விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021
கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களின் கவிதைகளை வாசிக்கும் பொழுது தன் அகதரிசனங்களை, அலைச்சல்களை, நேர்ந்துவிட்டிருக்கும் வாழ்வை ஒரு நாடோடியின் விலக்கத்தோடு பாடிச் செல்லும் கவிச்சித்தனின் அகவெளிக் குரல் அவருடையது என்று தோன்றுகிறது. இவரது கவிதைகளில் ஒலிக்கும் மனதுக்கு மிக அணுக்கமான இரண்டு குரல்களை இங்கு அடையாளம் காண்கிறேன்.
முதலாவது தன் போக்கில் என்றுமுள்ள ஒன்றை நோக்கி பாடிக் கொண்டு செல்லும் சித்தனின் குரல். அங்கே அவ்வெளியில் வேறு யாருமில்லை. அது மாயம் நிரம்பிய வெளி. மகாமாயையின் வெளி. ‘சக்தியை வணங்குவதே எண்ணம்’ என்ற அவரது சொல்லை வைத்தே அவரை அங்கு அணுக முடியும்.
இரண்டாவது, கவிஞனும் அன்றாட நிதர்சனமும் உரசிக் கொள்ளும் தருணங்களில் எழும் குரல். அங்கே அவர் வாசகனோடு உரையாடுகிறார், சண்டையிடுகிறார், ‘இது இப்படித்தான்’ என்று வீட்டுப் பெரியவரின் கரிசனத்தோடு அனுபவங்களை சொல்கிறார், வளர்ந்து விட்ட, சொல் கேட்காத பிள்ளையை என கவிஞனை புறக்கணிக்கும் சமூகத்தை வலியோடும் கரிசனத்தோடும் பார்த்துக் கொண்டுமிருக்கிறார்.
ஒரு கவி தன்னை எப்படியெல்லாம் அறிமுகப்படுத்திக்கொள்ள இயலும்? இதோ இவ்விதம் சொல்லலாகும்.
எப்போதோ இறந்துபோன
செண்பகச் செடிகளுக்காக
இப்போதும் கவிதையில்
வருத்தப்பட முடிகிற மனுஷன்
கவிமனம் இயற்கையுடன் ஒரு தொடர் உரையாடலில் ஈடுபட்டிருக்கிறது. அருவி, காற்று இவற்றுக்கெல்லாம் என்ன நோக்கம் இருக்க முடியுமோ அதுவே கவிதைக்கும் இருக்க முடியும் என்று சொல்கிறார்.
விழுவது தவிர்த்து
வேறு லட்சியமென்ன உண்டு அருவிக்கு
குளிர்ச்சியும் தெளிவும் அதன்
குணங்களல்ல
இயற்கை
என்கிறது ஒரு கவிதை.
‘காற்றும் கவிஞனும்’ என்னும் மற்றொரு கவிதையில்
காற்றே
கவிஞனும் உன்னைப்
போலத்தான் காற்றே
உனக்கென்ன
நோக்கம்
எனக்கென்ன
கருத்து
என்கிறார்.
ஒரு கவிதை எங்கு பிறக்கிறது? இப்படி எண்ணிக்கொள்கிறேன். கவிதை இரு முறை பிறக்கும் இருபிறப்பாளன். விசும்பின் கருணை துளியெனக் கனிவது போல கவிஞனின் அகத்தில் கவிதை துளிர்க்கும் ஒரு கணம் முதல் பிறப்பு.. அது வாசகனின் மனதில் அவனுடையதாக தன்னிச்சையாக அவனுக்கெனத் திறந்து கொள்ளும் ஒரு கணம் மறுபிறப்பு.
இன்று பிற்பகல் பொழுது. காலைமுதல் வானம் தெளிந்திருந்தது. வெகுநேரமாக அமர்ந்திருந்த வேப்பமரத்துக் காகம் தலையை சாய்த்து பார்த்துக்கொண்டிருக்கிறது. அரைமணிநேரத்தில் எங்கிருந்தோ திரண்டன ஐப்பசி மாதத்து மேகங்கள். ஒளி பெய்து கொண்டிருந்த விண்ணிலிருந்து சாரல் சரிந்திறங்கத் தொடங்குகிறது. மழையிலும் காகம் வேறெங்கும் செல்லவில்லை. சிறிது சிறிதாக வலுத்துப் பெய்த மழையில் மாடியில் இருந்தும், தோட்டத்தில் இருந்தும் நீர்த்தாரைகள் பெருகி சிற்றோடையென வீட்டைச் சுற்றி நிறைகிறது. சற்று முன் இல்லாதிருந்த ஒன்று என்னைச் சூழ்ந்து பெருகி ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கேயே அமர்ந்திருந்த காகம் அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கிறது.
