தொடங்குதல்…
அன்புள்ள ஜெவுக்கு,
நீங்கள் எனது கடிதத்தை தங்கள் தளத்தில் பகிர்ந்த்தை கண்டு மிகவும் மகிழ்ந்தேன் ஜெ.தொடங்குதல்…நன்றி.
நான் வெகுநாட்களாகவே ஒரு ஐயத்துடன் போராடிக்கொண்டே இருக்கிறேன். நான் தமிழக அரசின் கீழ் இயங்கும் வேளாண் துறையில் வேளாண் அதிகாரி எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முக தேர்விற்கு தயாராகி கொண்டு இருகிறேன். இந்நிலையில் என்னால் இலக்கிய புத்தகங்களை தொடர்ந்து வாசிக்க முடியாமல் மிகவும் மன சோர்வுக்கு ஆளாகிறேன். நான்கு கதைகளுடன் நின்று போனதும், பிறர் கேட்கும் முன்பே எனக்குள்ளாகவே இவ்வளவு தானா இதுக்கு தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்றெல்லாம் எனக்கே தோன்றச் செய்கிறது. நீங்கள் என் கடிதம் தளத்தில் பகிர்ந்ததை கண்டும் பதில் எதும் அளிக்காமல் குறுக செய்ததும் இந்த குற்ற உணர்வே இருக்கலாம். நான் தொடர்ந்து இலக்கியம் நாடவும் வாசிக்கவும் எழுதவும் ஏங்கி கொண்டு இருக்கிறேன். நான் வாசிக்க தொடங்கியதே மிகவும் தாமதம் என்று வருந்தும் பொழுதுகள் பல உண்டு. இப்படிப்பட்ட நிலையில் இந்த இடைவெளி என்னை இன்னும் இலக்கியதில் இருந்து பின் தள்ளிவிடுமோ என்ற அச்சம் என்னை முழு மனதுடன் நேர்முக தேர்விற்கு தயாராகும் மனநிலையையும் தருவதில்லை.
என் நண்பர்கள் சிலர் புத்தகம் வாசிப்பதும் எழுதுவதும் முழு நேர பணியாக செய்தால் ஒழிய அதில் சாதிப்பது சுலபம் அல்ல என்று கூறுவது என் மன உளைச்சலை எண்ணெய் ஊற்றி ஊற்றி எரிப்பது போல் இருக்கிறது. இதை பகிர்ந்து கொள்ள உங்களை விட எனக்கு வேறு ஒருவர் இருக்க முடியாது. ஜெ நான் ஈரோடு மாவட்டம் கர்நாடக எல்லை பகுதியை ஒட்டிய தாளவாடி என்ற மலைகிராமம். இயற்கை ஒன்றை தவிர பிற கல்வி பட்டபடிப்பு வேலை என எல்லாவற்றிர்க்கும் பிறரையும் பிற ஊர்களையுமே சார்ந்து இன்னும் வளர்ந்து கொண்டு இருக்கிறோம். கன்னட மொழியை தாய் மொழியாய் கொண்டும் தழிழ் பால் கொண்ட காதல் என்னை இவ்வளவு தூரம் இலக்கியத்தில் பிணைத்துக் கொள்ளும் என்று நான் ஒருபோதும் சிந்தித்ததில்லை. ஒரு நல்ல பணியின் தேவை வாழ்கைக்கு அடிப்படையாக இருக்கும் ஒரு குடும்ப பின்ணணியில் இருந்து வந்த எனக்கு இன்று இயற்கையும் இலக்கியமும் தந்த அக மகிழ்ச்சி எதிலும் கிடக்கவில்லை. அதை நான் இழக்காமல் இருக்க நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கும் இந்த நாட்கள் எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது.
