து- கடிதம் -1
கல்குருத்து -கடிதம்-2
கல்குருத்து -கடிதம்- 3

கல்குருத்து -கடிதம்- 4

முந்தைய கட்டுரைபுத்தனாகும் புழுக்கள்-தங்கபாண்டியன்
அடுத்த கட்டுரைகோவை கவிதை நிகழ்வு,கடிதங்கள்