“மஹாகவிகள் ரதோற்சவம்” தொகுப்பில் முன்தினம் வாசித்திருந்த கவிஞர் விக்ரமாதித்யனின் கவிதை அங்கு எழுந்து வந்தது.
“சொட்டுச் சொட்டாக விண்ணிலிருந்து
இறங்கிவருகின்றன மழைத்துளிகள்
…
சொட்டுச்சொட்டாகச் சொட்டி
சேர்ந்து வந்தவைதாமா அருவித்தண்ணீர்
கொட்டுக்கொட்டென்று கொட்டி
கூடித் திரண்டு பெருக்கெடுத்தவைதாமா ஆற்றுவெள்ளம்
கொட்டிக்கொட்டியும் சொட்டிச்சொட்டியும் நிறைந்தவைதாமா
குளம் வாய்க்கால் ஊருணி ஓடையெல்லாம்
இஷ்டத்துக்கும்
எழுதிச் செல்கிறான் பெருங்கவிஞன்
எல்லாவற்றையும் எல்லோரையும்
வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறது பிரபஞ்சம்”
கவிதை யோசித்து எழுதப்படுவதல்ல, மழை போல தானாகக் கனிந்து பொழிவது, தோன்றுவது; மொழி தோன்றிய காலம் தொட்டு மழையைக் கவிதைகள் பாடியிருக்கும். ஆனால் எங்கிருந்தோ சொட்டு சொட்டாகத் திரண்டு கண் முன் பெருக்கெடுக்கும் ஒன்றாகக் கவிதையை உணர்ந்த அக்கணம், அதை சாட்சி போல பார்த்தபடி அமர்ந்திருந்த அந்தக் காகம் பிரபஞ்சமாக உருமாறிய அக்கணம் இக்கவிதை இரண்டாம் முறை பிறந்து வந்தது எனத் தோன்றியது.
தனக்கும் கவிதைக்குமான அணுக்க உறவை, அங்கு வந்து இடையிடும் வாழ்வின் நெரிசல்களை சொல்லும் கவிதைகள் சில.
கவிதைக்கும் கவிஞனுக்குமான உறவு தெய்வத்துக்கும் பக்தனுக்குமானது போல, நீள்வாழ்வை நினைவு நீட்சியின் எல்லை வரை தங்கள் இல்லறத் துணையோடு வாழ்ந்துவிட்டு இணைகள் போல, ஒருவரன்றி ஒருவர் இல்லை; கனிவதும் கனல்வதும் எல்லாமே அருள்வடிவம் தான். ‘இவள் எப்போதும் இப்படித்தான்’ என அந்த உறவை கவியின் குரலில் கேட்கும் தருணம் கவிதை துணைவியின் நாணத்தோடு கவியின் பின்னால் நிற்கிறது.
“பரஸ்பரம் புரிந்துகொண்டுதான்
பணயம்வைத்து ஆடுகிறார்கள்
கவிஞன் ஜெயிக்கிறானென
கருதிவிட முடியாது
கவிதை விட்டுக்கொடுத்துவிடுகிறது
காலங்காலமாக பாவம்பார்த்து”
கவிதை விட்டுக்கொடுத்து கனிந்து கவிஞனை வெற்றிகொள்ளச் செய்யும் காதல் கணம்.
“கவிஞனுக்கே
தெரியுமிது
அதுதான் இந்த
அமைதி எல்லாம்
கவிதைக்கே தெரியும்
கைவிட்டுவிட்டால் கழிசடையாய்த்தான் போவானென்று”
அதைப் புரிந்துகொண்டு விட்ட கவிஞன் கவிதையிடம் அடைக்கலம் ஆகும் கணம்.
“கவிதைதான் முதலில்
கவிஞனைக் கண்டுகொள்கிறது
(தலைமுறை தலைமுறையாய்
தான் தழைத்திருக்க)
வசியம் பண்ணியதுபோல
வசப்பட்டுப்போகிறான் கவிஞன்
(தள்ளியும்
உட்காராது)”
கவிதையே வாழ்வென்று அந்த உறவுக்கு உண்மையாய் வாழ்ந்த ஒரு பெருங்கவியே இவ்விதமான ஒரு வாழ்வாங்கு வாழ்ந்த ஒரு இல்லறமாக கவிதையுடனான தனது உறவைச் சொல்ல முடியும்.
