நந்தனாரின் நந்தியும் சுடுகாட்டுச் சேவலும் -இரம்யா

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

கவிஞனைப்பற்றி கவிதையைப் பற்றி புதுமைப்பித்தன் கூறும்போது “சிருஷ்டி கர்த்தா ஒரு பெரிய கலைஞன். அவனுடைய ஆனந்தக் கனவுதான் இந்தப் பிரபஞ்சம். அதன் ரகஸியம் தத்துவம் வேறு. அது இன்பத்தின் விளைவு. அவனுடைய அம்சத்தின் சிறு துளிதான் கவிஞன். அவன்தான் இரண்டாவது பிரம்மா. கண்கூடாகக் காணக் கூடிய பிரம்மா.” என்கிறார். கவிஞர் விக்ரமாதித்யனும் அப்படியான ஒரு பிரம்மா தான். எந்தவித சிரத்தையுமின்றி கவிதை திறக்குங்கணந்தோறும் எழுதிக் கொண்டே இருக்கும் கவிஞன் அவன்.

தான் கவிதை எழுதுவதைப் பற்றி விக்ரமாதித்யன் கூறும்போது “என்னைப் பொறுத்தவரை கவிதை எழுதுவது எளிமையானது அல்ல. அது ஒரு வகையான வாதை. என் கவிதைகள் அனைத்தும் தானாக வருவது. ஏறக்குறைய அருள்வாக்கு வருவது போலத்தான் எனக்கு கவிதை வருவதும். ஆனால் நான் எழுதுவது பூசாரிகளின் அருள்வாக்கு அல்ல” என்கிறார். ஒரு வகையில் எல்லா கலைஞர்களும் தங்கள் படைப்பின் உச்ச தருணத்தில் சிருஷ்டி கர்த்தாவாக உணர்ந்து கொள்வதுண்டு.

கோவை கவிதை முகாமில் (2021) அவருடன் நீண்ட வருடங்கள் பயணித்த லஷ்மி மணிவண்ணன் அவருடைய கவிதையை, அவரை அறிமுகப்படுத்தியிருந்தார். அந்த அரங்கு கவிதையை வாசித்துக் காணித்து விவாதம் நடைபெற்ற பிற அரங்கு போலல்ல. நேரடியாகவும் கவிதை வாயிலாகவும் ஒரு கவிஞன் இன்னொரு கவிஞனைக் கண்டடைந்ததை தொகுத்துக் கொள்ள கவிதையையே ஊடகமாகப் பயன்படுத்தியது போல சிக்கலானது.  கவிஞர் யுவன் சொல்லும்போது விக்ரமாதித்யன் கவிதைகளை அவருடைய காலகட்ட கவிஞர்களோடு கவிதைகளோடும் தொடர்பு படுத்தி வாசிக்க வேண்டும் என்று ஒரு சித்திரத்தை அளித்தார். ஒரு வாசகனாக அந்த விளக்கம் அவரைப் புரிய அவசியமானது. ஏனெனில் இன்று தேய் கவிதைகளாக மாறிப் போன பல கவிதைகளின், கவிதை வடிவத்தின் ஊற்றுக் கண்ணாக விக்கியின் கவிதைகள் அமையப்பெறுகின்றன. அவருடைய காலகட்டத்தில் அவர் எழுதிய கவிதையின் வடிவம், பேசு பொருள் என யாவுமே கட்டுடைப்புகளாக இருந்திருக்கின்றன.

லஷ்மி மணிவண்ணனின் விக்ரமாதித்யன் அமர்வு முடியும் போது அந்த அமர்வினின்று என்னில் எஞ்சியது இரண்டு உவமைகள் தான்.

