வசைபாடிகள் நடுவே – ஒரு கடிதம்

 ஜெயகாந்தன் தமிழ்விக்கி

ஜெ ,

நீங்கள் தாக்கப்பட்டபோதுநான் இரண்டு நாட்கள் பணிக்கு செல்ல வில்லை.
இங்கு வெளிநாட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் கூச்சல்வாதிகளின் சிஷ்யகோடிகள் அல்லது மோடியின் பக்தர்கள்.இத்தனைக்கும் யாரிடமும் நான் வாசிப்பதை எப்போதும் தெரியபடுத்தியது இல்லை.ஆனால் அவர்களுக்குள்ளேய பேசிக்கொள்வார்கள், அவர்கள் யாருக்கும் இலக்கியம் என்பது என்ன என்று தெரியாது. ஆனால் உங்களை பற்றி ஏதோ தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

எழுத்தாளன் என்பவன் எனக்கு எல்லாமுமானவன்.எனக்கு கடவுளை காட்டுபவன், என்னுள்ளத்தை உழுது என்னை விளைவிப்பவன்.என் இருப்புக்கு ஆதாரமானவன். ஆதலால் அன்றய நாட்களில் அந்தரங்கமாக பெரும் துயருற்றிருந்தேன். இப்படிதான் ஜெயகாந்தனை பற்றிய நேரடியான தாக்குதலை கேட்டபோது பதறினேன்.(தன்னை தானே நக்கிகொள்ளும் நாய்கள் பிரச்சினையில்).

அசோகமித்திரனை போலநடிப்பது அந்த பாவனையை ஏற்றுகொள்வது சுலபமாக வந்தது எனக்கு. அவரின் பாதிப்பால் அவராகவே மாறிவிட்டேன். எங்கும் நான் இருப்பதே தெரியாது.அதிர்ந்து பேசுவதில்லை.எல்லோரும் எனக்கு அதிகபடியான தாழ்வுமனப்பான்மை உள்ளதாக எண்ணுகிறார்கள்.உண்மையில் இவர்களிடம் நான் என்னவென்று பேசுவது. நாளுக்கு நாள் இவர்கள் தன்னம்பிக்கையாளர்களாகவும் முற்போக்காளர்களாகவும் முன்னேறிகொண்டிருக்கிறார்கள்

எனக்குதான் தாழ்வுமனப்பான்மை கொண்டவன் என்ற பிம்பம்அளிக்கப்பட்டுவிட்டது. என் வீட்டீற்கு வந்த ஒருவரின் முகம் வீட்டில் இருந்த புத்தகங்களை கண்டபிறகு சாத்தானை சந்திக்கவந்தவரின் முகம் போல மாறியதை இந்நேரத்தில் நினைவுகூர்கிறேன்.

அன்புடன்
ரகுபதி
கத்தார்.

அன்புள்ள ரகுபதி,

தமிழ்ச்சூழலில் பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சு. ஜெயகாந்தன் சுந்தர ராமசாமி என அனைவருமே இந்த வசைபாடலுக்கு, இழிவுபடுத்தலுக்கு ஆளானவர்கள். விதிவிலக்கே இல்லை.

நீங்கள் சொல்லும் அதே நிகழ்வின்போது நான் ஜெயகாந்தனுக்கு ஆதரவாக எழுதினேன். அது முழுக்கமுழுக்க ஜெயகாந்தனை தவறாகப் புரிந்துகொண்டு வசைபாடிய கூட்டம்.

ஜெயகாந்தனைச் சந்தித்தபோது என் கொதிப்பைச் சொன்னேன். ஜெயகாந்தன் சொன்னார். ‘நாம அவங்களை சீண்டுறோம். விமர்சிக்கிறோம். அமைதியிழக்க வைக்கிறோம். எழுத்தாளன் எந்த பொதுமக்களை நோக்கிப் பேசுறாங்களோ அந்த பொதுமக்களிலே சிலர்தான் அவங்க. சிலருக்கு மனசாட்சி விழிச்சுக்குது. பெரும்பாலானவர்களுக்கு எரிச்சல் மட்டும்தான் வருது .நம்ம வாசகர்கள் அந்தச் சிலர்தான். மத்தவங்க கிட்ட நமக்கு ஒரு பேச்சும் இல்லை. தேவைன்னா மன்னிப்பு கேட்டுக்க வேண்டியதுதான்” ஜெயகாந்தன் மன்னிப்பும் கேட்டார்.

இந்தக் கும்பலுக்கு இலக்கியம் தெரியாது. வாசித்தாலும் புரியாது. ஆனால் அவர்களை ஒருவன் ஏதோ சீண்டுகிறான் என்று மட்டும் தெரிந்து வைத்திருக்கும். அது ஒரு அனுதாபத்திற்குரிய கூட்டம். என்ன ஏது என்று புரியாத ஒரு பதற்றம் கொண்டது. ஆகவே வெறுக்க விரும்புகிறார்கள். எழுத்தாளனை எப்போதுமே எதிர்நிலையில் வைத்து அவனை வசைபாடி அவமதிப்பவர்கள் அரசியலாளர்கள். அந்த அரசியலாளர்களின் சொற்களை இவர்கள் கடன் வாங்கிக்கொள்கிறார்கள். இவர்கள் என்றும் இப்படித்தான் இருப்பார்கள்.

நாம் செயல்படும் தளத்தில் அவர்கள் இல்லை. அவர்களுடன் நமக்கு உரையாடல் முனைகளே இல்லை. அவர்களை நோக்கி ஓர் அனுதாபப் புன்னகைக்கு அப்பால் நாம் செய்ய ஏதுமில்லை

ஜெ

முந்தைய கட்டுரைவேரில் திகழ்வது- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகவிச்சித்தனின் அகவெளிக் குரல்-சுபஸ்ரீ