ஆனால் இதன் மற்றொரு பக்கம்,
பூமியில் கால் பாவாமல்
மஹாகவியென இறுமாந்திருக்குமவன்
உச்சி வெயில் உறைக்கும் நேரம்
மனிதனாவான் சமயத்துக்கு
இங்கு அந்த கவிஞன் என்னும் பறவை மண்ணில் கால் பதிய நேரும் கணங்களின் காட்சி புலனாகிறது. ஆனால் கவிதையுடனான வாழ்வு அம்மண்ணில் இருந்து, அதன் தளைகளில் இருந்து விடுபட்டு விண்ணேகும் சிறகை அவனுக்கு அருளிக் கொண்டேதான் இருக்கிறது.
ஒரு கவிதை அதற்கு உயிர்கொடுத்தவனுக்கு என்னவாகப் பொருள் படுகிறது!
“என் கவிதை
கனவுபோல
ஒருகாலும் தீராத
ஒளியும் இருளும் போல
அற்புதங்கள் ஒளித்து மறைத்து
அதோடு மனசையும்
மாயம் செய்து வைக்கும் அறியாப் பெண் போல
கிரகங்கள்
நட்சத்திரங்கள்
ஏந்தி வைத்திருக்கும்
ஆகாச வெளிபோல
..
முதல் தீயின் மிச்சம்
அவியாது அடங்காது
பசித்திருந்து
தனித்திருந்து
விழித்திருந்து
காலநேரம் பார்த்து
கனிந்து வந்ததுபோல”
முடிவிலியாய் அடியிலியாய் முழுமுதலாய் இருக்கும் பெருவிசைகள், எப்போதாவது கனிந்து அருள் சுரப்பவை, எப்போதும் விட்டு விலக விடாதவை, இன்னும் எண்ணிலா சாத்தியங்கள் கொண்டவை, ஆனால் தன் போக்கில் மட்டுமே மலரும் கனவுகள் போன்றவை.
சித்தன் வாக்கு
இது சித்தமெல்லாம் பித்து நிறைந்த பித்தனாகிய சித்தன் தன் அகவெளிப் பயணத்தில் காணும் உலகம்.
சித்தனுக்கும்
கோட்டிக்காரனுக்கும்
சிறுவித்யாசம்தான் இல்லையா?
என்பது இவரது வாக்கு.
மனதின் போக்கும் வரவும், அதை உற்று நோக்குபவனை முடிவற்ற சுழற்பாதை ஒன்றில் செலுத்தி விடுபவை. யோகியரும் ஞானியரும் மட்டுமே உலவி அறியக்கூடிய வெளி. அங்கு குழந்தையின் மனதோடு உள்ளே நுழையும் கவிஞன் ஒற்றை வரியில் ஒரு தரிசனத்தை அடைந்துவிடுகிறான். இதுவே கவிதையெனும் யோகம் கவிக்கு அருளும் வரம். விரிக்க விரிக்க விரிவெளியென தனைக் காட்டும் அத்தகைய ஒரு வரி “திசைகளென்பது” கவிதையில் வருகிறது.
“திசைகள் என்பது
கற்பனையே”
செல்வதும் வருவதும் அடைவதும் விலகுவதும் இல்லாதாகி விடும் அந்த நொடி; அத்தனை அலைச்சலையும் ஓய வைத்து விடக்கூடிய ஒரு மின்னல் தெறிப்பு. அதுவும் அலைதலே வாழ்வெனக் கொண்ட ஒரு பாணனின் வாக்கு.
‘சும்மா இருக்க விடாத காற்று’ தொகுப்பில் இடம்பெறும் மற்றொரு கவிதை, செல்திசை ஏதென்றறியா இப்பயணத்தை திசைகளின் நடுவே வாழ நேர்வது குறித்துப் பேசுகிறது.
நான்கு திசைகளுக்கு நடுவே இருப்பு
எத்திசை செல்வோம் இறுதியில்?