“… திருப்புன்கூரில் மட்டுமல்ல தேசமெங்கும் நந்தனார் நந்தி சிவன்”

திருப்புன்கூரில் தீண்டாமைக் கொடுமையால் சிவனை தரிசிக்க முடியாது தவிக்கும் நந்தனாருக்காக விலகி அமரும் நந்தி எனும் மரபுப் படிமத்தை “திருப்புன்கூர் நந்தி” எனும் கவிதையில் விக்ரமாதித்யன் கையாண்டிருப்பார். அமர்ந்திருக்கும் அந்த நந்தி அமருவதற்கு ஒரு கணத்திற்கு முன்னதான நிலையா? இல்லை எழுவதற்கு ஒரு கணம் முன்னதான நந்தியா என்பதே குழப்பமானது. விக்ரமாதித்யனும் அப்படித்தான் என்றார்.

தென் மாவட்டங்களில் சில இடங்களில் ஒரு சடங்கு உண்டு. இறப்புச் சடங்குகளில் ஒரு சேவலை சுடுகாட்டிற்கு நேத்திக் கடன் செலுத்துவார்கள். இறந்தவர்கள் அந்தச் சேவலில் வாழ்வதாக நம்புவார்கள். இப்படி காலங்காலமாக அந்தச் சுடுகாட்டில் சேவல்கள் விடப்படுகிறது. ஊருக்கு ஒதுக்குப் புறமாகிய அந்த சுடுகாட்டில் திடீரென ஒட்டுமொத்தமாக அவை நடந்து வரும் காட்சியைப் பார்ப்பவன் முதலில் அடைவது திகைப்பைத்தான் என்றார். விக்ரமாதித்யன் அப்படி ஒரு திகைப்பைத் தரக்கூடியவர் என்றார்.

இரண்டொரு கவிதைகள் மற்றும் இந்த இரு படிமம் என விக்ரமாதித்யன் அரங்கு பெரிய திறப்பானதாக இல்லை என்று நினைத்திருந்தேன்.

நானே திறந்து கொள்ள எத்தனித்து அவருடைய கவிதைகள் மற்றும் எழுத்துகளுக்குள் புக முற்பட்டேன். அவருடைய வாழ்வும் கவிதையும் வாசிக்க வாசிக்கவே அவருடைய உலகத்துக்குள் அழைத்துச் சென்றது. கிட்டத்தட்ட கவிதை சொல்லி எனுமளவு பேசிக் கொண்டே இருந்தார். என் பாட்டனிடம் அவனுடைய காலத்தின் வாழ்வை அகத்தை புறத்தை, என் காலத்தை அவன் பார்க்கும் விதத்தை என அவன் சொல்லிக் கொண்டேருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது அவரது கவிதை. சில கவிதைகள் எடை மிகுந்து கனக்கிறது. “உம்” கொட்ட வைக்கிறது. ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று அவருக்கு ஆறுதல் சொல்லத் தோணுகிறது. சில கையறுநிலையைத் தருகிறது. அப்படியானால் எடைமிகுந்த கவிதைகளைச் சொல்லும் ஆத்மாநாம் சுகுமார் கவிதைகளுடன் வைக்கலாமா என்றால் இல்லை.

எளிமையும் வடிவமின்மையும் ஒழுங்கின்மையும் என கட்டற்ற கவிதைகள் அவரிலிருந்து வருகின்றன. எடையற்ற இலக்கற்ற தத்துவச் சிக்கலற்ற கவிதைகளின் நிமித்தம் அவரை பின் நவீனத்துவக் கவிஞர்களின் வரிசைக்குள் அடைக்கலாமா எனில் இல்லை.