என் அடிப்படையையும் அகத் தேவையையும் தனித்தனியாக கொண்டு நான் இந்த தளத்தில் வளர முடியாத ஜெ. முழு நேர இலக்கிய வாசிப்பு இல்லாவிடில் இலக்கியத்தில் நான் தேருவது கடினமாகி விடுமா. இப்படி எல்லாம் பல குழப்பங்களும் கேள்விகளும் என்னை உறங்க விடுவதில்லை. தேர்விற்கு தயாராகும் இந்த நிலையிலேயே இலக்கியம் சார்ந்து வசிக்கும் நேரம் குறைந்து விட்டதே, பணிக்கு சென்றுவிட்டால் இலக்கியம் என்றால் என்ன என்று கேட்பேனோ, பேசாமல் இப்படியே இருந்து விடலாம், வேலையே வேண்டாம் என்றெல்லாம் கூட தோன்றுகிறது. எனது ஐயம் ஒன்றே, வேறு துறையில் இருந்துக் கொண்டும் நான் இந்த தளத்தில் என்னை வளர்த்துக் கொள்ள முடியுமா இல்லை நான் இதே தளத்தில் இருந்தால் தான் என் தேடலும் நிறைவும் சாத்தியம் ஆகுமா. இந்த குழப்பம் மற்றும் பதற்றத்தில் இருந்து என்னை மீட்டெடுங்கள் ஜெ.
இத்தனை குழப்பதிலும் கையில் உங்கள் ரப்பர் நாவலுடன் உங்கள் அன்பை எதிர்நோக்கி காத்திருக்கும்,
உங்கள் நலம் விழையும்
நீனா.
அன்புள்ள நீனா
உண்மை, இலக்கியத்தில் முதன்மையிடம் பெறவேண்டுமென்றால் அதன்பொருட்டு வாழ்க்கையை அளித்தாகவேண்டும். தொட்டுச்செல்பவர்களுக்கு உரியது அல்ல அது.
சரி, வாழ்க்கையை எப்படி அளிப்பது? இன்றைய இந்திய சூழலில் கூடுமானவரை நேரம் கவனம் ஆகியவற்றை அதற்காகச் செலவிடவேண்டும். பயன் கருதாது, எதிர்காலத்தை எண்ணாது, முழுமூச்சாக அதில் பல ஆண்டுக் காலம் ஈடுபடவேண்டும்.
அவ்வண்ணம் ஈடுபட முதன்மைத்தேவை என்பது உலகியல் ரீதியான உறுதிப்பாடு. உடல்நலனை பேணிக்கொள்ளுதல். உறவுகளில் நிதானத்தை கடைப்பிடித்தல்.
உலகியல் ரீதியான உறுதிப்பாடு என்பது ஒரு நல்ல வேலையால் அமைவது. குறைந்த உழைப்பை அளித்து சிக்கலற்ற வாழ்க்கையை அமைக்கும் வசதிகொண்ட ஒரு வேலையே எழுத்துச் செயல்பாட்டுக்கு மிக உகந்தது.
அவ்வண்ணம் அன்றி உலகியல் வாழ்க்கையைச் சிக்கலாக ஆக்கிக்கொண்டால், அதில் கடும் உழைப்பையும் காலத்தையும் செலவிடவேண்டும் என்றால் அது இலக்கியச்செயல்பாட்டுக்கு எதிரானதாகவே அமையும். ஆகவே ஒரு நல்ல வேலையை தேடிக்கொள்ளும்பொருட்டு படிப்பதும், அதற்காக நேரம் ஒதுக்குவதும் இலக்கியச் செயல்பாட்டின் பகுதியாகவே அமையும். அதன்பொருட்டு சிலகாலம் முழுமையாகவே இலக்கியத்தில் இருந்து கவனத்தை விலக்கிக்கொள்வதுகூட பிழையல்ல.
அதேசமயம் அது உலகியல் ரீதியான வெற்றிக்காக மேலும் மேலும் முயல்வதாக அமையக்கூடாது. வேலையில் உயர்ந்த இலக்குகளை வைத்துக்கொண்டு அதற்காக உழைப்பதாகவும் அமையக்கூடாது. அது இலக்கியத்தில் இருந்து கவனத்தை விலக்கும்.
ஆகவே இப்போது இந்த தேர்வுக்காக முழுமூச்சாக முயல்வது அவசியம். இலக்கியம் கொஞ்சம் காத்திருக்கலாம்
ஜெ