‘கல் தூங்கும் நேரம்’ தொகுப்பில் ஒரு வரி
கணங்களில்
கட்டப்பட்டிருக்கிறது காலவெளி
நமது வாழ்வு கணங்களால் ஆனது. ஒரு நிகழ்வை நினைவுகூட்டிப் பார்க்கும் போது, அதை எவ்வளவு துல்லியமாக மீள உருவாக்கிக் கொண்டாலும் அது சில கணங்களாகவே இருப்பதை உணரலாம். காலவெளி என்ற ஒன்று மனிதனின் மனதில் இருப்பது. அது கணங்களால் கட்டப்பட்டிருக்கிறது. ‘யாரோ எறிந்த கல்’ என்னும் இக்கவிதை மின்னல் ஒளியில் தெரியும் சில காட்சி துணுக்குகள் போல சில தருணங்களை காட்டிச் செல்கின்றன. ஏதேதோ விரும்பியதும் விரும்பாததும் நிகழும் இவ்வாழ்வில்
கனவுகளைத்தொலைத்துவிட்ட கலைஞன்
கடினசித்தம் பெறுவதே நியதியாகும்
என்று மனதைத் தேற்றிக் கொள்ளும் கவிமனம் அடுத்த வரியில்,
முல்லைக்கொடிகள் பூப்பதற்கு
முடிவேயில்லை
என்று பூத்து விடுகிறது. உயிர் சாத்தியமற்ற பாலைப் பாறை இடுக்கிலும் முளைவிடும் தளிர் போல கலை மனம் தன் மலர்வைத் தக்க வைத்துக் கொள்ள ஒற்றை மழைத் துளியை சேகரம் செய்து விடுகிறது.
விக்ரமாதித்யன் அவர்களின் கவிதைகளில் ஒரு கணிசமான பகுதி கவிஞனாக வாழ்தல் பற்றிய வாக்குமூலம் எனலாம். முழு வாழ்வும் சொல்லோடு மட்டுமே வாழத் துணிந்த கவியின் மொழி என்பதால் இதன் சத்தியம் சில இடங்களில் வரிகளை சன்னதமாக்குகிறது.
பூப்பதே தீ
தீயே பூப்பது
என்ற வரி ஒரு மந்திரம் போல மனதில் ஒலித்துக் கொண்டே இருப்பது.
‘கப்பலின் பின்விளக்கு'(கல் தூங்கும் நேரம்) கவிதையில் – பசிக்கு கையேந்தியதும் தூங்க இடம் தேடி அலைந்ததுமான அன்றாடம் கவிஞனின் துயரமல்ல,
“இப்படிச் சொல்லலாமா
அப்படிச் சொல்லலாமா
எப்படிச் சொல்லலாம்
என்பதுதான் பிரச்னை
எழுதுமுன் யோசிப்பது
எப்பொழுதுமே வீண்
கப்பலின் பின்விளக்கு
கடந்துவந்த பாதையைத்தான்
காட்டுகிறது ஞானப்பெண்ணே”
என்கிறார். இதில் கவிதையை கவிஞன் சென்றடைவது வரை உள்ள வாதையும், ஒரு கவிதை எழுதப்பட்ட பிறகு அது வெளிச்சமிட்டுக் காட்டுவது ஏற்கனவே அவன் அமைத்துவிட்ட ஒரு தடத்தை மட்டுமே என்பதும் பாடுபொருளாகிறது.
அன்றாடம் மொழியை தியானிக்கும் கவிக்கு மந்திரம் போலும் சொற்கள் உருக்கொள்ளும் மனவெளியில் பிரபஞ்ச தரிசனங்களை தன் அகக்கண்ணில் காணும் பேறு கிடைத்து விடுகிறது. ஆனால் அது மின்னற்கணநேரம். அங்கே நிலைத்து நிற்பதற்கான அமைப்பை அவனது கவிதைக்கான மனநிலையே அருள்வதில்லை. வெறியாட்டெழுந்த பூசகன் சன்னதம் கொண்டாடியபின் மயங்கி மண்ணில் சாய்வது போல அந்தரத்தில் பேருரு தரிசனம் கண்டு சொன்ன ஞானி கவிஞனாகி மண்ணில் சரிவதைக் காண்கிறோம்.