தன் வாழ்நாளில் அவர் விரும்பக்கூடிய யாவும் அப்படியே அவருடைய கவிதைகளில் வாழ்கின்றது.  அனைத்து உணர்வுகளையும் கொட்டித் தீர்க்கும் ஊடகமாக கவிதையைப் பயன்படுத்தியிருக்கிறார். மகிழ்ச்சியில், துக்கத்தில், கையறுநிலையில், கோபத்தில், அவமானத்தில், தன்னைத் தேற்றிக் கொள்ளும்போது, புலம்பும்போது, அன்புணர்வில், காதலில், காமத்தில், ரசனையில், ஏதுமற்ற சிந்தனையிலும் கூட அவர் கவிதை வழியாகவே தன்னை வெளிப்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது. தனக்குத் தெரிந்த ஊடகம் அது மட்டும் தான் என்பது போல. வாழ்ந்த காலம் முழுமைக்கும் அவர் அப்படியே காட்டாற்று வெள்ளம் போல பொங்கிக் கொண்டே இருப்பது சில சமயம் திகைப்பூட்டுகிறது. அவர் இது தான்.. அவர் கவிதை இன்னது தான் என்ற வரையறைக்குள் வைக்கமுடியாத அளவு தன்னை மாற்றிக் கொண்டே செல்கிறார். எந்தக் குற்றவுணர்வும் இல்லாது தன் போக்கில் வாழும் கவிஞன் என்றும் கண்டேன்.

அவருடைய தன் வரலாற்றின் வழி அவர் கொடுக்கும் சித்திரமும் அவ்வாறு தான் இருக்கிறது. புனைவுகளற்ற ஒரு சுயசரிதை. இப்படி ஒரு அப்பட்டமான சுயசரிதையை கவிஞர் கண்ணதாசனின் வனவாசம் மனவாசத்தோடு ஒப்பிடலாம். புனைவுகளற்ற அந்தக் கவிஞன் தன் கற்பனை யாவையும் கொணர்ந்து தீர்க்கும் இடமாக கவிதையைப் பயன்படுத்திக் கொள்கிறான் என்றே தோன்றுகிறது.

தன் கவிதைகளை எழுதும்போதும் அச்சிடும்போதும் மிகத் தெளிவாக அதன் வாசகர்களை நோக்கி மட்டுமே பேசுகிறான். அவன் எல்லா மட்டத்திலிருக்கும் வாசகர்களுக்கும் எழுதுகிறான்.

காதலைப்பற்றி எழுதுவதில் மட்டும் குறிப்பாக இருக்கிறான். “யாயும் ஞாயும் யாரா கியரோ” -வை விட மிக அழகாக உயர்வாகச் சொல்ல முடியுமானால் மட்டுமே காதலை எழுத வேண்டுமென்கிறான். நிலவும் காதலும் பிரிக்கமுடியாதது என்று எப்போதும் தோன்றுமெனக்கு. அப்படியான அவரின் ஒரு கவிதை மிகப் பிடித்திருந்தது.

 

“பெண்ணே

பெண்ணே

எங்கே

இருக்கிறாய்

எப்போது

புறப்பட்டு

வருவாய்

வரும்போது

பௌர்ணமியாக இருக்கட்டும்.”

 

காதல் பரிபூரணத்தில் தானே அழகாயிருக்கிறது. நிலவின் சௌந்தர்யமான அந்த பூரணத்தில் உணர்வுகளும் உச்சமாயிருக்கும் தானே. நானே என்னை பூரணமாய் வெளிக்கட்ட முடிந்த அந்த நாளில் நீ வா. பூரணியாய் என்னை நிறைகக்க வா என்றழைப்பது போன்ற தொனி அது. முழு மதி எப்போதும் என் மனதை நிறைக்கக் கூடியது. அன்று தன் பெண்ணை அழைக்கும் அந்தக் காதலனை மிகப் பிடித்துவிட்டது. இனிவரும் முழு நிலவில் அவனையும் நினைந்து கொள்வேன்.

காமத்தைக் குழைத்த ஒரு கவிதையும் மிகப் பிடித்திருந்தது.

 

“தழுவக் குழைந்த தலைவி

குழையத்

தழுவிய தலைவன்

தழுவக்

குழைந்த தலைவி

குழைகிறாற்போல்

தழுவல்

குழைகிறாள்

தலைவி

தழுவுகிறாள்

தலைவன்

நிலம் தோன்றிய

காலம்

இடையறாத

இணக்கம்

தலை வணங்குகிறான்

பாதம்

பணிகிறான்

தழுவுதலும் குழைதலுமின்றி

தழைக்குமோ வாழ்வு

குழைதலும் தழுவுதலுமில்லையெனில்

குறைவுபட்டதே அகம்

மாதேவியே

அனந்தகோடி நமஸ்காரம்”

 

குழைதலும் தழுவுதலுமென நிறைந்து பூத்த அகம் நிறைக்கும் கவிதையாக இக்கவிதை நிறைக்கிறது.

நிலையாமையைச் சொல்லும்போது

 

“ஒரு நாளுக்காக

ஒவ்வொரு உயிரும்

 

வெறுநாள்களை

வாங்கிவைத்தபடி”

 

“…

ஓர்மையோடதான்

உரைத்திருக்கிறான் கவிஞன்

காலத்தின் முன் ஒரு செடி” என்கிறான்.

 

நிறைவின் ஆனந்தத்தைச் சொல்லும்போது

 

“எடுத்தால்

தீர்ந்துவிடும்

கொடுத்தால்

நிறைந்துவிடும்

எடுத்தும்

கொடுத்தும்” என்கிறான்

கவிதையைப் பற்றிக் கூறும்போது

“கவிதையைக் காண்பதே

அபூர்வமாயிருக்கிறது விக்கி

அதன் இருப்பே

அப்படித்தான் பூர்ணா” என்கிறான்.

 

புரவலரைத் துதிக்கிறான். ஆனபோதும்

 

“மண்டியிட்டதெல்லாம் போதுமென்றிருக்கிறது.

மண்டியிட்டுக் கொண்டே கழிகிறது

காலம்”

 

என்று அலுத்தும் கொள்கிறான்.

 

“தன்னைப்போல

இருக்க ஆசை

உத்தரவு வாங்கிக்கொள்கிறேன்

காளி”

 

என்று அவர்களைக் கடக்கவும் தப்பித்துக் கொள்ளவும் முற்படுகிறான்.

 

‘பர

தேவதையே

பார்த்துக்

கொள்ளலாம்

எவ்வளவு காலம்

துயிலாக விழிப்பாக

ஊமத்தம் சாறு

உன்மத்த கவி’

 

என்ற கவிதையை வாசிக்கும்போதே இனியையாக இருந்தது. கையறுநிலையாகவும் எடுத்துக் கொள்ளலாம். நிலையாகத் தெரிந்த இறுதி உண்மையாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்பது போல இருந்தது.

திசையின் முடிவைக் கண்டு கொண்டவன் போல, அதன் எண்ணங்களை அறிந்தவனாய்

 

“திசைமுடிவுக்குத் தெரிவதெல்லாம்

ஆகாசம்

நீலநிறம்”

 

என்கிறான். திறக்கத் திறக்க என் வாழ்வில் திறந்துகொண்டே செல்லும் கவி வரியாக மாறிப் போகும் வரிகள் இவை.

சாரலும் பருவமும் பொய்த்துப் போகும் போது ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கவலை இருக்கும். ஆனால் இந்தக் கவினுக்கு

 

“குறும்பலாவீசர் அபீஷகத்துக்கு

தண்ணீர் எங்கிருந்து வரும்

குழல்வாய்மொழியம்மே.”

 

-என்றுதான் கவலைப்படத் தோன்றுகிறது. என் கிறுக்குக் கவியே என்று கொஞ்சுவதல்லாமல் வேறென்ன செய்ய இவனை என்று அலுத்துக் கொண்டேன். .

கவிஞனின் வயிற்றுப்பாட்டை எடுத்துரைக்கிறான். அதே சமயம்

 

“சும்மா இருந்தால் ஓய்ந்து போய்விட்டதாக அர்த்தமில்லை.