ஆயிரத்தொரு அவஸ்தையில்
ஞானியாகமுடியாத ஒரு கலைஞன்
இடையறாது தன் வாழ்நாள் எல்லாம் தன் கேள்விக்கான விடைகளைத் தேடும் பிரயத்தனங்களைத்தானே தவம் என்கிறோம். அந்த ஒற்றைக் கேள்வியை உபாசனை தெய்வமாக்கி கலைஞன் மீண்டும் மீண்டும் தன்னை அங்கு படைக்கிறான். அத்தேவிக்குரிய பூசனை முறைகளைக் கண்டு கொள்கிறான். உதாரணமாக கவிஞர் விக்கிரமாதித்தனுக்கு நெருப்பு என்னவாக எல்லாம் பொருள் படுகிறது என்று தேடிச் செல்லாம்.
தேடித்
தேடி
தேடியதெல்லாம்
தீ
என்கிறார் ஒரு கவிதையில். இத்தடம் தேர்வோருக்கு அவர் தலைமீது இறங்கும் விண்கங்கையின் ஒரு துளி மேலே படலாம். அல்லது வாசகனுக்கே உரிய தேடலுக்குண்டான தரிசனம் அங்கே நிகழலாம்.
“எரிவதுதான் தீயின் இயல்பு
எரிந்து அவிவதுதான்
இறுதிமுடிவு போல
தீயிலிருந்து எடுத்த தீ
திமிர்கொண்டு எரிகிறது தனித்தீயென நம்பிக்கொண்டு
ஆதி தீ
அடுத்த தீயிலிருந்து
அடுக்கடுக்காய் வரும் தீ
தனித்தழல்
தன்னந்தனியே எரிந்துகொண்டிருக்கிறது
ஒரு பெருந்தனித்தழல்”
இதில் ஆன்மீகப் படிமமாக நின்றெரியும் பெருந்தனித்தழல், பின்வரும் கவிதையில் வீடுதோறும் நின்றெரியும் அன்றாடத்தீயாகி வருகிறது.
“அங்கிங்கெனாதபடி
எங்கும் எரிகிறது தீ
வெளியெங்கும் வியாபித்து
வெக்கை பரவுகிறது
கூடத்தில்
விளக்கெரிய
அடுக்களையில்
அடுப்பெரிய
அந்தந்த இடத்தில்
அந்தந்த நேரத்தில்
அணையாது எரிய வேண்டும் தீ
தீயெரியா வீடுகள் பெருத்தால்
தீப்பற்றி எரியாதா தேசம்”
கனல் என்னும் கவிதை நாலாபுறமும் காட்டையும் நகரத்தையும் பசி கொண்டு நோக்கும், கனன்று கொண்டேயிருக்கும் கனல் குறித்து பேசுகிறது.
சுடரழகுகாட்டி ஜோதியாய் விளங்கும் தழலை
சமாதானப்படுத்த யார் வருவார்
சுட்டுப் பொசுக்கியது போதுமென்று
சமரசம் செய்துவைக்க என்ன வழி
‘சுட்டுப் பொசுக்கியது போதுமென சமரசம் செய்து வைக்க’ என்னும் போது கனல் திரிபுரம் எரித்த சிவமாகிறது. சிவம் உக்கிரம் கொள்ளும் போதெல்லாம் அதைத் தணிய வைக்கும் தவம் தேவையாகிறது.
கவிஞன் சேர்த்து வைக்கும் செல்வம் யாது? அவன் வைத்திருக்கும் அரிய நிதியை என்ன செய்ய எண்ணுகிறான்!
கைமாற்றிக் கொடுத்துவிட்டுப் போகிற வாழ்வு இது
கவலைப்பட என்ன இருக்கிறது
வந்து பிறந்ததற்கும் வாழ்ந்ததற்கும்
வார்த்தைக்கலையே எதேஷ்டம்
என்றெண்ணும் கவிஞன், தான் சேகரித்த ‘மந்திரச் சொற்களை’ நெருப்புக்கு அவியாக்க உத்தேசிக்கிறார்.
இவ்வளவு காலமாகச் சேகரம் செய்து வைத்திருக்கும்
இந்த மந்திரச்சொற்களை யார்வசம் ஒப்படைக்கலாம்
எவர் இவற்றைப்
பத்திரமாகக் காப்பாற்றுவார்
எண்ணித் துணிகையில்
அனாதிகாலம்தொட்டு நின்று எரியும்
அக்னிக்கே அர்ப்பணம் ஸ்வாஹா
அனாதிகாலம் தொட்டு நின்றெரியும் நெருப்பு! அங்கிருந்து வந்தது அங்குதானே மீளமுடியும் என்பதாலா? மந்திரங்கள் யாவும் அக்கினிக்கே சமர்ப்பணம் என்பதாலா? கணம் ஓயாது விண்ணோக்கி கரம் நீட்டும் நெருப்பின் வாயிலாகவே மண் வந்து நின்றதை விண்ணேற்றம் கொள்ளச் செய்ய முடியும் என்பதாலா?
தனித்தழல் என்னும் இன்னொரு கவிதை,
“தன்னந்தனியே
எரிந்துகொண்டிருக்கிறது
ஒரு பெருந்தனித்தழல்
தனித்தழல் ஆதலினால்
தனியேதான் எரியுமென்றாலும்
தனிமை விசேஷம்போல விபரீதமும்தான்”
என்று தொடங்கி வரிசையாகத் தழல்களை சுட்டிச் செல்கிறது.
“விக்ரமாதித்யன் வாழ்வும் கவிதையும்
ஒரு தனித்தழல்தாம் “
என்ற கவியின் பிரகடனத்தில் தழல் சுடர்விட்டு எரிகிறது.
சொல்லுக்குத் தன் வாழ்வை அவியாக்கிய கவி ‘மாயலோகம்’ என்னும் கவிதையில்
சொல்லுக்கு
பொருளிருப்பதாக நம்புகிறார்கள்
எல்லாம்
ஒரு நம்பிக்கைதான்
சொல்
ஒரு குறியீடு
பொருள்
ஒரு தோற்றம்
சொற்கடந்த பொருளென்பது
ஒரு கற்பிதம்
கற்பிதங்களின்மீது
கட்டப்பட்டது மாயாலோகம்
என்று சொல்லும் போது சொல் என்பதும் பொருள் என்பதும் புகை போலாகி விடுகின்றன. சொல்லில் இருந்து பொருளுக்கும் பொருளில் இருந்து சொல்லுக்கும் செல்லும் இழைகள் இல்லையென்று ஆகிவிடும் அளவுக்கு அத்தனை நுண்மையானதா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் கற்பிதம் என்பதும் மாயை என்பது அத்தனை மெல்லிய இழைகள் அல்ல, நம்பிக்கையும் அப்படித்தான். சொல் என்னும் அடையாளத்தை சூடிக்கொள்ளும் பொருள், வெறும் தோற்றம் என்றாலும், அதன் மீது கட்டியெழுப்பப்படும் கவிதை ஒரு மாயலோகம் என்றாலும் பொருளின்மையையும் பொருளையும் தன்னுள் அடக்கிய ஒவ்வொரு சொல்லும் இறையென உணரச் செய்கிறது. மாயை என்பது நமது மரபில் முக்கியமான கருதுகோள். மகாமாயை வடிவாக வருபவள் பராசக்தி.
‘இப்பொழுது இந்த இடம்’ போன்ற கவிதையில் இடம் பெரும் ஆன்மீக தளத்தை, அதற்கான அகப்பயணத்தை குறித்த குறிப்புகளை அவரது பல கவிதைகளில் காணலாம்.
“இந்த இடத்துக்கு
யாரும் சுயமாக வந்துவிட முடியாது.
….
இந்த இடத்துக்கு
வந்து சேருவதற்குள்ளேயே திசைதிரும்பிவிடுகிறார்கள்.
எந்த
இடமாயிருந்தால் என்னவென்று சமாதானப்படுத்திக்கொள்கிறார்கள்
இந்த
இடம் அப்படியே இருக்கிறது இப்பொழுதும்
இந்த இடத்தில்
இன்னொரு இடமும் இருக்கிறது யாருக்கும் தெரியாமல்.”
செல்ல வேண்டிய இடம் குறித்த தெளிவும் அதில் சமரசம் செய்து கொள்ள விரும்பாத உறுதியும் கொண்ட சித்தனின் சொற்கள் என இக்கவிதை தொனிக்கிறது.
உள், வெளி என்னும் சொற்களின் பல சாத்தியங்களை சொல்லிச் செல்லும் ‘உள்வெளி’ என்னும் கவிதை,
“வெளியில்
வகுத்த திசைகள்
திசைகளுக்குள்
வகுபடுமோ வெளி “
என்ற வரியில் சட்டென்று சிறகு விரித்து ஆகாயத்தில் ஏறிவிடுவதைக் காணலாம்.