சாயும் வரை

ஆதித்யன் தான்”

 

என்று சொல்லும் பாரதியைப்போலவும் செறுக்காக இருக்கிறான்.

‘திருப்புன்கூர் நந்தி’ மற்றும் மாறி ‘அமர்ந்திருக்கும் நந்தி’ ஆகிய இரு கவிதைகளிலும் மரபார்ந்த சப்தம் இருக்கும் கவிஞன் எனக் கண்டடைந்தேன்.

 

“…

சிவனுக்கென்ன சொல்லிவிட்டான் சிரமம் நந்திக்கல்லவோ

இருந்த இடத்திலேயே இருந்து பழகிப் போனது

எழுந்து நகர்ந்து அமர்வது”

 

அதே சமயம்

“..திருப்புன்கூரில் மட்டுமலல் தேசமெங்கும் நந்தனார் நந்தி சிவன்” எனும்போது ஒட்டுமொத்த தீண்டாமை சித்திரத்தையும் அதற்கான தீர்வையும் நல்கிவிடுவது போலத் தோன்றுகிறது. என்றென்றைக்கும் ஒரு தீண்டாமைக்கான தொன்மமாக மாறிவிடக்கூடிய கவிதையிது.

கவிதையைப் பற்றிச் சொல்லும் போது

“தன்னியல்பாய்

தோன்றி வருகிறது கவிதை” என்கிறார். அப்படி தன்னியல்பாய் தோன்றிவரும் அனைத்தையும் கவிதையாகவே எழுதியிருக்கிறார். பல சமயம் புலம்பல்களும் பிதற்றல்களும் உலரல்களுமே வெளிப்படும் திறவுகோல் அவருக்குக் கவிதையாக இருக்கிறது.

தன் மனம் முழுமைக்கும் நிறைந்திருக்கும் மண்ணை, தன்னை பாதித்த திரிகூட ராசப்ப கவிராயரை, பாரதியை, கண்ணதாசனை கவிதைகளில் பாடுகிறார். இங்ஙனம் தன் வாழ்நாள் தோறும் கவிதையாலேயே உரையாடிக் கொண்டிருக்கிறார்.

கவிதைகளையெல்லாம் வாசித்த பின் அவரை ஒன்றுக்குள் அடைக்க முற்பட்டு தோற்றுப்போனேன். அங்குதான் கவிஞர் லஷ்மி மணிவண்ணனின் படிமம் வந்து முன் நின்றது. ஆம்! அவர் நந்தனாரின் நந்தியே தான். எந்த ஒன்றுக்குள்ளும் அடைக்க முற்பட்டாலும் அதுவல்ல நான் என்று சற்றே விலகி நிற்கக் கூடிய நந்தி! எழுதலா அமர்தலா என்ற ஐயத்தைக் கொடுக்கும் நந்தி. வெளிச் செல்லலா வீடு திரும்புதலா என்று கணிக்கவியலாத நந்தி! கவிதையின் பல்வேறு சாத்தியங்களைத் திறக்க தடையாக இருந்தவற்றை சற்றே விலக்கி அமர்ந்த நந்தி! அதே சமயம் போலச் செய்யவே முடியாத, முடிந்தாலும் தோற்றுப் போகக் கூடிய கவிதையையும் வாழ்வையும் கொண்ட மிகச் சில கவிஞர்களில் ஒருவன்.

நவீனத்துவ/பின் நவீனத்துவ கவிதை வரலாற்றில் ஒப்பு நோக்கவியலாத தனியனாகவும் அதே சமயம் திகைப்பை ஏற்படுத்தக் கூடிய சுடுகாட்டுச் சேவலும் தான் இந்த விக்ரமாதித்யன்

இரம்யா

முந்தைய கட்டுரைகண்மணி குணசேகரன், கடிதங்கள்.
அடுத்த கட்டுரைகல்வி பற்றி மேலும்…