கிரகயுத்தம் தொகுப்பில் வரும் இக்கவிதையில் ‘மையம்’ என்பது அவ்விதம் விரிந்து கொண்டே செல்லும் ஒன்றாகிறது.
“மையத்தைநோக்கித்தான்
போய்க்கொண்டிருக்கிறேன்
இடைவழியில்
எத்தனையோ இடைஞ்சல்கள்
ஆனாலும்
அது ஒன்றும் தொலைதூரமில்லை”
இப்பயணத்தின் ஒவ்வொரு இன்னலையும் ‘ஆனாலும் அது ஒன்றும் தொலைதூரமில்லை’ என்றெண்ணும் மனஉறுதியே சிறிதாக்கி முன்செல்ல வைக்கிறது. இந்த ஒற்றை வரியே கூட ஆப்த வாக்கியமாகக் கொள்ளும் வன்மையும் கொண்டிருக்கிறது.
இது தவிர, ஆலயங்களுடனான இவரது பக்தி சார்ந்த உறவு பல கவிதைகளின் பேசுபொருளாகிறது. தாமிரபரணி தீரத்தின் மைந்தனாக, காந்திமதியையும் உலகம்மையையும் குற்றாலநாதனையும் சொந்தபந்தங்களாக காணும் ஒரு முகம் இங்கு அவருடையது.
“செண்பகக்காட்டில்
செம்பாதேவி
குற்றால அருவிப்பக்கம்
குழலி
உலகம்மை
ஒய்யாரமாக ஆற்றங்கரையில்
வேணுவனத்தில்
விநயமாக காந்திமதித்தாய்
அம்மா இருக்கிற தைரியத்தில்
அழும்பனாக நான்”
இதில் அழும்பனாக இருப்பது குறித்து அம்மா இருக்கும் வரை ஏதும் கவலைகள் இல்லை என்ற மகனின் அதீத நம்பிக்கை தெறிக்கிறது.
நீ
சபையில் ஆடிக்கொண்டிரு
சலிப்பு தட்டினால்
சுடலையில் போய் ஆடு
எங்களுக்கு
எங்கள் தாய் ஆதிசக்தி இருக்கிறாள்.
அன்ன பூரணி இருக்கிறாள்.
அகமும் புறமுமான
அன்னை மீனாட்சி இருக்கிறாள்.
என்று அன்னையை மீண்டும் மீண்டும் தஞ்சம் புகுந்து அச்சனுடன் விவாதித்துக் கொண்டே இருக்கும் தனயன்.
சில சொற்கள் கவிதைத் தலைப்புகளும் கூட, மந்திரம் போலும் உருவேறி வந்து விழுகின்றன. ‘மொழியெனும் சிவதனுசு’ என்னும் வரி சிவதனுசு என்னும் படிமத்தால் கவியை, கவிதையை, மொழியை எடை கொள்ளச் செய்கிறது. எதிர் நிற்பதை வெல்லவும், அடிபணிய வைக்கவும், ஏற்று அமையச் செய்யவும், வலிமை பொருந்திய மொழி. மொழியில் நாணேற்ற இன்னொரு இறையுருவே வர வேண்டும் என்று வளர்ந்து கொண்டே செல்கிறது இச்சொல்.
***
தேவாரமும் நாதஸ்வர இசையும் காற்றில் எங்கிருந்தோ மிதந்து வர, பல நூறு வருடங்கள் கால்கள் நடந்து குளிர்ந்த ஒரு கோவில் பிரகாரத்தில், எதிர்ப்படும் ஒரு சித்தனைப் போல இக்கவிதைகளோடு இவரை உருவகித்துக் கொள்கிறது மனது. “நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா” என்று பாடிய சித்தர் மரபின் இன்றைய நீட்சியாக, மொழியெனும் சிவதனுசை கையில் ஏந்திய கவிஞனாக நம் முன் வாழும் இக்கவிச்சித்தனின் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
“தெய்வங்களுக்கும் இவனுக்கும் மத்தியில்
வில்லங்கமோ விவகாரமோ நேர்ந்ததேயில்லை ஒரு காலமும்
விஷயம் என்னவென்றால்
தெய்வங்கள் அறியும்
இவனொரு கவிஞனென்று”
இத்தகைய கவிஞரை அடையாளம் கண்டு கொள்ள நம் ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வம் விழிதிறக்க வேண்டியிருக்கிறது.
சுபஸ்ரீ